55. இழி மகளிர் உறவு

1504

விருப்பு, வெறுப்பு, அறியாமை எனப்படும் மூன்று குற்றங்களை நீங்கி வாழ்ந்தால் ஒருவருக்குத் துன்பம் நேராது என்பார் ஐயன் திருவள்ளுவர். விடுதற்கரிய விருப்புக்களிலே பெண் விருப்பு என்பது அரிதான ஒன்றாகும் என்று பலரும் குறிப்பிடுவர். “ எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான், தொழுது நின்றேனையும் சூழ்ந்து கொண்டு, உழுதசால் வழியே உழுவான் பொருட்டு, இழுதை நெஞ்சம் இது என்படுகின்றதே” என்று குறிப்பிடுவார் திருநாவுக்கரசு அடிகள். ஓவியங்களைப் போன்ற அழகிய பெண்களின்பால் மனத்தைச் செலுத்தாமல், உன்னையே தொழுது உன் திருவடிகளின்பால் மனத்தைச் செலுத்திடினும் உழுத வயலிலே மீண்டும் மீண்டும் உழுவதனைப் போன்று கீழான மனம் மீண்டும் மீண்டும் அவர்களையே நாடுகின்றது என்பார். இல்லற வாழ்விலே முறையான வாழ்க்கைத் துணையோடு அறம் தவறாது வாழ்க்கை நடத்திப் பின் அத்துணையையும் விட்டு இறைவனே உற்றதுணை என்று தெளிந்து அவன் திருவடியை உணர்தலே சீர்மை என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும்.

முறையோடு திருமணம் புரிந்து வாழ்கின்ற வாழ்க்கைத் துணைநலமான மனைவியையும் இறுதியில் விட்டு அகன்று முழுமையாக இறைவனிடத்தில் ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கையில், முறையற்றப் பொது மகளிருடன் உறவு கொள்வது உயிருக்குச் செய்திடும் பெரும் துன்பம் என்று குறிக்கப்படுகின்றது. பொது மகளிரின் நட்பால் விளையும் துன்பங்களை வரைவின் மகளிர் எனும் அதிகாரத்தில் ஐயன் வள்ளுவர் அறுதியிட்டுக் கூறுவார். அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொற்கள் ஒருவரின் உடலுக்கும் உயிருக்கும் துன்பம் பயப்பதாகும் என்கின்றார். கொடுக்கின்ற பொருளுக்கு ஏற்றவாறு இனிய சொற்கள் பேசும் பண்பற்றப் பொதுமகளிரைத் தழுவுதல், இருட்டு அறையில் உணர்வுகள் இல்லாத ஒரு பிணத்தைத் தழுவுதல் போன்றது என்பார். நெஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லாதவர்களையும் அறிவு ஆராய்ச்சி இலாதவர்களையும் பிடிக்கின்ற பேய் பொதுமகளிர் உறவு என்பார். பொதுமகளிர் உறவு உள்ளவரின் பெயர் கெடுவதோடு மட்டும் அல்லாமல் நல்லோரின் உறவும் முறிந்து உயிரில் திருவும் நீங்கிவிடும் என்பார். இப்பொதுமகளிர் உறவு குற்றம் பற்றித் திருமூலரும் தமது திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

இலை, தளிர், பூ, காய் முதலியவற்றால் அழகினை உடைய எட்டி மரம் பழுத்துத் தன் அழகிய குலைகளில் அழகானப் பழங்களைக் கொண்டு காணப்பட்டாலும் அக்கணிகளை உண்டால் ஏற்படும் இறப்பினை எண்ணிப் பார்த்து அதனை உண்ணமாட்டார்கள். அதுபோன்றே அழகிய உடல் உறுப்புக்களையும் முக அழகையும் கொண்டு எண்ணத்தைக் கவர்ந்து மன உறுதியினை இழக்கச் செய்யும் அழகிய வாய்ப்புன்முறுவலையும் கொண்டுத் தம்மையும் பிறரையும் செம்மைநெறி சேரவிடாது கெடுக்கும் பொய்மை உடைய பொதுமகளிர் மேல் செல்லும் எண்ணத்தைத் தீமையானது என்று கொண்டு நன்னெறிச் செல்ல வேண்டும் என்பதனை, “இலை நலவாயினும் எட்டிப் பழுத்தால், குலை நலவாம் கனி கொண்டு உணலாகா, முலை நலம்கொண்டு முறுவல் செய்வார்மேல், விலகுஉறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே” என்று திருமுலர் குறிப்பிடுகின்றார்.

