சிவம் எனும் பரம் பொருள், உயிர்கள் அதன் பேர் அருளை அறிந்து அதனை அடைவதற்காகப் பொது நிலையில் இறங்கி வந்து பல்வேறு அருளிப்பாடுகளைச் செய்து வருகின்றது. அவ்வகையில் அமைந்தவையே பெருமான் ஆற்றிய எட்டு வீரச்செயல்கள். இவ்வெட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த எட்டுத் தானங்கள் அல்லது எட்டுத் திருக்கோயில்களையே எட்டு வீரத்தானங்கள் என்று குறிப்பிடுவர். உயிர்களுக்கு அருள்புரிவதற்கும் அவற்றிற்கு நல்லறிவு புகட்டவும் பெருமான் எண்ணில் அடங்கா வீரச்செயல்களை நாளும் நாளும் இயற்றவும் உயிர்களுக்கு மிக இன்றியமையாதனவாகக் கருதப்படும் எட்டு வீரச்செயல்களையும் அவை இடம் பெற்ற திருக்கோயில்களையும் திருமூலர் தமது திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார். பெருமான் நிகழ்த்திய அருள் வரலாறுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்பிய நம் முன்னோர், குறிப்பிட்டத் தலங்களில் அமைத்து வழிபட்ட சிவலிங்கங்களுக்கும் அச்சிவலிங்கங்கள் அமைக்கப்பெற்றத் திருக்கோயில்களுக்கும் பெருமானின் அருட்செயல்களைப் பொருத்தி, அவ்வருட்செயல்களுக்குரிய பெயர்களையும் அவற்றிற்கு இட்டு, குறிப்பிட்ட அருள் செயல்கள் அங்கு நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டு வழிபட்டனர். இவ்வாறே தலபுராணங்கள் அமைந்தன என்று மகாவித்துவான் அருணைவடிவேல் அவர்கள் குறிப்பிடுவார்கள். அவ்வருட்செயல்களுக்கு ஏற்றவாறே பெருமானும் அச்சிவலிங்கங்களிலும் அத்திருக்கோயில்களிலும் நின்று அருளுகின்றான் என்பது வரலாறு. இவ்வகையிலே அமைந்த எட்டு வீரத்தானங்களைத் திருமுலர் குறிப்பிடுவதனைக் காண்போம். யான் எனது எனும் அறியாமையை உண்டாக்கும் ஆணவ மலம் என்ற அக இருளினை ஒத்த அந்தகன் என்ற தீயப் பண்புடைய ஒருவனைப் பெருமான் வைரவக் கடவுள் வடிவத்திலே சென்று மூவிலைச்சூலத்தின் நுனியில் ஏற்றித் துன்புறுத்தி அழித்தது திருக்கோவலூர் எனும் வீரத்தானத்தில் என்று குறிப்பிடுகின்றார். விருப்பம், செயல், அறிவு (இச்சை, கிரியை, ஞானம்) என்ற மூன்றினைத்( மூவிலைச் சூலம்) தன் அருள் ஆற்றலாய்க் கொண்டு, உயிர்களின் ஆணவத்தினை பெருமான் ஒடுக்குகின்றான் என்ற உண்மையைப் புலப்படுத்துவதற்குத் திருமூலர் இத்தானத்தைக் குறிப்பிடுகின்றார். யான் எனது எனும் செருக்கினால் பிற உயிர்களுக்கு எப்போதும் துன்பத்தையே உண்டாக்கும் உயிர்கள் அந்தகனைப் போன்று இறை ஆற்றலுக்கு அடங்கும் நாள் வந்தே தீரும் என்ற அரிய செய்தியினைத் திருக்கோவலூர் திருக்கோயில் உணர்த்துகின்றது என்பதனை உணர்ந்து அன்பர்கள் வாழ வேண்டும் என்று தெளிவுபடுத்துகின்றார். அண்டங்கள் எல்லாம் கடந்து ஆகாயத்திற்கு மேலாயும் எல்லாப் பொருள்களுக்கும் இடம் கொடுத்தும் பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கி நிற்கின்ற பெருமானின் பேர் ஆற்றலை உணராது இறைவன் இட்ட பணியைச் செய்யும் பிரமன் தான் செய்யும் படைத்தல் தொழிலால் செருக்குற்று இறைவனைப் பணிதலில் மாறுபடவும் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை அரிந்து இதர