இயல்பு இல்லற வாழ்வினைத் துறந்து, காவி உடை அணிந்து, தாடியையும் மீசையையும் வளரச் செய்து, காடுகளை இடமாகக் கொண்டு இறைவனை இடைவிடாது எண்ணுதலைத் தவம் என்பர் சிலர். இன்னும் சிலர் காடுகளுக்குச் செல்லாது ஆசிரமங்களை அமைத்துக் கொண்டுத், துறவு உடைகளை அணிந்து தியானம், யோகம் என்று வாழ்வதுதான் தவம் என்பர். இன்னும் சிலர் இல்லறத்தில் இருந்து கொண்டும், இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் யோக இருக்கை முறைகளின் வழி மனதை ஒருமைப் படுத்துவதன் வழியும் தங்களுக்குள்ளே இருக்கின்ற ஆற்றலை உணர்வதே தவம் என்பர். திருவள்ளுவரோ, தனக்கு வரும் துன்பத்தினைப் பொறுத்துக் கொள்ளுதலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாது இருத்தலுமே தவம் என்பார்.
தனக்கு வரும் துன்பத்தினைப் பொறுத்துக் கொள்ளுதலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையும் எப்பொழுது தோன்றும் என்றால், நம் உள்ளத்தில் இறைவன் இருந்து நம்மைக் காத்து வருகின்றான், அவன் நம் நன்மைக்காகவே அனைத்து இன்ப துன்ப நுகர்ச்சிகளையும் கொடுக்கின்றான், அவற்றைத் தளர்ச்சியுறாது நுகர்தலே நமக்குச் செவ்வியைத் (பக்குவம்) தரும், இறைவன் அருள் செய்யாது எதுவும் நடவாது, என்பதனை உணர்ந்தால் வரும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்ள இயலுதல் வரும் என்ற உண்மையைச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. தன்னைப் போன்றே பிற உயிர்களும் இறைவனின் திருவருளினாலேயே செவ்வியுற முயன்று கொண்டிருப்பவை என எண்ணினால் மற்ற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்க எண்ணம் வராது என்றும் குறிப்பிடும் தமிழர் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம்.
இதன் வழி எங்கும் எதிலும் நிறைந்து இருக்கின்ற இறைவன் திருக்கோயில்களில் விளங்கித் தோன்றுவது மட்டும் அல்லாமல் நல்ல தவம் உடையவர்களின் உள்ளங்களிலும் வாழ்கின்றான் என்கின்றார் திருமூலர். “முதுபதி செய்தவன் மூதறிவாளன் விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி, அதுபதியாக அமருகின்றானே” என்பார். உலகங்களை எல்லாம் ஒடுக்குகின்ற பேர் ஊழி காலத்துத் தோன்றும் சுடுகாடாகிய முதுபதியினையே தன் இருப்பிடமாகக் கொண்ட சிவபெருமான் இயற்கை உணர்வும் முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த மூதறிவுசேர் பேர் அறிவாளன். திருவருள் துணையால், திருவடி உணர்வால் தம் உள்ளத்தினை அச்சிவபெருமானுக்கு இருப்பிடமாக அமைக்கும் நல்ல தவம் உடையவர் உள்ளம் அவன் வாழும் கோயிலாகிறது என்கின்றார் திருமூலர்.
“பெற்ற தாய்தனை மக மறந்தாலும்..” என்று தொடங்கும் பாடலில், “ நற்றவத்தவர் உள்ளிருக்கும் நமசிவாயத்தை நான் மறவேனே” என்பார் வள்ளல்பிரான். இதனாலேயெ நல்ல தவம் உடைய திருநாவுக்கரசு அடிகளும் இறைவனைத் தம் உள்ளே தேடிக்கண்டதாகத், “தேடித் தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுக்கொண்டேன்” என்று திருவங்கமாலைத் திருப்பதிகத்தில் குறிப்பிடுவார்.
