பூப்பு எய்துதல் விழா

1559

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்களில் பெண் பிள்ளைகள் பருவம் அடையும்போது பூப்பு எய்துதல் விழா எனும் கரணம் நிகழ்த்தப்பெறும். இக்கரணம் அரிய நன்மைகளையும் படிப்பினைகளையும் வழங்குவதால் நம் முன்னோர் இதற்கு உரிய இடத்தினைக் கொடுத்துள்ளனர். இக்கரணத்தில் பொதிந்துள்ள உண்மையை அறியாது, இக்கரணத்தைச் செய்யாவிட்டால் தீங்கு ஏற்படும் என்ற அளவிலே பலரும் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலர் தங்கள் பிள்ளை பருவம் எய்தியதை வெளியே சொன்னால் பொருத்தமாக இருக்காது என்று கமுக்கமாய் இருந்து எதுவும் செய்யாது விட்டு விடுவர். இன்னும் சிலர் இக்கரணத்தைத் திருமணத்திற்கு முன்பாகச் செய்து விட வேண்டும் என்ற இக்கட்டிற்காக உரிய காலத்தில் செய்யாது காலம் கடந்து செய்வர். இக்கரணத்தை உரிய காலத்தில் செய்து விடுவதே அதன் உண்மையான பயனை நல்கும் என்பது குறிப்பிடத்தக்கது.     

பெண் பிள்ளை பூப்பு எய்தியதும் வீட்டின் ஒரு பகுதியில் சிறு குடிசையினைப் போன்று அமைத்து அப்பிள்ளையைத் தனிமைப்படுத்துவர். முன்பு காலத்தில் இதற்கென்று தனிக் குடிசை அமைத்தார்கள். இன்று வீட்டின் அறையில் ஒரு பகுதியைத் தடுத்து, அப்பெண் பிள்ளையின் முறைமாமன் அல்லது தாய்மாமனைக் கொண்டு தென்னங்கீற்று ஓலையால் சிறு தடுப்போ அல்லது மறைப்பையோ அமைப்பர். ஏழு நாட்களுக்கோ பதினாறு நாட்களுக்கோ பருவம் எய்திய பெண்பிள்ளையை அக்குடிசைக்குள் இருத்தித் தனிமைப் படுத்துவர். பெண்பிள்ளை பருவம் எய்திய செய்தியினை முறைமாமனுக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்தவுடன் முறைமாமன் சீர் பொருட்களுடன் வந்து அப்பெண் தனிமைப் படுத்தப்படுவதற்குக் குடிசை அமைக்க வேண்டும் என்ற முறையினை நம் முன்னோர் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

தனிமைப் படுத்தப்பட்டப் பெண்ணை முறைமாமனும் இதர ஆண்களும் பார்க்கப், பேச முடியாதபடி பூப்பு எய்துதல் விழா நாள் வரையிலும் மறைத்தே வைத்திருப்பர். பருவம் எய்திய நாள் முதல், முறைமாமன் கொண்டு வந்த சீர் பொருட்களால் அப்பெண்ணை நன்கு அழகு செய்து, பூச்சூடி, வளையல்கள் அணிவித்து, வளர்ந்த பெண்கள் அணிகின்ற பாவாடைத் தாவணியோ சேலையோ அணிவித்துத் திலகமிட்டுப் பூப்பு எய்துதல் விழா நாள் வரை தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கச் செய்வர். தனிமைப் படுத்தப்பட்டக் காலத்தில், ஒவ்வொரு நாளும் அவளுக்குப் பச்சைப்பயிர் போன்ற பயிர்வகை உணவுகளையும் விளக்கெண்ணெய்யையும் கொடுத்து உண்ணச் செய்வர். உறவுப் பெண்களும் தோழிகளும் ஒவ்வொரு நாளும் அப்பெண்ணுக்கு முகத்திலும் கைகளிலும் சந்தனம் பூசிக் கேலியும் கிண்டலும் செய்வர். இவ்வாறு செய்யப்படும் செயல்முறைகள் முதன்மை அற்றவை போன்று தோன்றினாலும் இவற்றில் பல அறிவியல் கூறுகளும், உளவியல் கூறுகளும் உடல்நலக் கூறுகளும் பண்பாட்டுக் கூறுகளும் அடங்கியுள்ளன.

