மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர், அவர்காலத்தில் தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்து ஒன்று மட்டுமே இருந்தன என்ற குறிப்பினை நமக்கு அளிக்கின்றார். அவ்வைம்பத்தொரு தமிழ் எழுத்துக்களையும் மந்திரங்கள் என்று குறிப்பிடுகின்றார். தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்து ஒன்றின் உள்ளும் சிவபெருமான் ஒலி வடிவாக நின்று உயிர்கள் அறிவு பெற இறைவன் அருள் புரிகின்றான் என்கின்றார். இதனாலேயே தமிழ் எழுத்துக்களை அறிவிக்கின்ற ஆசிரியர்களை இறைவனுக்கு நிகராக வைத்துப் போற்றுகின்றோம். இறைவனை அறிந்து கொள்கின்ற இறைக்கல்வியை இவ்வாசிரியப் பெருமக்கள் வழங்கிய கல்வியினைக் கொண்டே கற்று, அறிந்து, ஆய்ந்து, தெளிந்து, பின் உணர்கின்றோம். இதனாலேயே, “எழுத்தறிவித்தவன் இறைவன்” எனும் வழக்குத் தமிழரிடையே நிலவுகின்றது. டூத்தகைய போற்றுதலுக்குரிய, எழுத்தறிவிக்கும் ஆசிரியர்களை இகழ்ந்தால் என்ன நிகழும் என்பதனைத் திருமூலர், “குருநிந்தை கூடாமை” எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார்.
மந்திரங்களைக் கற்கவும் அவற்றை ஒலிக்கவும் எழுத்துக்களும் மொழியும் துணையாய் உள்ளன. அவ்வெழுத்துக்களையும் மொழியையும் அறிவிக்கும் ஆசிரியர்களை இகழ்ந்தால், அவரது மனம் நோகும்படியான தீமைகளைச் செய்தால், இம்மண்ணுலகில் எல்லோரும் இகழ்ந்து ஒதுக்கும் நாயாய் நூறுமுறை பிறந்து , பின்பு மாந்தராய்ப் பிறந்தாலும் நற்பண்புகள் இல்லாத, நல்லறிவு இல்லதவராய்ப் பிறப்பின் நோக்கம் அறியாது, அதன் பயனையும் உணராது வெறுமனே வாழ்ந்து இறப்பார்கள் என்கின்றார் திருமூலர். இதனை, “மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர், சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர், பிந்திச் சுணங்காய்ப் பிறந்துஒரு நூறுஉரு, வந்து புலையராய் மாய்வார்கள் மண்ணிலே” என்று குறிப்பிடுகின்றார்.
பெற்றோரும் அவர் தம் பிள்ளைகளும் ஆசிரியர்களைப் போற்றும் பண்பு காலம் காலமாய்ச் சீர்மிகு செந்தமிழர் பண்பாட்டில் ஊறிய ஒன்றாகும். அம்மேன்மைப் பண்பினாலேயே நம் தாய்மொழியான தமிழும் அதன் சீர்மையும் அத்தமிழ்மொழியினைத் தன்னுள்ளே வைத்துள்ள தமிழர் பண்பாடும் காலத்தை வென்று நிற்கின்றன. இன்றைய சூழலில் பலரும் ஆசிரியர்களை மதியாமையினாலேயேதான் தமிழர் தம் பண்பாடும் கல்வியும் வலம் குன்றியும் நலிந்தும் வருவதாகக் கற்றறிந்தோர் குறிப்பிடுகின்றனர்.
