6. தீக்கை பெறுதல்

1597

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்க்கைச் சுற்றில் திருமணத்திற்கு முந்தைய இளையோர் பருவத்தில் நிகழ்த்தப் பெற வேண்டிய வாழ்வியல் கரணங்களில் ஒன்று தீக்கைப் பெறுதல் ஆகும். தீக்கைப் பெறும் கரணம் சைவச் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் நான்கு அகவையில் இருந்து ஏழு அகவைக்கு உள்ளாக நிகழ்த்தப் பெறும். “தீ” என்பது தீய்த்தலையும் “கை” என்பது செலுத்துதலையும் குறிக்கும். எனவே தீக்கை பெறுதல் என்பது தீக்கை பெறுபவரின் அறியாமையைத் தீக்குள் இட்டுத் தீய்த்து, இறைவனின் திருவருளைப் பெறும் திருநெறிக்குள் தீக்கைப் பெறுபவரைச் செலுத்துதல் என்று பொருள்படும். செந்தமிழ்ச் சைவர்கள் சிவதீக்கையே பெறல் வேண்டும்.

தீக்கைக் கரணத்தைப் பொதுவாகத் திருக்கோவில்களிலோ திருமடங்களிலோ நிகழ்த்துவிப்பர். தமிழ்ச் சைவக் குழந்தைகள் சிவதீக்கைப் பெற்ற சைவ ஆசான்களிடமோ சைவத் திருமடங்களின் தலைவர்களிடமோ தீக்கைப் பெறல் வேண்டும். சிவதீக்கை பெறாத ஆசான்களிடமும் தமிழ்ச் சைவ வழிபாட்டு முறைகள் அறியாத சமய ஆசான்களிடமும் தமிழ்ச் சைவர்கள் தீக்கை பெறல் கூடாது என்பது சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடும் செய்தி ஆகும்.

தமிழ்ச் சைவநெறியைச் சார்ந்தவர்கள், தமிழ் மந்திரங்களான திருமுறைகளை ஓதி, “நமசிவய” என்ற திருவைந்து எழுத்து மந்திரத்தைச் சிவநெறி ஆசான்களிடம் இருந்து கேட்டும் சொல்லியும் தீக்கை பெறல் வேண்டும் என்பதனைப் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தப் பெருமான் வரலாற்றில், வேதியர்கள், வைதீக முறைப்படி திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, வடமொழி மந்திரங்களைக் கூறி உபநயனம் செய்ய முயல்கின்றனர். அப்போது திருஞானசம்பந்தப் பெருமான் அவர்களைத் தடுத்து, “நமசிவய” என்ற திருவைந்து எழுத்து மந்திரமே தமிழ்ச் சைவர்களுக்குத் தீக்கை செய்விப்பதற்கு உரிய மந்திரம் என்று உணர்த்துகின்றார்.

தமிழ்ச் சைவர்கள் தங்கள் வாழ்க்கையில் படிம முறையில் சமய தீக்கை, சிறப்புத் தீக்கை (விசேட தீக்கை), அறிவு தீக்கை (நிர்வாண தீக்கை), ஆசான் திருமஞ்சனத் தீக்கை (ஆச்சாரிய அபிடேகத் தீக்கை) என்ற தீக்கைகளைப் பெறல் வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருப்பினும் சிறு அகவையில் சிறார்களுக்கு உரிய முதல் நிலை தீக்கையாகச் செய்து வைக்கப்படுவது சமயத் தீக்கையே ஆகும். தீக்கை அளிக்கும் முறையும் பல்வேறாகத் தீக்கை பெறுகின்றவரின் அறிவு மற்றும் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு அளிக்கப் பெறுகின்றது.

 அவ்வகையில் சைவ சமய ஆசான் தீக்கைப் பெறுபவரை அருட்கண் பார்வையால் நோக்கித் தீக்கை அளித்தல், தீக்கை பெறுபவரை அன்போடு தொடுதலால் தீக்கை அளித்தல், மந்திரங்களையோ திருமுறைப் பாடல் வரிகளையோ, சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களின் பாடல்களையோ சொல்லித் தீக்கை அளித்தல், மனத்திற்கு மனமாய் தீக்கை அளித்தல், அறிவுக்கு அறிவாய் தீக்கை அளித்தல், சிவவேள்வி வழி தீக்கை அளித்தல் என்ற முறைகளில் தீக்கை அளிப்பர். இன்றைய சூழலில் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பொதுவாகச் சிவவேள்வித் தீக்கையே நிகழ்த்தப் பெற்று வருகிறது.

