29. பொல்லா வினையேன்

1649

29. பொல்லா வினையேன்

செந்தமிழ்ச் சைவர்களின் சமயக் கொள்கையான சித்தாந்த சைவம் இறை, உயிர், தளை எனும் முப்பொருள் உண்மையைப் பற்றிக் குறிப்பிடும். தளை அல்லது பாசம் என்பதே உயிர்கள் பரம்பொருளான சிவத்தை அடையத் தடையாக இருக்கின்றது என்று சித்தாந்த சைவம் மேலும் குறிப்பிடும். தளை எனும் கட்டு, ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று பொருள்களை உட்கூறாகக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிடுகின்றது. ஆணவம், கன்மம், மாயை எனும் கட்டுக்களை நீக்கினால் மட்டுமே உயிர் தன்னுடைய அறியாமை நீங்கித் தன்னுடை அகண்டிதத்தை உணர்ந்து, உண்மை, அறிவு, இன்ப வடிவாய் இருகின்ற பரம்பொருளை உணர முடியும் என்று தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கை குறிப்பிடுகின்றது.

அறியாமை நீங்குவதற்குத் தடையாகவும் பெருமானை உணர்வதற்குக் கட்டாகவும் இருக்கின்ற கன்மத்தை வினை என்றும் குறிப்பிடுவர். வினையைச் செயல் என்றும் குறிப்பிடுவர். இதனையே வடமொழியில் கருமம் என்று குறிப்பிடுவர். இதனாலேயே தீமை செய்கின்ற வினையை உடையவன் என்று குறிப்பிடப், “பொல்லா வினையேன்” என்று மணிவாசகர் திருவாசகத்தின் சிவபுராணத்தில் குறிப்பிடுவார். வினையை இருவகையாக, நல்வினை என்றும் தீவினை என்றும் குறிப்பிடுவர். செம்பைக் களிம்பு பற்றி இருப்பது போன்று உயிரைக் கீழ் நோக்கிச் செலுத்துகின்ற ஆணவம் உயிரைப் பற்றியுள்ளது என்பர். இவ்வாணவத்தைப் போக்கவே பரம்பொருளான சிவம் தம் பெரும் பரிவினால் கன்மம், மாயை எனும் இரு பொருள்களை உயிருக்குக் கூட்டி வைத்துள்ளது என்பர்.

வண்ணான் துணியில் இருக்கின்ற அழுக்கினைப் போக்க ஆற்றங்கரையில் இருக்கின்ற உவர் மண்ணைப் பயன்படுத்துவது போல உயிரைப் பற்றி இருக்கின்ற ஆணவம் எனும் அழுக்கினைப் போக்கப் பெருமான் கன்மம், மாயைக் கூட்டி வைத்திருக்கின்றான் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. உயிர்களின் இயல்புகளில் சிலவான அறிவித்தால் அறிதல், எதையும் அழுந்தியே அறிதல் என்ற தன்மையை ஒட்டி உயிர்களின் ஆணவ மலத் தடிப்புக்கு ஏற்ப நுகர்ச்சிகளை வகுத்துக் கொடுத்துப் பெருமான் உயிர்களைச் செவ்வி அடையச் செய்கின்றான் என்றும் குறிப்பிடுகின்றன. உயிர்கள் அழுந்திப் பட்டறிவுப் பெற்றுத் தங்களின் அறியாமையைப் போக்கிக் கொள்ளவே உயிர்களைப் பெருமான் நல்வினை, தீவினை எனும் இரு வினைகளை செய்யத் தூண்டுகின்றான் என்று சைவம் குறிப்பிடுகின்றது.

நல்வினை என்பது தனக்கும் பிற உயிர்களுக்கும் எண்ணத்தினாலும் வாக்காலும் உடலாலும் செய்யும் நல்ல செயல்கள். தீவினை என்பது தனக்கும் பிற உயிர்களுக்கும் எண்ணத்தினாலும் வாக்காலும் உடலாலும் செய்யும் தீய செயல்கள். நல்வினையப் பொன்விலங்கு என்றும் தீவினையை இரும்பு விலங்கு என்றும் குறிப்பிடுவர். இரண்டுமே விட வேண்டியவை என்பர். இதனையே, “இருள்சேர் இருவினை” என்பார் பேராசான் திருவள்ளுவர். வினையினை அதன் நிலை கருதி மூன்றாகக் குறிபிடுவர். அவை பழவினை, நுகர்வினை, ஏறுவினை என்பனவாம். பழவினை சேமிப்பில் உள்ள, பிறவிக்குக் கொண்டு வரப்படாத வினை ஆகும். நுகர்வினை என்பது பிறவிக்குக் கொண்டு வரப்பட்டு நுகர்ந்து கொண்டிருப்பது. இதுவே இப்பிறவியில் உயிர்கள் இன்ப துன்ப நுகர்வுகளாய் நுகர்ந்து கொண்டிருப்பது. ஏறுவினை என்பது பிறவியில் நல்வினை மற்றும் தீவினை எனும் செயல்கள் செய்யும்போது புதிதாகச் சேர்த்துக் கொள்ளும் வினை.

