8. எட்டு உணர்ந்தான்

2524

அமிழ்தினும் இனிதாம் அன்னைத் தமிழில், “எட்டு” என்பதனை எட்டிப் பிடித்தலையும் எட்டு என்ற எண்ணையும் குறிப்பிடுவர். “நம் பிரான் திருமூலன்” என்று சுந்தரமூர்த்தி அடிகளால் போற்றப் பெற்றத் திருமூலர், தமது திருமந்திரத்தின் முதல் பாடலிலே, “தான் இருந்தான் உணர்ந்து எட்டே” என்று குறிப்பிடுகின்றார். இதனை, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டுத் தனக்கு உவமை இல்லாதவனாகத் தனித்து விளங்கும் பெருமானின் சிறப்பு இயல்புகளை உணர்ந்து, அன்பால் வழிபட்டு, அவனை அவன் அருளாலேயே எட்டிப் பிடி என்றும் கொள்ளலாம். தவிர, பெருமானின் எண் குணங்களைக் குறிப்பிடுவதாகவும் காணலாம்.

பெருமான் உலக உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு எட்டுப் பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும் பொருள் வேறு இறைவன் வேறு என்ற பொருள் தன்மையால் வேறாயும் அப்பொருள்களைச் செலுத்தும் வகையால் உடனாயும் இருக்கிறான் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடும். பெருமான், நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், மதி, உயிர் ஆகிய எட்டுப் பொருட்களில் ஒன்றாய், உடனாய், வேறாய் நின்று அவற்றினால் உலகும் உயிர்களும் நன்மை பெற அருள்புரிகின்றான் என்கிறது. பெருமானின் அருள் இயல்புகளை எட்டுக் குணங்களாகச் சொல்லும் முறைமைப் பற்றித்தான், “கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான், தாளை வணங்காத் தலை” என்பார் பேராசான் திருவள்ளுவர். எட்டு அருள் குனங்கள் உடைய பெருமானின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயன் அற்றவைகளாம் என்பது அவரின் குறிப்பு.

பெருமான் குணம் குறிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆயினும் அவன் அருள் இயல்பினை எட்டுக் குணங்களாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடும். அவை, தன்வயம் உடைமை, தூய உடம்பினன் ஆதல், இயல்பாகவே ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் நீங்கினமை, இயற்கை உணர்வு, முற்றுணர்வு, பேர் அருள் உடைமை, எல்லை இல் ஆற்றல் உடைமை, எல்லை இல் இன்பம் உடைமை என்பனவாம். பரம்பொருளின் எட்டுக் குணங்களாகச் சொல்லப்படும் இந்த எட்டு அருள் இயல்புகளை அறிந்தால் மட்டுமே உயிர்கள் உண்மையான சிவம் என்னும் செம்பொருளின் வழிபாட்டிற்குள் செல்ல முடியும் என்பதனைத் திருமூலர் உணர்த்துகிறார்.

உண்மைப் பரம்பொருளினை அறிதற்கு மேற்கூறிய எண் குணங்களை எண்ணுவோம். பரம்பொருளின் முதல் இயல்பு தன்வயம் உடைமை. பெருமான் தானே தன் கருணையினால் அருளினாலே ஒழிய, எவராலும் எப்பொருளினாலும் அவன் வயப்படுத்தப்படக்கூடியவன் அல்லன் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிலர் எண்ணுவதைப் போன்று பணம், தங்கம், விலையுயர்ந்த மணிகள், உயர்ந்த குல மாந்தர் என்பவற்றிற்கோ, விலையான உணவு வகைகளுக்கோ, உடைகளுக்கோ, அணிகளுக்கோ, பலமணிநேர பூசனைக் கிரியைகளுக்கோ, விலையுயர்ந்த தூப தீப நெய் வாசனைப்  பொருட்களுக்கோ வயப்படமாட்டான். விருப்பு வெறுப்பு அற்ற இறைவன், வேண்டியவர் வேண்டாதவர் என்று இல்லாத இறைவன், உள்ளன்பும் உள்ளத் தூய்மையும் உடையவர்க்கே அகப்படுவான் என்பதனை, “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்பார் மணிவாசகர். பெருமானின் தூய உடம்பினன் எனும் இயல்பு பெருமானின் இரண்டாவது குணம் என்பார் திருமூலர். பெருமான் அடியார்களுக்கும் உயிர்களுக்கும் வெளிப்பட்டுப் பொதுநிலையில் காட்டியும் மறந்து நின்றும் அருளும் வடிவம் நாம் கொண்டுள்ள குறுதியும் தசையும் கொண்ட வடிவம் அல்ல! உயிர்களின் உடல்களும் உலகப்பொருட்களும் மாயை என்னும் பொருளால் ஆகியிருக்கின்றன. பெருமானின் திருவடிவம் அவன் திருவருளையே அடிப்படையாகக் கொண்டு அமைவது. இறைவனுக்கு நாம் படைக்கும் உணவு, உடை பிற எவையும் அவனைச் சென்று அடைவதில்லை. நம் மன நிறைவிற்காகவே அவற்றைச் செய்கின்றோம்.  இதனினும் மேலாக சைவ நெறிக்கு ஒவ்வாத உணவு வகைகளும் பிறவும் இறைவனுக்குப் படைப்பது சற்றும் பொருத்தமற்றது என்கிறது சித்தாந்த சைவம்.

