106. அறிவு வழிபாட்டில் நோன்பு

1653

எக்கடவுளை, எவ்வடிவில், எந்நெறியில் நின்று உளமாற வழிபட்டாலும் அந்தந்த கடவுளின் வடிவில், அக்கடவுளாக அந்நெறிக்கு ஏற்றாற்போல் உள்நின்று அருளுபவன், தன் திருவருளை உமையாகத் தன் திருவடிவில் வைத்திருக்கின்ற சிவபெருமான் என்பது சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவத்தின் குறிப்பாகும். உண்மையான அடியார்களின் உள்ளங்களிலும் திருக்கோயில்களில் உள்ள திருமேனிகளிலும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் தோன்றாத் துணையாக, நீக்கமற நின்று விளங்கும் அப்பெருமானைப் பெறுதற்குரிய வழியாக நான்கு நன்னெறிகளைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவையே அவை. வடமொழியில் கிரியை என்று சொல்லப்படுகின்ற நோன்பு நெறியினைத் திருமூலர் குறிப்பிடுவதனைத் தெளிவோம்.

இறைவனை அறிந்து உணர்வதற்கு முதலில் இறைவனிடத்திலே ஓர் உறவினை ஏற்படுத்தி அவ்வுறவினில் ஏற்படும் அன்பினைக் கொண்டு அவனை உணரலாம் என்பார் திருமூலர். அவ்வாறு இறைவனிடத்தில் உறவை ஏற்படுத்துவதற்கும் உணர்வை வருவிப்பதற்கும் சீலத்தை அடுத்து கிரியை எனும் நோன்பு துணை நிற்கின்றது என்கின்றார் திருமூலர். கிரியை என்றாலே செயல் பற்றியது என்று பலரும் அறிவர். இறைவனின் இயல்புகளையும் அவனின் பேர் அருளையும் நினைப்பிக்கும் சில செயல் முறைகளைச் செய்தால் அது அவன்பால் அன்பினையும் உணர்வினையும் அறிவிற்கு உணர்த்தும் என்பதை நம் முன்னோர் ஆய்ந்து அதனை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அவ்வகையில் அமைவதே இறைவனை அகத்தேயும் புறத்தேயும் கொண்டு பூசனை இயற்றுவதாகும். செம்பொன் போன்ற திருமேனியையும் மிகச் சிறந்த தாமரை மலர் போன்ற திருவடிகளையும் உடைய சிவபெருமான் என் முன்னே வெளிப்பட்டுத் தோன்றியதுபோல, என் உடலினுள்ளே இதயத் தாமரையில் ஒளியாய் விளங்குகின்ற சிவபெருமான், வெளியே சிவலிங்கத் திருமேனியாகத் தோன்றி நிற்கின்றான். திருக்கோயில்கள் தோறும் சிவலிங்கத் திருமேனியாய் நின்று அருள்புரிகின்ற அச்சிவத்தின்பால் அன்பு ஏற்பட்டு அவனை அன்பினால் பூசனை செய்கின்றேன். அவன் எனக்கு இட்ட பணிகளை எல்லாம் செய்து அவனுக்குப் பணி செய்து நாளும் அவன் திருவருளை வேண்டி நிற்கின்றேன் என்பதனை, “அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன், செம்பொன்செய் மேனி கமலத் திருவடி, முன்புநின்று ஆங்கே மொழிவ தெனக்கருள், என்பினுட் சோதி இலிங்கம் நின்றானே” என்று திருமூலர் குறிப்பிடுவார்.

இறைவனை முழுமையாக அகத்திலே வைத்து எண்ணுகின்ற செறிவு நெறி (யோகம் நெறி) மற்றும் அறிவு நிலையிலே இறைவனை வைத்து வழிபடுகின்ற அறிவுநெறி(ஞான நெறி) என்பனவற்றிற்கும் சீலமும் நோன்பும் வாயில்களாக அமைகின்றன. செறிவு நெறியின் நன்றாற்றல்(நியமம்) சிவபூசனை இயற்றுதலைக் குறிப்பிடுகின்றது. எனவேதான் சிவபூசனை அனைவருக்கும் உரியது என்றும் உயிர்கள் செவ்வியுற்ற(பக்குவம்) காலத்து, நான் விடுகின்றேன் என்று அல்லாமல் அதுவே தானாக விடுபடுதல் நிகழ வேண்டும் என்றும் அதுவரை அனைவரும் சிவபூசனை இயற்றவேண்டும் என்றும் சைவமெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதுபற்றியே சிவபூசனை இயற்றுவதன் முதன்மையைத் திருமூலர் இப்பகுதியில் குறிப்பிடுகின்றார்.

