64. சிவவேள்வியும் அவவேள்வியும்

1325

சீர்மிகு செந்தமிழர் பண்டைய காலம் தொட்டுத் திருகோவில்களிலும் இல்லங்களிலும் திருவுருவங்களை வைத்து வழிபாடு செய்யும் மரபினையே கொண்டிருந்தனர் என்று பெரியார் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். ஆரிய வருகைக்குப் பின்பே தமிழர் வழிபாட்டு முறையில் வேள்வி வளர்க்கும் முறை ஏற்பட்டு உள்ளது என்று மேலும் அவர் குறிப்பிடுவார். இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்த ஆரியர் கூட்டம் அவர்கள் தற்காலிகமாகத் தங்கும் இடங்களில் இறைவழிபாடு செய்வதற்காகத் தீயை மூட்டி அதனை இறைவனாக வழிபட்டனர். இதுவே வேள்வி எனப்பட்டது. இவ்வேள்வியில் தானியங்களையும் விலங்குகளையும் போட்டால் அது அக்கினி தேவன் என்று அழைக்கப்படும் தீக்கடவுளால் வேண்டப்படும் இறைவனிடம் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டு வேள்விக்குரிய கடவுளை மகிழ்வித்து, வேள்விக்குண்டத்திற்கு அக்கடவுளை அழைத்து வருவான் என்று நம்பினர்.

வேள்வி எனப்படும் தீவேட்டலில் விலங்குகளைப் பலியிட்டால் போரில் வெற்றியும் மேலோகத்தில் இந்திரப்பதவியும் கிட்டும் என்று நம்பினார்கள். எனவே குதிரைகளையும் யானைகளையும் வேள்வியில் இடும் கொலை வேள்விகள் இடம் பெற்றன. தமிழர் மரபில் முதன் முதலில் இத்தகைய வேள்வியைச் செய்த தமிழ் மன்னனைப் பற்றி புறநானூற்றுச் செய்தி குறிப்பிடுகின்றது. புத்தர்,மாவீரர் போன்ற பகுத்தறிவு சிந்தனையாளர்கள் கொலை வேள்வியினை மறுத்தனர். கொலை வேள்விகள் நிறுத்தப்பெற்று இன்று அக்கினி வேள்வியாகத் தமிழர்களின் அன்றாட வாழ்விலும்  இறைவழிபாட்டிலும் வேள்வி நிலைத்த இடத்தைப் பெற்றுவிட்டது. வேள்வியில்லாத வழிபாட்டினைச் சடங்கினைச் சீர்மிகு செந்தமிழர் நினைத்துப் பார்க்கவும் முடியாத சூழல் ஏற்பட்டுவிட்ட நிலையில் சைவத் தமிழ்ச் சான்றோர் வேறு வழியின்றி அக்கினி வேள்வியினைச் சைவப்படுத்தினர். அக்கினி வேள்வியினைச் சிவவேள்வியாக்கி சிவநெறியோடு அதனை இணைத்துக்கொண்டனர். இச்சிவவேள்வியினைப் பற்றியே திருமூலரும் குறிப்பிடுகின்றார்.

வடமொழிவேத அடிப்படையில் செய்யப்படுகின்ற வேதவேள்வியில் அக்கினி என்ற தீக்கடவுள் முதலிடம் பெறுகின்றான். இவ்வக்கினி தேவன் வேள்வியில் இடப்படும் பொருட்களை அவியாக வேள்வித்தலைவனிடம் ஒப்படைக்கின்றான். அவிப்பொருளை வேண்டப்படும் கடவுளிடம் சேர்ப்பிக்க அக்கினி தேவனுக்கும் உணவுப் பொருட்களைக் கொடுப்பர். அக்கினி தேவனுக்கும் வேண்டப்படும் பிற கடவுளுக்கும் வேறு தேவர்களுக்கும் உரிய வைதீக மந்திரங்களையும் சொல்வர். சிவவேள்வி அப்படி அன்று. சிவவேள்வியில் வேள்விக் குண்டத்தில் எரியும் தீயைச் சிவமாக எண்ணிச் செயற்பாடுகளைச் சிவ ஆசிரியர்கள் செய்வர். சிவவேள்வி செய்யும் சிவ ஆசிரியர்கள் திருவைந்தெழுத்தான “நமசிவய” மந்திரத்தையே கூறுவர். சிவவேள்விக் குண்டத்தில் சிவனையே தீவடிவில் இருந்து அவிப்பொருளை நேரடியாகப் பெற்றுக்கொள்வார். இத்தகைய வேள்வியையே திருஞானசம்பந்தரின் தந்தையாகிய சிவபாத இருதையர் செய்தார் என்பார் தெய்வச் சேக்கிழார். திருஞானசம்பந்தரும் இத்தகைய சிவவேள்விக்கே திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இறைவரைத் தமிழ்மந்திரங்களால் பாடித் தம் தந்தயாருக்குப் பொற்காசுகள் பெற்றுத் தந்தார்.

