இல்லாள் உயர்வு

71

தன்னொடு இயல்புடைய பெற்றோர், மனைவி, குழந்தைகள், ஆகியவரைக் காப்பதும், துறந்தவர், வரியவர், இறந்தவருக்குத் துணை நிற்பதும் தென்புலத்தார் தெய்வம் விருந்து, ஒக்கல், தான் என ஐம்புலத்தவரைப் பேணிக்காப்பதுவும் ஒவ்வொரு இல்லறத்தவரும் தன் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும் என்று தமிழரின் வாழ்வியல் முறைமையினைப் பறைசாற்றும்  திருவள்ளுவத்தின் வழி அறியலாம். இல்லறத் தலைவன் தன் கடமையைச் சரிவர ஆற்றப் பக்கத்துணையாக இருக்க வேண்டியது அவனது இல்லாளே! ஒவ்வொரு ஆணின் உயர்வுக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கின்றாள் என்பதும் தாய்க்குப் பின் தாரமே அந்தப் பணியைச் செவ்வன செய்ய வேண்டும் என்பதும் பெரிய புராணம் காட்டும் நெறியாகும்.

இதனை உணர்த்த வள்ளுவப் பெருந்தகையும் இல்வாழ்க்கை என்ற அதிகாரத்திற்கு அடுத்து வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தை அமைத்து இல்லத்தரசிகளின் கடமைகளையும் இல்லாள் ஒழுக்கத்தையும் வழியுறுத்திக் கூறுகின்றார். ஒவ்வொரு இல்லத் தலைவிக்கும் அன்பு என்கின்ற உயர்ந்த பண்பு இருக்க வேண்டும் என்கின்றார். காரணம் இல்லறப் பண்புகள் அன்பும் அறச்செயல்களும் உள்ள இடத்திலேயே வெளிப்படும். அதுவே இல்லறத்தின் பயனாகவும் அமையும் என்பதனை, “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை, பண்பும் பயனும் அது” என்கிறார்.

செந்தமிழர்கூறும் இல்லறக்கடமைகளை ஆற்றும் இல்லறத்தலைவனுக்கு அன்பே வடிவமான இல்லாள் அமைவது முதன்மையானது. காரணம் அன்பு மட்டும் தான் தம் பொருளைப் பிறருக்குப் பகிர்ந்து அளிக்க அனுமதிக்கும். அன்பு இல்லையானால் கருணை என்பதோ, பகிர்ந்தளிப்பது என்பதோ ஒருபோதும் நிகழாது. தனக்குத் தனக்கு என்று அலைந்து பிறருக்கும் கொடுக்காது தானும் நுகராது மாளும் நிலை ஏற்படும். இதனையே வள்ளுவப் பெருந்தகை, “அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறளின் வழி நமக்கு உணர்த்துகின்றார்.

மற்றொரு மனைத்தக்க மாண்பு என்னவென்றால் உயர்வுடைய இல்லாள் கணவருடைய அல்லது குடும்பத்தினுடைய வரவுக்கு ஏற்றச் செலவைச்  செய்யும் திறம் உள்ளவளாக இருக்க வேண்டும் என்பது. வரவுக்கு மீறி செலவுகள் செய்வாளேயானால் அந்த இல்லாளைக் கொண்ட இல்லறத்தானும் தன் கடமைகளில் இருந்து தவறி இல்லற மாண்பைக் கெடுத்தப் பழிக்கு ஆளாக நேரிடும்.

