12. ஈசன் அடி போற்றி

1997

12. ஈசன் அடி போற்றி

            திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் எனும் வழக்கு ஏற்படும் அளவிற்குத் திருவாசகம் ஓதுபவரின் உள்ளத்தை உருக்கக் கூடியது. திருவாசகத்தை ஓதிய வள்ளல்   இராமலிங்க அடிகள், “வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம்சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”  என்று குறிப்பிடுவார். அத்தகைய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள மந்திரச்செய்யுள்களின் எண்ணிக்கை 658. இதற்கு ஏற்றாற் போல் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள சிவபுராணத்தில், “வாழ்க”, “வெல்க”, “போற்றி” என்ற சொற்களின் எண்ணிக்கையும் அமைந்துள்ளன. சிவபுராணத்தில்
                                             6 -ஆறு “வாழ்க” என்ற பதங்களும்
                                             5- ஐந்து “வெல்க” என்ற பதங்களும்
                                             8 – எட்டு “போற்றி” என்ற பதங்களும்
அமைந்திருப்பது இறைவனின் அருட்குறிப்பே ஆகும்.
அவற்றிலும் சிவபுராணத்தில் இடம்பெற்றுள்ள எட்டுப் போற்றிகள் சிவபூசனையில் பெருமானுக்குச் சாற்றப்பெறும் எட்டு மலர்களுக்கு நிகராகக் குறிப்பிடுவர். அவ்வெட்டு மலர்களில் முதல் மலராக விளங்குவது, ஈசன் அடி போற்றி என்பதாகும்.

            ஈசன் என்றால் எல்லாவற்றையும் ஆள்பவன் என்று பொருள். சிவச்செறிவில் பெறக்கூடிய எட்டுப் பேறுகளில் (அட்டமா சித்தி) ஈசத்துவம் என்பதும் ஒன்று. இது சிவனைப் போல் ஆள்கின்றதன்மையைப் பெறுவது என்று குறிக்கப் பெறுகின்றது. எனவே, “ஈசன் அடி போற்றி” எனும் தொடரின் வழி எல்லாவற்றையும் ஆள்பவனின் திருவடிகளை வணங்குகின்றேன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெருமான் எல்லாவற்றையும் ஆள்பவனாக இருப்பதனாலேயே அவனை ஆண்டவன் என்று குறிப்பிடுகின்றோம். ஒரு நாட்டை மன்னன் ஆள்வதுபோல பெருமானே அண்டங்களையும் அவற்றின் உள்ளே உள்ள கோள்களையும் விண்மீன்களையும் ஆளுகின்றான். அண்டங்கள் 108 கோடிக்குமேல் விரிந்தன என்பார் மணிவாசகர். 

       அண்டங்களும் அண்டங்களுக்கு உள்ளே உள்ள ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது எனும் நிழற் கோள்கள், மதி முதலானவையும் பெருமான் ஆளுவதற்கு ஏற்பவே செயல்படுகின்றன. உயிரற்ற அண்டங்களையும் அண்டங்களுக்கு உள்ளே உள்ள ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது எனும் நிழற் கோள்கள், மதி முதலான உயிரற்றக் கோள்களையும் பெருமானே தோற்றுவித்து, அவை அவைக்குரிய இடங்களில் நிற்பித்து, அவ்வாறு நிற்பதனால் உயிர்களுக்கும் பிறவற்றிற்கும் ஏற்படும் நன்மை தீமைகளையும் உறுதி செய்து பெருமானே அவற்றை ஆளுகின்றான். பெருமான் ஆளுகின்ற அல்லது செலுத்துகின்றபடியே அவை நமக்குப் பலாபலன்களை அளிக்கின்றன.

            சோதிடப் பலன் என்றும் சாதகப் பலன் என்றும் இராசிப் பலன் என்றும் கணிக்கப் படுவதெல்லாம்பெருமான் இக்கோள்களை ஆள்வது அல்லது செலுத்துவது என்பதனை ஒட்டியே ஆகும்.கோள்கள்அவற்றின் சுற்று வட்டத்தில் இருக்கின்ற இடங்களை வீடு என்றும் அவை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகருவதனைப் பெயர்ச்சி என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறே சனிப் பெயர்ச்சி, குருபெயர்ச்சி என்றெல்லாம் வருகின்றது. உயிரில்லாத, அறிவற்றக் கோள்களின் பெயர்ச்சியினை, நகர்வினைப் பெருமானே செய்கின்றான். இவ்வாறு நகர்வதனால் உலகப் பொருள்களுக்கும் உயிர்வகைகளுக்கும் கிட்டும் நன்மை தீமைகளை வகுத்து வைத்திருப்பவன் பெருமானே ஆகும். இதனையே, “வகுத்தான் வகுத்த வழி” என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார்.

