127. சொல் உலகமும் பொருள் உலகமும்
அறிவு வடிவாய்த் தனது சிறப்பு நிலையில் நிற்கின்ற சிவம் தனது பொது நிலையில் செயல் வடிவாய்த் தோன்றி ஆற்றல் அல்லது சக்தியாய் நிற்கும் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவும் ஆற்றலுமாய் சிவம் நிற்கின்ற நிலையையே சதாசிவலிங்கம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இச்சதாசிவலிங்கமே தன் பரிவின் கரணியமாக, உயிர்கள் உயர்வு பெறுவதற்காக இரு வகை உலகங்களைத் தோற்றுவிக்கின்றது என்கின்றார் திருமூலர். இச்சதாசிவலிங்கமே உலக உயிர்களுக்குத் தேவையான இரு வகையான உலகங்களைத் தோற்றுவித்தும் நிற்பித்தும் அழித்தும் அருள்புரிகின்றது என்கின்றார் திருமூலர்.
அண்டங்கள், அண்டங்களில் உள்ள கோள்கள் எனப்படும் உலகங்கள், விண்மீன்கள், உலகங்களில் வாழும் உயிர்களுக்கு வேண்டிய உடல்கள், நுகர்ச்சிப் பொருள்கள், பஞ்ச பூதங்கள் போன்றவையே பொருள் உலகம் எனப்படுகின்றது. இவற்றைச் சிவம் என்றும் அழியாத மாயை எனும் நுண்பொருளைக் கொண்டு தோற்றுவிக்கின்றது என்கின்றார் திருமூலர். பெருமானின் ஆற்றல் இம்மாயையைச் செலுத்த அனைத்துப் பொருள்களும் உருவாக்கப்பட்டன என்கின்றார் திருமூலர். மற்றொரு உலகமான சொல் உலகம் சொல்லால் அல்லது அறிவால் ஆக்கப்பட்டது. அறிவு வடிவில் நிற்கும் இச்சொல் உலகம் பெருமானின் அறிவாய் விளங்குவது. பெருமான் தனது அறிவினை நல்கி உயிர்களின் அறியாமையைப் போக்கி உயிர்களின் அறிவைச் சிறக்கச் செய்தற்கே சொல் உலகினைத் தோற்றுவித்தான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
இவ்வுலகம் பத்துத் திசைகளை உடையது என்கின்றார் திருமூலர். பத்துத் திசைகளை உடைய இவ்வுலகிலும் மற்ற உலகங்களிலும் காணப்படுகின்ற பொருள்கள் காணக்கூடியவையாக உள்ளன. எனவே பொருள் உலகம் காணக்கூடியதாக உள்ளது. சொல் உலகம் அறிவு வடிவாகவும் திருவாய்ச்சொல் வடிவாகவும் உள்ளமையினால் சொல் உலகைப் பெருமானின் அருளைப் பெற்றவர்களே உள்ளவாறு அறிபவர்களாக உள்ளனர் என்கிறார் திருமூலர். சொல் உலகம் எனப்படுவது வடமொழி வேதங்கள் நான்கு, அவ்வேதங்களின் உட்கூறுகளான ஆறு அங்கங்கள், நான்கு வேதங்களின் உட்பொருளைச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நன்னெறி நான்காய் நின்று தெளிவாய் உணர்த்துகின்ற சிவ ஆகமங்கள் என்கின்றார் திருமூலர். தவிர, பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு இருபத்து ஏழு அடியார்களால் அருளப்பெற்றத் தோத்திரம், சாத்திரம், சரித்திரமாய் நிற்கும் பன்னிரண்டு திருமுறைகள், பதிநான்கு சைவ சித்தாந்த மெய்கண்ட நூல்கள், சைவப் புராணங்கள், இதர சைவ சமய நூல்கள் போன்றவையும் சொல் உலகமே என்று பெறப்படும். இதனை,
“அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறங்கம்,
அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன நால்வேதம்,
அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சரியையோடு,
அத்திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே”
என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
சிவனே சத்தியின் வாயிலாக அல்லது தன் திருவருளின் வழியாகச் சதாசிவலிங்கமாய் நின்று நான்கு வடமொழி வேதங்களை அதற்குரிய அடியார்களுக்கு அருளினான் என்கின்றார். நான்கு வேதங்களின் உட்பிரிவாக விளங்கும் சிற்சை, வியாகரணம், கற்பம், நிருத்தம், சோதிடம், சந்தோவிசிதி என்ற ஆறு அங்கங்களையும் பெருமானே கல் ஆலமரத்தின் அடியில் தென்முகக் கடவுளாய்ச் சின்முத்திரைக் காட்டி உரைத்தான் என்கின்றார் திருமூலர். இவற்றில் சிற்சை வேத மந்திரங்களை உச்சரிக்கும் முறையை விளக்குவது. வியாகரணம் வேத மொழிகளின் இலக்கணத்தை விளக்குவது.
