126. சதாசிவலிங்கம்

1773

126. சதாசிவலிங்கம்

பெருமானின் திருவருள் அண்டங்களிலும் உடலிலும் பொதிந்து உள்ளமையால் அவை சிவலிங்கங்கத்திற்கு வேறு வடிவம் என்று குறிப்பிடும் திருமூலர், திருக்கோயில்களில் அமையப் பெற்றிருக்கும் சதாசிவலிங்கம் உணர்த்தும் உண்மையினை விளக்குகின்றார். தமது உண்மை நிலையில் வடிவம், பெயர், தொழில் என்று எதுவும் இல்லாது இருக்கின்ற சிவம் எனும் பரம்பொருள், உலக உயிர்களுக்கு அருள்புரிவதற்காகப் பொது நிலையில் உலகங்களுடனும் உலகப் பொருள்களுடனும் தொடர்பு கொண்டு நிற்கும் போது, பல வடிவங்கள், பல பெயர்கள், பல தொழில்கள் உடையது ஆகின்றது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு சிவம் கொள்கின்ற வடிவங்கள் மூன்று என்பர். அவை

  • வடிவம் அற்ற நிலையாகிய அருவம்,
  • வடிவம் உள்ளதும் வடிவம் அற்றதுமான அருஉருவம்,
  • வடிவம் உடையதுமான உருவம்

என்று குறிப்பிடுவர்.

தனது சிறப்பு நிலையில் சிவம் என்று அழைக்கப்படும் பரம்பொருளே தனது பொதுநிலையில் சிவன் என்று அழைக்கப்படுகின்றது என்றும் ஆண் பெண் என்ற பால் வேறுபாடுகளாய்க் குறிக்கப்படுகின்றது என்றும் மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. உண்மையில் பரம்பொருள் ஆண் பெண் என்ற பால் வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டது என்று தெளியப்படும். அருவுருவத் திருமேனியாகிய வடிவம் உடையதும் வடிவம் அற்றதும் ஆன சிவலிங்கத் திருவடிவாய் நிற்கின்றபோது அவனைச் சதாசிவன் என்று குறிப்பிடுவர் என்பர். இச்சதாசிவத் திருவடிவினை அருளோன் என்று தமிழில் சுட்டுவர். இதை விடுத்து பல்வேறு உருவத் திருவடிவங்களில் பெருமானை மகேசுவரன் என்று குறிப்பிடுவர். இதனை மறைப்போன் என்று தமிழில் கூறுவர். எனவே சதாசிவலிங்கம் எனப்படுவது பெருமானின் வடிவம் உள்ளதும் வடிவம் அற்றதுமான அருவுருவத்திருவடிவினை உணர்த்தி நிற்பது என்று தெளியப்படும்.

சதாசிவலிங்கம் எனும் பெருமானின் அருவுருவத் திருவடிவானது, எரியும் தீப்பிழம்பைப் போன்று, கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற எந்த உறுப்புக்களும் இன்றி இருப்பது. எனினும் ஓர் உருவம் உடைமையினால், அருவம் உருவம் இரண்டையும் ஒருசேரப் பெற்றிருப்பதனால் இதனை அருவுருவம் என்கின்றனர். உருவ வடிவங்கள் பலவற்றிற்கு இச்சதாசிவலிங்கமே மூலமாயும் முதலாகவும் இருப்பதனால் இதுவே சைவத் திருக்கோயில்களில் சிறப்பாக அமைக்கப்படுகின்றது. சிவ ஆகமங்களில் குறிக்கப்படுவதும் மெய்கண்ட நூல்களில் குறிக்கப்படுவதுமான இச்சதாசிவலிங்கங்களே நம் பண்டைத் தமிழர்களால் எல்லா சைவத் திருக்கோயில்களிலும் நன்கு உணர்ந்து அமைக்கப்பெற்றுள்ளன. சிவ ஆகமங்களையும் சைவ நெறியையும் தெளிவாய் உணர்ந்திருந்த நம் முன்னோர்கள், கருவறையில் சதாசிவலிங்கங்களை அமைத்து, அச்சதாசிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட பிற அருளிப்பாட்டுத் திருவடிவங்களான இருபத்தைந்து சிவ வடிவங்களையும் பிள்ளையாரையும் முருகனையும் அம்மையையும் துணைவடிவங்களாகத் திருக்கோயில்களில் அமைத்து வழிபட்டனர்.

