52. உணர்வு அழியுமுன் உணர்மின்களே

864

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் இறைவனை உணர்வாகக் குறிப்பிடுகின்றது. இதனாலேயே இறை உணர்வு, திருவடி உணர்வு என்ற வழக்குகளை முத்தி என்ற இறைவனை உணரும் நிலைக்குக் குறிப்பிடுவர். உயிர்கள் இறைவனை அடைதல் என்பது இறைவனை உணர்தலையே குறிக்கும் என்றும் குறிப்பிடுவர். இதனாலேயே இறைவனை அடைவதற்கு உரிய பல வழிமுறைகளைக் குறிப்பிடும் சித்தாந்த சைவம், முடிவில் இறைவனை உணர்தலே அவற்றின் இலக்காக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. சீலம், நோன்பு, செறிவு, அறிவு(சரியை, கிரியை, யோகம், ஞானம்) எனும் நன்னெறி நான்கின் வழி இறைவனை உணர்தலே கடன் என்பதும் சித்தாந்த சைவம் உணர்த்துவது ஆகும். திருக்கோயில் திருத்தொண்டுகள் செய்பவர்களும் இறைவனுக்குப் பூசனை இயற்றுகின்றவர்களும் சிவச்செறிவு முறைகளினால்(யோகம்) இறைவனை எண்ணுகின்றவர்களும் அறிவு வழிபாட்டினால் இறைவனை ஆராய்ந்து அறிகின்றவர்களும் அடைய வேண்டியது இறை உணர்வே என்பது சைவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஆகும்.

சித்தாந்த சைவம் குறிப்பிடும் இறை உணர்வு என்பது உயிர் தனது அறிவினாலே அல்லது தனக்குப் பொருத்தப் பட்டிருக்கும் கருவிக் கரணங்களினாலோ அடையக் கூடிய உணர்வு அல்ல என்பதனைச் சைவம் துள்ளியமாகவும் நுட்பமாகவும் குறிப்பிடுகின்றது. இறை உணர்வினை, “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று தெய்வச் சேக்கிழார் பொதுவாகக் குறிப்பிடினும் அது இறைவனே அளிக்கக் கூடிய, உயிர்கள் செவ்வி அடைந்த போது தானே தேடி வருகின்ற நுண் உணர்வு என்பதனை, ”நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்று தேனினும் இனிய திருவாசகத்தில் மணிவாசகர் நுட்பமாய்க் குறிப்பிடுவார். இறை உணர்வு மாந்தர்கள் உடலுக்கு வெளியேயும் உடலுக்கு உள்ளேயும் கொண்டிருகின்ற சாதாரண உயிரின் கருவிக் கரணங்களால் உணர இயலாது என்பதனை, “உணர்வு சூழ் கடந்த ஓர் உணர்வே” என்று தமிழ் மந்திரமான திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் குறிப்பிடுவார். பசு எனப்படும் உயிரின் கருவிக் கரணங்களைப் பதி எனப்படும் இறைவனின் சிவக் கரணங்களாக மாற்றினாலேயே அந்நுண்ணிய உணர்வினை பெற இயலும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

நுண்ணிய இறை உணர்வைப் பசுக்கரணங்களின் துணைக்கொண்டு உயிர் தம் முயற்சியினால் மட்டும் பெற இயலாது என்றும் அதற்கு இறைவனின் திருவருள் துணை நிற்க வேண்டும் என்றும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடினும் உயிரை இறைவனின்  திருவருளைப் பெறும் நிலைக்குக் கொண்டுச் செல்வதற்கு முதற்துணையாக இருப்பவை உடலுக்கும் உயிருக்கும் இருக்கும் கருவிக் கரணங்களே ஆகும். உடலில் இருக்கும் கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற புறக் கருவிகளின் வழியே உயிர் பல்வேறு வகையான உலக அறிவையும் இறை அறிவையும் பெறுகின்றது. உயிருக்குப் பொருத்தப்பட்டிருக்கும் மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி எனப்படும் உட்கருவிகளின் வழியே உயிர் உலகையும் இறைவனையும் அறிகின்றது. பின்பு இறைவனின் திருவருளைக் கொண்டே அவற்றின் உண்மை நிலைமையை உணருகின்றது. எனவே இறை உணர்வைத் தானே தன் முயற்சியால் உயிர் உடம்பைக் கொண்டும் கருவிக் கரணங்களைக் கொண்டும் பெற இயலாவிடினும் அதைப் பெறுவதற்கு உரிய வாயிலாக கருவிக் கரணங்கள் அமைகின்றன. இதனாலேயே உயிர் உடலோடு உலகில் வாழும் காலத்து உணர்வு பெறுதல் பற்றியும் உணர்வு பேணப்படுதல் பற்றியும் அருளாளர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

தமிழ்ச் சிவ ஆகமமாகத் திகழும் திருமந்திரத்தில் உயிர்கள் உணர வேண்டிய பல நிலையாமைகளைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். உடல் நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை போன்றவற்றைக் குறிப்பிடும் திருமுலர், உயிர் நிலையாமை என்று குறிப்பிடும் போது உணர்வு நிலையாமை என்பதனைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். இறை உணர்வைப் பெறும் முயற்சியில் உயிரின் உணர்வு அழிவதற்கு முன்பு அவ்வுணர்வைப் பெற ஆவன செய்தல் வேண்டும் என்கின்றார். இறை உணர்வைப் பெறுவதற்கு வாயிலாக இருக்கின்ற புறக் கருவிகளான கண், காது, மூக்கு, வாய், மெய் என்பனவும் அகக் கருவிகளாக இருக்கின்ற மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி என்பனவும் கலங்கி, சோர்ந்து அழிவதற்கு முன் அவற்றை இறைவனை உணர்வதற்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அவற்றைச் சிவக் கரணங்களாக மாற்றுதற்கு இறைவனின் திருவருளை வேண்டி நிற்பனவாகச் செய்தல் வேண்டும் என்கின்றார் திருமூலர்.