நிருத்தம் வேத மொழிகளைப் பற்றிய பல விளக்கங்களைத் தருவது. சோதிடம் வேதத்தில் சொல்லப்பட்ட செயல் முறைகளைச் செய்தற்குரிய கால வகைகளைக் கூறுவது. கற்பம் சூத்திர வடிவில் அமைந்து வேதத்தில் சொல்லப்பட்ட செயல் முறைகளைச் செய்யும் முறைகளை விளக்குவது. சந்தோவிசிதி வேத மந்திரங்களுக்குச் சொல்லப்படுகின்ற சந்த வகைகளை விளக்குகின்றது. இந்த ஆறும் வேதங்களை நன்கு உணர்வதற்குக் கருவி நூல்களாய் அமைவன என்பர். இவற்றை உணராவிடில் வேதங்களால் கிட்டும் பயனை அடைய இயலாது என்பர். வேத நெறியைச் சார்ந்து அறிவு பெறுகின்றவருக்காகப் பெருமானே இவற்றைச் சொல் உலக வடிவில் அருளினான் என்கின்றார் திருமூலர்.
சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற சிவ ஆகமங்களின் உட்பொருளையும் பெருமான் நாயன்மார்களை ஆட்கொண்டு அவற்றின் தெளிவினை உணர்த்தினான். சதாசிவலிங்கமாய் இருக்கின்ற அப்பெருமானே தமிழ் ஞானசம்பந்தருக்குப் பால் வடிவில் சிவ அறிவினை நல்கியும் திருநாவுக்கரசருக்குச் சூலை வடிவில் சிவ அறிவினை நல்கியும் சுந்தரர் பெருமானுக்கு ஓலை வடிவில் சிவ அறிவினை நல்கியும் மாணிக்கவாசகருக்குச் சிவஞானபோதம் எனும் நூலின் பொருளை உரைத்துச் சிவ அறிவினை நல்கியும் அவர்களுக்குச் சொல் உலக விளக்கத்தினை அருளினான். அதனாலேயே பெருமானின் திருவருளையும் அவனின் திருவடிப்பேரின்பத்தினையும் அவனை அடைய ஒட்டாது தடையாக நிற்கும் மறைப்பையும் விடவேண்டிய உலகப்பற்றையும் உணர்வதற்குச் சொல் உலக வடிவினதாய் நிற்கும் திருமுறைகளை அருளினான்.
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுகின்ற சொல் உலகத் தெளிவினை இறைவன் அருளால் பெற்றத் திருமுறை ஆசிரியர்கள் அவ்விளக்கத்தின்படிச் சொற்களின் ஆற்றலால், சாம்பலைப் பெண் ஆக்கியது, கல்லைக் கடலில் மிதக்கச் செய்தது, முதலை உண்ட சிறுவனை மீட்டது, ஊமைப் பெண்ணைப் பேச வைத்தது போன்ற அருள் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். மேலும்
அவர்கள் கூறியபடி வாழ்ந்தும் இறைவனை அடைந்தும் காட்டினர். இதனாலேயே அவர்கள் அருளிய பாடல்கள் தமிழ் மந்திரங்கள் எனப்படுகின்றன. அவை ஆற்றல் உடையவை ஆகின்றன.