திருஞானசம்பந்தருக்குப் பூநூல் அணிவிக்கும் சடங்கின் போது சிவ ஆசிரியர்கள்  திருவைந்தெழுத்தினை ஓதி சிவவேள்வி  செய்யாமல் சூரிய மந்திரத்தை ஓதி அக்கினி வேள்வியைச் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்குத் திருஞானசம்பந்தர் அறிவுரைக்கூறி சூரிய மந்திரத்திற்குப் பொருளும் கூறி அவர்களின் ஐயங்களையும் போக்கி அவர்கள் கூற வேண்டிய மந்திரம் திருவைந்தெழுத்து மந்திரம் என்பதனைச், “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என்று குறிப்பிட்டுச் சிவவேள்வி செய்ய ஆவன செய்தார்.

சைவ நெறியைப் பின்பற்றி வாழும் அன்பர்கள் தங்கள் இல்லங்களில் வேள்வி செய்ய வேண்டும் என்று எண்ணினால் சிவவேள்வியே செய்தல் வேண்டும். சைவர்களின் இல்லங்களிலும் சைவத் திருக்கோவில்களிலும் சிவவேள்வியே செய்யப்பட வேண்டும் என்பது சிவாகம விதியாகும். பல தேவர்களோடு சிவத்தைப் பொதுவாக வைத்து செய்யப்படும் வேள்விகள் சைவர்களுக்கு உரியது அல்ல என்கின்றார் திருமுலர். சைவவேள்விகளில் சிவனையே முழுமுதலாகக் கொண்டு வேள்விகள் இயற்றப்பட வேண்டும் என்கின்றார். சிவனைத் தலைவனாகக் கொள்ளாத வேள்விகளைச் செய்வதும் அத்தகைய வேள்விகளுக்குத் துணைபோவதும் பெரும் துன்பத்தை உண்டாக்கும் என்பதனைத் திருமூலர் நினைவுறுத்துகின்றார். சிவன் அடியவனான தக்கன் ஆணவ செருக்கினால் சிவனை வேள்விக்குத் தலைவனாக வைத்து அதனை இயற்றாமல் திருமாலை வேள்வித் தலைவனாக வைத்து வேள்வியை இயற்றுகின்றான். முதல் அவிபொருளைத் திருமாலுக்கு அளிக்கின்றான். சிவவேள்வி செய்ய வேண்டியவன் அவவேள்வியைச் செய்கின்றான். சைவ நெறியைச் சார்ந்த தக்கன் சிவனை முன்நிறுத்தும் சிவவேள்வியைச் செய்யாமல் அவவேள்வியைச் செய்ததனால் பெருமான் தக்கனின் தவற்றைக் கண்டிக்க வீரபத்திரர் வடிவில் போய்த் தக்கன் வேள்வியை அழித்து அவன் தலையைத் துண்டித்தார் என்பதனைத், “தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை, வெந்தழல் ஊடே புறப்பட்ட விண்ணவர், முந்திய பூசைமுடியாமல் முறைகெட்டுச், சிந்தினர் அண்ணல் சினம்செய்தபோதே” என்பார் திருமூலர்.

