கடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்

2967

பரம்பொருள் தனக்கு உவமை இல்லாதவன் என்றும், தான் பிறரைத் தொழாதவன் என்றும், பிறப்பு இறப்பு அற்றவன் என்றும் கண்டோம். எது பரம்பொருள்? எது முழுமுதல்? எது உண்மையான கடவுள்? எத்தகைய கடவுள் முழுமுதல் கடவுள் எது வழிபடுவதற்கு உரியது அல்ல? என்பதனைச் சித்தாந்த சைவ மெய்கண்ட நூலான சிவஞான சித்தியார் விளக்குகின்றது.

உலக உயிர்வகைகள் எல்லாம் நால்வகையிலேயே தோன்றுகின்றன. அவை முட்டை வழி தோன்றுவன, வியர்வை வழி தோன்றுவன, விதை, வேர், கிழங்கு வழி தோன்றுவன, கருப்பையில் தங்கித் தோன்றுவன என்பனவாம். முட்டை வழி பறவைகளும், ஊர்வனவும்,  நீர்வாழ்வனவும் தோன்றும். வியர்வையிலே கிருமி, பேன், புழு, வண்டு, சில ஊர்வனவும், விட்டில் பூச்சி முதலியனவும் தோன்றும். வித்து அல்லது விதை, வேர், கொம்பு, கொடி, கிழங்குகள் போன்றவற்றில் தாவரங்கள் தோன்றும். கருப்பையில் தங்கி வானவர்கள், மாந்தர்கள், நாற்கால் விளங்குகள் தோன்றும். இவ்வாறு தோன்றுவனவே நால்வகைத் தோற்றத்துக்கு உட்படுவன எனப்படுபவை. இவை அனைத்துமே உயிர் வகைகள்தாம். இவை எழுவகைப் பிறப்பிற்கு உட்பட்டு இறத்தலை அடையும். எழுவகை பிறப்பு எனப்படுவது வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவையாகும். இவை அனைத்தும் பிறப்புத் இறப்புக்கு உட்படுவதனால் இவை ஒருபோதும் பரம்பொருளாக, வழிபடும் முழுமுதல் பொருளாக ஆக முடியாது என்று சிவஞான சித்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது.

பிறந்து இறப்பது எல்லாம் பரம்பொருளாகாது என்ற தெளிவின்மையினால் தான் இன்று வழிபாட்டில் பல்வேறு குளறுபாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன. மருத்துவத் தன்மை வாய்ந்த தாவரங்கள் இன்று கடவுளாக மாறியிருக்கின்றன. விதை, வேர், கிழங்கு போன்றவற்றில் இருந்து தோன்றி மடியும் வேப்பிலை, அரச மரம், ஆல மரம், கொன்றை மரம், வில்வம், அறுகம் புல், துளசி, எருக்க வேர், வன்னி, போன்ற தாவரங்கள் பரம்பொருளினைப் போன்று எண்ணப்பட்டு வழிபாட்டிற்குரியனவாகி நிற்கின்றன. சித்த மருத்துவத்திற்கும், பெருமானின் திருநீராட்டிற்கும் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளான அவை இன்று கடவுளர்களாக மாறியிருக்கின்றன. பரம்பொருளை வழிபடுவதை விடுத்துத் தாவரங்களை வழிபட்டு, உண்மை வழிபாட்டிற்கு வேறுபட்டு நிற்கின்றனர்.

சித்தாந்த சைவத்தில் அடையாளங்களும், சின்னங்களும், உருவகமும் முதன்மை பெறுகின்றன. அவற்றில் புராண அடிப்படையில் உணர்த்தப் படும் உண்மைகள் உருவகமாக உணர்த்தப்படுகின்றன. கட்டியமாக ஓம்காரத்தை யானை முகம், குண்டலினியை உணர்த்தும் பாம்பு, திருந்திய உயிரை உணர்த்தும் மயில், சேவல், ஆடு, சுண்டெலி போன்றவை. இவை அனைத்தும் உயிர்வகைகளே! இவற்றை வழிபடுவது பயனற்றது! இவற்றைப் பரம்பொருளாக வழிபடுவது ஆகாது என்று சைவம் குறிப்படுகின்றது.
தவிர, கருடன், பல்லி, தவளை, மீன் போன்றவை நம்பிக்கையின் அடிபடையில் சகுணங்களாக இடம்பெறுவனவே யன்றி, அவை ஒருபோதும் நம் பிறவி அறுவதற்குத் துணை நிற்க இயலாது. ஏனெனில் அவையும் பிறப்பு இறப்புக்கு உட்படுபவைகளே!

அன்னையும் பிதாவும் முன்னேறிதெய்வம் என்று நன்றியினால் நம் பெற்றோர்களையும் நம் முன்னோர்களையும் வணங்க வேண்டுமே தவிர, அவர்கள் நம் வழிபாட்டிற்குரிய முழுமுதல் பொருளாக முடியாது. கரணியம் அவர்களும் பிறப்புக்கும் இறப்பிற்கும் உட்படுபவர்களே! உலகக் கல்வி ஆசான்களும் சமயக் கல்வி ஆசான்களும் வணக்கத்திற்கு உரியவர்களேயன்றி பரம்பொருளைப் போன்று வழிபாட்டிற்கு உரியவர்கள் அன்று! இன்று பலரும் பரம்பொருளை வழிபடாது தத்தம் சமய ஆசான்களைக் கடவுள் என்று எண்ணி வழிபடுவதும் தவறு என்று சித்தாந்த சைவம் குறிப்படுகின்றது. பிறப்பு இறப்பினுக்கு உட்படும் சமய ஆசான்களைப் போன்றே காவல் தெய்வங்களாகவும், நடுகல் தெய்வங்களாகவும், கிராமத்துத் தேவதைகளாகவும், வானுலகில் வாழ்கின்ற வானவர்களாகவும் (தேவர்களாகவும்) பிறந்து இறக்கின்ற அனைவருமே உயிர்வகைகள்தாம். இவற்றிற்கு இறைவன் சிற்சில ஆற்றல்களைக் கொடுத்திருப்பினும் முழுமுதற்  பரம்பொருள் என்று சைவர்களுக்கு வழிபாட்டிற்கு உரியவன் சிவப்பரம் பொருளே! அவனே பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவன். மற்றைய அனைத்தும்  உயிர் வகைகளே! அவை வணக்கத்திற்கு உரியவையே அன்றி வழிபாட்டிற்கு உரியவை அன்று என்பதே சித்தாந்த சைவத்தின் தலையாய கொள்கை!