75. பாத்திரம் அறிந்து கொடை செய்க!

1107

“பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்ற வழக்கு இரத்தல் செய்கின்றவரின் உண்மை நிலையை அறிந்து ஈதலைச் செய்ய வேண்டும் என்பதனைக் குறிப்பதாக அனைவரும் அறிவர். இக்கருத்தினை ஒட்டியே “பாத்திரம்” எனும் தலைப்பில் பல அரிய கருத்துக்களை மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார். “பாத்திரம்” என்ற வடமொழி சொல்லுக்குக் கொள்கலன் என்பது பொருள். கொடையைக் கொள்கின்றவர்களைக் கொள்கலர்களாகப் “பாத்திரம்” எனும் சொல்லால் திருமூலர் குறிப்பிடுகின்றார். பாத்திரம் எனும் இப்பகுதியில் உள்ள மந்திரங்கள் யாருக்குக் கொடை கொடுக்க வேண்டும் என்பதனைப் பற்றித் தெளிவாக விளக்குகின்றன. சிவநெறியினைத் தங்கள் உள்ளே கொண்டு மெய்யறிவாளர்களாகத் திகழ்கின்றவர்களையே “சற்பாத்திரர்” அல்லது கொள்கலர் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சிவ உணர்வு உடைய மெய்யறிவாளர்களான பாத்திரர் உலகில் மிகச் சிலரே என்கின்றார் திருமூலர். இம்மெய்யறிவாளர்கள், உலகில் வாழும் உயிர்கள் குறிப்பிட்ட கால அளவு மட்டுமே வாழ்ந்து மடியக்கூடியவை; இவ்வாழ்வு நிலையற்றது என்பதனை உணர்ந்தவர்கள். சிவபெருமானைத் தங்கள் உள்ளே கொண்டு வாழ்ந்தால் இவ்வுலகையும் இவ்வுடலையும் உயிர் நீங்கும்போது அப்பெருமான் அவ்வுயிர்களைத் தம்முள் கொள்ளும் இயல்பினை உடையவன்; அவனின் மெய்நெறியாகியச் சிவநெறியில் சென்றவர்க்கு அவன் அருள்செய்கின்றவன் என்பதனை உணர்ந்தவர்கள் என்கின்றார். அதனால் அம்மெய்நெறியாளர்கள் அச்சிவநெறியிலேயே நின்று அச்சிவத்தை உணர்ந்து வாழ்கின்றவர்கள் என்கின்றார். இவர்கள் மேன்மக்கள்; இவர்கள் தேவர் எனவும் போற்றப்படுவதற்கு உரியவர்கள் என்பதனைக், “கண்டிருந்தார் உயிர் உண்டிடுங் காலனக், கொண்டிருந்தார் உயிர் கொள்ளும் குணத்தனை, நன்று உணர்ந்தார்க்கு அருள் செய்திடும் நாதனைச், சென்றுணர்ந்தார் சிலர் தேவருமாமே” என்கின்றார். இத்தகைய மெய்யறிவாளர்களையே சற்பாத்திரர் என்று திருமுலர் குறிப்பிடுகின்றார்.

சற்பாத்திரர் என்ற இக்கொள்கலர்களே கொடுப்பதற்கு உரியவர்கள் என்கின்றார் திருமூலர். மாந்தர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாய் விளங்கும் அறியாமை நீங்குதற்கும் அவ்வறியாமை நீங்குதற்கு ஏதுவாய நன்மையை மாந்தர்க்குச் செய்யக்கூடிய வல்லமை உள்ள மெய்யறிவாளர்களே கொடுத்தற்கு உரியவர்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பல் துறைகளிலும் நின்று இறைநெறி வழுவாமல் உயிர்களுக்கு நேரும் துன்பத்தினைப் போக்கவும் நன்மையினை வருவிக்கவும் மெய்யறிவு உடையவர்களே பாத்திரர். இவர்களை அடையாளம் கண்டு இவர்களுக்குக் கொடுத்து நன்மை பெறுதலே அறிவுடைமையாகும் என்கின்றார் திருமூலர். வறுமைக் கருதி, உதவி வேண்டித் தாழ்ந்தோர்க்கு, அவர் வந்து இரந்தமையால் ஈதல் ஈகையாகும். உயிர்களுக்கு நேரக்கூடிய தீமையை அகற்றி நன்மையை விளைவிக்கக் கூடிய உயர்ந்தோரை வருவித்து அவரை வணங்கிக் கொடுத்தல் கொடை ஆகும் என்று ஈகைக்கும் கொடைக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்குவார் பேரறிஞர் அருணை வடிவேலனார். “யான் எனது” எனும் செருக்கினையும் ஆடம்பரத்தையும் சுயநலத்தையும் விட்டுத் தாம் எப்போதும் இறைவனின் அடிமை என்ற உணர்வோடு அன்புநெறியில் சிறந்து நிற்கும் அடியார்களும் இக்காரணம் பற்றியே கொடுத்தற்கு உரியவர்கள் என்பதனைத் தெய்வச் சேக்கிழாரும் பெரிய புராணத்தில் குறிப்பிடுவார்.