எது எப்படி இருப்பினும் பிள்ளையார் வழிபாடும், முருக வழிபாடும், அம்மை வழிபாடும், தனித்துவம் பெறுவதற்கு முன்பு சிவன் திருக்கோயில்களில், கருவறைகளில் சதாசிவலிங்கங்களும் பொது மண்டபத்தில் ஆடல்வல்லான் (நடராசர்) திருவடிவமும் தவறாமல் இருப்பதனை ஆராய்ச்சியுடைய நம் முன்னோர் உறுதி செய்துள்ளனர் என்பதனைத் திருமுறை பாடல் பெற்றத் திருக்கோயில்கள் பறைசாற்றி நிற்கின்றன. சதாசிவலிங்கங்களைத் துணை வடிவங்களாகச் சைவத் திருக்கோயில்களில் அமைக்கின்ற தவற்றினை மறந்தும் நம் முன்னோர்கள் செய்ததில்லை என்பதனைத் தெளியலாம். சதாசிவலிங்கத் திருமேனி அறவே இல்லாத சைவத் திருக்கோயில்களில் துணைவடிவமாகச் சதாசிவலிங்கம் அமைக்கப்படுவது ஒரு சிறு அளவு மகிழ்ச்சியை அளிக்கினும் அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதனைத் திருமந்திரத்தின் வழி அறியலாம். சதாசிவலிங்கத் திருவடிவின் மூலத் தன்மையையும் முதன்மையையும் அறியாது குறிப்பிட்ட நோக்கிற்காகத் திருக்கோயில்களில் அமைப்பது கேட்டிலும் பெரும் கேடு என்பதனைத் தெளிதல் வேண்டும்.

திருக்கோயில்களில் கருவறைகளிலும் இல்லங்களில் வழிபாட்டு அறைகளிலும் மூல வடிவாயும் முதன்மைத் திருவடிவாயும் வைத்து வழிப்பட வேண்டிய இச்சதாசிவலிங்கம் அனைவராலும் அகத்தும் புறத்தும் சிறப்பாக வைத்து வழிபடுவதற்கு உரியது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. சதாசிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் தீங்கு ஏற்படும் என்ற அறியாமையைச் சைவர்களிடத்தே சைவ சமயத்திற்குப் புறம்பானவர்கள் பரப்பி விட்டிருக்கின்றனர் என்பதனைத் தெளிதல் வேண்டும் என்பர். தனி மாந்த புறப்பூசனைக்கும் தனி மாந்தர் அகத்தே வைத்துத் தொடர்ந்து எண்ணுவதற்கும் (தியானித்தல்) மிகச் சிறந்த திருவடிவாகிய இச்சதாசிவலிங்கத்தின் ஆழ்ந்த உண்மைகளைத் திருமூலர் விரிக்கின்றார்.

உண்மையில் சதாசிவலிங்கத் திருவடிவில் பெருமானின் இரண்டு திருவடி பத்துக் கை, ஐந்து முகம், முகம் ஒன்றிற்கு மூன்று கண்களாகப் பதினைந்து கண்கள் என இருக்கின்றன என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,

“கூடிய பாதம் இரண்டும் படிமிசை,
பாடிய கையிரண்டு எட்டும் பரந்துஎழும்,
தேடும் முகமைந்தும் செங்கயல் மூவந்தும்,
நாடும் சதாசிவ நல்ஒளி முத்தே”

என்று குறிப்பிடுகின்றார். அருளோன் திருவடிவான சதாசிவலிங்கத் திருவடிவில், ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்குகின்ற பெருமானின் அருளிப்பாட்டு முறையில் சதாசிவலிங்கத் தண்டின் அடிப்பாகம் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன் என்ற பெருமானின் நான்கு அருள் திருவடிவினை உணர்த்துவதாக உள்ளது என்கின்றார் திருமூலர். சதாசிவலிங்கத் தண்டு ஆவுடையாள் என்று குறிக்கப்படும் வட்டத்தோடு பொருந்தி இருக்கின்ற பகுதி அருளோன் என்னும் சதாசிவத்தை உணர்த்தியும் இப்பகுதிக்கு மேலாக இருக்கின்ற தண்டு மேல் நோக்கில் முறையே விந்து, நாதம், சத்தி, சிவம் என்ற பெருமானின் நான்கு நிலைகளை உணர்த்தி நிற்கின்றது என்கின்றார் திருமூலர். இதனாலேயே சதாசிவலிங்கத் திருவடிவம் அனைத்து வடிவங்களுக்கும் மூல வடிவம் என்பார் திருமூலர். இதனை,

“வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்,
மீதான ஐமுகன் விந்துவும் நாதமும்,
ஆதார சத்தியும் அந்தச் சிவனோடும்,
சாதாரணம் ஆம் சதாசிவம் தானே”

என்று குறிப்பிடுகின்றார்.

சிவபெருமானின் திருவருள் வேறுபட்டு நின்று அருளும் வடிவ நிலை வேறுபாடுகளைச் சிவபேதம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். இவை ஒன்பது எனப்படும். இவ்வொன்பது நிலைகளை வேறுபட்டு மாறி வருகின்ற ஒன்பது நிலைகள் என்பர். இவ்வொன்பது நிலைகளை உணர்த்தி நிற்பது சதாசிவலிங்கம் என்கின்றார் திருமூலர். மேல் குறிப்பிட்ட ஒன்பது நிலைகளில் சதாசிவத்திற்கு மேல் உள்ள நான்கு நிலைகளை அருவம் என்றும் சதாசிவத்திற்குக் கீழ் உள்ள நான்கு நிலைகளை உருவம் என்றும் ஆவுடையாளோடு பொருந்திய சதாசிவத்தை அருவுருவம் என்றும் குறிப்பிடுவர். இவ்வாறு அருவுருவமாய்ச் சதாசிவலிங்கம் இருப்பதனால் தான் சாக்கிய நாயனார் வரலாற்றில் குறிப்பிடுகையில்,

“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்,
நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”

என்று சதாசிவலிங்கம் பற்றிய உண்மையைத் தெய்வச் சேக்கிழாரும் குறிப்பிடுவார்.

சதாசிவலிங்கமாய் நிற்கின்ற பெருமானின் திருவருளே, சதாசிவமாய் பெருமான் நிற்கும் நிலையில் மனோன்மணியாய் நின்று அருளுகின்றது என்பர். பெருமான் மகேசுவரனாய் நிற்கும் நிலையில் அவனுடைய திருவருள் ஆற்றல் மகேசுவரியாய் (மறைப்போளாய்) நின்று அருளுகின்றது என்பர். பெருமான் துடைப்போனாக (உருத்திரன்) நிற்கும் நிலையில் அவனின் திருவருள் துடைப்போள் அல்லது உமை என்று நின்று அருளுகின்றது என்று குறிப்பிடுவர். பெருமான் திருமாலாக அல்லது காப்போனாக நிற்கும் நிலையில் அவனின் திருவருள் திருமகள் அல்லது காப்போளாக நின்று அருள் புரியும் என்று சுட்டுவர். பெருமான் நான்முகன் அல்லது படைப்போனாக நிற்கும் நிலையில் அவனது திருவருள் ஆற்றல் கலைமகள் அல்லது படைப்போளாக நின்று அருள்புரியும் என்பர். எனவே சதாசிவலிங்கத் திருவடிவில் பெருமான் உயிர்களுக்காக வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயர்களுடன் நின்று அருளும் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் அத்தொழில்களுக்கு உரிய அருளாற்றல்களையும் உணர்த்தி நிற்கின்றது என்பர். இதனாலேயே சதாசிவலிங்கத் திருவடிவினை மூலம் என்றும் எவ்வடிவிற்கும் முதன்மையானது என்றும் குறிப்பிடுவர்.

சிவ ஆகமங்களும் மெய்கண்ட நூல்களூம் திருமூலரும் நாயன்மார்களும் சதாசிவலிங்கத்தின் மூல நிலையையும் முதன்மையையும் உணர்ந்து போற்றி வழிபட்ட சிறந்த நெறியினை முறையாக மேற்கொண்டு வாழ்வில் உயர்வு பெறுவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!