பள்ளியில் கள்வி கற்கும் மாணவர்கள் ஆசிரியர்களை மதியாமல் போவதால் அவர்கள் பெறவேண்டிய கல்வியை இழக்கின்றார்கள். அக்கறையோடு தட்டிக் கேட்கும் ஆசிரியர்களை மாணவர்கள் எதிர்த்துப் பேசுவதும் அவர்கள் மீது சினம் கொண்டு அவர்களைத் தாக்குவதும் முன்னாலே போகவிட்டுப் பின்னாலே கேலி செய்து மகிழ்வதும் கொச்சை மொழிகளால் திட்டுவதும் மாணவர்களுக்குப் பெருங்கேட்டினை விளைவிக்கும் என்று திருமுலர் குறிப்பிடுகின்றார். ஆசிரியரிடத்தே பணிவில்லாமல் பேசுவதும் இடக்கான பதில்களை அளிப்பதும் ஆசிரியரைக் கிண்டல் செய்து நகைப் பொருளாய் ஆக்குவதும் ஆசிரியரின் உடைமைப் பொருளைப் பாழ்படுத்துவதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் குண்டர் கும்பலை வைத்து அச்சுறுத்துவதும் குண்டர் கும்பலைக் கொண்டு பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர்களைத் தாக்குவதும் அவர்களுக்குப் பெருங்கேடாய் முடியும் என்கின்றார் திருமூலர்.
பள்ளிக்கு வெளியே கல்வி கற்பிக்கும் ஆசிரியர் முன் வெண்சுருட்டுக்களைப் புகைப்பதுவும் மோட்டார் வண்டிகளில் வீர விளையாட்டுக்கள் புரிவதும் காதல் களியாட்டங்கள் புரிவதும் பள்ளிக்கு மட்டம் போடுவதும் மது அருந்துவதும் கைகலப்புகளில் ஈடுபடுவதும் கைப்பேசிகளின் வழி ஆசிரியர்களுக்கு மிரட்டல்கள் விடுவதும் எச்சரிப்பதுவும் அச்சுறுத்துவதும் அம்மாணவர்களைக் கல்வியில் பின்தங்க வைத்து விடுவதோடு மட்டும் அல்லாமல் நற்பண்புகளைப் பெறுவதிலும் நல்ல மாந்தனாய் உருவாவதிலும் பிறவிப் பயனைப் பெறுவதிலும் பின்னடையச் செய்து விடும் என்கின்றார் திருமூலர். அடுத்த வேளை உணவிற்குத் தெருவுகள் தோறும் அலைந்து திரியும் நாயின் வாழ்க்கையினைப் போன்று எதிர்காலம் இருண்டுத் துன்பப் படுவார்கள் என்கின்றார் திருமூலர். தங்கள் பிள்ளைகளின் பொய்யையும் நடிப்பையும் உண்மை என்று நம்பி ஏமார்ந்து, பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களை இழிவு படுத்தியும் அவர்களுடன் வாதிட்டு அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் பெற்றோர்களும் எந்நிலையிலும் ஆசிரியர்களைப் போற்றும் பண்பினை இழக்காமல் இருப்பதனை மறந்து விடக்கூடாது. ஆசிரியர் பெருமக்களும் அவர்தம் பண்பினை ஒரு போதும் இழக்காது தக்க வைத்துக் கொள்வதும் இன்றியமையாதது ஆகும். எதற்கேடுத்தாலும் ஆசிரியர்களிடம் மரியாதைக் குறைவாய்ப் பேசுதலும் பண்பின்றி நடந்து கொள்ளுதலும் ஒருபோதும் மாணவர்களின் எதிர்காலத்திற்குத் துணை நிற்காது என்கின்றார் திருமூலர்.
எழுத்தறிவிக்கும் ஆசான்களை இகழ்ந்தால் சுணங்கனாய்ப் பிறந்து துன்பப்படுவார்கள் என்று குறிப்பிடும் திருமூலர், சமய நெறிகளை உணர்த்தும் ஆசான்களை இகழ்ந்தால் என்ன நேரிடும் என்பதனையும் குறிப்பிடுகின்றார். இறையறிவு நெறிமுறைகளை உணர்த்துகின்ற சமயநெறி ஆசான்கள் திருமுன்பு, பொய், குறளை(கோள் மூட்டுதல்), கடுஞ்சொல் கூறல், பயனற்ற சொல் கூறல் என்னும் தீய சொற்கள் எவர் வாய் வழியாக வெளிப்படினும் உலகில் நல்ல நெறிகள் அழிந்து, மெய்யுணர்வு இல்லாது ஒழியும் என்கின்றார் திருமூலர். தவிர காலங் காலமாய்த் தொன்று தொட்டு வரும் உலகியல் துறைகளும் மெய்நெறித் துறைகளும் மக்களால் மறக்கப்பட்டுச் சமய நெறிகள் அழிந்து நாட்டில் பஞ்சமும் உண்டாகும் என்கின்றார் திருமூலர். இதனைச், “சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின், நன்மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது, தொன்மார்க்கங்களாய துறையும் மறந்திட்டுப், பன்மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே” என்று குறிப்பிடுகின்றார்.