கொடை அளிக்கின்ற செல்வர்கள் யாருக்குக் கொடையளிக்க வேண்டும் என்பதனைத் திருமூலர் தெளிவுபடுத்துகின்றார். கொடுக்கப்படுகின்ற கொடை, உரியவரை அழைத்து, அவரை வணங்கிக் கொடுக்கப்படுதல் வேண்டும் என்கின்றார். அவ்வாறு கொடுக்கப்படுகின்ற கொடை எள் அளவு பொன் ஆனாலும் அதனை மெய்யறிவாளரான சிவ அறிவு கைவரப்பெற்ற ஒருவருக்குக் கொடுக்கப்படுமேயானால், அது நல்லுணர்வும் நற்பண்பும் நன்னெறியும் உள்ள மேலோரிடத்தில் கொடுக்கப்பட்டமையால் உயிர்கள் பெறக்கூடிய எட்டு வகையான சித்திகளுக்கு ஈடான உலகியல் வெற்றிகளையும் இறைவனின் திருவடியைப் பெற்றுத் தரக்கூடிய பல இறையியல் வெற்றிகளையும் பெறத் துணை நிற்கும் என்கின்றார். மாறாகத் தோற்றத்தால் மட்டும் சிவநெறியாளர்களைப் போன்றும் ஒழுக்கச் சீலர்களைப் போன்றும் நின்று ஏதும் அறியாத முழு மூடர்க்கு நில அளவு பெரிதான பொன்னைக் கொடுப்பினும் அது யாதும் பயன் தராதது மட்டுமன்றி, மெய்யறிவு குறைதற்கு ஏதுவாயும் அமைந்துவிடும் என்பதனைத், “நிலமத்தையே சிவஞானிக்கு ஈந்தால், பலமுத்தி சித்தி பரபோகமும் தரும், நிலமத்தனைப் பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால், பலமும் அற்றே பரபோகமும் குன்றுமே” என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்தினையே விருந்தோம்பல் அதிகாரத்தில் வள்ளுவப் பேராசானும் குறிப்பிடுகின்றார். விருந்தோம்பல் என்னும் வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவுபடுத்திக் கூறத்தக்கது அன்று. அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும் என்பதனை, “இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின் துனைத்துணை வேள்விப் பயன்” என்று குறிப்பிடுகின்றார்.