            இருபத்து ஏழு விண்மீன்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு குறிக்கப் பெறும் பன்னிரண்டு இராசிகளையும் ஏற்படுத்தியிருப்பவன் பெருமானே என்று தெளிதல் வேண்டும். அண்டங்களையும் கோள்களையும் விண்மீன்களையும் ஆள்பவன் பெருமானே என்பதனை உணர்த்தவே திருக்கோயில்களில் ஒன்பது கோள்களின் (நவக்கிரகம்) வடிவங்கள் அமைக்கப் பெற்றன. அதுபின்னாளில் தவறான வழிகாட்டுதல்களினாலும் சமயத் தெளிவின்மையினாலும் வழிபாடு என்பது அவற்றை ஆளும் பெருமானுக்கே என்பது மாறி, ஆளப்படுகின்ற உயிரற்றக் கோள்களுக்கு என்றாகிவிட்டது. இதனையே திருஞானசம்பந்தப் பெருமான், “தானுறு கோளும் நாளும்” என்று குறிப்பிட்டார். பெருமான் கோள்களையும் நாள்களான விண்மீன்களையும் ஆள்வதனையே பெருமான் அதில்உறைவதாகக் குறிப்பிட்டார். மேலும் பெருமானே அவற்றை ஆள்வதால் பெருமானை வழிபடும் அன்பர்களுக்கு அவை நல்லனவற்றையே அளிக்கும் என்பதனை, “ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல, அடியார் அவைர்க்கு மிகவே” என்று திருஞானசம்பந்தர் அருளினார்.

            ஈசன் அடி போற்றி என்றமையால் உலக உயிர்கள் நிலைபெற்று வாழ்வதற்குத் துணையாக இருக்கின்ற நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் ஐந்து பூதங்களையும் அவ்வைந்து பூதங்களினால் ஆனபொருள்களையும் பெருமானே ஆளுகின்றான் என்று மணிவாசகர் உணர்த்துகின்றார். மண்ணிற்கு மணமும் எல்லாவற்றையும் தாங்குகின்றத் தன்மையும் பயிர்கள் விளைவதற்கு உரிய திறமும்கொடுத்து அதனை ஆளுபவன் பெருமானே என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். நிலமகளுக்குத்தாயாய் அதனைத் தோற்றுவித்தவன் பெருமானே என்கின்றார். உயிரற்ற நிலத்தைப் பூமகள், நிலமகள் என்பது அதில் பொதிந்துள்ளப் பெருமானின் திருவருளைப் பற்றியே ஆகும். இத்தகைய அரிய நிலத்தை ஆள்பவன் பெருமானே ஆகும்.

            மழை, அருவி, ஆறு, ஏரி, குளம், கிணறு, கடல் என்று எத்தகைய நிலையில் நீர் நிற்பினும் அதனைத்தோற்றுவித்து ஆள்பவன் இறைவனே என்பார் மணிவாசகர். இதனாலேயே நீர்நிலைகளைப் பெருமானின் திருவருளாக எண்ணி நம் முன்னோர் வழிபட்டனர். பெருமானின் திருவருளை அம்மையாகத் தாயாக எண்ணும் தமிழர், காவிரியைக் காவிரித்தாய் என்று வணங்கினர். மாரி எனும்மழையை மாரியம்மன் என்றனர். சுவையையும் தண்மையையும் அளித்து உணவாயும் உணவு விளைவதற்குத் துணையாகவும் அமைகின்ற நீரைத் தோற்றுவித்து அதனை ஆள்பவன் பெருமானே என்று மாணிக்கவாசகப் பெருமான் உணர்த்துகின்றார். உயிரற்ற நீரைப் பார்க்கையில் அதனை உயிர்களுக்கு அளித்து ஆள்கின்றப் பெருமானை நினைதல் வேண்டும். வெறும் ஆறுகளிலும் குளங்களிலும் கிணறுகளிலும் கடல்களிலும் புனித நீராடி எழுவதனால் மட்டும் நம் குற்றங்களும் வினைகளும் கழிந்து போகும் என்பதனை விடுத்து அவற்றை ஆளும் பெருமானின் திருவருள் வேண்டும் என்று எண்ண வேண்டும் என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார். இதனையே,

“கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித்துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்
எங்கும் ஈசன் என எனாதவர்க்கு இல்லையே”

என்று திருநவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.