நோன்பு எனப்படும் இந்நெறியில் இவ்வகையான பூசனைகள் அகத்திலேயும் புறத்திலேயும் இயற்றப்படுவதனை மெய்கண்ட் நூல்கள் குறிப்பிடுகின்றது. ஒன்று இல்லத்திலே இயற்றக்கூடிய அகப்பூசனை மற்றும் புறப்பூசனை. மற்றது திருக்கோயில்களிலே இயற்றக்கூடிய அகப்பூசனை மற்றும் புறப்பூசனைகள். இல்லத்திலே இயற்றக்கூடிய அகப்பூசனை புறப்பூசனை(ஆன்மார்த்த பூசனை) இரண்டிற்கும் சிவ ஆகம விதிப்படி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாவிட்டாலும் சைவ சமய அடிப்படை கொள்கைகளுக்கு மாறுபடாமல் இயற்ற வேண்டுவது முதன்மையானதாகும். இல்லங்களில் சிவலிங்கத் திருமேனியோ அல்லது ஆடல்வல்லான் (நடராசர்) திருமேனியோ வைத்து பூசனை இயற்றுவது மிகச் சிறப்புடையது என்று திருவருட்பயன் என்ற சைவமெய்கண்ட நூல் குறிப்பிடும். எப்படி ஒரு தாய் தன் குழந்தையை தொட்டு நீராட்டி, அக்குழந்தையை அழகு செய்து, அமுதூட்டி மகிழ்கின்ற போது அக்குழந்தை மீது அத்தாய்க்கு அன்பு மேலிடுகின்றதோ அதுபோல உலகத் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்ற பெருமானின் திருமேனியைத் தொட்டு நீராட்டி, உடை உடுத்தி, மலர்களால் அழகு செய்து, திருவமுது படைத்து, அப்பெருமானை வாயாரப் பாடி பணிகின்ற போது அப்பெருமானிடத்திலே ஓர் உறவும் அவ்வுறவினால் அன்பும் அவ்வன்பினால் இறை உணர்வும் ஏற்படும் என்கின்றார் திருமூலர்.

எளிய பூசனை முறைகளைக் கற்றுக் கொண்டு ஒவ்வொருவரும் பூசை இயற்ற வேண்டும் என்பதே திருமூலரின் குறிப்பு. இதனாலேயே, “யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை” என்பர். சிவபூசனை செய்யாதவர்கள் பாவம் செய்தவர்கள் அல்லது சென்ற பிறவியிலே தீவினை செய்தவர்கள் என்பார். இதனைப், “புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” எனவும் “எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை, நன்னறியாமல் நழுவுகின்றாரே” எனவும் குறிப்பிடுவார். இதனையே, “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து, முன்னம் நீபுரி நல்வினை பயனிடை முழுமணித் தரளங்கள், மன்னுகாவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப், பண்ணி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே” என்று திருஞானசம்பந்தரும் குறிப்பிடுவார். பெருமானை வாயார வாழ்த்தி வழிபடுவதற்கு மனமே நீ புண்ணியம் அல்லது நல்வினை செய்திருக்கிறாய் என்று தன் மனத்தைப் பாராட்டித் தேற்றுவார். புறப்பூசனையைப் பல நாயன்மார்கள் இயற்றியது பெரிய புராணத்தில் காணக்கிடக்கின்றது.