சமய நெறியினைப் புகட்டுகின்ற ஆசான்கள் முன்பு, அன்பர்கள் தீய சொற்களைப் பேசினாலே இவ்வளவு துன்பங்களும் நேரிடும் என்றால் சமயநெறிகளைப் புகட்டுகின்ற ஆசான்கள் மேற்கூறியவற்றைச் செய்தால் எந்நிலை ஏற்படும் என்பதனைக் கூறவேண்டுவது இல்லை! பணக்குறிக்கோள் கொண்ட ஆசான்களும் தங்களையே கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஆசான்களும் இறைவனை வழிபடாது தன்னை வழிபட வேண்டும் என்று கூறிக்கொள்ளும் ஆசான்களும் மருந்து, மாயம், மந்திரம் என்று கூறி மக்களை ஏமாற்றும் ஆசான்களும் காத்து, கறுப்பு, பில்லி, சூன்யம் என்று மக்களை ஏமாற்றும் ஆசான்களும் உலகிற்கும் சமயத்திற்கும் மெய்நெறிக்கும் மெய் உணர்விற்கும் இயற்றும் தீமையை எண்ணிப்பார்த்தல் வேண்டும். இத்தகைய கயவர்களால் உண்மைச் சமயத்தின் மீதும் மெய்நெறியாளர்கள் மீதும் கொண்ட நம்பிக்கையும் உண்மை விளக்கமும் கெட்டு ஒழிவதனை உணரல் வேண்டும் என்கின்றார் திருமூலர்.
ஏமாற்று சமயநெறியாளர்கள் முன்பு அவர்களுக்கு உறுதுணையாய் உண்மையை அறியாது குருட்டு ஆட்டம் ஆடி மக்களைக் குருடாக்கும் பொய் நெறியாளர்களின் எடுபிடிகளால் ஏற்படும் விளைவுகளையும் சிந்தித்தல் வேண்டும். பொய்நெறி ஆசான்களுக்கு ஆட்கள் சேர்ப்பதுவும் அவ்வாறு சேர்க்கப்படும் ஏழை எளியவர்கள் ஏமார்ந்து போவதற்குத் துணை நிற்பதுவும் பெருந்தீங்கினை ஏற்படுத்தும் என்கின்றார் திருமூலர். தங்களின் சிக்கல்கள் நீங்கும் என்று நம்பி வருகின்ற ஏழை எளியவர்கள் நம்பி வந்த பலனைப் பெறாது பல்வேறு இழப்புக்களுக்கு ஆளாவதற்குக் காரணமானவர்களும் பொய்யர்களே! இவர்களும் மெய்நெறி ஆசான்களுக்கு இழிவை ஏற்படுத்துகின்றவர்களே!
பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசான்களை மதிப்பதுவும் அவர்களைப் பணிவோடு வணங்குவதுவும் அவர்களின் மனம் நோகுமானால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு போகும் பிள்ளைகளுக்குத் துன்பம் நேரிடும் என்பதனை உணர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளின் முன்பு ஆசிரியர்களை இழிவு படுத்தும் செயல்களைச் செய்யாது ஒழிவார்களாக! மாணவர்கள் ஆசிரியர்களை இகழ்ந்தால் தங்களுக்குத் துன்பம் நேரிடும் என்பதனை உணர்ந்து ஆசிரியர்களை மதிக்கக் கற்ருக் கொள்வார்களாக! சமய மடங்கள், சமய நிலையங்கள் போன்ற இடங்களில் பொய் நீக்கி உண்மை சமய நெறிகளைக் கற்பித்து மக்களை மெய்நெறியில் மேம்படச் செய்வார்களாக! உண்மையான சமய நெறிகளை மக்களுக்குக் கற்பித்து அவர்கள் துன்பம் நீங்கி இன்பமாய் வாழ துணை நிற்பார்களாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!