87. மாணிக்கத்தை விட்டு பரற் கல்லைச் சுமத்தல்

969

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம், உயிரானது எதையும் அழுந்தி நுகர்ந்தே அறியும் என்று குறிப்பிடுகின்றது. மேலும் இறையின்ப அநுபவம் என்ற நுகர்ச்சியையும் பட்டறிவினால் நுகர்தலாலேயே உணர முடியும் என்பதனையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. எனவேதான் சைவர்கள் தம் இறைவழிபாட்டிலும் இதர வாழ்வியல் கூறு செயல்முறைகளிலும் சடங்கு, கிரியை எனும் செயல்முறைகளுக்கு முதன்மையான இடத்தை அளித்துள்ளனர். சடங்குகள் அல்லது கன்மங்கள் என்று சொல்லப்படும் கிரியைகள் செய்யப்படுவதன் வழி உயிர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மைகளை மனம், மொழி, மெய்யால் உணர்கின்றன என்பதனை நம் முன்னோர் உணர்ந்திருந்தனர்.

புதுமனைப் புகுவிழா, காதணி விழா, திருமணவிழா, கோயில் பூசனைகள், இறைவழிபாடு, இறப்பு என்று அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட செயல்முறைகள் அல்லது கன்மங்களைச் செய்து அச்செயல்களினால் உணரப்பட வேண்டிய உண்மைகளை உணர்த்தும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் செய்யப்படுகின்ற செயல் முறைகளின் பின் உள்ள உண்மையை உணர்ந்தவர்களே அச்செயல் முறைகளுக்கு ஆசான்களாகவும் கருதப்படுவர். செயல் முறைகளின் பின் உள்ள பொருளை, உண்மையை உணர்ந்து கொள்ளாமல் வெறும் செயல்முறைகளை அல்லது சடங்குகளை மட்டும் செய்கின்ற ஆசான்களை அச்செயல் முறைகளின் ஆசான்கள் என்று ஏற்றுக் கொள்வது பெரும் தவறு என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

திருக்கோயில் நிகழ்ச்சிகளிலும் இல்ல நிகழ்ச்சிகளிலும் செய்கின்ற செயல்முறைகளுக்குப் பொருள் தெரியாவிட்டாலும் யார் நீண்ட நேரம் செயல் முறைகளை அல்லது சடங்குகளைச் செய்கின்றார்களோ அவர்களையே மக்கள் போற்றி வணங்கிக் கொண்டாடுகின்ற சூழல் இன்றளவில் நிலவுகின்றது. இத்தகைய அறியாமையைக் கண்டிக்கின்றார் திருமூலர். செயல்முறைகளை முறையாகத் தெரிந்துகொண்டு அதன் உட்பொருளை அறியாதவர்களைக் கன்மீஞானி என்கின்றார் திருமூலர். இவர்கள் செயல்முறைகளை நன்கு அறிந்தவரே அன்றி அச்செயல்முறைகள் உணர்த்தும் உட்பொருளை அறியாமல் அச்செயல் முறைகளைச் செய்வதால், அச்செயல் முறையின் உள்ளார்ந்த பயன் கிட்டாமல் போகும் என்கின்றார்.