தீயைச், சுடரை, ஒளியைப் பெருமானுக்கு வடிவாகநாம் பார்த்தாலும் உயிரற்ற அத்தீயே பெருமான் அல்ல என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார். தீக்குள் வெம்மையையும் வெளிச்சத்தையும் வைத்தவன் பெருமானே என்கின்றார். மாந்தர் சமைத்து உண்ணவும் வழிபாடுகளுக்குத் துணையாகவும் உள்ள தீயை உண்டாக்கியவன் பெருமானே என்கின்றார். உயிரற்ற, அறிவற்றத் தீயை ஆள்பவன் பெருமானே என்று மணிவாசகர் தெளிவுபடுத்துகின்றார். “தீயில் வெம்மை வைத்தோன்” என்று மணிவாசகர் திருவண்டப்பகுதியில் இதனைக் குறிப்பிடுவார். தீ எல்லாவற்றையும் எரித்து நீறாக்கித் தூய்மை செய்வது போல பெருமான் அறிவு வெளிச்சம் தருபவனாகவும் நம் வினைகளை எரித்து நீறு ஆக்குகின்றவனாகவும் இருப்பதனால் தீயைப் பெருமானுக்கு வடிவாகக் கொண்டனர் நம் முன்னோர். தீயே கடவுள் என்று நின்று விடாது, அத்தீயை உண்டாக்கி, அத்தீயையும் செலுத்துபவன் அல்லது ஆள்பவன் பெருமானே என்று உணர்த்துகின்றார் மணிவாசகப் பெருமான்.

            உயிரும் அறிவும் அற்ற வளியில் ஊக்கம் அல்லது ஆற்றலை வைத்தவன் பெருமானே என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். வளியின் துணையால் உயிர்கள் உயிர் வாழ்வதும் பல தொழில்கள் நடப்பதும் கண்கூடு. இத்தகைய காற்றைத் தோற்றுவித்து அதனை ஊர்ந்து செல்லவும் ஆளுகின்றவன் பெருமானே என்கின்றார் மணிவாசகர். அவ்வாறே வெளியையும் தோற்றுவித்து எல்லாவற்றிற்கும் இடங்கொடுக்கும் தன்மையை அதனுக்கு அளித்து அதனையும் ஆள்பவன் பெருமானே என்றும் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். நிலக்கடவுள், நீர்க்கடவுள், தீக்கடவுள், வளிக்கடவுள், வெளிக்கடவுள் என்று அறிவற்ற, உயிரற்ற ஐந்து பூதங்களை அது அதுவாய் வழிபடல் தவறு, மாறாக அவற்றினுள் இருந்து அவற்றைச் செலுத்தி அவற்றை ஆளும் பெருமானை வழிபடுவதே உண்மையான தெளிவு என்பதனை, “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி …. நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே” என்று மணிவாசகர் குறிப்பிடுவார்.

            ஈசன்அடி போற்றி என்றதனால் உயிர்களுக்குத் தலைவனாக, அவற்றை ஆள்பவனாகப் பெருமான் இருக்கின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். இதனாலேயே பெருமானை ஆண்டான் என்றும் தங்களை அடிமை என்றும் அருளாளர் பெருமக்கள் குறிப்பிட்டனர். உலகங்களையும் உயிர்களையும் ஐம்பூதங்களையும் ஆளும் அரசன் என்பதனால்தான் பெருமானின் உறைவிடத்தைக் கோயில் என்றனர். பெருமான் உயிர்களையும் உலகங்களையும் அவற்றுடன் கலந்து நிற்கும் வகையால் ஒன்றாயும் அவற்றைச் செலுத்தும் வகையால் உடனாயும் பெருமான் வேறு உயிர்கள் வேறு பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையால் வேறாயும் நின்று, தோற்றுதல், நிற்பித்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளுதல் எனும் ஐந்து தொழில்களை உணர்த்தும் பெருமானின் திருவடிவை நடவரசர் (நடராசர்) திருவடிவு என்றனர். பெருமானின் ஐந்தொழில் எனப்படுவது அப்பெருமானின் ஆளுதலையே குறிக்கின்றன. பெருமான் ஆள்வதை உணர்ந்த நம் நால்வர் பெருமக்களை ஆளுடைய பிள்ளை, ஆளுடைய அரசு, ஆளுடைய நம்பி, ஆளுடைய அடிகள் என்று குறிப்பிட்டனர். எல்லாவற்றையும் ஆளுகின்ற பெருமானுக்கு ஆளாகும் நிலையை உணரப்பெறுவோம். நாளும் அப்பெருமானின் திருவடிகளை, ஈசன் அடி போற்றி என்று வாழ்த்தி வழிபடுவோம்.

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!