110. தோழமை நெறி

2928

பெருமானிடத்தே ஓர் உறவையும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வையும் துணைக்கொண்டு பெருமானின் திருவருளைப் பெற இயலும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. சிவப்பரம்பொருளாம், பேரறிவும் பேராற்றலும் பேர் அருளும் உடைய அப்பெருமானிடத்திலே வைக்கக் கூடிய உறவு முறைகளில் தோழமை நெறியும் ஒன்று எனத் திருமூலர் குறிப்பிடுகின்றார். தோழமை நெறியைச் சகமார்க்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். உலகக் கல்வியின் துணையாலும் சமயக் கல்வியின் துணையாலும் இறைவனையும் தன்னையும் உலகையும் பற்றி அறிந்த உயிர், உலகப் பொருள்களிலும் உயிரிலும் தோன்றாத் துணையாக ஒளிந்து இருக்கின்ற இறைவனை உணர அவனிடத்தில் தோழமை எனும் உறவினை நிலைநிறுத்தி அவனை உணரலாம் என்கின்றார் திருமூலர். சமயக் கல்வி கற்பது மட்டுமின்றிச் சீலம், நோன்பு (சரியை, கிரியை) எனும் நெறிகளில் செய்யப்படும் ஆலயத் திருத்தொண்டுகள், வழிபாடுகள், பூசனைகள் வழி பெறப்படும் உணர்வினைக் கொண்டு அப்பெருமான் நமக்குச் சிவஅறிவினை நல்கவும் அச்சிவஅறிவின் பயனால் பெருமானிடத்தில் மிக அணுக்கமான உறவினை ஏற்படுத்திக் கொள்வதே தோழமை நெறி எனப்படுகின்றது என்கின்றார் திருமூலர்.

சிவப் பரம்பொருளிடத்து அணுக்கமான உறவை ஏற்படுத்துகின்ற தோழமை நெறியினில் நிற்பதற்கு அன்புச் செறிவினையும்(பக்தி யோகம்) சிவச்செறிவினையும் (சிவ யோகம்) குறிப்பிடப்படுகின்றது திருமூலரின் திருமந்திரம். அன்புச் செறிவு மற்றும் சிவச் செறிவின் முதன்மை நோக்கம் அவற்றின் வாயிலாக இறைவனின் திருவருளையும் சிவ அறிவினையும் பெற்று, சிவனோடு அணுக்கமாய் நின்று, அதனால் பெறும் இன்பத்திலே ஆழ்ந்து இருப்பதுதான் என்கின்றார் திருமூலர். இதுவே தோழமை நெறி என்கின்றார் திருமூலர். மற்ற செறிவுகள் இதனைக் கொடுக்க இயலாது என்றும் அவை பிறப்பு இறப்புக்கு நம்மை ஆட்படுத்தும் என்பதனையும், “சன்மார்க்கம் தானே சகமார்க்கம் ஆனது, மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம், பின்மார்க்கம் ஆனது பேறாப் பிறந்திறந்து, துன்மார்க்கம் ஞானத்து உறுதியும் ஆமே” என்று குறிப்பிடுகின்றார். இதனால் சிவச் செறிவு மட்டுமே சிவனிடத்துத் தோழமை உறவை ஏற்படுத்திச் சிவனை நமக்கு நெருக்கமானவனாக ஆக்குவிக்கும், மற்ற செறிவுகள் (யோகம்) இவற்றைச் செய்ய இயலா என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சிவச் செறிவு அல்லது அன்புச் செறிவின் வழி பெருமானைத் தங்கள் சிந்தனையில் அணுக்கமாகத் தோழனாக நிலை நிறுத்துதலில் வெற்றி கண்டவருக்குத் தனித் தலைவனாகிய சிவபெருமான் அவர்களை விட்டு நீங்காது நிலைத்து நிற்பான். இவ்வாறு சிவபெருமான் அவர்களுக்குள்ளே நிலைத்து நிற்பதனால் அவர்களுக்கு ஐம்புலன்களினால் ஏற்படும் மயக்கங்களையும் வஞ்சனைகளையும் வெட்டி வீழ்த்தும் திறம் ஏற்படும் என்பதனை, “பிணங்கி நிற்கின்ற அவைஐந்தையும் பின்னை, அணங்கி எறிவன் அயில்மன வாளால், கணம் பதினெட்டும் கருதும் ஒருவன், வணங்க வல்லான் சிந்தைவந்து நின்றானே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சைவ சமயச் சின்னங்களை உறைப்போடு அணிந்தும் சீலம், நோன்பில் சொல்லப்பட்ட செயல் முறைகளைப் பின்பற்றியும் சிவப் பழமாய் நிற்பவர்களுக்குத் தோழமை நெறியின் பயனாக உள்ளம் பழுத்து இறைவனோடு அணுக்கமாய் நிற்பவருக்கு மிக்க இன்பம் தருகின்றவனாய்ப் பெருமான் விளங்குவான் என்கின்றார் திருமூலர். இதனால் தோழமை நெறியினை எய்துதற்குச் சீலத்தில் நிற்றலும் நோன்பில் நிற்றலும் வாயில்களாக அமைகின்றன என்பதனைத் தெளிதல் வேண்டும். சீலத்தில் இறைவனின் திருக்கோயிலிலும் இறைவனின் அடியார்களுக்கும் செய்யும் புறத் தொண்டும் அகத்திலேயும் புறத்திலேயும் பெருமானுக்குச் செய்யும் பூசனை முதலிய இறைத் தொண்டும் தோழமை நெறிக்கு இன்றயமையாதவை என்று தெளிதல் வேண்டும். இவையே பெருமானிடத்தில் உறவும் அவ்வுறவினால் தோழமை எனும் உணர்வும் ஏற்பட வழி வகுக்கும் என்கின்றார் திருமூலர்.