அடுத்து, இல்லாளுக்கு உயர்வு தருவது மனைமாட்சி. அதாவது இல்லறத்திற்குரிய நல்ல செய்கைகள், குறிப்பாக இல்லத்தலைவன் ஆற்ற வேண்டிய கடமைகளை உரிய காலத்தில் எடுத்து இயம்பியும் இல்லக்கடமைகளில் இருந்து விலகும் கணவனை நெறிப்படுத்தியும் குடும்ப உயர்வுக்குப் பாடுபடுவது மனைமாட்சி. இப்பண்பு இல்லாளிடம் இல்லையாயின் வாழ்க்கை எத்துணைப் பொருட்செல்வம் மிகுந்ததாக இருந்தும் பயனில்லை என்பதனைத் திருவள்ளுவரின், “மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை, எனைமாட்சித் தாயினும் இல்” என்ற வரிகள் நம் ஆழ்மனதில் பதியவேண்டிய வரிகள் என்பது புலனாகும். பெரிய புராணத்தில் திருநீலகண்டக் குயவனார் விலை மகளிடம் சென்று திரும்பியது கண்டு அவரை நெறி படுத்தினார் அவர் மனைவி என்று காண்கின்றோம்.

இல்லாளை மேலும் உயர்வு படுத்துவது அவள் கொண்டுள்ள கற்பு நெறியாகும். எல்லாச் சூழலிலும் தன் கற்புக்குக் குறை ஏற்படாது களங்கமில்லாத தெள்ளிய நீர் ஓடை போல் இருப்பது தான் சிறந்த கற்பு. இவ்வாறான பெண்ணைப், “பெண்ணின் பெருந்தகை” என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை. இல்லச் சிறையில் இட்டு ஒரு பெண்னின் கற்பைக் காப்பது என்பது மடமை. அவள் நிறை காக்கும் கற்பே தலையாயது. அதுவே தம்மை ஆளும் இல்லறத்தானைச் சைவம் கூறும் வீட்டு நெறியாகிய உயந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது பைந்தமிழர் வாழ்வியல் நெறியாகிய சைவத்தின் முடிபு. இதனையே பெரிய புராணப் பெண்கள் தங்கள் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தனர்.

எல்லா காலத்திலும் கணவரை மதிப்பதிலிருந்தும், போற்றுவதிலிருந்தும், அவருக்குப் பணிவிடைகள் செய்வதிலிருந்தும் இல்லறத்தார் ஆற்றவேண்டிய கடமைகளிலிருந்தும் தவறியதே இல்லை. நான்கு நாட்கள் உணவில்லாத போதும் இனி சென்று கடன் பெற முடியாது என்ற சூழல் இருந்த போதும். அடியாரைப் பேணியே கைப்பொருளெல்லாம் இழந்தப் போதிலும் இளையான் குடிமாற நாயனாருடைய மனைவி புன்முறுவல் மாறாத தாய்மைப் பண்புடன் அன்று விதைத்த முளை நெல்லை அள்ளி வந்தால் அடியாருக்கு உணவிடலாம் என்று அன்போடு நினைவூட்டி, நாயனார் தன் இல்லறக்கடமையைச் சரிவரச் செய்து உய்வு பெற துணை நின்ற இல்லாள் உயர்வைப் பேசுகிறது நம் சைவப்பெட்டகமான பெரிய புராணம்.

ஆகவே மங்கலம் என்பதே மனைமாட்சி தான். இல்லாள் உயர்வுதான் இல்லறத்தான் தன் இல்லறக் கடமையைச் சீரிய முறையில் ஆற்றித் தமிழ் கூறு நல்லுலகத்தின் உயர்வையும் சீர்மையையும் உலகம் அறியச் செய்யும். மேன்மை மிகு பைந்தமிழர் பண்பாட்டில் இல்லாள் உயர்வு மிகவும் போற்றத்தக்கது. இல்லற ஒழுக்கமும் இல்லறத்தைப் பேணும் திறமும் அன்பும் உடைய இல்லாளாலைப் பெற்ற குடும்பம், உயர்வடைவது திண்ணம். ஆகவே இல்லத்தரசிகள் அனைவரும் தத்தம் கடமையை உணர்ந்து மேன்மை மிகு பைந்தமிழர் மாண்பு சிறக்கவும் மேன்மைகொள் சைவ நீதி தழைத்து ஓங்கவும் நாம் இல்லறத்தில் வாழ்வாங்கு வாழவும் பாடுபடுவோமாக!