சிவன்

1865

இயற்கையும் இயக்கக்கூடிய பேரறிவாய் விளங்குகின்ற ஒரு பொருளை நம் முன்னோர் இயவுள் என்றார்கள். இதனையே வள்ளுவப் பேராசானும் வாலறிவு என்றார். அப்பொருள் எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுள்ளும் நின்றும் இயங்குவதால் அதைக் கடவுள் என்றார்கள். உண்மை, அறிவு, இன்பமாய்  விளங்கும் அப்பொருள் சிறப்பும் வனப்பும் மிக்கதாய் இருப்பதனால் சிவம் என்றார்கள். சிறப்பு என்ற சொல்லின் ‘சி’ கரமும் வனப்பு என்ற சொல்லின் ‘வ’ கரமும் இணைந்து சிவம் என்று ஆகியது. சிவம் என்பது வடிவமோ, பெயரோ, அடையாளமோ இல்லாத நிலையில் இருக்கும் பரம்பொருளின் சிறப்பு நிலையைக் குறிப்பது. இந்நிலையிலிருந்து சிவப்பரம்பொருள் பொதுநிலைக்குப் பல்வேறு பெயர்களில், ஓசையாக வருகின்றபோது ழுஓ‘ழ௨கு‘௨றுவ ஞானமாக வருகின்றபோது முருகனாகவும் அருள் அல்லது ஆற்றலாக வருகின்றபோது அம்பாளாகவும் வருகின்றது என்று முந்தைய கட்டுரைகளில் பொதுவாகப் பார்த்தோம். இதனைத் திருவுந்தியார்.

                   “அகளமாய் நின்ற அறிவரிது, சகளமாய் வந்தென்று உந்தீபற
                     தானாகத் தந்தது என்று உந்தீபற”

என்று திருவுந்திழ‘ரில் குறிப்பிடுவார். இங்குச் சிவம் என்னும் பரம்பொருள் தன் திருவருள் அனைத்தையும் வெளிப்படுத்தாது தன்னுள் ஒடுக்கி வைத்துக்  கொண்டு உள்முகமாய் இருக்கின்ற சிறப்பு நிலையில் சிவம் என்று அழைக்கப் படுகின்றது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அச்சிவமே பின்பு  உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக, உயிர்களுக்கு அருள்தொழில் புரிவதற்காகத் தானாகவே இறங்கி வருகின்ற நிலையில் சிவன்  ஆகின்றது. இதனைப் பொதுநிலை என்கிறோம். சிவம் என்பது ஆணோ, பெண்ணோ, அல்லது ஆணும் பெண்ணுமாகவும் குறிக்கப்படுகின்றது.

உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருள் பொதுநிலைக்கு வருகின்றபோது அருவம், அருவுருவம், உருவம்  என்று வருகின்றது. இதனையே நம் செந்தமிழரின் தனிக்கொள்கையான சைவ சித்தாந்தம் நவம் தரும் பேதம் என்று குறிப்பிடும். அதாவது சிவப்பரம்பொருள் பொதுநிலையில் ஒன்பது நிலைகளில் இறங்கி வரும் என்று குறிப்பிடுகின்றது. அப்படி வருகின்ற ஒன்பது நிலைகளும் அந்தப் பரம்பொருளே அல்லாமல் வேறு  அல்ல என்றும் அறுதியிட்டுக் கூறுகின்றது. இதனையே, ‘நவந்தரும் பேதம் தன்னில் ஏகநாதனே நடிப்பன்” என்று சைவசித்தாந்த  சத்திர நூலான  சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது.

இவ்வகையில் சிவப்பரம்பொருள் கொள்ளும் அருவ (வடிவமும் உருவமும் இல்லாத) நிலைகளாக பரமசிவம், பராசக்தி, பரநாதம், பரவிந்து என நான்கு நிலையும் உருவ நிலைகளாக மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரமன் என நான்கு நிலைகளும் அருவுருவ (வடிவம் உண்டு, உருவம் இல்லாத) நிலைகளாக, சதாசிவம் (சிவலிங்கம்) ஒன்று என்றும் ஒன்பதாகக் குறிக்கப்படுகின்றது. இவற்றில் சதாசிவம், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரமன் போன்ற நிலைகளே பலரும் அறிந்தவையாக உள்ளன. இங்குச் சிவப்பரம்பொருளே சதாசிவமாகவும் மகேசுவரனாகவும், உருத்திரனாகவும், திருமாலாகவும், பிரம்மாவாகவும் வருகின்றது என்பதை நாம் நினைவில் வைப்பது இன்றியமையாதது.