இறைவனிடத்திலே தோழமை கொண்டு இறைவனோடு அணுக்கமாய் இருக்கின்ற சிவ அன்பர்க்கும் சிவச்செறிவாளருக்கும் உலக நுகர்ச்சிகள் சிவன் அருள் வழி நேரடியாக் கிட்டும் என்கின்றார் திருமூலர். சிவனின் திருவருளால் கிடைக்கப் பெறும் உலக நுகர்ச்சிகள், செவ்வியடையாத உயிர்களுக்குப் பிற உயிர்களாலும் பிற உலகப் பொருள்களாலும் பிற சிற்றாற்றல்களாலும் (ஆதி ஆன்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தெய்விகம்) கிட்டும் என்கின்றார். ஆனால் அன்புச் செறிவாலும் சிவச் செறிவாலும் பெருமானிடத்திலே தோழமை உறவு கொண்டு வாழும் நிறைவுடைய உயிர்களுக்கு இறைவனே நேரடியாகத் தன் திருவருளை முன் இருத்தி அருளுவான் என்கின்றார் திருமூலர். இதனாலேயே அன்புச் செறிவில் நிலைத்து நின்று பெருமானைத் தோழனாகக் கொண்ட சுந்தரமூர்த்தி அடிகள் அனைத்தையும் பெருமானிடத்திருந்து நேரடியாகப் பெற்றார். “எம்மை உமக்குத் தோழமையாகத் தந்தனம்” என்று இறைவனே தம்மைத் தோழனாகச் சுந்தரமூர்த்தி அடிகளுக்குக் கொடுக்கப் பெற்றப் பேற்றினைப் பெற்ற சுந்தரர், ‘தம்பிரான் தோழர்’ என்றே அழைக்கப் பெற்றார்.

சுந்தரர் பெருமானிடத்திலே கொண்ட தோழமை நெறியின் உறைப்பால், பெருமான், ‘எளிவந்த பிரானாக’ சுந்தரமூர்த்தி அடிகள் அழைக்கும் போதெல்லாம் ஓடோடி வந்து வெளிப்பட்டு அருளினான். பரவையார் என்ற அம்மையாரின் மீது சுந்தரரின் மனம் போகிட, அவ்வம்மையாரைத் தமக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனிடத்திலே தாம் கொண்ட தோழமையின் உறவால் கேட்க, இறைவன், திருவாரூர் மக்கள் கனவில் சென்று பரவையாரைச் சுந்தரருக்குத் திருமணம் செய்து வைக்குமாறு திருவருள் புரிந்தான். பங்குனி உத்திரத் திருவிழாவில் அடியார்களுக்குச் சோறு போட பரவையார் சுந்தரரிடம் பணம் கேட்க, திருப்புகலூர் திருக்கோவிலில் உள்ள பெருமானிடத்தில் சுந்தரர் பணம் கேட்க, செங்கல்லைப் பொன்னாக மாற்றிக் கொடுத்தான் பெருமான். திருக்குன்றையூரில் உணவு பற்றாக்குறை ஏற்பட பெருமானிடத்தில் வேண்டி நெற்குவியலைப் பெற்ற சுந்தரர், அந்நெற்குவியலைப் பகிர்ந்தளிக்க ஆள் வேண்டிப் பெருமானையே கேட்க, சிவகணங்களை அனுப்பிப் பெருமான் அருள் புரிந்தான்.

