திருமூலர் தமது ஐந்தாம் தந்திரத்தில் யோகம் எனும் பகுதியில் யோகத்தினால் கிட்டும் சில நன்மைகளையும் யோகம் கைவரப்பெற்றவர்களின் சில இயல்புகளையும் குறிப்பிடுகின்றார். சிவயோகம் எனும் சிவச்செறிவில், பிராணாயாமம் எனும் காற்றைக் கட்டுப்படுத்தும் வளிநிலையினைக் கட்டுப்படுத்தி
அதன் வழி மனதை மூலாதாரம் முதலாக உடைய ஆறு நிலைக்களங்களில் உணர்ந்து இறுதியாகப் பெருமானின் அருவத் திருமேனியாகிய ஒளியினைப் புருவ நடுவில் உணர்ந்து நிலைத்து நிற்கின்ற சிவச் செறிவாளர்களின் நிலையை இங்குக் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய சிவச் செறிவாளர்கள் ஊன்றி நிறுத்தப்பட்ட தூண் போன்று தமது உடலை நேராக நிமிர்த்தி அமர்ந்திருப்பர்.
உடலில் எந்த அசைவும் இல்லாது உடலை நிலைநிறுத்தி அமர்ந்திருக்கும் இவர்களின் உடம்பை எதையாவது கொண்டு பிறர் கீறினாலும் எதையாவது கொண்டுப் பிறர் தாக்கினாலும் அவற்றால் தங்களது உணர்வு உடனே களைந்து தன்னைத் தாக்கியவரையோ அல்லாது கீறினவரையோ கண்களைத் திறந்து பார்த்தல் என்பது இன்றித் தங்கள் அகக் கண்ணால் ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருக்கும் உணர்வுப் பொருளையே உணர்ந்திருப்பார்கள் என்கின்றார். சிவனை அகக் கண்ணால் தொடர்ந்து நோக்கியும் எண்ணியும் உணர்ந்து இருக்கும் நிலையைக் கைவரப்பெற்ற சிவச் செறிவாளர்களே சிவபெருமானை அடைதல் கூடும் என்பதனை, “நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித், தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச், சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக், குறிஅறி வாளர்க்கும் கூடலு மாமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
இதனையே பெரிய புராணத்தில் சண்டீச நாயனார் வரலாற்றில் தெய்வச் சேக்கிழாரும் குறிப்பிடுவார். மணலால் சிவலிங்கம் சமைத்து, அதற்கு ஆவின் பாலால் திருமஞ்சனம் ஆட்டுவதற்கு முன் கண்களை மூடி சிவபெருமானை அகக் கண்களால் கண்டு, அந்நினைவிலேயே அழுந்தி இருந்த சண்டீச நாயனாரை அவரது தந்தை கோல் கொண்டு நையப் புடைத்த போதும் அதனை அறியாது சண்டீசர் கண்களைத் திறவாமலேயே அசைவற்று அமைதியாய் இருந்தார் என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.