இறைவன், உயிர், உலகம் (பதி, பசு, பாசம்) என்ற முப்பொருளின் உண்மையைப் பெருமானிடத்தில் இருந்து உரையாய்க் கேட்டத் திருமூலர் சொல் உலகத் தெளிவினால் மூவாயிரம் திருமந்திரங்களை அருளினார். இதனையே,
“மூலன் உரைசெய்த முவாயிரம் தமிழ்,
ஞாலம் அறியவே நந்தி அருளது”
என்று திருமூலர் குறிப்பிடுவார். திருக்கயிலையில் சொற்பொருளாய்த் தாம் கேட்ட இறை அறிவையே பரஞ்சோதியார் மெய்கண்டாருக்கு உரைமுறையால் உணர்த்த சிவஞானபோதம் என்ற அரிய சித்தாந்த சைவ மெய்கண்ட நூலை மெய்கண்டார் இரண்டரை வயதில் அருளினார். மெய்கண்டார், அருணந்தி சிவம், உமாபதி சிவம், மனவாசகம் கடந்தார், ஆகியோர் சொல் உலக வடிவிலேயே முப்பொருள் உண்மைகளைப் பெற்று நமக்கு அவற்றை விளக்கி அருளி இருக்கின்றனர்.
“திகடச் சக்கரம்” என்று கந்தபுராணம் பாடுவதற்குப் பரஞ்சோதியாருக்கும் “காதற்ற ஊசியும் வாராதுகாண் நும்கடை வழிக்கே” என்று மருதவானராகப் பட்டினத்தாருக்கும் “சும்மாயிரு சொல் அற” என்று திருப்புகழ் பாட அருணகிரியாருக்கும் வாய்ப்பேச முடியாதவராக இருந்து, கந்தர் கலிவெண்பாவும் மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழும் பாடுவதற்குக் குமரகுருபரருக்கும் மௌன தேசிக குருவாய் வந்து தாயுமானவருக்கும் நிலைக்கண்ணாடியில் முருகனாய்த் தோன்றி வள்ளல்பெருமானுக்கும் சொல் உலகத் தெளிவினைப் பெருமான் நல்கியே அவர்களை அரிய அருட்பாடல்களைப் பாடுவித்தான்.
இப்பெருமக்களின் சொல் உலகப் பொருள் பொதிந்தப் பாடல்களே நமக்கு இறைவனிடத்திலே அன்பையும் நெகிழ்வையும் ஏற்படுத்துகின்றன. இவர்களுக்குப் பின் வந்த சைவத் திருமடங்களின் தலைவர்களுக்கும் சொல் உலகத் தெளிவினை நல்கிப் பண்டாரச் சாத்திரங்கள் எனப்படும் சிவபோகச் சாரம் போன்ற நூல்களை நமக்காக அருளச் செய்தான். செவ்வி அடையாத அன்பர்களுக்கும் கூட சதாசிவலிங்கமாய் உள்ள அப்பெருமானே அவர் அவர் நிலையில் சொற்களால் அறியக்கூடிய பல உண்மைகளையும் உணர்வுகளையும் சமய நூல் உரையாசிரியர்களின் உரைகள் மூலம் நமக்கு நல்கிய வண்ணமே இருக்கின்றான்.
சதாசிவலிங்கமாய் நின்று பொருள் உலகத்தின் வழியும் சொல் உலகத்தின் வழியும் நாளும் நமக்கு நல் அறிவினைப் புகட்டி நாளும் நம்மை அவனின் திருவடிக்கு ஆளாகுவதற்கு உதவி வருகின்றப் பெருமானின் திருந்திய திருவடிகளை நாளும் பரவுவோம்! நல்வாழ்வு பெறுவோம்!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!