நாள்தோறும் செய்கின்ற சிவப்பூசனையின் முடிவில் பெருமானின் காற்சிலம்பொலியைக் கேட்கும் பேற்றினை உடைய கழறிற்று அறிவார் எனும் சேரமான் பெருமாள் நாயனார், ஒருநாள் பெருமானின் காற்சிலம்பொலி பூசனையின் முடிவில் கேட்காமல் போகத் தன் கழுத்தை வாளால் அரிய முற்பட்ட போது, சுந்தரரின் தமிழ் கேட்டுச் சிலம்பொலி கேட்பிக்கக் காலம் தாழ்ந்தது என்று கூறி, சுந்தரருக்குச் சேரமானின் நட்பினைப் பெருமானே நேரடியாகச் சுந்தரருக்குப் பெற்றுத் தந்தார். தவிர, திருஒற்றியூரில் சங்கிலியார் எனும் அம்மையாரைச் சுந்தரர் திருமணம் செய்யும் போது, சங்கிலியாரைப் பிரியமாட்டேன் என்று பொய் உறுதி கூறுதற்கு இறைவனைத் துணைக்கு அழைத்துப் பின்னால் அதனால் கண் பார்வை பறி போனதும் பின்பு இறைவனே அவருக்கு ஊன்றுகோலையும் பின்பு கண் பார்வையையும் கொடுத்ததுவும் தோழமை நெறியின் உறைப்பால் சுந்தரர் பெற்றப் பேறாகும். சங்கிலி அம்மையாரைத் திருமணம் செய்ததினால் சுந்தரருக்கும் அவர் தம் முதல் மனைவியார் பரவையாருக்கும் ஏற்பட்ட ஊடலைத் தீர்பதற்கு இறைவனே தூது சென்று திருவாரூர் வீதியில் பல முறை நடந்ததும் பரவையாரை அமைதி படுத்தியதும் சுந்தரர் கொண்ட தோழமை நெறியின் உறைப்பால் வந்த பயன்தான் என்கின்றார் திருமூலர்.

சிவச் செறிவாளர்களான வயிலாருக்கும் பூசலாருக்கும் பெருமிழலைக்குறும்பருக்கும் அவர்கள் வேண்டிய போது உடனே பெருமான் வெளிப்பட்டு அருளியதும் சிவச் செறிவினால் கிட்டிய தோழமையும் அதனால் விளைந்த நெருக்கத்தினாலும் தான் என்பார் திருமூலர். அகத்திலே தாம் கட்டிய மனக்கோயிலின் குடமுழுக்கிற்குத் தாம் குறித்த நாளில் இறைவனை வருவித்தார் பூசல நாயனார். தன் ஆசானாகிய சுந்தரர் இறைவனின் திருவடிக்குச் சென்றுவிட வேண்டும் என்று திருநொடித்தான்மலையில் சுந்தரர் எண்ணிய போது பெருமான் வெள்ளை யானையை அனுப்பிச் சுந்தரரை அழைத்துச் சென்ற போது தன் ஆசானைப் பிரிந்து இருக்க இயலாது என்று உச்சித் துளை வழி உயிரைப் போக்கிக் கொள்ள எண்ணிய சிவச் செறிவாளர் பெருமிழலைக்குறும்பர்க்கு அவரின் உயிரைப் போக்கிக் கொள்ள அவர் நின்ற தோழமை நெறியின் உறைப்பால் உடனே பெருமான் அருள் புரிந்தான் என்கின்றார் திருமூலர். சிவ வடிவத்தினையும் (சிவரூபம்) தரக்கூடியது இத்தோழமை நெறி என்று குறிப்பிடும் திருமூலர், இத்தோழமை நெறி இவ்வுலக இன்பங்களையும் இறை உலக இன்பங்களையும் தவறாது அளிக்கும் மேன்மையுடையது என்கின்றார். இவ்வரியத் தோழமை நெறியைப் பின்பற்றிப் பெருமானை நண்பனாகக் கொண்டு இன்புற்று அப்பெருமானின் திருவடி இன்பத்தினைப் பெற முயல்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!