மந்திரம் என்றாலே அது வடமொழியில்தான் இருக்க வேண்டும் என்றுப் பலரும் எண்ணி மயங்குகின்றனர். விரிவான பொருளைச் சுருக்கமாகச் சில எழுத்துக்களில் குறிப்பிட்டுக் கூறுவதுதான் மந்திரம். இவ்வுலகம் சொல் உலகாலும் பொருள் உலகாலும் ஆகி இருக்கின்றது என்பதனைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையானச் சித்தாந்த சைவம் குறிப்பிடும். பொருள் உலகினை, அப்பொருள்கள் நம் முன்னே தோன்றுவதால் அறிகின்றோம். சொல் உலகினைச் சொற்களின் வழியாகவும் எழுத்துக்களின் வழியாகவும் அவை உணர்த்தும் பொருளினை உள்ளத்தில் எண்ணுவதின் வழி மட்டுமே அறிகின்றோம்.
மாந்தர்களின் மனத்தினுக்கும் வாக்கினுக்கும் அப்பாற்பட்டதாய் விளங்குவது இறைவனின் திருவருள் என்பதனை, ”வாக்கிறந்த பரிபுரணமாய், மறைக்கு அப்பாலாய்” இருக்கிறது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடும். இதனையே “கற்பனைக் கடந்த சோதி என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அப்படி மன, வாக்கு, காயத்திற்கு அப்பாற்பட்டு விளங்குகின்ற இறைவனின் திருவருள், ஓசை வடிவிலேயே நம்மிடத்தில் வந்து தங்கியிருக்கின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நம் உயிரில் பிரிவில்லாமல் கலந்து இருக்கின்ற இறைவனின் திருவருள் மந்திரவடிவிலேயே அமைந்திருக்கின்றது என்கின்றார். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின், ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம், தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே” என்று குறிப்பிடுகின்றார். உயிரில் ஓசையாய், வடிவற்றதாய், மந்திரமாய் நிற்கும் அத்திருவருளே, பின்பு உணர்வு வடிவாய் மாறி நமக்கு இறை உணர்வை வெளிக்கொணரும் என்கின்றார்.
உயிரில் ஓசைவடிவில் கலந்து இருக்கின்ற சிவத்தினைச் “சி” எனும் மந்திரத்தாலும் வனப்பாற்றலாய் உயிரில் கலந்து இருக்கின்ற பெருமானின் திருவருளை “வ” எனும் மந்திரத்தாலும் யாக்கை எனும் உடலின் உள்ளிருக்கும் உயிரை “ய” எனும் மந்திரத்தாலும் சைவம் குறிப்பிடும். உயிரின் அறிவைப்பற்றி, இறைவனையும் அவன் திருவருளையும் உணரவிடாமல் அறியாமை செய்யும் மலத்தினை “ம” எனும் மந்திரத்தாலும் அம்மலத்தினப் போக்குவதற்குத் துணை நிற்கின்ற பெருமானின் திருவருளின் சிற்சத்தியாகிய நடப்பாற்றலை “ந” எனும் மந்திரத்தாலும் குறிப்பிடுவர். இவ்வைந்து நுதலிய பொருளின் தொகை மந்திரத்தையே திருவைந்து எழுத்து மந்திரம் என்று குறிப்பிடுவர். இதனையே, “ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்”, என்கிறார் திருமூலர். சிவத்தை முழுமுதலாகக் கொண்டு வழிபடுகின்ற சைவர்களுக்குத் தலையாய மந்திரமும் இதுவே. ஆனைமுகன், முருகன், அம்மை என்ற சிவத்தின் வேறு வடிவங்களைக் கொண்டு சைவ சமயத்தைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் பொதுவில் அந்த அந்த வடிவங்களுக்குரிய பொது மந்திரங்களைக் கூறினாலும் முடிவில் திருவைந்தெழுத்தினையே தலையாய மந்திரமாகக் கொள்ளவேண்டும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.
