60. கேள்வி கேட்டு அமைதல்

1506

அறிவு பெறுவதற்கான முதன்மையான செயற்பாடுகளாய்க் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், தெளிந்தவற்றில் அழுந்தியிருத்தல் என்ற நான்கு கூறுகளைச் சீர்மிகு செந்தமிழரின் கடவுள் கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். அறிவு பெறுவதற்கு முதலில் கேட்டல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தியே கற்றல் கற்பித்தல் கொள்கையினை வலியுறுத்துகின்ற கல்வியாளர்களும் குறிப்பிடுகின்றனர். உலகப் பேராசான் திருவள்ளுவரும் திருக்குறளில் “கேள்வி” எனும் அதிகாரத்தின் வழி நமக்கு உணர்த்துகின்றார். செவியால் கேட்டு அறியும் செல்வம் அல்லது அறிவு, செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானது என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். நூல்களைக் கற்கவில்லை ஆயினும், கற்று அறிந்தாரிடம் கேட்டு அறிய வேண்டும். அது ஒருவருக்கு வாழ்க்கையில்  தளர்ச்சி வந்த போது ஊன்று கோல் போன்று துணையாகும் என்பதனைக், “கற்றிலர் ஆயினும் கேட்க அ•துஒருவருக்கு, ஒற்கத்தின் ஊற்றாம் துணை” என்பார். ஒழுக்கம் உடைய சான்றோரின் வாய்ச் சொற்களைக் கேட்டு நடத்தல் வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் வழுக்கி விழாமலிருப்பதற்குப் பெருந்துணையாய் அமையும் என்பார். சிறு சிறு அறிவுரைகளையும் கேட்டு நடப்பதனால் அவற்றால் ஆன சிறு சிறு நன்மைகள் கிடைத்துக் கொண்டிருக்கும் எனக் குறிப்பிடும் திருவள்ளுவர், நுட்பமான உண்மைப் பொருள்களைக் கேட்கும் பண்பும் அறிவும் உடையவர்களே அறிவார்ந்த சொற்களைப் பேசவும் தவறானவற்றைப் பேசாதவர்களாயும் வாழ்வர் என்கின்றார். அறிவார்ந்த பொருள்களையும் செய்திகளையும் காதால் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்பவர்களே காதுகளின் உண்மையான பயனை அறிந்தவர் என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுவார். அருஞ்சிறப்புடைய கேட்டல் பண்பினைக் , “கேள்வி கேட்டு அமைதல்” எனும் தலைப்பின் கீழ் திருமூலரும் தமிழ்ச் சிவ ஆகமமான திருமந்திரத்தில் குறிப்பிடுவார். நவீன தொழில் நுட்பக் கருவிகள் வளர்ந்துவிட்ட காலத்தில் வீடுகளிலும் பணிமனைகளிலும் வணிக மையங்களிலும் மகிழ்வுந்துகளிலும் கைப்பேசிகளிலும் பலவற்றைக் கேட்கக்கூடிய வாய்ப்பினை நாம் பெற்றிருக்கின்றோம். பல்வேறான சினிமாப் பாடல்கள், பன்னாட்டிசை மெட்டுகள், திரைக்கதைகள், நாடகங்கள், உலக நடப்புச் செய்திகள், விளையட்டுச் செய்திகள் கேளிக்கைச் செய்திகள், துணுக்குகள் என்று பலவற்றைக் கேட்டுப் பயன் அடைகின்றோம். பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் மனம் மகிழ்வதற்கும் அவை தேவைதான். ஆனால் அவை மட்டும் போதாது. மேலும் உயிர் மேம்பட்டு, உள்ளத்திலே மாசு அகன்று, மெய்நெறிக்கு நம்மை ஆளாக்கும் மெய்ப்பொருள் செய்திகளையும் நாம் கேட்க வேண்டும் என்கின்றார் திருமூலர். மிகுந்த ஆர்வத்துடன் சினிமாப் பாடல்களைக் கைப்பேசியிலும் கணினியிலும் குறிந்தட்டுகளிலும் பதிவு செய்து கொண்டு அவற்றைத் தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்களும் பதின்ம அகவையரும் பெரியவர்களும்  அதனைக் கேட்பதோடு, உயிருக்கு உறுதி பயக்கும் தமிழ் மந்திரங்களான திருமுறைகளையும் கேட்கும் பழக்கத்தினையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் திருமூலர். சினிமாப் படங்களின் கதைகளையும் அவற்றின் பாடல்களையும் நாடகங்களின் கதைகளையும் மனனம் செய்து கேட்பதனால் பெரும் பயன் ஒன்றும் விளைந்து விடாது என்கின்றார். சிறிதளவு மன மகிழ்ச்சியே ஏற்படும். மாறாகப் பேரின்பமான  திருவருளின்பத்தினை ஏற்படுத்தும் திருமுறைகளையும் திருமுறை விளக்கங்களையும் சமய சொற்பொழிவுகளையும் கேட்டு மனதில் பதிப்பதோடு அவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றார். ஆலயங்களில் வழிபாட்டிற்குச் செல்லும் நாம் நமக்கு அறிமுகமானவர்கள் கொண்டு வரும் குடும்பக் கதைகள், பணியிடக் கதைகள், அரசியல் கதைகள் போன்றவற்றைக் கேட்பதோடு ஆலயங்களில் நடைபெறும் சொற்பொழிவுகளையும் சமய விளக்கங்களையும் கேட்க வேண்டும் என்கின்றார். உலகியல் ஒழுக்கங்களைக் கூறும் திருக்குறள், ஒளவையின் நீதி நூல்கள், நாலடியார் போன்ற அறநூல்களைக் கற்றுணர்ந்த சான்றோர் கூறுவதைக் கேட்க விரும்ப வேண்டும் என்கின்றார்திருமூலர். அகத்தில் தூய்மை உடையவராக, எப்பொழுதும் சிவ நினைவுடன், தவ வாழ்க்கையும் பேர் அருளும் உடைய மெய்நெறியாளர்களான சிவனடியார்களின் அருள் உரைகளையும் திருமொழிகளையும் கேட்டுப் பின்பற்றினால் அவை நாம் மெய்யுணர்வு பெறுவதற்கு வழி வகுக்கும் என்கின்றார். பெற்றோர்களும் பிள்ளைகளும் குடும்பமாக ஆலயங்களிலும் திருமடங்களிலும் வீடுகளிலும் அருள் உரைகளையும் சமய விளக்கங்களையும் அறவுரைகளையும் கேட்கும் பண்பினையும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றார். அறவுரைகளையும் அருளுரைகளையும் கேட்பதனால் அறம் அல்லாத சிவநெறி அல்லாத பாவங்களையும் தீயவற்றையும் விட்டு விலகி உயிர் மேம்படுவதற்கு வழி பிறக்கும் என்கின்றார். அமைதியாய் அமர்ந்து, “சிவயநம” எனும் திருவைந்து எழுத்து மந்திரத்தைக் கேட்பதனால் மனதில் அமைதியும் தெளிவும் உயிரில் உறுதியும் ஏற்படும் என்கின்றார். உயிருக்குக் கேட்டை விளைவிக்கும் புறங்கூறுதல், கோள் சொல்லுதல், வீண்பழி சுமத்துதல் போன்றவற்¨றை நம் நண்பர்கள் மூலமோ உறவினர் மூலமோ அல்லது மற்றவர் மூலமோ கேட்பதனை விடுத்து நல்லவர்களோடு கூடிப் பெருமானின் புகழையும் அவன் திருப்பெயரையும் கேட்பது உயிரைத் தூய்மை செய்து பெருமானின் பாலும் மற்ற உயிர்களின் பாலும் அன்பை விளைவிக்கும் என்கின்றார். பெருமானின் திருவருள் திறங்களைப் பொருள் விளங்குமாறு கேட்பதனால், பெருமானின் திருவருளால் நம் உயிரைப் பற்றிய ஆணவம் எனும் அழுக்கு நீங்கி மெய்யுணர்வு ஏற்படும் என்கின்றார். ஆணவத்தின் குழந்தைகளான செருக்கு, சினம், சிறுமை, விருப்பம், கீழ்க்குணம், பேராசை எனப்படும் உயிர்ப்பகை ஆறும் நீங்கும் என்பார். சிவநிலை ஏற்படும் என்கின்றார். “ அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழிகேட்டும், மறங்கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும், புறம்கேட்டும் பொன்னுரை மேனிஎம்மீசன், திறம்கேட்கும் பெற்ற சிவகதி தானே” என்பார் திருமூலர். பெருமானின் பேர் ஆற்றலையும் பேர் அருளையும் அவனின் திருப்புகழையும் அவன் வீற்றிருந்து அருளும் திருக்கோயில்களையும் அவன் அடியார்களுக்கு அருளிய திறத்தையும் அவனை அடைவதற்கு அடியார்கள் நின்ற நெறியையும் அவர்களின் அன்பையும் கொள்கைப் பிடிப்பையும் கேட்கக் கேட்க உள்ளம் தூய்மை அடைந்து, மெய் உணர்வு மேலிட்டு, “யான், எனது” எனும் செருக்கினை விட்டு, பேர், குலம், ஊர், வழக்கம் என்பனவற்றை எல்லாம் விட்டுச் சிவமயமாய்  ஆகிவிடுவோம் என்பதனை, “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள், பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள், அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள், அகன்றாள் அகலிடத்தார் ஆச்சாரத்தைத், தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள், தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார்.எனவே கல்விக் கேள்விகளில் இறைநெறிக் கேள்வியும் இன்றியமையாதது. உலகக் கல்விக் கேள்வி இவ்வுலக வாழ்க்கைக்குத் துணை நிற்பது. இறைக்கல்விக் கேள்வி உயிர் மேம்படலுக்கும் இறைவுலக வாழ்விற்கும் இன்றியமையாதது. நம்மை இறைநெறிக்கு ஆளாக்கும் இறைநெறிச் செய்திகளைக் கேட்டு உய்தி பெறுவோம். இன்பமே எந்நாளும் துன்பமில்லை!