சிவச் செறிவுப் பயிற்சியால் இறைவன் திருவருள் கைகூடப் பெற்றவர்களே பல ஊழி காலங்கள் செல்லும் வரையிலும் எடுத்த இவ்வுடம்பு நீங்காது நிற்கும் ஆற்றலைப் பெற இயலும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பல ஆயிரம் யுகங்கள் சிவபெருமானின் இறைஉலகில் தாம் இருந்ததாகத் திருமூலர் தம் வரலாறு கூறும் பகுதியில் குறிப்பிடுவதும் இங்குச் சிந்தித்தற் பாலது. பூ மலர்வதற்கு முன் அதன் மணம் அதனுள் அடங்கி இருத்தல் போல, உயிர் செவ்வி(பக்குவம்) அடைவதற்கு முன் உயிரின் அறிவுக்கு அறிவாய் உயிரின் உள்ளே சிவம் தோன்றாது இருக்கும் என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். பின்பு சிவச் செறிவு கைவரப் பெற்றதன் விளைவால் உயிர் செவ்வி அடைய, உள்ளமும் உடலும் வரையப் பட்ட ஓவியம் அசைவற்று நிற்க, உயிரில் தோன்றாது இருந்த சிவபெருமான் இச்சிவச் செறிவாளர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றுவான் என்கின்றார். இதுபோது புனுகுப் பூனையின் மதநீர் பட்ட மூங்கில் தறி மணம் பெற்றது போல, சிவச் செறிவு கைகூடப் பெற்றச் சிவச்செறிவாளர்களின் உடலும் உள்ளமும் சிவ மணம் கமழப் பெற்றுச் சிவமாம் தன்மை பெற்ற உடலாகவும் சிவமாம் தன்மை பெற்ற உள்ளத்தவர்களாகவும் விளங்குவர் என்பதனைப், “பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல், சிவனுக் குள்ளே சிவமணம் பூத்தது, ஓவியம் போல உணரவல் லார்கட்கு, நாவி அணைந்த நடுதறி ஆமே” என்று குறிப்பிடுகின்றார்.
மலரில் அடங்கி இருக்கும் மணம் போல உயிரின் உள்நின்று வெளிப்பட்டுத் தோன்றக்கூடிய சிவனைச் சிவச் செறிவு நெறியால் உள்ளத்தில் பொருத்தி இருக்கக் காணக்கூடியவர்கள் உயிர் மயக்கத்தை விட்டு நீங்குவார்கள். உயிர் மயக்கம் நீங்கி உயிரின் அறிவு சிவமாம் தன்மை உடைய அறிவாய்த் தெளிவு பெறுமானால், பல பிறவிகளில் தொன்று தொட்டுத் தொடர்ந்து வருகின்ற பிறவிக்கு மூலமாக உள்ள, ஆணவ மலம், நலிந்து அடங்கிக்கிடக்கும் நிலையினை எய்தும். இத்தகைய நிலையினைச் சிவச் செறிவாளர்கள் பெறுவர் என்பதனைக், “கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச், சிந்தை உறவே தெளிந்திருள் நீங்கினால், முந்தை பிறவி மூலவித் தாழுமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
இறைவனை உணர்வால் உணராது கற்கும் சமயநூல் கல்வியும் இறைவனை உணர்வால் உணராது கற்கும் இயல்நூல் கல்வியும் இறைவனை உணர்வால் உணராது ஓதும் பாடல்களும் இறை உணர்வை உணராது கற்கும் அறுபத்து நான்கு கலைகளும் உலகப் பற்றை ஏற்படுத்தும் பிறவியைப் போக்கமாட்டாதவை என்கின்றார் திருமூலர். உலகப் பற்றினையும் பிறவியினையும் போக்க வல்ல சிவச்செறிவின் வழி தாம் பெற்றதாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இடநாடி, வலநாடி, நடுநாடி(இடகலை, பிங்கலை,சுழுமுனை) என்னும் நாடிகளின் வழி இயங்கும் உயிர்ப்புக் காற்றினை, சந்திரகலை, சூரியகலை, அக்கினிகலை என்று மூன்றாகச் சொல்லப்படும் உடல் பகுப்பிற்கு ஏற்ப மூச்சின் இயக்கங்களை நெறிபடச் செய்து இவ்வெற்றியினைப் பெற்றேன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். டூதனால் சமய நூல்களை வெறும் அறிவு நூல்களாக மட்டும் கற்காமல் இறை உணர்வைப் பெருக்கிக் கொள்வதற்காகக் கற்றல் வேண்டும் என்று புலப்படுகின்றது. இயல்நூல் கற்பிக்கும் உலகக் கல்வியை வெறும் தொழிலுக்காகவும் பொது அறிவுக்காகவும் மட்டும் கற்காமல் அதன்வழி இறைவனின் பேராற்றலையும் பேரறிவினையும் தெளிந்து இறை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெளிவாகின்றது.