பெருமானது மூன்றாவது குணம் இயற்கை உணர்வு என்று திருமூலர் குறிப்பிடுவார். உயிர்கள் ஒன்றை உணர்த்தினால் மட்டுமே உணரும்.தானாக எதனையும் உணராது. ஆனால் பெருமானோ யாரும் உணர்த்தாமலேயே எதனையும் உணரும் இயற்கை உணர்வினை உடையவன். தானாக எதனையும் யாரும் உணர்த்தாமலேயே பெருமான் உணர்பவன் என்பதனை விளங்கிக் கொள்ளுதல் அவனை வழிபடும் மாந்தர்க்கு இன்றியமையாததாகும். பெருமானின் நான்காவது குணம் எனப்படுவது முற்றுணர்வு என்பதாகும். பெருமான் முக்காலமும் உணர்ந்தவன். அவன் எல்லா உலகிலும் உள்ள எல்லா உயிர்களையும் நன்கு அறிபவன். அவற்றிற்கு வேண்டுவனவும், வேண்டுவனவற்றை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்பதனையும் வேண்டாதவற்றை எப்பொழுது நீக்க வேண்டும் என்பதனையும் நன்கு அறிபவன். நாம் தான் நம் மன நிறைவிற்காக அவனிடம் நம் பெயரையும், நாம் பிறந்த விண்மீனையும் நம் இராசியையும் நம் அறியாமையால் அவன் முன் கூறி நிற்கின்றோம். பெருமான் முற்றும் உணர்ந்தவன் என்பதனை மறந்து நம் வேண்டுதல்களையும் மனக்குறைகளையும் அவனிடத்தில் தெரிவிக்கின்றோம். எல்லாம் அறிந்த இறைவன் நம்மை சோதிக்கின்றான் என்று கூறுகின்றோம். சோதிக்காமலேயே அனைத்தையும் அறிபவன் இறைவன் என்பதனை மறந்து விடுகின்றோம்.

பெருமானின் ஐந்தாவது குணமாகக் குறிக்கப்படுவது பெருமான் இயல்பாகவே ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை நீங்கினவன் என்பதாகும். பெருமான், “யான், எனது” எனும் செருக்கினை ஏற்படுத்தும் ஆணவ மலத்தையும் நல்வினை தீவினை என்ற கன்ம மலத்தையும் உலகில் எந்த ஒன்றையும் அதன் முடிந்த முடிவான உண்மையான இயல்பினை அறியாது மயக்குறக் காணும் மாயை என்னும் மலத்தினையும் நீங்கினவன். அதனால் அவன் எல்லோருக்கும் ஒருபடித்தாய் நின்று அருள்பவன்; தவறு செய்யாதவன்; உண்மை வடிவாய் இருப்பவன் என்பதனை உணர்தல் வேண்டும் என்பார் திருமூலர்.

பெருமானின் ஆறாவது குணமானது பேர் அருள் உடைமை ஆகும். இவ்வியல்பினால் உயிர்களைப் பெற்றத் தாயினும் மேலாக அவை அவற்றின் செவ்வி வேறுபாட்டிற்கு ஏற்றவாறு வளர்த்து எடுத்துச் செம்மைப்படுத்துகின்றது இறைவனின் திருவருள் என்பார் திருமூலர். பெருமான் உயிர்களை வைத்தியனைப் போன்று கசப்பான நுகர்வுகளைக் கொடுத்து உயிர் நோயைக் குணப்படுத்தும் பேர் அருளாளன் என்று புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்பார். குற்றங்களை மன்னித்துக் கொண்டு அருளும் பேர் அருளாளன் இறைவன் என்பார்.

பெருமானின் ஏழாவது குணமாகச் சொல்வது எல்லையில் ஆற்றல் உடைமை ஆகும். இவ்வியல்பினால் பெருமானால் இயலாத ஒன்று இல்லை என்பதனை உறுதியாக எண்ணுதல் வேண்டும். அவனே எல்லாவற்றையும் செய்து முடிக்க வல்லவன் என்றும், அவனே நம் எல்லா துன்பங்களையும் போக்க வல்லவன் என்றும் வேறு ஒரு தெய்வத்தினைத் தொழமாட்டேன் என்று அவனிடம் அடிமைபூண்டு அடைக்கலம் புக வேண்டும் என்பார் திருமூலர்.  பெருமானின் எட்டாவது குணம் எல்லையில் இன்பம் என்பதாகும். இவ்வியல்பு பெருமானிடத்தில் உள்ள முடிவு பெறாத, தெவிட்டாத பேர் இன்பத்தினைக் குறிப்பதாகும். பெருமானிடத்தில் உள்ள திருவடி இன்பம் மட்டுமே பேர் இன்பம். மற்ற இன்பங்கள் யாவும் முடிவு பெறக்கூடிய சிற்றின்பங்களே! இதனால் மேற்கூறியவற்றை உணர்ந்து அவனை அடைவதற்கு எட்டு என்பதே திருமூலரின் குறிப்பு.