இறைவனுக்கு இக்கருவிக் கரணங்களை ஆளாக்கி விட்டு விட்டால் இறை உணர்வு இறைவனின் திருவருளால் தானே வந்து கூடும் என்கின்றார் திருமூலர். நாளும் நம்மை உலக மயமாகவே செலுத்திக் கொண்டிருக்கும் கருவிக் கரணங்கள் அல்லது புலன்களைச் செம்மை படுத்தாவிட்டால் அவை நம்மைப் படுகுழியில் தள்ளிவிடும் என்றும் வயது போனபிறகு அவற்றைத் திருத்திக் கொள்ளலாம் என்று எண்ணும்போது அவை வலுவிழந்து விட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார். இதனையே,” ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய், ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். உடலில் உள்ள ஒன்பது வாயில்களும் செயல் அற்றுப் போவதற்கு முன்னமே உன்னை உணரும் வகையினை எனக்கு அருளுவாய் என்று இறைவனை உருகி நைவார் திருநாவுக்கரசு அடிகள்.

“புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு, ஐமேல் உந்தி” என்று திருஞானசம்பந்த அடிகள் குறிப்பிடுவார். ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் சிறப்புடன் செயல்படுவதனால் செருக்கித் திரியும் மாந்தர், அகவை கூடி உடல் தளர்ச்சியுற்று வாழ்வின் இறுதிக் காலத்தில் இருக்கும் போது கண் பார்வைக் குறைந்தும் காது திமிர் ஏற்பட்டுக் கேளாமலும் மூக்கு அதன் முகரும் வல்லமையை இழந்து எதையும் முகர முடியாமலும் நாவானது சுவை தெரியாமலும் பேசுவதற்கு வாய் இயலாமலும் உடலானது கிடந்தக் கிடையாயும் ஆகிவிடும் என்கின்றார். மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி சோர்வு உறுவதனால் எதனையும் சிந்திக்க இயலாமல் போக அறிவும் அழியும் என்பார். இந்நிலையில் உயிர் உணர்வும் செயலற்றுப் போக இறை உணர்வே, “அஞ்சாதே யாம் உனக்குத் துணையாக உள்ளோம்” எனத் துணை நிற்கும் என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான். வாழுங்காலத்து கருவிக் கரணங்களை இறை உணர்வைப் பெறுவதற்குத் தயார் செய்யாத உயிர்களுக்கு இறை உணர்வுத் தோன்றித் துணையாகாது என்றும் அவ்விறுதி வேளையில் இறை உணர்வைப் பெற முயலுதலும் முடியாத ஒன்று என்றும் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

இதனையே, “தழைக்கின்ற செந்தளிர்த்து அண்மார் கொம்பில், இழைக்கின்றது எல்லாம் இறக்கக் கண்டும், பிழைப்பின்றி எம்பெருமான் அடி ஏத்தார், அழைக்கின்றபோது அறியார் அவர் தாமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதாவது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகின்ற பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாகத் தோன்றி அவற்றால் தோற்றுவிக்கப்படுகின்ற பலவும் அவ்வாறு தோன்றுகின்றபடியே நிலைத்து நிற்காமல் அவற்றின் நிலை மாறி, தோற்றம் மாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லாதவர் உயிர் பிழைப்பதற்கு வழியைக் காண முயலாது, திருவடி உணர்வினைப் பெறுவதற்கு இறைவனைக் கருவிக் கரணங்களால் வழிபடமாட்டார்கள். கருவிக் கரணங்கள் நன்றாய் இருக்கின்றபோது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வாளாவிருப்பர். இவர்களைப் பெருமான் தன் திருவருளை அளிப்பதற்கு அழைக்கும்போது அதனை உணர்தற்கு உரிய உணர்வு உயிரிடத்தில் இன்றி அல்லல் உறுவார்கள் என்கின்றார்.

இறைவனை உணர்வதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கருவிக் கரணங்கள் இறை உணர்வு பெறுவதற்கு வாயில்கள் என்றும் அவற்றைச் சிவக் கரணங்களாக மடை மாற்றம் செய்வதற்கு நாளும் பாடுபடவேண்டும் என்பதனை மாந்தர் உணர வேண்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். கருவிக் கரணங்கள் செயல் இழந்து சோர்ந்து அழியும் முன்னர் அவற்றை இறை உணர்வு பணிக்கு ஈடுபடுத்துங்கள் என்கின்றார். இறைவனின் திருமேனியைக் காணவும் இறைவனின் புகழைக் கேட்கவும் இறைவனின் பூசனைப் பொருட்களின் மணத்தை முகரவும் இறைவனின் புகழைப் பேசவும் இறைவனை உணர்த்தும் சமயச் சின்னங்களை மெய்யினில் விரும்பி அணியவும் சிவநற்செயல்களைச் செய்யவும் நாளும் உழையுங்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இப்படிச் செய்வோமானால் திருவடி உணர்வினை உணரும் நிலை நமக்குக் கிட்டும் என்பது திருமந்திரம் உணர்த்தும் படிப்பினையாகும்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!