சிவம் என்னும் பரம்பொருள் உயிர்களுக்கு அருள்புரிவதற்காகப் பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்து அருள்புரிகின்றார் என்று தமிழர் சமயமான சித்தாந்த சைவம் குறிப்பிடும். தமது சிறப்பு நிலையில் வடிவமும் பெயரும் அடையாளமும் இல்லாத சிறப்பும் வனப்பும் மிக்க அப்பேராற்றல் உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாகப் பொது நிலையில் முருகன், அம்பாள், விநாயகன், சிவன் என்று வடிவம் தாங்கி வருகின்றது என்று சைவம் குறிப்பிடுகின்றது. இதனைக், “கற்பனை கடந்த சோதி, கருணையே உருவமாகி, அற்புதக் கோலம் நீடி” என தெய்வச் சேக்கிழாரும், “அகளமாய் யாரும் அறிவரிதப் பொருள், சகளமாய் வந்தென்று உந்தீபற, தானாகத் தந்ததென்று உந்தீபற” என்று திருவுந்தியாரும் குறிப்பிடுவர். அவ்வகையில் உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக சிவம் எனும் பரம்பொருள் விநாயகராக வடிவம் தாங்கித் தோன்றிய நாளே விநாயகர் சதுர்த்தி.
விநாயகர்
‘வி’ என்றால் உலகம். ‘நாயகர்’ என்றால் தலைவர். ‘விநாயகர்’ என்றால் உலகத் தலைவர் என்று பொருள்படும். சிவம் என்னும் பரம்பொருள் தனது வடிவமற்ற நிலையிலிருந்து வடிவ நிலைக்கு இறங்கி வருகின்றபோது, முதலில் ஒலி வடிவமாகவும் பின்பு, ஒளி வடிவமாகவும் இறங்கி வருவதாய்ச் சைவம் குறிப்பிடுகின்றது. இதனைப் பரநாதம் பரவிந்து என்று குறிப்பிடுகின்றது. இதனையே பரமசிவன் பராசக்தி என்றும் குறிப்பிடுகின்றது. இதனை எழுத்து வடிவமான மந்திர வடிவில் ‘ஓ’ என்று குறிப்பிடுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அசபை அல்லது பேசா எழுத்து எனப்படும் இவ் ‘ஓ’ என்ற எழுத்தைப் பிரித்தால் ‘அ’ + ‘உ’ என்ற இரண்டு எழுத்துக்கள் அதனுள்ளே அடங்கியுள்ளமையைத் திருமூலர் சுட்டுவார். அறிவோன் என்பதாகிய ‘அ’ வும் உடையாள் என்பதாகிய ‘உ’ வும் அதனுள்ளே அடங்கியிருத்தலையும் திருமூலர் குறிப்பிடுவார். ‘அ’ என்ற சிவனும் ‘உ’ என்ற சிவையும் ‘ஓ’ வினுள்ளே அடங்கியுள்ளன. ‘ம்’ என்பது உயிருக்கு மயக்கம் செய்யும் மாயை என்று குறிக்கப்பெறுகிறது. எனவே ‘ஓம்’ எனும் மூல மந்திரத்தின் வடிவமே விநாயகரின் வடிவம். விநாயகர் சிவத்தினின்று வேறுபட்ட ஒரு தனிக்கடவுளல்ல! சிவனின் மகனும் அல்ல! ‘ஓம்’ எனும் மந்திரம் இறைவன் கொண்ட முதல் வடிவத்தை உணர்த்துவதாலேயே வழிபாட்டில் விநாயகருக்கு முதலில் பூசனை நடக்கின்றது.