சிவனே சிவ வேள்விக்குத் தலைவன், சிவனை மதியாத சிவ வேள்விக்குச் செல்லல், அதில் பங்கு பெறுதல், அவ்வேள்விப் பயனை நுகர்தல் என்பது சிவக் குற்றமாம். அவ்வாறு சிவனை மதியாத அவ வேள்விக்குச் சென்றவர்களை இறைவன் தண்டிப்பார் என்கின்றார் திருமுலர். அவவேள்விக்குச் சென்ற தீக்கடவுளின் கையைத் தடிந்தும் சூரியனின் பல்லை உடைத்தும் கலைமகளின் நாசியை அறுத்தும் சந்திரனைத் தரையில் தேய்த்தும் அவர்களுக்குப் பெருமான் பாடம் புகட்டினார் என்பார் திருமூலர். சைவர்கள் சிவ வேள்வி அல்லாத அவவேள்வியில், முன்னால் இருக்கச் செய்ததினாலும் புகழுக்காகவும் பெயருக்காகவும் அத்தகாத வேள்வியில் அமர்ந்திருப்பார்களேயானால் இறைவன் தண்டிப்பார் என்கின்றார். அவவேள்வியைச் செய்வதும் அவவேள்வியைச் செய்கின்றவர்களை ஊக்குவிப்பதும் அவர்க்கும் பிறர்க்கும் பெரும் தீங்காய் அமையும் என்கின்றார்.

சிவவேள்வி செய்து சிவ மந்திரமான திருவைந்து எழுத்தைச் சொல்லாத சிவ ஆசிரியர்களுக்கு அவர்கள் கூறும் பிற மந்திரங்களே தீமையத் தரும் என்பார் திருமுலர். தம் ஆசிரியர் தம் காதிலே சொல்லக் கேட்ட மந்திரத்தை அவ்வாறே பொருள் அறியாது ஒப்புவிப்பதனையே தவமாக எண்ணிச் செய்துகொண்டிருக்கின்ற சிவ ஆசிரியர்கள் அவவேள்வி செய்து, அவ்வேள்வியில் சிவபெருமானைப் புகழ்ந்து கூரும் மந்திரங்களைச் சொல்லாமல் பிற கடவுளர்களைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களைச் சொன்னால் நலத்துக்குப் பதிலாக அவருக்கும் அவரைச் சார்ந்திருக்கின்றவர்க்கும் கேட்டினை விளைவிக்கும் என்பதனை, “ செவி மந்திரம் சொல்லும் செய்தவத்தேவர், அவிமந்திரத்தின் அடுக்களைக் கோலிச், சவிமந்திரம் செய்து தாம் உறநோக்கும், குவிமந்திரம் கொல் கொடியதுவாமே” என்பார் திருமூலர்.

வேள்வி செய்வதிலே தங்களைச் சிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிவ ஆசிரியர்கள் சிவநெறிக்குரிய ஆசிரியர்கள் என்பதனால் அவர்கள்தான் உண்மைச் சமயம் அறியாத சிவ அன்பர்களுக்குச் சிவ வேள்வியினைச் செய்தும் சொல்லியும் கொடுத்தல் வேண்டும். வருமானத்திற்காக எதையும் செய்யலாம் என்று ஆகிவிடக்கூடாது. சிவ ஆசிரியர்கள் சிவ வேள்வியில் திருவைந்து எழுத்து மந்திரத்தேயே ஓதுதல் வேண்டும். சைவக் கோயில்களிலும் சைவர் இல்லங்களிலும் சிவ வேள்விகள் நடத்தப்படுவதனை உரியவைகள் உறுதிபடுத்த வேண்டும். சைவர்கள் சிவவேள்வி அறிந்த சிவ ஆசிரியர்களைச் சைவத் திருக்கோயில்களில் அமர்த்தவேண்டும். இல்லையேல் அது பெரும் சிவக்குற்றமாய் அமைந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் மக்களுக்கும் சமயத்திற்கும் பெரும் தீங்காய் அமையும் என்கின்றார் திருமுலர்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!