சமயத் தீக்கைக் கரண நிகழ்ச்சியில் தீக்கை பெறும் குழந்தையும் பெற்றோரும் முதலில் இறைவழிபாடு இயற்றுவர். பின்பு சமயத் தீக்கை செய்து வைக்கும் சைவ சமய ஆசான் முன்பு அமர்வர். சைவ சமய ஆசான், சிவவேள்வித் தீக்கையை அளிக்கின்றார் என்றால் முதலில் சிவ வேள்வியைத் தொடங்குவார். இச்சிவ வேள்வியில் எழும் தீயினைச் சிவமாகவே பாவனைச் செய்து, சிவத்தினை எழுந்தருளச் செய்யும் திருவைந்து எழுத்து மந்திரத்தையும் திருமுறைகளையும் ஓதுவார். சிவ வேள்வி நிறைவு அடையும்போது இறைவன் அவ்வேள்வித் தீயில் எழுந்து அருளியதாகப் பாவனை செய்து தீக்கைச் செய்வித்தலை நிகழ்த்துவிப்பார். தீக்கைப் பெறும் குழந்தையின் உயிரை எடுத்துத் தீயில் இட்டுத் தூய்மை செய்து மீண்டும் குழந்தையின் உடலில் அக்குழந்தையின் உயிரைச் செலுத்துதல் போன்ற செயல்முறையினைப் பாவனையால் செய்வார்.

இச்செயல் முறையினைச் செய்த பின்பு தீக்கைப் பெறும் குழந்தைக்குத் “தீக்கைப் பெயர்” எனும் பெயர், காதுக்குக் காதாகத் தெரிவிக்கப்படும். மேலும் துணி மறைப்பில் காதுக்குக் காதாகத் திருவைந்து எழுத்து மந்திரமும் ஓதுவிக்கப்படும். தீக்கைச் செய்துவிக்கும் ஆசான் குழந்தைக்குத் திருநீறு அணிவித்து, உருத்திராக்கம் என்று அழைக்கப்பெறும் கணிகை மணியைக் கழுத்தில் அணிவிப்பார். நாளும் இறைவனை வழிபடுவதற்கு முன்பு தன்னை அகத்திலும் புறத்திலும் தூய்மை செய்து கொள்வதற்கு உரிய ஐந்து பொருட்களையும் (பஞ்ச பாத்திரம்) திருநீற்றுப் பையையும் கொடுப்பார். இவற்றைப் பெற்றுக் கொண்ட குழந்தை சமய ஆசானையும் பெற்றோரையும் வணங்கி வாழ்த்து பெறுதல் நடைபெறும். இது போன்று இதர தீக்கை முறைகளைச் சைவ மெய்கண்ட நூல்களை நாடி அறிக!

சிறு அகவை முதலே சிறார்களுக்குத் தீக்கை செய்து வைத்தலின் முதன்மையைப் பெற்றோர் அறிந்து வைத்திருத்தல் இன்றியமையாதது ஆகும். பெற்றோர்களும் தீக்கைப் பெற்றிருப்பது அதனினும் சிறப்பாகும். தீக்கை பெறுவதன் வழி ஒருவர் அவர்தம் வாழ்க்கையில் ஓர் உறுதியினை எடுத்துக்கொள்கின்றார். அதாவது இத்தீக்கைக் கரணம் நடத்துவிக்கப் பெற்ற நாளில் இருந்து இனி நான் இறக்கும் வரை ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு வேளையாவது தவறாமல் இறைவழிபாடு செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வதே ஆகும். தவிர, இறைவனை நினைப்பிக்கும் சிவ அடையாளங்களான சிவலிங்கத்தையும் அடியார்களையும் திருநீற்றையும் கணிகை மணியையும் சிவமாகவே பணிவேன் என்ற உறுதி எடுத்துக் கொள்வதும் இதில் அடங்குகிறது.

இதைத் தவிர, இறைவனை நினைப்பிக்கும் திருநீற்றினை நாளும் தவறாமல் அணிந்து, திருமுறைகளையும் அஞ்செழுத்தையும் ஓதிய பின்பே உணவு உட்கொள்வேன் என்ற உறுதிப்பாடும் இக்கரணத்தின் வழி வலியுறுத்தப்படுகின்றது. அன்பு நெறியான சிவநெறியினைத் தலைமேற் கொண்டு பிற உயிர்களிடத்து அன்பும் மற்ற உயிர்களைத் தன் உயிர் போல் மதித்தலையும் பின்பற்றிச் சைவசமய நெறிக்குப் புறம்பானச் செயல்களை, மனம், வாக்கு, காயத்தினால் ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ளுதலும் இதன்வழி அறிவுறுத்தப்படுகின்றது. நம் குழந்தைகளை அன்பும் பண்பும் அறிவும் அருளும் பணிவும் நல்லொழுக்கமும் உடையவர்களாகச் செதுக்குவதற்கு வாயிலாய் அமையும் இத்தீக்கைக் கரணத்தின் முதன்மையைத் தமிழ்ச் சைவப் பெற்றோர்கள் உணர வேண்டும். இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!