இல்லறநெறியில் செம்மையுற நிற்க எண்ணுகின்றவர்கள் தம் மனைவியின் இன்பத்தை நினைக்கும் போது சுனையில் உள்ள நீர் அதில் மூழ்குவார்க்குக் குளிர்ச்சியுடையதாய் இன்பம் தருவதாய் அமைவது போல அமையும். அது இருவருக்கும் பயனும் இன்பமும் அளித்து அவர்களின் அன்பினை மேலும் வளர்த்து அவர்களைப் பிரியாதவாறு கணவன் மனைவி வலுப்படுத்தும். பொது மகளிர் இன்பம் கனவில் பெறும் இன்பம் போன்று அவருடைய உள்ளத்தில் மட்டும் சிறிது அரும்பிப் பின் மறைந்துவிடும். அதனால் பொதுமகளிரின் இன்பத்தை உண்மை என்று எண்ணல் ஆகாது என்கின்றார் திருமூலர். தவிர தவறான மகளிர்பால் கொள்ளும்  இன்பம் சுனை நீரில் காணப்படும் நீர்ச்சுழலில் அகப்பட்டுத் துன்புற்று ஆழ்வது போல் மேலும் பல பிறப்பிற்கு உட்பட்டுத் துன்பம் அடைவதற்கு வழியாகும் என்கின்றார். அத்தகைய பொய்யான அன்புடைய தவறானப் பெண்களின் தொடர்பைக் கனவில் எண்ணினாலும் பெரும் துன்பம் விளைவிக்கக் கூடியது என்கின்றார்.

பெண் யானையைப் போன்ற அழகிய வடிவும் இயல்பும் உடைய தவறான பண்புடைய இளம் பெண்கள் மேகம் பொழிகின்ற மழையைப் போல் பொய்யான அன்பினை ஆடவர் உடலும் உயிரும் இன்புறும் வண்ணம் ஆரத்தழுவி இன்பம் அளித்தாலும் அப்பெண்களின் மனம் பொருளின் மீது குறியாய் இருக்கும். அதிகப் பொருளுடையப் புதிய ஆடவரைக் கண்டால் அவர் எல்லாவகையிலும் தாழ்ந்தவரானாலும் அவரே உயர்ந்தவர் என்று சொல்லி அவரை மயக்குவதற்கு முனைந்து விடுவர். பொருள் அற்றவரையும் பொருள் குறைந்தவரையும் மனம் நோகும்படிப் பேசித் தன்னைவிட்டு விலகும்படி  துன்பத்தைக் கொடுப்பர். இதனை, “இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர், புயனுறப் புல்லி புணர்ந்தவர் எய்தும், மயலுறும் வானவர் சார்வு இதுஎன்பார், அயலுறப்பேசி அகன்று ஒழிந்தாரே” என்பார் திருமூலர்.

கட்டிய மனைவியானவள் வாழ்க்கையில் கடைத்தேறுவதற்கு வழித்துணையாகின்றவள். பொருளையே குறிக்கோளாகக் கொண்ட தவறான பண்புடைய பெண்கள் பழிக்குத் துணையாகின்றவர்கள். இத்தகைய பழிக்குத் துணையாகும் பெண்களைக் கூடுவதால் சிறிது நேரம் இன்பம் அளித்து மறையும் சிற்றின்பமே கிட்டப்பெறும். இதனால் பெறும் பயன் வேறு ஒன்றும் இல்லையாம். இத்தகையப் பெண்களைக் கூடுவதனால் இறைநெறியில் நிற்கின்றவர்களின் உள்ளம் நிலை தடுமாறும். நெறியற்ற நெறியினில் தலைப்படும் தவறான பண்புடைய பெண்கள் பொருளுடையவர்களிடத்தில் உள்ள பொருள்களைப் பொருளூடையவர்களே விரும்பி வலியக் கொடுத்து வணங்குமாறு செய்துவிடுவர். மேலும் அப்பொருளுடையவரைப் பொருள் இல்லாத காலத்துப் புறக்கணிப்பர். பொருளுடையாரின் மனம் வேம்பினைப் போன்று கசப்பாகிய வெறுப்பினை அடையும் படிச் செய்வர். டூத்தகைய பண்பற்றப் பெண்களின் உறவு உள்ளத்தில் ஆழ்ந்த புன்மையையும் வடுவினையும் ஏற்படுத்திவிடுவதோடு மட்டும் அல்லாமல் புறத்திலும் அருவருக்கத் தக்கத் தொழுநோய் போன்ற நோய்களையும் ஏற்படுத்திவிடும் என்கின்றார் திருமூலர்.