சைவ சமய நூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளபடி அதன் முறை வழுவாமல் அச்செயல் முறைகளின் உண்மையை உணர்ந்து செய்பவர்களை மாணிக்கக்கல் எனவும் வெறும் செயல்முறைகளை மட்டும் அறிந்து கொண்டு அவை உணர்த்தும் உண்மைகளை உணராதவர்களை வெறும் பரற்கல் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். செயல்முறைகளை நீண்ட நேரம் செய்யாவிட்டாலும் அதன் பொருள் விளங்கிச் செய்யும் ஆசான்களைப் புறக்கணித்து விட்டு வெறும் செயல்முறைகளை மட்டும் அறிந்த ஆசான்களை அறிவு ஆசான்களாக் கொள்ளுதல் மாணிக்கக்கல் கையில் கிடைத்து இருக்கவும் அதனை எறிந்துவிட்டு, வெயிலால் வெதும்பிக் கிடக்கும் பரற்கல்லைக் கையில் எடுத்து சுமப்பவனின் அறியாமை போன்றது ஆகும் என்கின்றார் திருமூலர். கையில் நெய்யுள்ள பாலும் இளநீரும் தயிரும் இருக்க அவற்றை உண்ணாமல் நமக்குப் பின்பு கேட்டினை விளைவிப்பதற்கு ஏதுவாகிய நச்சுத் தன்மை உடைய எட்டிப் பழத்தை முயன்று பெற்று உண்பவனின் செயல்போல் ஆகும் என்பதனைக் “கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு, மெய்ப்பட்டக் கல்லை சுமப்போன் விதி போன்றும், நெய்பட்டப் பால் இளநீர் தயிர்தான் நிற்க, கைப்பட்டு உண்பான் போன்றும் கன்மீஞானிக்கு ஒப்பே” என்கின்றார்.

அறிவார்ந்த, அறிவியலோடு என்றும் பொருந்துகின்ற, ஏரணம் மிக்க சைவ சமயக் கிரியை முறைகளை அல்லது செயல் முறைகளைப் பிழையறக் கற்று அதன் உட்பொருளைப் புரிந்து கொண்டு அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கின்ற உண்மை ஆசான்கள் இளைய தலைமுறையினருக்கு இன்றி அமையாதவர்கள் என்பது பெறப்படும். திருக்கோயில்களில் மணிக்கணக்கில் செய்யப்படுகின்ற பூசனை முறைகளுக்கும் வழிபாடு முறைகளுக்கும் பொருள் விளக்கம் கூறும் சமய ஆசான்கள் தேவைப்படுகின்றனர். செய்யப்படும் செயல் முறைகளின் பொருள் தெரியாமல் வெறுமனே மற்றவர்களைப் பின்பற்றிச் செய்வதும் மணிக்கணக்கில் செய்யப்படுகின்ற பூசனைகள், வேள்விகள் போன்றவற்றைப் பொருள் தெரியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதுவும் இளைய தலைமுறையினரிடையே வெறுமையை ஏற்படுத்துகின்றது. திருக்கோயில்களுக்கு வழிபடச் செல்லும் இளைஞர்களும் யுவதிகளும் அங்கு செய்யப்படும் செயல்முறைகளுக்கு விளக்கம் அளிக்கப் படாமையால் அவற்றைத் தெரியாமல் வழிபாட்டில் ஈடுபாடு இன்றிச் சோர்ந்து போகின்றனர். அவர்களின் கவனம் சிதறித் திருக்கோயில்களில் செய்யக் கூடாத செயல்களைச் செய்து கொண்டும் சமயத்தின் பாலும் வழிபாட்டிலும் ஈடுபாடு இன்றியும் இருக்கின்றனர்.

முறையான, தேவையான, பொருத்தமான, அறிவார்ந்த செயல் முறைகளைத் தெரிவு செய்து குறிப்பிட்ட நேரத்திற்குள் உரிய முறையில் அதன் முறை தவறாது செய்தும் அவற்றின் பொருளை விளக்கியும் சமய ஆசான்கள் செயல் முறைகளையும் பூசனைகளையும் இயற்றுவார்களேயானால் நம் சமயநெறியின் உன்னத உண்மைகளும் அதன் சிறப்பும் தெரியவருவதோடு அதன் மீதுள்ள பற்றும் பெருகி, இறையன்பும் சிறக்கும். ஒவ்வொரு செயல்முறையையும் செய்வதன் நோக்கத்தையும் அதன் உண்மையையும் செயல்முறை ஆசான்கள் விளக்குவார்களேயானால் மற்றவர்களும் அதனைப் பிழையின்றிப் பின்பற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இல்ல வழிபாடு இயற்றுகின்றவர்கள் அவரவர் இல்லத்தில் பொருள் உணர்ந்து வழிபாட்டுச் செயல்முறைகளைத் தாங்களாகவே செய்து கொள்ளவும் மற்றவருக்குக் கற்பிக்கவும் வழி பிறக்கும். செயல்முறைகளை மட்டும் அறிந்து அதன் பொருளை அறியாத செயல்முறை ஆசான்கள் மக்களின் சமய அறிவினையும் அன்பினையும் வளர்ப்பதற்குத் துணைபுரியாமையால் அவர்களை வெயிலில் வெதும்பிக் கிடக்கும் பரற்கல் என்று திருமூலர் சாடுகின்றார்.