நடனம், இசை, வாய்ப்பாட்டு, ஓவியம் என்று அறுபத்து நான்கு கலைகளில் எதனை எடுத்துக் கொண்டாலும் அதனை வெறும் பெயருக்காகவும் புகழுக்காகவும் பணத்திற்காகவும் என்று இல்லாமல் அக்கலைகளின் வழி எப்படி இறை உணர்வை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதனைச் சிந்திக்க வேண்டியதாக உள்ளது என்று தெளிவடைய முடிகின்றது. இத்தகைய தெளிவினையும் இறை உணர்வினையும் கொடுக்க வல்லது சிவச்செறிவில் குறிப்பிடப்படும் மூச்சுப் பயிற்சி என்கின்றார் திருமூலர். இதனையே, “எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும், பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா, அழித்தலைச் சோமனோ டங்கி அருக்கன், வழித்தலைச் செய்யும் வகைஉணர்ந் தேனே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு சிவச்செறிவின் சிறப்பினைப் பலவாறு கூறும் திருமூலர் சிவச் செறிவில் முதன்மையாக வைத்து எண்ணப்படும் பரம்பொருளிடத்து வைக்கும் பேரன்பு இன்றியமையாததாகும் என்கின்றார். சிவம் எனும் பரம் பொருளிடம் ஏற்படும் அன்பினை வைத்தே சிவச் செறிவில் செய்யப்படும் அனைத்து முயற்சிகளும் சிவத்தின் திருவருளால் கைவரப் பெற்று சிவச்செறிவின் பயன்களை விளைவிக்கும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே, “விரும்பிநின் றேசெய்யின் மெய்த்தவ னாகும், விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும், விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும், விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே” என்று திருமூலர் குறிப்பிடுவார்.
உடம்பின் உள்ளே நின்று உடலுக்கு வெப்பத்தினை அளிக்கின்ற மூல அக்கினியாய் மூலாதாரத்தில் சிவபெருமான் உளான் என்று திருமூலர் கூறுகின்றார். சிவச் செறிவு முயற்சியால் சிவம் எனும் அம்மூல அக்கினியை எழுப்பி வளர்த்தால் அதன் பெயனாக அப்பெருமான் இறை உலகினை நமக்கு அருளுவான் என்கின்றார். மூலாதாரதில் உள்ள சிவாக்கினியை சிவச்செறிவால் எழுப்பிக் காணும் ஆற்றலை உடைய சிவச் செறிவாளர்களுக்குச் சிவபெருமான் உறவாகிப் பல நலங்களைச் செய்து அருளுவான் என்கின்றார். எனவே மூலாதாரத்தில் உள்ள சிவாக்கினியை எழுப்பிப் பயனடையும் விருப்பமும் ஆற்றலும் உடையோர் உலகவரின் இகழ்தலையும் புகழ்தலையும் பொருட்படுத்தாது சிவச் செறிவு முயற்சியில் இறங்குங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
சிவச் செறிவில் விருப்பங்கொண்டு மூலாதாரத்தில் உள்ள மூல அக்கினியை எழுப்பி வெற்றி கண்ட சிவச் செறிவாளர்களை, நீதி வழுவா செங்கோல் அரசர்களும் மற்றவரும் போற்றுவர். முனிவர்களும் சித்தர்களும் வானவர்களும், “இவனே சிவன்” என்று பெருமையாகப் பேசி அவர்களிடத்திலே அன்புடையவர்களாக ஆவார்கள் என்கின்றார். இத்தகைய சிறப்புக்களையெல்லாம் உடைய சிவச் செறிவினைத் தக்காரிடம் முறையோடு கற்றுத் தெளிய முற்படுவோமாக1 தமிழ்ச் சைவர்களுக்கே உரிய இச்சிவச் செறிவினைப் பேணிக் காத்து நடைமுறைக்குக் கொண்டு வர முயல்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!