முறையாக மணந்து முறையான உறவினால் நாட்டிற்கும் வீட்டிற்கும் இறைநெறிக்கும் துணைபுரியத் தக்க நன்மக்களைப் பெறுவதே இல்லறத்தானின் இல்வாழ்க்கையின் அறம் ஆகும். முறை கடந்து வாழ்கின்ற பெண் பால் மேற்கொள்ளும் உறவால் தீமையே விளைவது அன்றி வேறு பயன் யாதும் இல்லையாம். தீநெறிப் பண்புள்ள பெண்களின் பால் மயங்கிக் கிடப்போரை நல்லோர் தடுத்து நிறுத்தி நல்வழிப் படுத்த வேண்டும் என்கிறார் திருமூலர். அவ்வாறு தடுக்காவிட்டால் அத்தீய நெறியில் விழுந்தோர் தீவினைப் பயனைச் சேர்த்துக்கொண்டு தனக்கும் பிறருக்கும் கிடைக்க வேண்டிய நற்பயனைப் பெறச்செய்யாமல் வாழ்நாளை வீணே கழித்து இறந்து போவார்கள் என்கின்றார் திருமூலர்.

“பிற உயிரைக் கொல்லுதல், பிறர் பொருளைக் களவு செய்தல், கள்ளுண்ணல், நெறிதவறிய காமத்து அழுந்துதல், பொய் கூறல்” என்ற ஐந்தும் பேர் அறக் கடை அல்லது பெரும் பாவம் என்பர். அவற்றை அறவே நீக்காவிட்டால் இறைவனை அடையும் வழி பிறக்காது. இவற்றை நீங்குவதற்கு வழி இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுதலேயாம். இவ்வாறு பற்றிக் கொள்கின்றவர்கள் இறைவனின் திருவருளால் மேற்கூறிய பாவங்களில் இருந்து நீங்கி இறைவனின் அருள் இன்பத்தினைப் பெற வழியுண்டு என்பதனை, “கொலையே களவுதல் காமம் பொய்கூறல், மலைவான பாதகமாம் அவைநீங்கத் தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் ஆர்ந்தோர்க்கு, இல்லையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே” என்று குறிப்பிடுகின்றார் திருமூலர்.

ஏதோ சூழலினாலும் ஆராய்ச்சி இன்மையினாலும் வயது கோளாறு என்பதினாலும் தவறான பண்புடைய மகளிரின் தொடர்பினை மேற்கொண்டுவிட்ட ஆடவர் அதிலிருந்து மீள்வதற்கு இறைவழிபாட்டினைக் கைகொள்வார்களாக! இவ்வுறவினால் ஏற்படவிருக்கும் தீமையை எண்ணி இளையோர் அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்பார்களாக! இதனைப் பெரியோர்களும் பெற்றோர்களும் கண்காணித்து அவர்களை அத்தவற்றில் விழுந்துவிடாதபடி தற்காப்பார்களாக! உடைக்கும் உணவிற்கும் அணிகளுக்கும் ஆடம்பரமான வாழ்க்கைக்கும் கேளிக்கைகளுக்கும் விருப்புற்று அறிந்தும் அறியாமலும் இப்படுகுழி வாழ்வைப் பெண்கள் தெரிவு செய்யாமல் இருப்பார்களாக! பெண்களை இப்பாழான தொழிலுக்கு உட்படுத்துபவர்கள் அதனால் விளையும் தீவினைப் பயனை எண்ணி அதனைச் செய்யாமல் இருப்பார்களாக! இத்தகைய தீயதொழிலுக்குத் துணைநிற்பவர்கள் இதிலிருந்து விலகுவார்களாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!