20. உண்மையான கடவுளை வழிபடுவோம்

1450

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் கடவுளின் இயல்புகளை விளக்குகையில், பரம்பொருளான கடவுள் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவன் என்று குறிப்பிடுகின்றது. முட்டை, கரு, விதை, வியர்வை என்ற உயிர்களின் நால்வகைத் தோற்றத்திற்கும் வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற எழு வகைப் பிறப்பிற்கும் உட்படாதவன் என்று குறிப்பிடுகின்றது. “பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியை,” என பெருமான் பிறப்புக்கும் இறப்புக்கும் உட்படாதவன் என்று சுந்தரமூர்த்தி அடிகள் தமது பாடலில் குறிப்பிடுவார். இதனையே மூவாயிரம் தமிழ் பாடிய திருமூலரும் குறிப்பிடுகின்றார். பெருமான் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதனைப், “பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளான், இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும், துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால், மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே” என்பார்.

பரம்பொருளான சிவபெருமான் என்றும் பிறப்பில்லாதவன். பின்னல் சடையை உடையவன். அளவில்லாத பேர் அருளாளன். இறப்பு இல்லாமல், என்றும் அழிவு இல்லாதவன். வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாது எல்லோர்க்கும் குறைவில்லாத நிறைந்த இன்பம் அளித்து அனைவரையும் விட்டு நீங்காதவன். அப்படிப்பட்டப் பரம்பொருளைத் தொழுங்கள். அங்ஙனம் தொழுதால் அவன் உங்களை ஒருபோதும் மறவான். உயிர்களுக்கு மயக்கத்தைச் செய்யும் மாயைக்கு நேர் எதிரான இயற்கைப் பேர் அறிவினன் என்பது மேற்கண்ட பாடலில் திருமூலர் உணர்த்தும் செய்தியாகும்.

எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுக்கு உள்ளும் நிலவுகின்ற பரம்பொருளான கடவுளுக்கும் தெய்வங்களுக்கும் வேறுபாடு அறியாது பலர் மயங்கிக் கிடப்பதைத் திருமூலர் தெளிவுபடுத்துகின்றார். நம் முன்னோர் சிலர் வழக்கத்தினால் பிறந்து இறந்த வீரர்களையும் தலைவர்களையும் காவலர்களையும் காவல் தெய்வங்களாகவும் நடுகல் தெய்வங்களாகவும் எல்லைத் தெய்வங்களாகவும் வழிபட்டு வந்திருக்கின்றனர். இவை நம் போன்ற சராசரி மாந்தர்களுக்கு உள்ள புலால் உண்ணல், மது அருந்துதல், சுருட்டுப் பிடித்தல், கருவாடு உண்ணல், சினங்கொண்டு வெறி ஏறுதல் போன்ற பொருத்தமில்லாப் பண்புகளெலெல்லாம் உடையனவாய் உள்ளன. இதனாலேயே மருள் வந்து ஆடுகின்ற மேற்கூறிய தெய்வங்கள் இவற்றையெல்லாம் செய்கின்றன. இவற்றைப் பரம்பொருளான கடவுள் என்று அறியாமையில் எண்ணி வழிபடுவது தவறு என்கின்றார் திருமூலர். முன்பு ஒரு காலத்தில் வாழ்ந்த உயிர் வகைகள் இவை. இவை நம் முன்னோர்க்கு நன்மை புரிந்திருக்கலாம். இவற்றிற்கு நன்றி உணர்வால் மரியாதையால் வணக்கம் தெரிவிக்க வேண்டுமே தவிர, அவற்றைப் பரம்பொருளாய் எண்ணி வழிபடுதல் கூடாது என்பது திருமூலர் உணர்த்தும் செய்தியாகும்.

நம்மில் பலர் பரம்பொருளான இறைவனை வழிபடுவதை விடுத்து முழுமையாகச் சிறுதெய்வங்களின் வழிபாட்டில் சென்றுவிட்டனர். இது தவறு என்பதே திருமூலரின் குறிப்பு. பரம்பொருளின் வழிபாட்டிற்குள் நுழைவதால் புலால், மது, சுருட்டு, அரிவாள், சாட்டை போன்ற சிறுதெய்வங்களின் தவறான பழக்கங்களை நம் இனத்தவரிடையே குறைக்கலாம். நம் பிள்ளைகளையும் அவற்றிலிருந்து காக்கலாம். நற்பழக்கங்கள் உடைய நன்மணிகளாகத் தேற்றலாம்.