இல்லங்களில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் உண்மைச் சமயத்திற்கும் பகுத்தறிவிற்கும் சற்றும் இடம் அளிக்காத புதுப் புது செயல் முறைகளை அறிமுகம் செய்தும் மக்களை மணிக்கணக்கில் இருத்தி அறிவு தெளிவிற்குச் சற்றும் இடம் அளிக்காமலும் செயல்முறைகளைச் செய்யும் செயல்முறை ஆசான்களை நூறு, ஆயிரம் என்று அள்ளிக் கொடுத்துக் கொண்டுவந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்ற அறியாமை உடையவர்களைத் திருமூலர் சாடுகின்றார். சமயச் செயல்முறை ஆசான்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கின்றவர்கள் தாங்கள் செய்யும் செயல் முறைகளுக்குப் பொருள் தெரியாமல் தங்களைச் செயல் முறை ஆசான்கள் என்று சொல்லிக்கொள்வது பெரும் குற்றம் என்கின்றார் திருமூலர்.

வழிபாட்டில் ஒரு கற்பூரம் ஏற்றினாலும் ஓர் ஊதுபத்தியை ஏற்றினாலும் ஒரு தூப தீபம் காட்டினாலும் மணியை ஒலித்தாலும் அதனை எதற்காகச் செய்கின்றோம் என்பதனைச் செயல் முறைகளைச் செய்பவரிடமோ அல்லது கற்றறிந்தவரிடமோ கேட்டுத் தெளிதல் இன்றியமையாததாகும். வழிபாட்டில் செய்யும் எளிய செயல் முறைகளான தேங்காய் உடைத்தல், காளாஞ்சி வைத்தல், பல்வேறு வகையான தீபங்களை ஏற்றுதல், இறைவனின் திருமுன்பு பதினாறு பணிவிடைகள் இயற்றுதல் போன்ற அடிப்படையான செயல் முறைகளின் பொருளையாவது செயல்முறை செய்பவர்களிடம் உரிய முறையில் கேட்டுத் தெளிதல் வேண்டும். வழிபாட்டுச் செயல் முறைகளுக்கு முறையான, சரியான, விளக்கம் அளிக்க முடியாத செயல்முறை ஆசான்களை நம் செயல்முறை ஆசான்களாகக் கொள்ளுதலை விட்டு விலக வேண்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். செயல் முறைகளைச் செய்வது செயல் முறை ஆசான்களின் தொழில் என்று அதனை முழுமையாக ஒரு சிலரிடம் ஒப்படத்துவிட்டு வழிபாட்டில் வெறுமனே உட்கார்ந்து கொண்டு சொன்னதைச் செய்யும் சோம்பல் தனத்தை விட்டொழித்து அறிவார்ந்த இறை அன்பர்களாக மாற வேண்டும்.

ஒவ்வொரு இல்லத்தின் தலைவர்களாகவும் தலைவிகளாகவும் இருக்கின்ற பெற்றோர் இச்செயல்முறைகளை அறிந்து இருப்பதோடு மட்டும் அல்லாமல் அதன் பொருளையும் அறிந்திருக்க வேண்டும். தங்கள் காலம் முடிவதற்கு முன்னால் அதனை இளைய தலைமுறையினருக்குக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்ற தெளிவினைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவன செய்தல் வேண்டும் என்ற கடப்பாட்டினைத் தங்கள் தலையாய கடப்பாடாகக் கொள்ள வேண்டும். இன்பமே எந்நாளும் துன்பமில்லை!