தேவர்களுக்கும் உண்மையை உணர்த்திய இடமான திருக்கண்டியூரை அடுத்துக் குறிப்பிடுகின்றார். இறைவன் அளித்தவற்றைக் கொண்டு இப்பூவுலகில் வாழும் நாம், நாமே அனைத்தையும் செய்கின்றோம், நம் திறத்தாலும் நம் பேர் அறிவாலுமே அனைத்தையும் நடத்துவிக்கின்றோம் என்ற செருக்கினால் வாழக்கூடாது என்ற படிப்பினையை இத்தானத்தின் வீரச்செயலைக் குறிப்பிடுவதன் வழி உணர்த்துகின்றார். தன்னாலேயேதான் தனக்கு அழிவு எனும் வரம் பெற்ற சலந்தரன் என்பவன் எவருக்கும் பணியாது எல்லோரையும் துன்புறுத்த, அவன் அறியாமையைக் கொண்டு பெருமான் அவனை அழித்தார். ஒரு சான்றோன் வடிவிலே சென்று அவனின் ஆற்றலைக் காணவேண்டுவதாய்க் கூறித் தன் திருவடியால் நிலத்தில் கீறிய சக்கரத்தினைத் தூக்க இயலுமா என்று கேட்க, சலந்தரன் தன் அறியாமையினால் அச்சக்கரத்தினைத் தன் தலைக்கும் மேலாகத் தூக்க, அதுவே சக்கரமாய் மாறி அவன் உடலை இரண்டாகப் பிளந்தது. இவ்வரலாற்றினை விளக்கும் திருவிற்குடி வீரத்தானத்தைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் உடல் வலிமையால், பணத்தால், பதவியால், பட்டத்தால், படிப்பால், அழகால், திறமையால், குலப்பெருமையால் செருக்குற்றுத் திரியும் சிலரின் பண்பினை ஒத்த முப்புரவாதிகளின் ஆணவம், கன்மம், மாயை (பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள்) ஆகிய அறியாமையை ஒரு சிரிப்பில் திருவதிகை வீரத்தானத்தில் அழித்ததையும் குறிப்பிடுவார். முனிவர் சிலர் செய்த வேள்வியில் தோன்றிய யானை வடிவினனாகிய கயாசுரனை யாரும் அழிக்க இயலாதபோது சிவபெருமான் ஒருவனே அழித்து அவனுடைய யானைத் தோலைப் போர்த்தார் என்ற திருவழுவூர் வீரத்தான வீரச் செயலக் குறித்துச் சிவமே பரம்பொருள், சிவனை மற்ற தேவர்களுள் ஒன்றாக வைத்து எண்ணக் கூடாது என்ற உண்மையை வலியுறுத்துகின்றார். சிவனையே பற்றுக்கோடாகக் கொண்டு, சிவநெறியில் ஆழ்ந்து சிவனின் திருவருளுக்கு ஆளாகின்றவர்களைச் சாதாரண மக்களைப் போன்று காலனால் அவர்களின் உயிரை உடலிலிருந்து பிரிக்காமல் சிவனே வந்து அழைத்துச் செல்வான் என்ற உண்மையை உணர்த்தும் மார்கண்டேயருக்காகக் காலனைக் காலால் பெருமான் உதைத்தத் திருக்கடவூர் வீரத்தானத்தை அடுத்ததாகக் குறிப்பிடுகின்றார். சிவனை மதியாத, சிவவேள்வி அல்லாத அவவேள்வியைச் செய்த தக்கனையும் அவ்வேள்விக்குச் சென்ற தேவர்களையும் கண்டித்துத் திருப்பறியலூர் வீரத்தானத்தின் வழி சிவ வேள்வி அல்லாத பிற வேள்விகள் சைவர்களுக்கு உரியது அல்ல எனவும் சைவர்கள் சிவவேள்வி அல்லாத வேள்விகளில் பங்கேற்றல் கூடாது என்றும் புலப்படுத்துகின்றார். பரம்பொருள் பற்று அற்றவன், அவனைப் பற்று அண்ட இயலாது என்பதனைக் திருக்குறுக்கை வீரத்தானத்தில் காமனை எரித்த வரலாற்றினைக் கூறி உணர்த்துகின்றார். இறைவனின் அறக்கருணைச் செயல்களையும் மறக்கருணைச் செயல்களையும் குறிக்கும் திருக்கோயில்கள் சிவநெறியில் நிற்பாருக்கு இறைவனிடத்திலே அன்பைப் பெருக்குதற்கு இன்றியமையாதனவாம். அவற்றை அறிந்து ஆலய வழிபாட்டினைத் தவறாமல் செய்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!