முறைமாமனுக்கு அறிவித்துச் சீர் கொண்டு வரச் செய்து அம்முறைமாமனைக் குடிசை இடச் செய்வது என்பது முறைமாமனுக்கு உரிய கடப்பாட்டை உணர்த்துவதற்கு ஆகும். அதாவது பருவம் எய்திய பெண்பிள்ளையின் தாயார் வீட்டு சார்பில், திருமணத்திற்கு உரிய காலக்கட்டத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் அப்பெண்ணிற்குப் பாதுகாப்பாகவும் அவளின் எதிர்காலத்திற்குத் துணைநிற்கவும் தாய்மாமன் கடப்பாடு உடையவன் என்பதனை உணர்த்துவதே இக்கரணத்தின் நோக்கமாகும். தவிர, பருவம் அடைந்த பெண்ணை ஏன் தனிமைப் படுத்தினார்கள் என்றால் இதுநாள்வரை சிறுமியாக, ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி எல்லோரிடமும் இயல்பாகப் பழகி வந்த அச்சிறுமி இப்போது பருவப் பெண்ணாகி விட்டதால், வளர்ந்த பெண்ணாக ஆண்களிடத்தில் கட்டுப்பாட்டுடன் பழக வேண்டும் என்பதனை அவளுக்கு உணர்த்துவதற்கு ஆகும்.

இனி அவள், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று வளர்ந்து விட்டப் பெண்களுக்கு உரிய இயல்புகளோடு பழகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்தவே அவ்வாறு செய்திருக்கின்றனர். அவள் வளர்ந்த பெண்ணாக ஆகிவிட்டாள் என்பதனை உணர்த்தவே வளர்ந்த பெண்கள் அணியும் உடைகளையும் அணிகலன்களையும் திலகத்தையும் பெண்கள் விடாது சூடும் மலரையும் அவளுக்குத் தொடர்ந்து அணிவித்துப் பழக்கப்படுத்தியுள்ளனர். பூப்பெய்திய பெண்பிள்ளை உடல் அளவில் சோர்வுறுதல் ஏற்படும் என்பதால் அவள் உடலுக்கு வலுவூட்டும் வகையில் புரதச் சத்து உடைய பயிர் வகைகளையும் உடலுக்குச் குளிர்ச்சியை அளிக்கும் விளக்கெண்ணெய்யையும் உண்பதற்குக் கொடுத்துள்ளனர்.

பருவம் எய்திய பெண்ணுக்கு இது புதிய ஒன்றாய் இருப்பதனாலும் அப்பெண்ணைத் தனிமைப்படுத்தி இருப்பதனாலும் அவளுக்கு உள்ளத்திலும் அச்சமும் அழுத்தமும் ஏற்பட்டிருக்கும் என்பதனாலும் உடலின் வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சியை ஏற்படுத்தும் சந்தனத்தை அவளின் கன்னங்களிலும் கைகளிலும் உடலிலும் பூசும் வழக்கத்தினை ஏற்படுத்தி உள்ளனர். அத்தைமார்களும் உறவுப்பெண்களும் தோழிமார்களும் பருவம் எய்திய பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனும் ஒழுங்குமுறைகளைக் கேலியும் கிண்டலுமாக உணர்த்துவர். வயது வந்தப் பெண்ணாக ஆண்களிடம் இடைவெளி வைத்துப் பழகும் முறை, பெண்மையைப் போற்றும் முறை, அளவோடு சிரிக்கும் முறை, அடக்கமாய் அமருகின்ற முறை, மெல்லப் பேசுகின்ற முறை, மென்மையைப் போற்றுகின்ற முறை போன்றவற்றை நாசுக்காக எடுத்து உரைப்பர்.

