கந்த சஷ்டி

1510

சைவர்வகளுடைய விழாக்கள் இரண்டு அடிப்படையில் கொண்டாடப் பெறுகின்றன. ஒன்று கால அடிப்படையில். அதாவது பௌர்ணமி, அமாவாசை, நட்சத்திரம், திதி போன்ற அடிப்படையில் ஆகும். அவ்வகையில் சித்திரைப் பௌர்ணமி, ஆடி அமாவாசை, திருவாதிரை, தைப்பூசம், விநாயகர் சதூர்த்தி, கந்தர் சஷ்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இரண்டாவது இக்கால அடிப்படையோடு சமய புராணங்களை இணைத்துக் கொண்டு விழாக்கள் கொண்டாடப் படுவதும் ஆகும். இவ்வகையில் கந்த புராணம், திருவிளையாடல் புராணம்,  விநாயகர் புராணம் போன்ற புராணங்கள் விழாக்களோடு தொடர்புடயனவாயும் அமைகின்றன.

ஒவ்வொரு விழாவும் நமக்கு வாழ்வில் அடைய வேண்டிய உண்மைப் பொருளை உணர்த்துவதாய் அமைவதால், உண்மைப் பொருளை எளிமையாக மக்களுக்கு உணர்த்துவதற்குத் தோன்றிய புராணங்களை விழாக்களோடு தொடர்பு படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில்தான் கந்த சஷ்டி பெருவிழாவும் அமைந்துள்ளது. ஐப்பசித் திங்கள் வளர்பிறை ஆறாவது திதியான          சஷ்டியைக் கந்த புராணத்தில் வருகின்ற சூரபதுமனைச் சங்கரித்த நாளாகத் தொடர்பு படுத்தி, இவ்விழா காலத்தையும் புராணத்தையும் தொடர்பு படுத்திக் கொண்டாடப் பெறுகின்ற விழாவாக அமைகின்றது.

சிவனும் முருகனும் வேறல்ல என்று உணர்த்துவதே கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணம். இக்கந்த புராணத்தில் “யான்-எனது” எனும் அறியாமையால் ஆணவத்தின் ஒட்டுமொத்த வடிவமான சூரபதுமனை, ஞானமே வடிவான முருகப் பெருமான் ஆறு நாட்கள் போர் புரிந்து சூரனின் அறியாமையைப் போக்கி அவனுக்கு ஞானம் அளித்து வெற்றி பெற்றதாய்க் குறிப்பிடும். சூரனுடன் போர் புரியும் ஆறு நாட்களையே நாம் கந்த சஷ்டியாகக் கொண்டாடுகிறோம்.

கந்த சஷ்டி விழா நமக்குப் பல அரிய உண்மைகளை உணர்த்துவதாய் உள்ளது. அதாவது உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக இறைவன் உயிர்களை அன்பாகவும் தண்டித்தும் அருள் புரிகிறான் என்று சைவம் குறிப்பிடும். இதனை முறையே அறக்கருணை என்றும் மறக்கருணை என்றும் குறிப்பிடும். நல்லொழுக்கமும் நற்பண்பும் இறைநெறியும் உள்ளவர்களை இறைவன் அமைந்த கரத்தைக் காட்டி, “யாமிருக்க பயமேன்” என்று அறக்கருணை புரிவதாயும் தீயழுக்கம், தீயநெறி, தீயபண்புகள் உடையவர்களை இறைவன் வாள், வேல், அங்குசம், குலிசம், மழு, தீ போன்ற படைக்கருவிகளால் தண்டித்து மறக்கருணை புரிவார் என்பதையும் விளக்குகின்றது. எனவேதான் நம் இறைவன் திருவுருவங்களில் இறைவன் திருக்கரங்களில் போர்க்கருவிகள் உடையவனவாகவும் அருள்பாலிக்கின்ற அமைந்த கரங்கள் உடையவனவாகவும் உள்ளன. இதனையே விநாயகர் புராணம்,  “போற்றுநருக்கு அறக்கருணை புரிந்து, அல்லாருக்கு   நிகரில் மறக்கருணை புரிந்து ஆண்டு கொள்ளும்   நிருமலன்……..” என்று குறிப்புடும். இறைவன் மறக்கருணையை நிகரில் மறக்கருணையென்று குறிப்பிடப் பட்டுள்ளது. மருத்துவர் நோயாளியின் நலம் கருதி நோயாளியை வாளால் அவன் நோகும்படி அறுத்துக் குணப்படுத்துவது போன்று இறைவன் நம் வாழ்வில் இன்ப துன்ப நுகர்ச்சிகளைக் கொடுத்து, பல்வேறு பிறவிகளில் பிறந்து இறந்து அநுபவம் பெறச் செய்து நம்மைத் திருந்தச் செய்கிறான் என்பதை உணர்த்துவதாய் உள்ளது. இத்தத்துவம் கந்த புராணத்தில் நன்கு விளங்குவதாய் உள்ளது. அன்பு, பணிவு, நற்பண்பு, என்று இல்லாது யான்- எனது என்று செருக்குற்றிருந்த சூரனை இறைவன் அழித்துவிடவில்லை. மாறாக அவனுக்குத் தம் திருவடி ஞானத்தை நல்கி, அவனுடைய அறியாமையைப் போக்கித் திருந்திய உயிராகத் தன் திருவடியில் சேர்ப்பித்துக் கொண்டார். இதனையே கந்த புராணத்தில் முருகன் ஆறு நாட்கள் சூரனுடன் போர் புரிவதாகவும் ஆறாவது நாள் சூரன் மாமரமாய் நிற்க முருகப் பெருமான் ஞானத்தின் வடிவான வேலை விடுகிறார். வேல் மாமரத்தைப் பிளக்க ஒரு பகுதி சேவலாகவும் மற்றொருப் பகுதி மயிலாகவும் மாறி இறைவன் திருவடியில் அமர்ந்தன.