பாத்திரம் அறிந்து பாத்திரருக்குக் கொடுத்தல் வேண்டும் என்று திருமூலர் குறிப்பிடும் அதே கருத்தினைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கைகளை உணர்த்தும் சித்தாந்த சைவ பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான சிவஞான சித்தியார் எனும் நூலும் குறிப்பிடுகின்றது. சாதனை இயல் எனும் பகுதியில் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றது. சிவநெறி மெய்யறிவாளர்களிடம் கொடுத்த பொருள் சிறிதே ஆயினும் அது நிலமும் மலையும் போல மிக்கு ஓங்கி நன்மை பயப்பதால், மேலாகிய இறை நெறியின் வழி கிட்டும் பேரின்பங்களை நுகரச் செய்து, உயிர்களைப் பிறப்பு இறப்பு எனும் துன்பக்கடலில் வீழா வண்ணம் காத்து, அறியாமையை நீக்கி, உயர்ந்த தவம் பெருகும் சான்றோரிடம் சேர்ப்பித்து, உலக இன்னல்கள் நீங்கி, எண்ணியவை உடனே நிறைவேறி இறுதியில் உண்மையான மெய்நெறியினையும் மெய்யறிவையும் கூட்டுவித்துப் பெருமானின் திருவடிப் பேற்றினைக் கூட்டுவிக்கும் என்பதனை,            “சிவஞானச்சொல்லுடையோர் கையில் தானம், திலம் அளவே செய்திடினும் நிலம்மலை போல் திகழ்ந்து பவமாயக் கடலின் அழுந்தாவகை எடுத்துப், பரபோகம் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத், தவம் ஆழும் பிறப்பு ஒன்றின் சாரப் பண்ணி, சரியை, கிரியாயோகம் தன்னிலும் சாராமே, நவம் ஆகும் தத்துவஞானத்தை நல்கி, நாதன் அடிக்கமலங்கள் நணுகுவிக்கும் தானே” என்று குறிப்பிடுகின்றது.

வரவேற்று வணங்கிக் கொடுத்தற்குரிய பாத்திரர் அல்லது கொள்கலர் மெய்நூலை உணர்ந்தவர்களாய் இருப்பர். பெருமான் காட்டியவற்றையே கண்டு பெருமான் ஆணை வழியே அவன் காட்டிய நெறிப்படியே நிற்பர். உலகில் ஆக வேண்டியது ஆகியே தீரும் அவை ஒருபோதும் அழியா என்பதில் திடமாய் நிற்பர். மெய்நெறியாளர்களான பாத்திரர் உலகில் நீங்க வேண்டியவை நீங்கியே தீரும். அவை ஒருபோதும் நீங்காது நில்லாது என்பதனை நன்கு உணர்ந்தவர்களாய் இருப்பர். உலகில் எதனையும் தானே காண்கின்றேன் என்று எண்ணாது இறைவன் காட்டுவிக்கக் காண்கின்றேன், அவன் அருள் ஆணையால் ஏவிய செயல்களையே செய்கின்றேன் எனும் தெளிவினில் உள்ளவர்களாய் இருப்பர் என்பதனை, “ஆவன ஆவ அழிவ அழிவன, போவன போவ புகுவ புகுவன, காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன், ஏவின செய்யும் இலங்கிழையோனே” என்று குறிப்பிடுகின்றார். இதனையே, “என்செயலாவது யாதொன்றும் இல்லை தெய்வமே, நின்செயலே என்று உணரப்பெற்றேன்” என்று தாயுமானவ அடிகளும் குறிப்பிடுவார்.

கொடையளிக்கும் நன்நெஞ்சம் உடையோர் தாம் கொடுக்கும் கொடையைத் தவறாது தக்கோரை வருவித்து வணங்கி அவரிடம் கொடுத்தல் இன்றியமையாதது என்பதும் யாதும் அறியாது வெறும் வேடமிட்டு ஏமாற்றுவோருக்குக் கொடுத்தல் வஞ்சகரை வளர்க்கும் செய்கையாய் முடிந்து பிறருக்குக் கேட்டை விளைவிக்கும் என்பதனையும் திருமூலர் உணர்த்துவதை நினைவிற் கொள்வோமாக! வஞ்சகருக்கும் பொறுப்பற்ற வீணர்களுக்கும் அள்ளிக் கொடுக்கும் கொடையினால் மாந்தருக்கு எந்நன்மையும் விளையாது பூவுலகில் துன்பமும் துயரும் பெருகித் தீயவர்களின் கொட்டமே தலைவிரித்தாடும் என்பதனை உணர்வோமாக! நாம் கொடுக்கின்ற கொடை சரியானப் பணிகளுக்குச் சென்று சேர்கின்றனவா என்பதனை அறிந்து கொடை அளிப்போமாக! பெயருக்கும் புகழுக்கும் கொடை அளிக்காமல் குமுகாய மேம்பாட்டிற்கு நன்மையைக் கொண்டுவரும் உன்னத பணிகளுக்குக் கொடை அளிப்போமாக! உலக நோன்பிகளான மெய்நெறியாளர்களின் அறப்பணிகளுக்கும் இறைப்பணிகளுக்கும் கொடையளிப்போமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!