119. தவ முயற்சி நழுவல்
எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடிகளில் மனத்தைக் குவிய வைக்கின்ற முயற்சியைத் தவம் என்றும் அம்முயற்சிக்கான வழிகளே சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற நன்னெறி நான்கு என்றும் தமிழ்ச் சிவாகம ஆசான் திருமூலர் குறிப்பிடுகின்றார். பரம்பொருளான சிவத்தின் அருள் வீழ்ச்சி உயிர்களின் மீது பதியவும் பரம்பொருளான சிவம் சிவஆசானாக வெளிப்பட்டு அருளவும் வாயிலாக விளங்குகின்ற சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றின் பயிற்சிகள் சிவனின் திருவருளைப் பெறுவதற்குத் துணை நிற்பவையே அன்றி அவையே முடிந்த நிலை அல்ல என்றும் திருமூலர் குறிப்பிடுவார். உயரமான இடத்திலே இருக்கின்ற பொருளை ஏணி கொண்டு ஏறிப் பெறுகின்றோம். இதில் இலக்கு, பெற வேண்டிய பொருளே அன்றி ஏணி அல்ல என்பதனைப் போன்று பெருமானின் திருவருளைப் பெறுவதற்குத் துணையாக உள்ள நன்னெறி நான்கே முடிந்த முடிவல்ல! அவற்றின் வழி அடைய வேண்டிய பெருமானின் திருவருளே இலக்கு என்பார் திருமூலர். இதன் வழி தவ முயற்சியால் பெருமானின் திருவருளைப் பெற்ற உயிர்கள் பெருமானின் திருவருளையே கடைப்பிடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் நன்னெறி நான்கும் விடுதற்பாலன ஆதல் வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார் திருமூலர். சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நன்னெறி நான்கினால் இயற்றும் தவ முயற்சியானது கடைப்பிடியாகக் கையில் வைத்திருந்த பொம்மை, உறங்கும் குழந்தையின் கையில் இருந்து அக்குழந்தை அறியாமல் தானே நழுவுவது போல, பெருமானின் திருவருள் எய்தப் பெற்ற நல் அடியார்களின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து தவ முயற்சிகள் தானே நழுவும் அல்லது இறுதி வரை நழுவாமலும் இருக்கும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நன்னெறி நான்கு அல்லது இறைவனின் திருவடியில் தங்களது மனதைக் குவிக்கும் முயற்சியில் ஈடுபடும் தவ முயற்சியை உடையவர்கள் இறைவனின் திருவருள் வீழ்ச்சி தம் மீது விழும் முன்னே அவற்றைத் தானே நழுவியது என்று அல்லாமல் அவர்களே விட்டு விட்டேன் என்று சொல்லி இருப்பார்களேயானால் அவர்கள் தவ முயற்சியில் பிழை செய்தவர்கள் ஆவர் என்றும் அவர்களுக்குப் பெருமானின் திருவருள் வந்து வாய்க்கப் பெறாது என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
இறைத் தொண்டு, ஆலயத் தொண்டு, மக்கள் தொண்டு என்ற சீலத்தில் நின்றும் பூசனைகள், வேள்வி என்ற நோன்பினில் நின்றும் எட்டுப் படி நிலைகளை உடைய சிவயோகம் எனும் சிவச்செறிவினில் நின்றும் சிவஅறிவு நூல்களைக் கற்றல், கேட்டல், எண்ணுதல், அதில் அழுந்தி நிற்றல் எனும் அறிவு நெறியின் வழியும் தவ முயற்சி வெற்றி பெற்று இறைவனின் திருவருள் இன்பத்தினை (சிவபோகம்) நுகர்ந்து கொண்டிருக்கின்ற சிலருக்கு இதற்கு முன் செய்த தவ முயற்சிகள் இனி வேண்டுவது இல்லாது தானே நழுவிப் போய்விடும் என்கின்றார் திருமூலர். இறைவனின் திருவடியில் மனம் குவியப் பெற்றவருக்கு உலகியல் உணர்வு தோன்றாமையால் உலகியலை விடுவதற்குத் தேவையான தவ முயற்சிகள் வேண்டுவது இன்றிச் சிலருக்குத் தானே நழுவிப் போகும் எண்கின்றார் திருமூலர். இதனைத்,
“தவம்வேண்டும் ஞானம் தலைப்பட வேண்டில்,
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்,
தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத்,
தவம்வேண்டா மாற்றம்தனை அறியாது”
என்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.