கந்த சஷ்டி கொண்டாடும் அன்பர்கள் ஆறு நாட்களுக்கு இடைவிடாத இறை சிந்தனையோடு திருமுறை, திருப்புகழ் போன்றவற்றை ஓதுவதோடு கந்தபுராண சொற்பொழிவைக் கேட்கவோ அல்லது படிக்கவோ வேண்டும். கந்த புராணத்தைச் சிந்திப்பதன் வழி இச்சில நாட்களிளாவது சிந்தித்து உணர வேண்டிய நன்னெறிகளை உணர்வோம் என்பதே நோக்கமாகும்.

இனி கந்தபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு கந்த சஷ்டி நாட்களில் சிந்திக்க வேண்டி சில உண்மைகளைச் சிந்திப்போம். கந்தபுராணத்தில் வரும் காசிப முனிவர் உயிர்கள் நல்ல செயல்களைச் செய்ய தவம் உண்டாகும் என்பதையும் அத்தவத்தினாலே தெய்வத்தன்மை பெற்று அன்பு பெருகி அருள் வளர்ந்து பல சித்திகள் கிட்டும் என்று உணர்த்துகிறார்.

உயிர்களிடம் தோன்றும் ஆசை, கோபம், மயக்கம் என்ற மூன்று இயல்புகளே நம்மிடம் இருக்கின்ற நற்குணங்கள் கெட்டுத் தீய குணங்கள் தோன்றுவதற்கு வாயிலாக அமைகின்றன என்பதைக் காசிப முனிவர் மாயை என்கின்ற பெண்ணோடு ஆசை வயத்தால் கூடி அசுரர்கள் தோன்றுவதாய்க் கந்தபுராணம் குறிப்பிடுகிறது. கந்த புராணத்தில் சூரபதுமன், சிங்கமுகாசூரன், தாரகன் என்கின்ற மூன்று அசுரர்களோடு அசமுகி அல்லது ஆட்டு முகப்பெண் ஒருத்தியும் காசிப முனிவர் மாயையோடு கூடியதால் பிறப்பதாய் வருகிறது. இங்கு சூரபதுமன் அறியாமையை ஏற்படுத்தும், யான்-எனது என்ற செருக்கினையுடைய ஆணவ மலத்தின் அடையாளமாகக் காட்டப் படுகிறான். ஆசையினால் ஈர்க்கப்பட்ட உயிர் மிருகத்தன்மையுடையதாயும் கொலைத்தன்மையும், கோபமும் உடைய செயல் உடையதாய் அமையும் என்பதைக் காட்டிக் கன்மத்திற்கு அடையாளமாய்ச் சிங்கமுகாச்சூரன் வருகிறான். யானை முகமுடைய  தாரகாசூரனோ உயிரை மயக்கம் கொள்ளச் செய்கின்ற பண்பின் அடையாளமாகச் சுட்டப்படுகின்றான்.

ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மூன்று அழுக்கினால் உயிர்கள் மேலும் கீழ்நிலை அடைந்து முறை தவறி இன்னும் பல தீய குணங்களுக்கு அடிமையாகும் என்று காட்டுவதே அசமுகி என்று குறிப்பிடப்படும் ஆட்டு முகப் பெண்ணின் தோற்றம். எனவே கந்த சஷ்டி விழாவின் போது பிறவிக்கு வித்தாய்; உயிர் கீழ்நிலைக்குச் செல்வதற்குத் துணையாய் அமையக் கூடிய மேற்குறிப்பிட்ட மூன்று இயல்புகளை விடவேண்டும் என்பதைக் கந்த புராணத்தை நினைவு கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனையே வள்ளுவ பேராசானும்,  “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின்   நாமங் கெடக் கெடும் நோய்”   என்று குறிப்பிடுவார். கந்தபுராணத்தில் காசிபரின் அறிவுரைகள் இக்கந்த சஷ்டித் திருநாட்களில் சிந்திக்கத்தக்கன. சிவபெருமானே பரம்பொருள். உலகில் உண்மைப் பொருள்கள் மூன்று. அவை பதி என்னும் இறைவன், பசு என்னும் உயிர், பாசம் என்னும் உலகம். இறைவன் ஒருவனே. உயிர்கள் எண்ணில் அடங்காதவை. உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் பாசங்களினால் பிணிக்கப்பட்டுள்ளன. இதனையே திருவாசகத்தின் சிறப்பாயிரத்தில், “தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி” என்று குறிப்பிடுவார். உயிர்கள் நல்வினை தீவினைக் கேற்ப பிறவிகள் தோறும் பிறக்கும். அவை ஐம்பெரும் பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆன பொருள்களிலிருந்து உடம்பு பெறும். கரு, முட்டை, வியர்வை, விதை எனும் நால்வகையில் தோன்றும். தேவர், மனிதர், மிருகம், தாவரம், பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என ஏழுவகைப் பிறப்பில் 84 இலட்சம் யோனி பேதங்களாய் உடம்பெடுக்கும் என்பதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காசிபர் இவ்வுடம்பும் செல்வமும் நிலையில்லாதது என்கிறார். அறமே நிலையானது என்கிறார். நிலையான அறத்தைப் பெறுவதற்கு நிலையில்லாத இவ்வுடலையும் செல்வத்தையும் நன்முறையில் பயன்படுத்துவதே அறிவுடைமையாகும் என்கிறார் காசிபர். ஆணவமலம் முதிர்ந்து கன்மம் மாயையிலே உழன்று கொண்டிருக்கும் உயிர் தாமாகத் தம்மைத் திருத்திக் கொள்ளும் வழி அறியாது. யான் – எனது என்ற முனைப்பு வலிமை இழக்கும் போது தான் அது இறைவனைக் காண இயலும். அதற்குச் சரியான தீர்வு இறைவழிபாடுதான். இறைவழிபாட்டின் வழி நம்முடைய சிறுமையை அறிந்து இறைவனுடைய பெருமையை உணர நம்முடைய செருக்கு அறும். கந்த சஷ்டி தினத்தில் இறைவன் செய்திருக்கின்ற கருணையினால் இவ்வுயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்று எண்ணும். தன்னைப் போன்றே பிற உயிர்களும் இப்பிறவிப் பெருங்கடலை நீந்த முயன்று கொண்டிருக்கின்றன என்று எண்ணத் தோன்றும். இதனால் கணவன், மனைவி, மாமனார், மாமியார், தலைவன், தொண்டன், ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர் என்ற வேற்றுமை நீங்கி அனைவரையும் தன்னுயிரைப் போன்று நினைக்கத் தோன்றும். பிறருக்கு உதவும் மனப்பான்மை தோன்றும். மனத்தின் கண் மாசு நீங்கும். அன்பு, பரிவு, பணிவு தோன்றும் என்பன போன்றவற்றைக் கந்த சஷ்டியன்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

கந்தபுராணத்தில் இறைவனே கதி என்று அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டிருந்த தேவர்களுக்கு அருள்புரிந்தது போல நற்பண்புகளையும், நன்னெறிகளையும் இறைச்சிந்தனையும் கொண்டு இறைவனை வழிபட்டுக் கந்த சஷ்டியில் தவங்கிடப்போமானால் காமம், வெகுளி, மயக்கம் என்பதின் ஒட்டுமொத்த அடையாளமாய் விளங்கும் சூரபதுமனைப் போன்று நம் தீய குணங்களை, அறியாமையை இறைவன் தம் ஞானம் என்ற வேலால் அறுத்து நமக்கு நற்கதியைத் தருவான். இவ்வரிய சிந்தனைகளை மனத்தில் தாங்கிக் கந்த சஷ்டியின் ஆறாவது நாள் சூர சம்மாரம் பார்த்து இந்நற்கதி எனக்கு என்றைக்கு வாய்க்குமோ என்று அப்பரம்பொருளை வழிபடுவோமாக!

‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’