விநாயகரின் தோற்றம்
சைவ நெறிக்குப் பொருந்தாத பல செய்திகள் விநாயகரின் தோற்றத்தைப் பற்றி மக்களிடையே விரவி கிடப்பினும் சைவத்திற்கு ஏற்புடைய செய்திகள் கச்சியப்பரின் கந்தபுராணத்திலும் திருஞானசம்பந்தரின் திருமுறையிலும் காணக்கிடக்கின்றன. கந்தபுராணத்தின்படி கயமுகாசுரன் என்பவன் இறைவனின் வரம்பெற்று தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தவே அவர்கள் இறைவனிடம் அருள்வேண்டி நின்றதாயும் அவர்களுக்கு அருள்புரியவே இறைவன் தம்மிலிருந்து விநாயகரைத் தோற்றுவித்ததாகவும் கூறுகின்றது. அதாவது அடியார்களின் வேண்டுதலை ஏற்ற பரமசிவனும் பராசக்தியும் ஒரு சோலையுள் சென்று, அதனுள் இருக்கின்ற ஒரு சித்திர மண்டபத்துள் விரைந்து சென்று அங்கிருந்த ‘ஓம்’ என்ற பிரணவத்தை நோக்க, அது இரண்டு யானைகளின் உருவானது. அவ்விரண்டு யானைகளும் ஆண் யானைகளாகவும் பெண்யானையாகவும் இருக்க அவை கூடியவுடன் விநாயகப் பெருமான் தோன்றினார் என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே பிரணவ மந்திர வடிவே இறைவன் கருணையினால் யானையாகத் தோன்றி பின் விநாயராக வந்ததை உணரலாம்.
இக்கருத்தினையே திருஞானசம்பந்தரும், ‘பிடியதன் உரு உமைகொள மிகு கரியது, வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர், கடிகணபதி வர அருளினன் மிகுகொடை, வடிவினர், பயில்வலி வலமுறை இறையே’ என அருளினார். அதாவது அழகிய தமது திருவடிகளை வணங்கும் அடியார்களின் துன்பத்தைப் போக்குவதற்காக வலிவலம் என்ற திருக்கோயிலில் இருக்கின்ற இறைவன் தான் ஆண்யானையாகவும் இறைவியைப் பெண்யானையாகவும் கொண்டு கணபதியாகிய விநாயகர் வர அருள்புரிந்தார் என்று தெளிவுறப்பாடுகின்றார்.
இப்படி விநாயகப் பெருமான் தோன்றிய தினம் ஆவனி வளர்பிறைச் சதுர்த்தி ஆகும். எனவேதான் ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறோம். எனவே விநாயகர் சதுர்த்தி என்பது சிவம் என்கின்ற பரம்பொருள் நம் துன்பங்களைப் போக்குவதற்கு விநாயகர் வடிவம் கொண்ட நாளாகும். இறைவன் நம் துன்பங்களைப் போக்க நாளும் ஓடி வருகின்றான் என்பதனை உணர்த்தும் நாள் விநாயகர் சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்தி விநாயகர் பிறந்த நாள் என்று சிலர் குறிப்பிடுவது தவறு. நம் கடவுள் பிறப்பு இறப்புகுக்கு அப்பாற்பட்டவன். எனவே இறைவன் விநாயகர் வடிவம் தாங்கி வந்த நாள் என்று கூறுவதே சரியானது.
வழிபடும் முறை
விநாயகர் சதுர்த்தியன்று குறைந்த அளவு உணவு உட்கொண்டு மனம், வாக்கு, காயத்தால் தூய்மையாய் இருந்து இறைவனை இடைவிடாது நினைந்திருந்து வீட்டிலும் ஆலயங்களிலும் வழிபாடுகள் செய்யலாம். ஆலயங்களிலே நடைபெறும் சிறப்புப் பூசனைகளில் கலந்து கொள்வதோடு இறைவனை இடைவிடாது நினைப்பதற்குத் துணைபுரியும் சமய நிகழ்வுகளில் பங்கேற்று இறைவனைச் சிந்திக்கலாம். இதற்காகவே ஆலயங்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறை நடனங்கள், சமய நாடகங்கள், சமய சொற்பொழிவுகள், சமய திரைப்படங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவ்வாறு இல்லாத சூழலில் வீட்டில் திருமுறைகளை ஓதுதல், சமய நூல்களை வாசித்தல், சமய உரைகளைக் கேட்டல் போன்றவற்றைச் செய்யலாம்.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று புற்று மண்ணால் விநாயகப் பெருமானின் திருவுருவத்தினைச் செய்து, அதில் விநாயகரை மந்திரம், பாவனை (முத்திரைகள்), வழிபாட்டுக் கிரியைகளால் எழுந்தருளச் செய்து, நீராட்டு, அலங்காரங்கள் செய்து திருவமுது அளித்துப் போற்றி வழிபட்டு மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ, புண்ணிய ஆறுகளிலோ அல்லது கடலிலோ கரைத்து விடுவார்கள். இம்முறை இந்தியாவில் வடநாட்டுப் பகுதியில் பெருவாறியாகப் பின்பற்றப்படுகிறது.