அறிவுக்கு அறிவாய் உள்ள பேர்அறிவாகிய சிவத்தைத் தன் அறிவினுள்ளே ஒருவர் பெற்று இன்புறும் நிலையைப் பெற்று விடுவாரானால் அச்சிவத்தை அறிந்து கொள்ள உதவும் சிவஅறிவு நூல்களை ஒருவர் ஓதவேண்டுவதில்லை எனும் உணர்வு சிலருக்குத் தானே ஏற்படும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருவருள் தங்கும் உடலாக (பரகாயம்) ஒருவருக்குப் பேறு கிட்டிவிடுமாயின் பின்பு அவர் முயன்று இனி திருவருளைப் பெற வேண்டும் என்ற முயற்சி வேண்டுவதில்லை என்கின்றார் திருமூலர். பரம் பொருளின் திருவருள் பதியப் பெற்று, அத்திருவருளிலே முழுமையாக அழுந்தி நிற்க, அத்திருவருளே ஒருவரின் செயல்களைத் திருவருளின் செயலாகவே நடத்துவிக்க, அவருக்குத் தான் முயன்று புலன்களையும் பொறிகளையும் அவற்றால் நடத்தப் பெறும் செயற்பாடுகளையும் சிவநெறிப் படுத்த வேண்டும் என்ற தவ முயற்சிகள் வேண்டுவது இல்லை என்கின்றார் திருமூலர். இதனை,
“ஓதலும் வேண்டா உயிருக்குஉயிர் உள்ளுற்றால்,
காதலும் வேண்டா மெய்க்காயம் மெய்க்கண்டால்,
சாதலும் வேண்டா சமாதிகை கூடினால்,
போதலும் வேண்டா புலன்வழி போதாற்கே”
என்கின்றார் திருமூலர்.
இதன்வழி உண்மை நூல்களின் கருத்தை அறிந்து அதன் வழி அடங்கி விட்டால் பின்பு அந்நூல்களைக் குரல் கம்மிப் போகும் அளவிற்கு ஓத வேண்டுவது இல்லை என்கின்ற நிலை சிலருக்குத் தானே விலகிப் போகும் என்கின்றார் திருமூலர். சிவனை மட்டுமே ஒன்றி இருந்து எண்ணும் நிலையை எய்தினவருக்கு அவனை ஒன்றியிருந்து எண்ணுவதற்குத் துணையாய் இருந்த பாடல்களும் மந்திரங்களும் தொடர்ந்து எண்ணும் பயிற்சியாகிய தியானம் என்பதும் சிலருக்குத் தானே நீங்கி இல்லாமல் போய்விடும் என்கின்றார். உலகப் பற்றுக்கள் நீங்கி உள்ளத்திலே உண்மையான தூய்மை ஏற்பட்டுவிட்டால், புறத்துய்மை பெற நீர்நிலைகளில் நீரடுதலும் அகத்தூய்மை பெற இறைவனின் திருப்பெயர்களும் கூற வேண்டுவது இல்லை என்பது சிலருக்குத் தானே ஏற்படும் என்கின்றார். இறைவனின் திருவடியில் மனம் குவியப் பெற்று எல்லாம் சிவன் செயலாக இருந்து விட்டால் பெருமானின் அடையாளமாகவும் குறியீடாகவும் திகழும் சிவலிங்கம் என்ற சிவக் கொழுந்தையும் திருமேனிகளையும் உள்ளத்தில் நிறுத்தித் தொடர்ந்து எண்ணும் நிலை சிலருக்குத் தானே நழுவிப் போகும் என்பதனைக்,
“கத்தவும் வேண்டா கருத்தறிந்து ஆறினால்,
சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால்,
சுத்தமும் வேண்டா துடக்குஅற்று நிற்றலால்,
சித்தமும் வேண்டா செயலற்று இருக்கையிலே”
என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
சிவத்தின் திருவருள் உயிர்களின் மீது பதிந்து உயிர்களின் அறிவைச் சிவஅறிவாக மாற்றி முழுமையாகச் செயல்படுத்தும் வரையிலும் சிவனின் அடியார்களோடு கூடி நின்று அவர்கள் பின்பற்றுகின்ற தவ முயற்சிகளைச் செய்தல் வேண்டும் எனவும் அதற்கு முன்பாகத் தானே தவ முயற்சியை விடுகின்றேன் என்றும் சிவனடியார்களை விட்டு விலகுகின்றான் என்றும் மெய்வருந்தச் செய்யப்படும் தவ முயற்சிகள் வீணே கழியும் என்கின்றார் திருமூலர். தவ முயற்சி என்று அவற்றிற்குப் பின்னால் இருக்கும் படிப்பினையையும் அது உணர்த்தும் மெய்ப்பாடுகளையும் அறியாது வெறும் செயற்பாடுகளையே தவ முயற்சி என்று எண்ணிப் பெருமானுக்குப் பச்சிலைகள் போடுவதும் பூவைக் கொண்டு அர்ச்சிப்பதுவும் மலர்களை மாலையாகக் கட்டி அணிவிப்பதுவும் கோயில் திருத்தொண்டுகள் செய்வதுவும் இறைவனின் திருவடியில் மனதைக் குவியச் செய்யாது என்கின்றார் திருமூலர்.