சிவத் தொண்டுகள் செய்கின்றவர்களும், சிவாலய வழிபாடு செய்கின்றவர்களும், சிவ வேள்வி செய்கின்றவர்களும், சியோகம் என்ற சிவச் செறிவு செய்கின்றவர்களும், சிவஞான நெறியில் நிற்கின்றவர்களும் அவர்கள் அகத்திலே பெருமானைக் கொண்டுவருதலுக்கு கணிக்க வேண்டிய மந்திரம் திருவைந்து எழுத்தே ஆகும். இதனாலேயே, “ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும் ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்கு, பேதம் இன்றி அவர் அவர் உள்ளத்தே, மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார்.
திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமான், ”நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று இறைவன் திருவைந்து எழுத்து வடிவில் நம்முயிரிலும் உணர்விலும் கலந்துள்ளமையைக் குறிப்பிடுவார். “இல்லக விளக்கது இருள் கெடுப்பது, சொல்லக விளக்கது சோதி உள்ளது, பல்லக விளக்கது பலரும் காண்பது, நல்லக விளக்கது நமசிவாயவே” என்று சொல்வடிவாய், மந்திரவடிவாய், அக இருளைப் போக்கும் விளக்காய், நல்லவர்கள் உள்ளத்தில் தங்கியிருக்கும் ஒளியாய்த் திருவைந்தெழுத்து உள்ளமையைக் குறிப்பிடுவார். இத்தகைய உயர்ந்த மந்திரத்தை இடையறாது கணிப்பதனாலும், பெருமானின் புகழை எப்பொழுதும் பேசியும் பாடியும் இருப்பதனாலும் நம் உள்ளம் தூய்மையடைந்து பெருமான் உள்ளத்தில் உருப் பெறுதலைக் காணலாம் என்பதனை, “மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர் இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை” என்று திருமூலர் குறிப்பிடுவார்.
பெருமானையும் அவன் தன் திருவருளையும் உள்ளடக்கியத் திருவைந்து எழுத்து மந்திரத்தை இடைவிடாது நாளும் சொல்ல வேண்டும். நாம் மறந்தாலும் நம் நா சொல்லிப் பழக வேண்டும். “நமசிவய” என்று சொல்லி எச்செயலையும் எச்சொல்லையும் எவ்வெண்ணத்தையும் செய்வோமானால் நம் உணர்விலே பெருமான் உருவேறுவான். உண்ணுதல் உறங்குதல், பேசுதல், எழுதுதல், உட்காருதல், எழுதல் போன்ற அன்றாட எளிய நடவடிக்கைகளின் போது திருவைந்து எழுத்தினைச் சொல்லும் வழக்கத்தினை மேற்கொண்டுப் பெருமானை உணர்விலே உறுவேற்றலாம். இதைத்தான் “அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன், சிந்தை பராமரியாத் தென்திரு ஆரூர் புக்கு, எந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே” என்று சுந்தர மூர்த்தி அடிகள் குறிப்பிடுவார்.
எளிய அன்னைத் தமிழில் பொருள் விளங்கும்படியாகவும், கூறுவதற்கு எளிமையாகவும், நம் தீந்தமிழ் மந்திரங்களான திருமுறைகளில் குறிக்கப்பட்டதும் கல்லைக் கடலில் மிதக்கச் செய்ததுமான திருவைந்து மந்திரத்தை உண்மைச் சைவ ஆசான்கள் ஆலயங்களிலும் சைவ சமய விழாக்களிலும் சிவ வேள்விகளிலும் குடமுழுக்குகளிலும் இல்லப்பூசனைகளிலும் இடம்பெறச் செய்வார்களாக! “நமசிவய” எனும் தீந்தமிழ்க் கனியை, கல்லைக் கனியாக்கும் அமிழ்தை நாளும் கணித்தால், கணித்தவரை நன்னெறிக்கு உய்விப்பது, வேதம் நான்கினும் மெய்ப்பொருளாய்த் திகழ்வது, இறைவனுக்கும் அவன் திருவருளுக்கும் மந்திர வடிவாய் நிற்பது, இறைவனின் திருப் பெயராய் அமைவது, “நமசிவய” எனும் திருவைந்து எழுத்து என்பது சிவஞானசம்பந்தரின் திருவாக்கு!