நல்வினைத் தீவினைகளைப் பிறவியில் நுகர்வினையாய்ச் செய்து கொண்டும் அதனால் விளையும் பயனாகிய ஏறுவினையைச் சேர்த்துக் கொண்டும் போவதால் உயிர்கள் பிறப்பு இறப்பு எனும் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. உயிர்கள் நுகர்ந்து கழிப்பதற்கேற்ப மாயை எனும் நுண் பொருளில் இருந்து எல்லா உயிர்களுக்குமான உடல்கள், கருவிகள், உலகங்கள், நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றப் பெருமான் படைத்து, அவற்றுள் உயிரை உழன்று வினைகள் ஆற்றுமாறு செய்து செவ்விப்படுத்துகின்றான் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. உயிர்களின் உடல்களுக்கு ஏற்ப ஓர் அறிவு ஆறு அறிவு வரை உள்ளவற்றிற்கு அவற்றிற்குரிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் உட்கருவிகளும் கண், காது, மூக்கு, நாக்கு, மெய், கை, கால், வாய், கருவாய், எருவாய் போன்ற கருவிகளும் அளிக்கப்படுகின்றன.

உயிர்கள் வினையை நுகர்வதற்கு ஏற்ப எவ்வுலகில், எந்நாட்டில், எந்நகரில், எவ்வீட்டில், எக்குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று இறைவன் கூட்டுவிக்கின்றான். தவிர வீடு, மனைவி, மக்கள், சுற்றம், உற்றார் உறவினர், நண்பர் என யார் நமக்கு அமைய வேண்டும் என்ற நுகர்வுப் பொருள்களையும் இறைவன் கூட்டுவிக்கின்றான். இதனையே பேராசான் திருவள்ளுவரும், “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” என்பார். வினைகளை மனம், வாக்கு, காயம் என்ற முகான்மையான மூன்றின் மூலமே பெருமான் செயல்படுத்துகின்றான். இம்மூன்றின் ஏவல் கருவிகளே மேற்கூறிய பத்து அறி கருவிகளும் செயல் கருவிகளும் ஆகும். உடலில் உயிர் மூலாதாரம், உந்தி, இதயம், கண்டம், புருவநடு எனும் ஐந்து இடங்களில் நின்று முறையே உயிர்ப்படங்கல், பேருறக்கம், உறக்கம், கனவு, நனவு என்னும் ஐந்து நிலைகளில் நின்று வினையினைச் செய்யும் என்பர்.

மனத்தினால், அன்பு, பொறுமை, அருள், அறச்சிந்தனை, ஆசை, கோபம் போன்ற வினைகள் இயற்றப்படுகின்றன. வாக்கினால் வாய்மை, பாராட்டு, இன்சொல், பொய், புறங்கூறல் போன்ற வினைகள் இயற்றப்படுகின்றன. காயத்தினால் கொடை, களவு, கொலை போன்றவை இயற்றப் பெறுகின்றன. உயிருக்குப் பிறவியில் நுகர்வினை மூன்று வழியாகத் தூண்டப் பெறுகின்றது. அவை ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதெய்விகம் என்பனவாகும். ஆதி ஆன்மிகம் என்பது தன்னாலும் பிற உயிர்களாலும் ஏற்படும் இன்ப துன்ப நுகர்வுகளின் செயற்பாடுகள் ஆகும். எடுத்துக்காட்டாகக் கீழே விழுதல், முட்டிக் கொள்ளுதல், கையை நறுக்கிக் கொள்ளுதல் போன்ற துன்ப நுகர்வுகளும் பிறருக்கு உதவி மகிழுதல், பிறரிடத்தில் அன்பு பாராட்டி உள்ளம் பூரித்தல் போன்ற இன்ப நுகர்வுகளுமாகும். பிற உயிர்களினால் வரும் நுகர்வுகள் யாதெனில் பாம்பு கடித்தல், எதிரிகளால் தாக்கப் படுதல் போன்ற துன்ப நுகர்வுகளும் பிறர் உதவி செய்தல், பிறர் பரிசளித்தல் போன்ற இன்ப நுகர்வுகளும் ஆகும்.

ஆதி பௌதிகம் என்பது பஞ்ச பூதங்களினால் வரும் இன்ப துன்ப நுகர்வுகள். எடுத்துக்காட்டாக நில நடுக்கம், தீ, புயல் போன்றவற்றினால் ஏற்படும் துன்ப நுகர்வுகளும் கோள்கள், விண்மீன்கள் போன்றவற்றால் வரும் துன்ப நுகர்வுகளும் இதில் அடங்கும். ஆதி தெய்விகம் என்பது இறைவனால், சிற்சத்திகளால் அகத்திலேயோ, நேரிலேயோ நிகழ்த்தப்பெறும் இன்ப துன்ப நுகர்வுகளின் செயற்பாடுகள். எடுத்துக்காட்டாகப் பெருமான் தோன்றாத் துணையாக உள்ளத்தில் நின்று உணர்த்துவதால் ஏற்படும் செயற்பாடுகளும் செவ்வியுடைய உயிர்களுக்குப் பெருமான் நேரில் தொன்றி இன்ப துன்ப நுகர்வுகளை ஏற்படுத்திச் செயற்படுத்துவது ஆகும் என்பர். சிறு தெய்வம், குலதெய்வம், காவல் தெய்வம், தீய சத்திகள் என்று செயல்படுவதும் ஆதி தெய்விகத்தில் அடங்கும் என்பர். இவ்வாறு நுகர வேண்டிய நல்வினைகள் தீவினைகள் உடையவர்களாக உள்ளோம் என்பதனையே பொல்லா வினையேன் என்று மணிவாசகர் குறிப்பிட்டார். பெருமானின் திருவருளை முன்வைத்துச் சிவ நல்வினைகளை ஆற்றி வருவோமேயானால் வினைப்பயனின் விளைவுகள் நம்மை விட்டு அகலும் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!