இச்செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை உண்மை நூல்களின் வழி அறிந்த பின் சிவனிடத்தே உள்ளம் குழைந்து நிற்கும் எனவும் அது சிவத்தின் திருவருளை நுகரும் இன்பத்தினையும் கூட்டுவிக்கும் என்கின்றார் திருமூலர். இதனால் உயிர் அறிவைச் சிவஅறிவாய் மாற்றுதற்கு வழிவகுக்கும் தவங்களே உண்மைத் தவம் என்பதும் உள்ளத்தால் தவத்தவர் ஆகாது புறத்தே வெறும் வேடம் பூண்டு தவத்தவர் போல நிற்பவரது போலித் தவம் எவ்வகையான பயனையும் நல்காது என்றும் தெளியலாம். மனத்தை இறைவனின் திருவடிக்குக் குவிக்கின்ற முயற்சியாகிய தவ ஒழுக்கத்தோடு, தவ வேடமும் பூண்டு ஒழுகுவது சிறப்பு என்று கூறுகின்றார் திருமூலர். உண்மையான தவ முயற்சியின் பயனை உணராதவர், பசி, வெயில், மழை முதலியவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு தவ முயற்சியைச் செய்யமாட்டார்கள் என்கின்றார் திருமூலர். இவர்கள் பிறர் கொடுக்கும் உணவு, உடை, பொருள், பணம், உலகியல் நுகர்ச்சிப் பொருள், புகழ், பதவி போன்றவற்றிற்கே ஏங்கித் தவிப்பர் என்கின்றார். உண்மையான தவ முயற்சி உடைய அடியவர்களுக்கு எவ்வகையான துன்பமும் ஏற்படா வண்ணம் இறைவன் தனது திருவருளை நல்கிக் காப்பான் என்கின்றார் திருமூலர். போலித் தவம் உடையவர்கள் பெருமானின் திருவருளைப் புரிந்துக் கொள்ளாததினாலும் அதனை நம்பாததினாலும் உளத்திடம் இன்றி, தமக்குத் துன்பம் வராமல் காப்பதாய் எண்ணி, மணி, மந்திரம், தகடு போன்றவற்றால் காப்புச் செய்து கொள்வதில் காலத்தைப் போக்குவர் என்கின்றார். இத்தகையோரது தவ நிலையை எண்ணுவோமேயானால் அது துன்பம் வந்து அடையும் வழியைத் தாமே ஆக்கிக் கொள்ளும் ஓர் பித்தச் செயலாகவே முடியும் என்பதனை,
“படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்கு,
இடர்அடையா வண்ணம் ஈசன் அருளும்,
விடர்அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்,
உடர்அடை செய்வதோர் உன்மத்தம் ஆமே”
என்று குறிப்பிடுகின்றார்.
தவ முயற்சியில் பின்பற்றப்படும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நன்னெறி நான்கினை இறைவனின் திருவருள் இன்பம் கிட்டும் வரையும் இயற்ற வேண்டும் என்பதும் இறைவனின் திருவருள் வீழ்ச்சி நம்மீது பதிந்ததும் தவ முயற்சிகளில் பின்பற்றப்படும் செயல் முறைகள் தானாய் நழுவுவதும் நிலைப்பதும் அந்தந்த உயிரின் செவ்வியை ஒட்டியது என்பதுவும் இறைவனின் திருவருள் வீழ்ச்சி கிட்டும் முன்பே இத்தவ முயற்சிச் செயல்முறைகளை விடுதல் என்பது தவறு என்பதும் தெளிதற்பாலது.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!