இதுதவிர உயிர்களுக்கு அருள்புரிய வருகின்ற சிவப்பரம்பொருள் உயிரில் கலந்து நிற்கின்ற வழி ஒன்றாயும், உயிர்களைச் செலுத்துகின்ற வகையால் உடனாயும், பொருள் வகையால் உயிரின் வேறாகவும் நின்று, பொதுவில் இன்னும் இருபத்தைந்து திருமேனிகளைக் கொள்வதாய்ச் செம்மை மிகுத் தமிழர் நெறி கூறும். அவை,

1. சிவலிங்கம்
2. சோமசுகந்தர்
3. ஏகபாதர்
4. எச்சேசுவர்
5. இடபாரூடர்
6. சந்திர சேகரர்
7. நடராசர்
8. உக்கிரர்
9. அர்த்த நாரீசுவரர்
10. இலகுளீசர்
11. நஞ்சுண்டகண்டர்
12. சலந்தராரி
13. சக்கரதானர்
14. பிச்சாடனர்
15. அந்தகாசுர அரணர்
16. திரிபுராந்தகர்
17. கங்காதரர்
18. ஆபத்சகாயர்
19. சோதிலிங்கேசுவரர்
20. மச்ச சங்காரர்
21. கூர்மசங்காரர்
22. வராக சங்காரர்
23. நரசிம்ம சங்காரர்
24. கங்காளர்
25. காலபைரவர்

என்பவையாம். இவ்வனைத்துத் திருமேனிகளுக்கும் தமிழ்ப் பெயர்கள் உண்டு.

சிவப்பரம்பொருள் பொதுவில் கொள்கின்ற திருமேனிகள் நம் மேனியினைப் போன்று நரம்பும் சதையும் குருதியும் உடையது அன்று. அருளையே அது திருமேனியாகக் கொண்டு வருகின்றது என்பதனை இனிவருங்காலங்களில் காண்போம். இறைவனுக்குத் திருமேனி அருள் தத்துவ திருமேனிகளேயாகும் என்று திருமூலர் அழகுற செப்பிடுவார். பிறவா ஆக்கைப் பெரியோனாகிய, சிவப்பரம்பொருள் பிறப்புக்கும் இறப்புக்கும் உட்படாதது. இதனைச் சிவம் நால்வகைத் தோற்றம் எழுவகைப் பிறப்புக்கு உட்படாதது என்று தமிழ்ச் சைவம் குறிப்பிடுகின்றது. இதனால் சிவம் என்கின்ற பரம்பொருள் கரு, விதை, கிழங்கு, வியர்வை என்கின்ற நான்கு வகையினால் தோற்றம் பெறுகின்ற நிலையினையோ அல்லது தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மரம் என்கின்ற எழுவகையான பிறப்புக்களுக்கோ, யோனிபேதங்களுக்கோ, உட்படுவது கிடையாது. இதன் வழி செம்பொருளான சிவம் என்கின்ற பரம்பொருள் என்பது தோன்றி மடியும் உயிர் வகையிலிருந்து வேறானது என்பதனை நன்கு அறியலாம். இதனையே திருமூல நாயனாரும்,

           “சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
             அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
             புவனம் கடந்ததன்று பொன்னொளி மின்னும்
            தவன சடைமுடி தாமரையானே”

என்று பாடுவார்.

‘அண்ட பகிரண்டமும் அடங்க ஓர் நிறைவாகி, ஆனந்தமான பரமே’ என்று தாயுமான சுவாமிகமூ‘லு போற்றப் பெறும் அச்சிவப்பரம்பொருளின் இன்னொரு அருவுருவத் திருமேனியாக இந்த அண்டத்தையும் புவனத்தையும் சைவம் குறிப்பிடும். இதனையே நாம் அறியும் படியாக எட்டுப் பொருள்களில் நின்று அருள்புரியும் நிலைகளாக அல்லது அட்டமூர்த்தங்களாகச் சான்றோர் குறிப்பிடுவர். வேறு வகையாகக் குறிப்பிட்டால் இறைவன் உறையும் பொருள்களாக நீர், காற்று,  ஆகாயம், நிலவு, சூரியன், உயிர் என்று எட்டைக் கூறுவர். எனவே இவ்வுலகும் இறைவனுக்கு ஓர் அருவுருவத் திருமேனி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உண்மை, அறிவு, இன்பமாய்த் திகழும் சிவப்பரம்பொருளின் குணங்களாக நம் முன்னோர் எட்டைக் குறிப்பிடுவர். இதையொட்டியே வள்ளுவப் பேராசானும் “கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்று குறிப்பிடுவார். சிவத்தின் எட்டுக் குணங்கள்:-