பிறந்து இறந்த தெய்வங்கள் பரம்பொருளைப் போன்று முற்று அறிவும் இயற்கை அறிவும் உடையவை அல்ல! அவை எல்லாவற்றையும் அறிபவை அல்ல! ஒரு சில ஆற்றல்களை உடைய அவை அன்றாட வாழ்வில் ஏற்படக்கூடிய சிறு-சிறு சிக்கல்களுக்கு மன நிறைவை அளிப்பது போன்று உதவலாம். ஆனால் நிலையான நிறைவான அமைதியையும் இன்பத்தினையும் பரம்பொருளின் வழிபாடே தர இயலும் என்பது திருமூலரின் குறிப்பாகும். எல்லைத் தெய்வங்கள், காவல் தெய்வங்கள் அது அதன் எல்லை அளவு மட்டுமே நின்று காவல் செய்யும் ஆற்றலை உடையவை என்பதனைப் பலரும் அறியாது அவற்றைப் பரம்பொருள் போன்று எண்ணி வழிபடுகின்றனர் என்பது வருந்துதற்குரியதாகும்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று ஒளவைப் பிராட்டி நம் பெற்றோரயும் நம் முன்னோரையும் போற்றிப் பணிய வேண்டும் என்று அன்னைத் தமிழில் அழகுற இயம்புவார். இதிலும் நம் பெற்றோரும் நம் முன்னோரும் தெய்வங்கள் நிலையில் வைத்து வணக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என்று தெளிவுற எடுத்து இயம்புகின்றார். பெற்றோரும் முன்னோரும் பரம்பொருள் அல்ல! அவர்கள் வணக்கத்திற்குரிய பிறந்து இறந்தவர்கள்! அவர்களைப் பணிந்து வணக்கம் தெரிவித்தல் வேண்டும். அவர்களை வழிபடுவது தவறு என்று திருமூலர் குறிப்பிடும் அதே செய்தியினை ஒளவைப் பிராட்டியும் குறிப்பிடுகின்றார். இன்னும் சிலர், “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை” என்று வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவதால், என் கணவனே எனக்குக் கடவுள் என்பர். இதுவும் தவறு என்பது திருமூலரின் திருவாக்கு. வள்ளுவப் பேராசான், “தெய்வம்” என்ற தெளிவான சொல்லைக் குறிப்பிட்டுப் பரம்பொருள் வேறு தெய்வம் வேறு என்று தெளிவு படுத்துகின்றார். பெண்ணுக்குக் கண்ணைப் போன்ற கணவன், போற்றிப் பணிந்து வணக்கம் செய்யப்படவேண்டியவனே அன்றிப், பரப்பொருளைப் போன்று வழிபாட்டிற்கு உரியவன் அல்லன் என்பதனை உணர்வதே தெளிவு.

நம்மில் சிலர் வாழ்வியல் நெறிகளையும் ஆன்மீக நெறிகளையும் கற்பிக்கும் மாந்த குருமார்களைப் பரம்பொருளாகவே எண்ணி வழிபடுகின்றனர். இதுவும் தவறு என்பதே திருமூலரின் குறிப்பு. பிறந்து இறக்கும் இவர்கள் இறைக்கல்வியைக் கற்பித்தாலும் பல பயிற்சிகளை நமக்கு நடத்தினாலும் பரம் பொருள் ஆகமாட்டார்கள். இவர்களிடத்தே நாம் காட்டும் நன்றி, அன்பு, பணிவு வெறும் வணக்கம் தெரிவிக்கும் அடிப்பையில்தான் என்பதனைத் தெளிதல் வெண்டும். இது ஒருபோதும் வழிபாடாய் இருத்தல் ஆகாது. இறைவனை வழிபடாது தங்கள் குருமார்களின் படங்களையும் குருவையும் மட்டும் வழிபடுகின்றவர்கள் இதனை எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

என்னினும் வழிபாட்டிற்கு உரிய குருமார்கள் யாவர் என்பதனையும் திருமூலர் வேறொறு பாடலில் குறிப்பிட்டுள்ளார். இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப் பெற்ற, இறைவன் தோன்றி காட்சி அளிக்கப்பெற்ற, இறைவனே நமக்குக் காட்டிய, சிவஞான அருள் பெற்றுச் சீவன் முத்தர்களாய் விருப்பு வெறுப்பு அற்றுச் சிவமாம் தன்மையோடு எதையும் எதிர்பாராது உலக உயிர்களின் நன்மையைக் கருதி இறைவனால் அடையாளம் காட்டப்பெற்ற நாயன்மார்களையும் மெய்கண்ட ஆசான்களையும் வழிபடலாம் என்கின்றார். அதுவும் சிவத்தை அவர்கள் அகத்தில் இடையறாது வைத்திருப்பவர்கள் என்பதனால் அவர்களின் திருவுருவினையோ திருவுருவப் படத்தினையோ பெருமானின் திருவடியில் இருத்திப் பெருமானை வழிபடுவதே அவர்களையும் வழிபடுவது ஆகும் என்று திருமூலர் புலப்படுத்துகின்றார்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!