சிவம் எனும் செம்பொருளை உணர்வதற்கும் அடைவதற்கும் குரு, லிங்கம், சங்கம வழிபாடு இன்றியமையாதது என்பதனைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையினை விளக்குகின்ற, சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. திருக்கோவில்களிலும் இல்லங்களிலும் வைத்து வழிபடுகின்ற இறைவனின் திருமேனிகளை இறைவனாகவே கண்டு வழிபடுவதும் மாந்தரைப் போன்று வடிவம் தாங்கி வருகின்ற சிவகுருவையும் உண்மை சமயத்தினைப் பின்பற்றி வாழ்கின்ற உண்மையான சிவனடியார்களையும் நாயன்மார்களையும் இறைவனின் திருவருள் நின்று உணர்த்தும் நிலையங்களாக அவர்களை வணங்குவதுவும் திருவருளைப் பெறுவதற்கு வாயில் அல்லது வழி என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. சிவனடியார்களும் நாயன்மார்களும் சிவன் அருளைத் தாங்கி நிற்கின்ற நடமாடும் கோயில்கள் என்பது திருமூலரின் வாக்கு. சங்கமம், மாகேசுரர், சிவனடியார்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இச்சிவனடியார்களை இகழ்தல் கூடாது என்பதனை, “மாகேசுர நிந்தை கூடாமை” எனும் பகுதியில் திருமூலர் விளக்குகின்றார்.
உலகியலில் நின்றவாறே இறைவனிடத்து அன்பு பாராட்டுகின்றவர்களைப் பத்தர்கள் அல்லது அடியவர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடுவர். சிவத்தை அல்லது மாகேசுரரைத் தவிர பிற ஒன்றை இவ்வுலகில் வேண்டுவது இல்லை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களைச் சிவனடியார்கள் அல்லது மாகேசுரர் என்று குறிப்பிடுவதாய்ச் சான்றோர் குறிப்பிடுவர். “பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலராய்” என்று பெரியபுராணத் திருக்கூட்டச் சிறப்பில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவது போல, சிவ வேடமும் சிவச் சின்னங்களும் சிறக்கப் பூண்டிருக்கும் இச்சிவனடியார்கள் சிவபெருமானுக்குச் செய்யும் சிவப்பணியையும் சிவனடியார் பணியையும் தவிர வேறு ஒன்றும் அறியாதவர்கள். இத்தகைய சிவனடியார்களைத் தாங்கள் கொண்ட சிவப்பணிக்காகவும் சிவனடியார் பணிக்காகவும் தங்களது உடல், பொருள், ஆவி முதலிய அனைத்தையும் துறக்கும் இயல்புடையவர்கள். இவர்கள் கனவிலும் பிறருக்குத் தீங்கு நினையாதவர்கள். அற உள்ளம் படைத்தவர்கள். அன்பின் பிழம்பாய்த் திகழ்கின்றவர்கள். கிடைக்கின்ற உணவை, உயிரை நிலை நிறுத்துவதற்கு மட்டும் உண்டு அடுத்த வேளை உணவிற்கு இல்லாதவர்கள். இவர்களிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே என்கின்றார் திருமூலர்.
சிவப் பணியையும் சிவனடியார் பணியையும் செய்தலை மட்டுமே தங்கள் கொள்கையாகக் கொண்டு எல்லாவற்றையும் துறந்த சிவனடியார்களுக்கு இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் நிலை பெற்றத் துணை என்பதனைத், “துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும், இல்வாழ்வான் என்பான் துணை” என்று ஐயன் திருவள்ளுவரும் குறிப்பிடுவார். பற்றுகளைத் துறந்தவரின் பெருமையைக் கூற வேண்டுமானால் இதுவரை உலகில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றது என்று நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் உலகப் பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். செல்வத்தினாலும் பதவியினாலும் படிப்பினாலும் பட்டத்தினாலுன் அழகினாலும் ஏற்படும் செருக்கினால் பலர் சிவனடியார்களை அறியாமையினால் இகழ்வர் என்கின்றார் திருமூலர். நிலையற்ற செல்வத்தைக் கொண்டிருக்கின்ற செருக்கினால் சிலர் நிலையான செல்வத்தை உடைய சிவனடியார்களை வாழத் தெரியாதவர்கள் என்று இகழ்ந்து உரைப்பார் என்கின்றார் திருமூலர். செல்வச் செருக்கினால் உலக நன்மைக்காக வாழும் துறவிகளை வைத்துப் பேணிக்காக்காது கேலி பேசுவார் சிலர் என்கின்றார் திருமூலர்.
நிலையற்ற இளமையையும் அழகையும் அதற்குத் துணையாய் உள்ள ஒப்பனைப் பொருட்களையும் விரும்பி அணிந்து, பற்றுக்களை விட்ட சிவனடியாரின் கோலத்தினைக் கேலிப்பேசுவார் சிலர் என்கின்றார் திருமூலர். சிவனை நினைப்பிக்கும் சின்னங்களான திருநீறு, கணிகை மணி போன்றவற்றைக் கீழாகவும் கேலியாகவும் பேசி அறியாமையில் வீழ்ந்து கிடப்பார் சிலர் என்கின்றார் திருமூலர். சமயச் சின்னங்களை அணிய இன்னும் தெளிவு பிறக்கவில்லையே என்று எண்ணி வருந்துதலை விடுத்துச் சமயச் சின்னங்களை அணிபவர்களைக் கேலியும் கிண்டலும் பேசித் தீங்கை வருவித்துக் கொள்வார் சிலர் என்கின்றார் திருமூலர். உண்பதற்கு முன்பாக “நமசிவய” என்ற திருவைந்து எழுத்து மந்திரம் சொல்லி உண்பவர்களையும் உயிருக்குத் துணையாகிய திருமுறைகளை எந்நேரமும் ஓதியும் கேட்டும் வாழ்கின்றவர்களையும் காலத்தால் பின் தங்கியவர்கள் என்று நகையாடி நரக வாயிலைத் தேடுவார் சிலர் என்பதனை, “ஆண்டான் அடியவரார்க்கு விரோதிகள், ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர், ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினார், தாழ்தாம் இடுவது தாழ்நரகு ஆகுமே” என்று குறிப்பிடுகின்றார்.