பெருமான் நம் உள்ளத்தைக் கோயிலாகக் கொள்வதற்கும் எல்லா சூழலிலும் நம்மைக் காப்பாற்றுவான் என்ற மன உறுதியினைப் பெறுவதற்கும் முதலில் நம்மிடம் உள்ள பொய் நீங்க வேண்டும் என்பார் திருநாவுக்கரசர். மனதில் எழும் எண்ணங்களிலும், வாயிலிருந்து வெளிப்படும் சொற்களிலும், உடம்பால் செய்யப்படும் செயல்களிலும் பொய் நீங்க வேண்டும் என்பார். இதனை,” மெய்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்தி, பொய்மையாம் களையை வாங்கி” என்பார் திருநாவுக்கரசு அடிகள். இதனையே, பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்” என்பார் பேராசான் திருவள்ளுவர். இன்னும் கூட, “தன் நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தப் பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்’ என்றும் குறிப்பிடுவார். நெஞ்சாறப் பொய்தன்னைச் சொன்னால் நம் நெஞ்சே நம்மைச் சுட்டுப் பெருமான் நமக்குத் துணையிருப்பான் என்ற எண்ணம் உள்ளத்தில் எழாது. தனக்கு வரும் துன்பத்தினை அவன் காப்பான் என்ற துணிவும் ஏற்படாது என்று குறிப்பிடுவர் சான்றோர்.
அன்றாட இயல்பு வாழ்க்கையில் பெற்றோரிடத்தில் பிள்ளைகள் நடித்தல், மக்களிடத்தில் பெற்றோர்கள் நடித்தல், மனைவியினிடத்தில் கணவன் நடித்தல், கணவனிடத்தில் மனைவி நடித்தல், பணியிடத்தில் முதலாளி முன் தொழிலாளி நடித்தல், நண்பரிடத்தில் தோழர் நடித்தல், பெருமானை வழிபடும் கோயிலில் நடித்தல் போன்றவை ஒரு போதும் உள்ளத்தில் பெருமானைக் குடிகொள்ளச் செய்யாது என்பதனை உணர்தல் வேண்டும். இதனைத்தான், ‘நடலை வாழ்வு கொண்டு என்செய்தீர், சுடலைச் சேர்வது சொற்பிரமாணமே” என்பார் திருநாவுக்கரசு அடிகள்.
நல்ல தவம் உடையவர்களாய் உள்ளத்தினைக் கோயிலாக மாற்றுவதற்கு எல்லாவற்றிலும் தானே சிறந்தவன், தன்னுடையதே எல்லாவற்றிலும் சிறந்தது என்ற செருக்கினை விட வேண்டும் என்று சைவம் குறிப்பிடும். இச்செருக்கே ஆசை, சினம், மயக்கம் என்ற நோய் உயிரப் பற்றிக்கொள்ள காரணமகின்றது. இதனையே,”காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன், நாமம் கெடக் கெடும் நோய், என்பார் பேராசான் வள்ளுவர். எதற்கெடுத்தாலும் சினமுண்டு சொற்களை வரம்பு மீறிப் பேசுவதும், தீதானவற்றை எண்ணுவதும் விரைந்து மற்றவருக்குத் தீமை விளைவிப்பதும் போன்றவை மேற்கூறிய குற்றங்களினாலேயே ஏற்படுகின்றது. சினத்தினை அடக்க, ”நமசிவய” திருவைந்து எழுத்தினை ஓதியும் இறைவனை நினைப்பிக்கும் சமயச் சின்னங்களை அணிந்தும் தவறாது இறைவழிபாட்டினைச் செய்தும் வருவோமேயானால் உள்ளத்தில் மாசு நீங்கி உள்ளம் கோயிலாக மாறும் என்று திருமுறைகள் குறிப்பிடுகின்றன.
சரியாகச் சிந்திக்கவும் எப்பொழுதும் தெளிவான சிந்தனையுடனும் நோய் நொடியின்றி உடலைப்பேணவும் சரியான உணவு உண்ணல் இன்றியமையாதது ஆகின்றது. இறைவன் நம் உள்ளத்தைக் கோயிலாகக் கொள்ள புலால் உண்ணல், கொலை, களவு, மது, இறைமறத்தல், மற்ற உயிர்களைத் துன்புறுத்துதல் போன்றவற்றை விடல் வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெறும் இறைவழிபாட்டை மட்டும் ஒரு சடங்காகச் செய்துவிட்டு மேற்கூறிய அனைத்தையும் எண்ணத்தில் கொண்டு வாழாதவர் நெஞ்சினை ஒருபோதும் இறைவன் கோயிலாகக் கொள்ளமாட்டான் என்ற திருமூலரின் கருத்தை உய்த்து உணர்ந்து வாழ்வோமாக.