இல்லத்திலே இயற்றும் பூசனையில் அகப்பூசனை இயற்றுவது இன்றயமையாததாகின்றது. உடம்பையே கோயிலாகவும் விரைந்து எழுகின்ற மனம் அதில் தொண்டு இயற்றும் அடிமையாகவும் வாய்மை என்பதுவே அக்கோயிலின் தூய்மையாகவும் மனம் என்பதே அப்பெருமானின் இலிங்கம் அமைந்திருக்கின்ற கருவறையாகவும் உண்மையான அன்பே நெய் பால் எனும் திருநீராட்டலாகவும் நற்றமிழ் பாடல்களே திருவமுதாகவும் ஈசனுக்குப் பூசனையாக இயற்றலாம் என்று திருநாவுக்கரசு அடிகள் அகப்பூசனை இயற்றுதலைப் பற்றிக் குறிப்பிடுவார். இல்லத்திலே அகத்திலேயும் புறத்திலேயும் செய்யப் படுகின்ற நோன்பு எனும் நன்னெறி இவ்வாறிருக்க திருக்கோயில்களிலே செய்யப்படுகின்ற அன்றாடப் பூசனைகளும் திருவிழாக் காலங்களிலே செய்யப்படுகின்ற சிறப்புப் பூசனைகளும் இறைவனிடத்திலே உறவையும் உணர்வையும் வருவிப்பனவாக உள்ளன என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருக்கோயிலிலே இருக்கின்ற சிவலிங்கத் திருமேனியை சிவபெருமானாகவே எண்ணி பூசனை இயற்றியும் வழிபட்டும் வருவோமேயனால் பெருமானின் திருவருள் கிட்டும் என்கிறார் திருமூலர். இதனாலேயே திருக்கோயிலில் பெருமானைத் தொ¡ட்டுத் திருநீராட்டிப் பூசனை இயற்றுபவர்களுக்கு நான் அடியவன் என்பதை சுந்தரமூர்த்தி அடிகள், “முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன்” என்று தமது திருத்தொண்டர்த் தொகை திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

திருக்கோயிலில் உள்ள சிவலிங்கத் திருமேனிகளை இறைவனாகவே எண்ணிப் பூசனை செய்த திருநீலநக்க நாயனாருக்குப் பெருமான் அச்சிவலிங்கத் திருமேனியிலே சிலந்திக் கொப்புளம் ஏற்படச் செய்து தன் திருவருளை நல்கினான். கண்ணப்பருக்குச் சிவலிங்கத் திருமேனியிலே குருதி வடிய நின்று அருள் செய்தான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களுக்கு சிவலிங்கத் திருமேனியிலே நின்று பல அருள் நிகழ்ச்சிகளை நிகழ்த்தி அருளினான் பெருமான். இது அச்சிவலிங்கத் திருமேனியை இறைவனாகவே கருதினமையால்தான்.

அறிவு வழிபாடாகிய நோன்பினில் இயற்றும் பூசனையில் பதினாறு பணிவிடைகள்(சோடச உபசாரம்) இயற்றிப் பெரிதாகவும் செய்யலாம், வெறும் பூவும் நீரும் கொண்டு புகழ்ந்து பாடிச் சிறிதாகவும் இயற்றலாம். பூசனைகள் எவ்வாறு இயற்றப்படினும் செய்யப்படும் ஒவ்வொரு செயல்முறைக்கும் என்ன பொருள் என்பதனை அறிந்து செய்வதே அறிவுடை வழிபாடாகும். பூசனை முறைகளைப் பொருள் அறியாது வெறுமனே செயல்முறைகளாய் மட்டும் செய்வது இறைவனிடத்தில் அன்பையும் உணர்வையும் ஏற்படுத்தாது. பூசனையில் சொல்லப்பெறும் மந்திரங்களையும் திருமுறைப் பாடல்களையும் பொருள் அறிந்து ஓதினால் எதிரே அமர்ந்திருக்கின்ற பெருமானிடத்தில் உரையாடுவது போன்ற உணர்வினைப் பெறலாம். நமக்குத் தெரிந்த மொழியிலேயே இறைவனைப் பாடி அவன் திருவடியை அடையலாம் என்பதனைத் திருமுறை ஆசான்கள் நமக்கு உணர்த்தியிருக்கின்றனர். இன்பமே எந்நாளும் துன்பமில்லை!