நல்லடியவர்களைப் பார்க்கின்ற போது அவர்களைப் போன்று நல்லறிவும் நல்லொழுக்கமும் இறைநெறி உறைப்பும் பெறும் நாள் எந்நாளோ என்ற ஏக்கமே நம்மை நல்வழி படுத்தும் என்பதனை நாயன்மார்கள் உணர்த்தினார்கள். “உன் தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ” என்று மணிவாசகர் புலம்புவார். இறைவனைத் தெளிவுற உணர்ந்து கொண்ட அடியவர் கூட்டத்தினைத் தமக்குக் காட்ட வேண்டும் என்று இறைவனிடம் அரற்றுவார். “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்” என்று மணிவாசகர் மேலும் குறிப்பிடுவார். சிவனடியார்களைப் பார்த்து அவர்களிடம் உள்ள நற்பண்புகளைக் கற்றுக் கொண்டு அவற்றைப் பின் பற்ற முயலுவதே நன்மை பயக்கும். அதற்கு மாறாக அவர்களை இழிவு படுத்தி அவர்களின் மனம் நோகுமாறு நடந்து கொள்ளுதல் தமக்கும் தம் குடும்பத்திற்கும் தம் இனத்திற்கும் தம் சமயத்திற்கும் இந்த உலகத்திற்கும் பல கேடுகளைக் கொண்டு வரும் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றார் திருமூலர்.
சிவனடியார்களையும் சமயச் சின்னங்களையும் சமயக் கொள்கையையும் இகழ்வதனால் இளைய குமுகாயத்தினர் தாங்கள் பின்பற்ற வேண்டிய சமய நெறியைப் பின்பற்றாமலும் சமய ஈடுபாடு இன்றியும் அச்சமயப் பின்பற்றுதலினால் விளையக்கூடிய நல்லொழுக்கமும் நற்பண்புகளும் கிட்டாமல் ஒழிந்து போவர் என்கின்றார் திருமூலர். சிவனடியார்களைப் போற்றி வணங்குதல், ஈகைப் பண்பினையும் அன்பு நெறியினையும் தனிமாந்த ஒழுக்கத்தையும் கூட்டுவிக்கும் என்கின்றார் திருமூலர். உண்மைச் சமயத்தையும் இறைவனையும் அருளாளர்களைப் போற்றும் பண்பினையும் விட்டமையினாலேதான் உலகில் இன்று பல கொடுமைகள் நடக்கின்றன என்பதனைத் திருமூலரின் பாடல் குறிப்பால் உணர்த்தி நிற்கின்றது.
இந்நெறியை உணர்ந்த நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் அவர்கள் பிடித்து ஒழுகிய நற்பண்புகளையும் அவர்களின் கொள்கைப் பிடிப்பினையும் பண்பாட்டினையும் இளைய குமுகாயம் பெறவேண்டுமெனில் அருளாளர்களைப் போற்றும் பண்பினைத் தம்மிடத்தே கொண்டிருக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்து காட்டிய நெறியினை முயன்று கற்க வேண்டும். இறைநெறியை வாழ்ந்து காட்டி அதன்படி இறைவனை அடைய முடியும் என்ற சீர்மையை உணர்ந்து பெரிய புராணம் போன்ற அடியார் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பெட்டகத்தை இளைய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லத் தலைவர்களும் இல்லத் தலைவிகளும் தங்கள் பிள்ளைகளுக்குப் பெரியோரை மதித்தல், சிவனடியார்களைப் போற்றுதல் முதலாகிய நற்பண்புகளைப் புகட்ட வேண்டும்.
சிவனடியார்களையும் சிவச் சின்னங்களையும் சிவநெறியையும் இகழ்ந்தால் பெரும் கேடு ஏற்படும் என்பதனை உணர்தல் வேண்டும். ஏடுகளில் உள்ள இறைக் கொள்கைகளின் உறைவிடமாக விளங்கும் சிவனடியார்களைப் போற்றுதல் பேராசான் திருவள்ளுவர் உணர்த்திய இல்லறத்தான் கடமையை நிறைவேற்றுதல் என்பதனை உணரல் வேண்டும். சிவச் சின்னங்களை அணிதல் நம் அடையாளத்தையும் சமயத்தையும் நிலைநிறுத்துதல் என்பதனை உணர்தல் வேண்டும். இறைநெறியை விடுதல் நல்லொழுக்கத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் விளைவிக்கும் கேடு என்பதனை உணர்தல் வேண்டும். சிவநெறியையும் சிவச் சின்னங்களையும் சிவனடியார்களையும் தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டினையும் இகழ்ந்தால் நம் இனமானம் கெட்டு அடையாளம் அற்றவர்களாய் வெறுமனே வாழ்ந்து மடிவோம் என்பதனை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!