6. பிறருக்காக வாழும் பண்பு

1092

பிறர் நலனுக்காக குளம் வெட்டிய திருநாளைப் போவாரையும் குளம் தூர் எடுத்த கண்பார்வையற்ற தண்டியடிகளையும் சென்ற கட்டுரையில் கண்டோம். இப்பெருமக்கள் பொதுநலம் காப்பதில் பிறருக்காக வாழ்ந்து பெறுவதற்கு அரிய பேற்றினைப் பெற்றார்கள். இனி இல்வாழ்விலே இருந்தப்படி தன்னைச் சார்ந்தவர்களுக்காக வாழ்ந்து பெருவாழ்வு அடைந்த பெருமக்களைக் காணவுள்ளோம்.

 தமக்குத் திருமணம் உறுதிசெய்யப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட கலிப்பகையார் என்பார் போரிலே மாளவும், பன்னிரண்டு அகவையிலேயே தம்பிக்காகத் துறவு பூண்ட திலகவதியார் என்ற தமிழ்த்திரு மகளாரைக் காண்கின்றோம். தமக்கு உறுதி செய்யப்பட்ட ஆடவர் போரிலே மாண்டார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற திலகவதியார் பெற்றோரைப் பறிக்கொடுத்த சூழலில் தன் உயிரைப் போக்கிக் கொள்ளத் துணிகின்றார். அருமைத் தம்பி திருநாவுக்கரசர் பத்து அகவையைத் தாண்டாதவர், திலகவதியாரின் திருவடிகளில் விழுந்து தன்னைத் தனியாக விட்டுச் செல்வாரானால் அவர் முதலில் தம் உயிரை விட்டு விடுவதாகக் கூறி துன்பமடைகின்றார். தன் தம்பி வாழ வேண்டும் என்ற உயரிய பண்பின் காரணமாக, அழகிய அணிகலன்களை எல்லாம் அணிந்து கொள்ளாது, திருமணமும் செய்து கொள்ளாது, எல்லா உயிர்களுக்கும் அருள் செய்கின்ற பண்பினை மட்டும் தாங்கி, வீட்டை விட்டு வெளியேறுதல் இல்லாமல், சிவ வழிபாட்டினையும், உரிய நோன்புகளையும் மேற்கொண்டு, “நமசிவய” எனும் திருவைந்தெழுத்தை நாளும் ஓதி தன் தம்பிக்காகத் தவக்கோலம் யார் பூண்டு வாழ்ந்தார் என்பதனை, “தம்பி உளராக வேண்டும் என வைத்ததயா, உம்பர் உலகு அணைய உறு நிலைவிலக்க உயிர்தாங்கி, அம்பொன்மணி நூல்தாங்காது, அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி, இம்பர்மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்” என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

 தம்பிக்காகத் தவக்கோலம் பூண்டு வாழ்ந்த திலகவதியார், சைவம் விட்டு சமண சமயம் புகுந்த திருநாவுக்கரசர் சைவ   சமயத்திற்கு மீள வேண்டும் என்று நாளும் இறைவனை வேண்டி வாழ்ந்து வந்தார். இவ்வம்மையாரின் வேண்டுதலுக்கேற்ப இறைவனும் திருநாவுக்கரசருக்குச் சூலை நோயினைக் கொடுத்து அவரைச் சைவத்திற்கு மீட்டார். தம்பியாருக்காகவே வாழ்நாள் முழுவதனையும் செலவிட்ட இத்தமிழ்ச்சுடர்க்கொடியின் மாண்பினை என்னே என்பது!

 பழையாறை எனும் ஊரில் அமர்நீதி எனும் பெருமகனார் வாழ்ந்தார். தன் இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் திருவோடும் கொடுத்து வந்தார். ஒருமுறை தன் வீட்டிற்கு வந்த அடியவர் ஒரு கோவணத்தை அவரிடம் கொடுத்து அதனைப் பத்திரமாக வைத்திருக்கும்படிக் கூறி குளக்கரைக்குச் சென்று வருவதாய்ச் சொல்லிச் சென்றார். குளக்கரையிலிருந்து மீண்ட அடியாம் உணவு உண்ட பின் தாம் கொடுத்த கோவணத்தைத் திரும்பக் கேட்டார். உள்ளே வைத்த கோவணத்தைக் காணாது அமர்நீதியார் திரும்பினார். கோவணம் மறைந்து போனதை அடியவரிடம் கூறி, அதற்குப் பதிலாகப் பல கோவணங்களைக் கொடுத்தார். அடியவர் வாங்க மறுத்துத் தாம் கொடுத்தக் கோவணவமே வேண்டும் என்று விடாப்பிடியாய் நின்றார். இறுதியில் தன்னிடமுள்ள மற்றொரு கோவணத்திற்குச் சரி எடையுள்ள கோவணத்தைப் பெற்றுக் கொள்வதாக இசைந்தார்.

 அமர்நீதியாரும் ஒரு துலாக்கோலை நிறுத்தி, அதில் ஒரு புறம் அவ்வடியவர்களின் கோவணத்தை வைத்து மறுபுறத்தில் புதிய கோவணங்கள் பலவற்றை வைத்தும், பின் மணிகளையும், பொன் அணிகளையும், நாணயங்களையும் வைத்தும் துலாக்கோல் சரிசமன் ஆகவில்லை. இறுதியில் அக்கோவணத்திற்கு நிகர் வைக்க முடியாது என்பதனை உணர்ந்து தன் மனைவியையும், தன் பிள்ளையையும் துலாக்கோலில் ஏற்றித் தாமும் ஏறி நின்றார். அப்பொழுதுதான் துலாக்கோல் சரிசமன் ஆனது. தன் கணவருக்காக மனவியும் தன் தந்தைக்காக மறுமொழி பேசாது துலாக்கோலில் ஏறி நின்ற பண்பினை எவ்வாறு எடுத்துரைக்க இயலும். பிறருக்காக வாழும் பண்பினையுடைய அத்தமிழ்ப் பெருமாட்டியினையும் அத்தமிழ் மகவையும் பலகோடி முறை வீழ்ந்து வணங்கினாலும் அவர்தம் பெருமைக்கு ஈடு சொல்ல முடியாது.

 திருச்செங்காட்டங் குடியில் அடியவருக்கு அமுது செய்விக்கும் திருத்தொண்டில் உறைப்பாய் நின்றவர் சிறுத்தொண்டர். அடியவருக்குத் தன் மகனையே வெட்டிக் கறியாக்கி உணவு படைக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, கணவனின் தொண்டிற்காகத் தன் ஆருயிர் மகனை இழக்கத் துணிந்த தமிழ்த்தாய் திருவெண்காட்டு நங்கையின் பிறருக்காக வாழும் மாண்பு போற்றுதற்கு உரியது.மெய்சிலிர்க்க வைக்கிறது. அருமைப் பெற்றோர்களுக்காகத் தன் உயிரயும் கொடுத்தானே தமிழ்த் திருமகன் சீராளன், அவனின் பிறருக்காக வாழும் சீரிய பண்பு பழந்தமிழரின் உயர்ந்த பண்பினுக்க்குச் சான்றாய் பறைசாற்றி நிற்கின்றது, இத்தகைய உயர்த பண்புகளே அவர்களை உயர்ந்த பெருமக்களாய் உயர்த்தியது. இறைவன் திருவருளைக் கூட்டி வைத்து இன்றளவும் அவர்களைப் பேசுவதற்கும் தமிழர்களின் மாண்பினை நிலைநாட்டுவதற்கும் கட்டியக் கூறாய் விளங்குகின்றது