1.    தன்வயம்
2.    தூய உடம்பு
3.    இயற்கை உணர்வு
4.    இயல்பாகவே பாசமின்மை
5.    பேரருள்
6.    முடிவிலா ஆற்றல்
7.    வரம்பில் இன்பம்
8.    முற்றுணர்வு

என்பனவாம்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய அப்பரம்பொருள் தன்வயத்தைத் தம் குணமாகக் கொண்டுள்ளது. அதாவது இறை பொன்னையோ, பொருளையோ மற்று வேறெதையோ காட்டி வயப்படக் கூடிய ஒன்று அல்ல! எல்லா நிலையிலும் ஒருபடித்தாகவே இருத்தலை உடையது என்று பொருள்படும். அப்பரம்பொருள் அருளையே திருமேனியாக உடையதினால் அது தூய உடம்பினது  ஆகிறது.  மேலும்  அப்பரம்—ச‘ணுழூ  எல்லாவற்றையும்  அறிவதாய் இருப்பதனால் அதை முற்றுணர்வு உடையது என்போம். சிவப்பரம்பொருளுக்கு யாரும் கற்றுக்கொடுக்காமலேயே இயல்பாகவே அறிவுப் பிழம்பாய் இருப்பதனால் அதை இயற்கை உணர்வினது என்கிறோம். உயிர்களைப் போன்று ஆணவம், கன்மம், மாயை போன்ற பல பந்தங்களுக்குத் தாக்குறாது இருப்பதனால் அப்பரம்பொருளை இயல்பாகவே பாசமின்மை உடையது என்போம். அருட்கடலாய் அருளுதலையே தனக்குப் பணியாய் கொள்வதனால் அச்சிவத்தைப் பேரருள் உடையது என்கிறோம். எல்லாவற்றையும் விளையாட்டாகச் செய்து முடித்துவிடக் கூடிய பேராற்றல் மிக்கதனால் அப்பரம்பொருளை முடிவிலா ஆற்றல் உடையது என்கிறோம். எல்லா இன்பங்களும் ஒரு நாள் சலித்துவிட்டது என்று ஆகக் கூடிய நிலையிருக்க, என்றும் எல்லையற்ற, முடிவில்லாத, தெவிட்டாத இன்பம் பயப்பதினால் அச்சிவத்தை வரம்பில் இன்பம் உடையது என்கிறோம்.

இவற்றில் தன்வயமுடைமை, தூய உடம்புடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேராற்றல் உடைமை ஆகியவற்றை உண்மை என்றும் இயற்கை உணர்வு, முற்றுணர்வு, பேரருள் ஆகியவற்றை அறிவு என்றும் வரம்பில் இன்பமுடைமையை இன்பம் என்று நம் முன்னோர் குறிப்பிடுவர். இதனையே வடமொழியில் ‘சத்சித்ஆனந்தம்’ என்று குறிப்பிடுவர்.

இதுகாரும் பார்த்ததின் வழி சிவப்பரம் பொருளை ஓசை வடிவமான விநாயகர், அறிவு வடிவமான முருகர், ஆற்றல் வடிவமான அம்பாள் இன்னும்  மற்றைவையெல்லாம் அடங்கிய ஒரு பரம்பொருளாகச் சைவம் குறிப்பிடுகின்றது. எனவே காணபத்யம், கௌமாரம், சாக்தம் என்பது சைவத்தினின்று வேறுபட்டஙு கொள்கைகள் அல்ல. அவை உண்மை, அறிவு, இன்பமாய் விளங்குகின்ற சிவப்பரம்பொருள் பொது நிலையில் கொள்கின்ற பல்வேறு அருட்திருமேனிகள் என்னும் உண்மைச் சைவத்தையறிந்து வாழ்வாங்கு வாழ்வோமாக!

– திருச்சிற்றம்பலம் –