ஒரு வாரமோ அல்லது பதினாறு நாட்களோ தனிமைப்படுத்தப்பட்டப் பெண், அக்காலக்கட்டம் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு மஞ்சள் நீராட்டு என்று ஒரு செயல்முறையினைச் செய்வர். இது மங்கலப் படுத்துவது என்று பொதுவாகக் கூறினாலும் மஞ்சள் மிகச் சிறந்த கிருமிக் கொல்லி என்பதால் இவ்வாறு செய்வது தூய்மையையும் நலத்தையும் கருதியே ஆகும். தவிர, பருவம் எய்திய பெண் தனக்கு அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து ஆளாக்கி விட்டிருக்கின்ற பெற்றோருக்கும் உறவினருக்கும் நன்றியைத் தெரிவித்து, அவர்களின் நல்வாழ்த்தினைப் பெற இப்பூப்பு எய்துதல் விழா சிறப்பாக நடத்தப்பெறும்.

மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவு முறைகளுக்கெல்லாம் சொல்லி அனுப்பி வரச் செய்வார்கள். விழாவன்று இல்லத்தில் உள்ள பெரியவர்களின் வழிநடத்துதலில் கூட்டு வழிபாட்டினைச் செய்து, பெண்ணுக்குப் புத்தாடைகள் அணிவித்துத் திருமணப் பெண்ணைப் போன்று அழகு செய்து நலங்கு வைப்பர். நலங்கு பொருட்கள் பெண்ணின் உள இருக்கத்தையும் அச்சத்தையும் போக்க உதவுவதோடு அவளின் ஒளி வட்டத்தையும் தூய்மை செய்ய பெரிதும் உதவுகிறது. இதனைத் திரட்டி சுற்றுதல் என்றும் குறிப்பிடுவர். இவ்வாறு செய்வது, பருவம் எய்திய பெண் திருமணத்திற்குரிய பருவத்தில் காலடி எடுத்து வைக்கின்றாள் என்று உறவுமுறைகளுக்கு மறைமுகமாகக் கூறுவதற்கும் ஆகும் என்ற எண்ணம் முன்பு இருந்துள்ளது. முன்பு காலத்தில் பருவம் அடைந்த பெண்களை விரைவாகத் திருமணம் செய்து கொடுத்து விடும் வழக்கம் இருந்தமையினால் அவ்வாறு எண்ணியுள்ளனர். இன்றைய சூழல் வேறு. இப்பூப்பு எய்துதல் விழா பருவம் அடைந்த ஒரு பெண் அடிப்படையில் பெற வேண்டிய பல நன்மைகளையும் செய்திகளையும் பெறுவதற்கு வழிவகுப்பதோடு மட்டும் அல்லாமல் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் அமைந்துள்ளது.

பெண்ணியத்தையும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டினையும் உடல் நலத்தையும் பண்பினையும் பேணிக்காப்பதற்கு அடித்தளம் இடும் இவ்வரிய கரணம் இன்றியமையாதது.  இக்கரணத்தைப் பலரையும் கூட்டிச் செய்தல் வேண்டாம் என்று எண்ணுகின்ற பெற்றோர், இக்கரணத்தைத் தங்கள் குடும்ப அளவில் எளிமையாகச் செய்து, பருவம் எய்துகின்ற பெண் பெற வேண்டிய அடிப்படைக் கூறுகளையும் அறிவுரைகளையும் தாங்களே தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறலாம். இத்தகைய வழிகாட்டுதல்களும் எடுத்துக்காட்டுகளுமே பதின்ம அகவையில்  பிள்ளைகளைத் தடுமாறச் செய்யும் ஒழுக்கச் சீர்கேடுகளில் இருந்து காப்பாற்றி, நம் பிள்ளைகளைச் சரியான வழியில் இட்டுச் சென்று அவர்களை நம் இனம் காக்க வந்த குலவிளக்குகளாய் ஒளிரச் செய்யும். இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!