72. சிவ உணர்வும் நன் மக்களும்

1871

பெறத் தகுந்த பேறுகளில் நல்ல அறிவுடைய, நன் மக்களைப் பெறுதல் கிடைத்தற்கு அரிய பேறு என்று திருக்குறள் குறிப்பிடும். பழி இல்லாத நல்ல பண்புடைய மக்களைப் பெற்றால் ஒருவருக்கு ஒரு பிறவியிலும் தீய செயல்களின் பயனாகிய துன்பங்கள் வந்து சேராது என்பதனை, “எழுபிறப்பும் தீயவைத் தீண்டா பழிப்பிறங்காப், பண்புடை மக்களைப் பெறின்” என்று திருவள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார். தன் மகனை நற்பண்புகள் நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் ஒரு தாய், தான் அவனைப் பெற்ற காலத்து அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள் என்று மேலும் கூறுவார். எனவே நற்பண்பு நிறைந்த குழந்தைகளைப் பெறுவது பெற்றோர்களின் கடமையாகவும் கனவாகவும் உள்ளது.

நற்பண்புகள் நிறைந்த குழந்தைகள் ஒருவருக்கு வாய்க்கப் பெறுவது அக்குழந்தை முற்பிறவியில் செய்த நல்வினைத் தீவினையை ஒட்டியும் அக்குழந்தையின் பெற்றோர்கள்களின் முன் வினைப் பயன்களை ஒட்டியும் அமையும் என்று சீர்மிகு செந்தமிழரின் சமயக் கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். இதனை ஒட்டியே வள்ளுவப் பேராசானின் திருக்குறளும், “தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள், தத்தம் வினையான் வரும்” என்று குறிப்பிடும். ஆணும் பெண்ணும் கூடுகின்றபோது ஏற்படுகின்ற உள்ள உணர்வின் இயல்புகளைக் கொண்டே கருவில் தங்கும் குழந்தையின் பண்பு நலன்களை இறைவன் அமைக்கின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருமணம் ஆகிய ஆணும் பெண்ணும் இன்று பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு உள் உணர்வுகளுடன் ஒர் ஒழுங்கின்றிக் கூடுகின்ற இன்றைய சூழலில், நற்பண்புகள் உடைய குழந்தைகளைப் பெற விரும்பும் பெற்றோர்கள் எவ்வாறு கூடுதல் வேண்டும் என்றும் அவ்வாறு உற்ற வகையில் கூடினால் எத்தகைய பண்புகளை உடைய குழந்தைகளை இறைவன் கொடுப்பான் என்றும் திருமந்திரம் தெளிவுறக் கூறுகின்றது.

எப்பொழுதும் இறைவனை மறவாத இறை சிந்தனை உடையவரான பெற்றோர்கள் பரபரப்பு இன்றி அமைதியான முறையில் உரிய காலத்தில் கலவியில் கூடினால் நற்பண்புகள் உடைய குழந்தைகள் இறைவன் திருவருளால் பிறக்கும் என்று திருமுலர் கூறுகின்றார். உள்ளத்தில் இறை உணர்வு இன்றி அவசரத்துடனோ, பரபரப்புடனோ, அச்சத்துடனோ, மன இருக்கத்துடனோ கலவி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதனால் தான் நம் முன்னோர் திருமணத்திற்குப் பிறகு உரிய வேளையில் ஆணையும் பெண்ணையும் இணைக்கும் வழக்கத்தினை ஏற்படுத்தினர். இதனைச் சாந்தி முகூர்த்தம் என்று வடமொழியில் குறிப்பிட்டனர். ஆணும் பெண்ணும் அமைதியற்ற சூழலில் பொருத்தம் இல்லாத இடங்களில் பரபரப்புடன் இறை உணர்வும் மன அமைதியும் இன்றிக் குழந்தைப் பெறும் நோக்கோடு கூடுவதானது நற் குழந்தைகளைப் பெற உதவாது என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது.

தந்தையும் தாயும் கூடும் காலத்து இறை உணர்வு சற்றும் இன்றி பால் உணர்வான காமமே மிக்கு இருக்குமானால், பிறக்கும் குழந்தையை அறிவு மட்டு, மந்தம் அல்லது தாமத பண்பு உள்ள குழந்தையாகப் பெருமான் அமைத்து விடுகின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். கலவியில் ஈடுபடும் தந்தை தாயின் உணர்வில் இறையுணர்வு கூடவும் பாலியல் விருப்பு அல்லது காமம் குறைந்திருப்பின் குழந்தை நற்பண்பும் சீரிய அறிவும் உடையதாகப் பெருமானால் அமைக்கப் பெறும் என்று குறிப்பிடுகின்றார். தாய் தந்தையரிடத்து இறைவுணர்வும் பாலியல் உணர்வான காமமும் ஒரு நிலையில் நில்லாது மாறி மாறி நிற்பதுவும் சற்றும் இறைவுணர்வு இல்லாது இருப்பதுவும் பிறக்கும் குழந்தைக்குச் சினம் மிகுதியாகவும் அறிவு குறைவாகவும் பிறக்கும் அமைப்புக் கிட்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை, “ஏற எதிர்க்கில் இறை அவன் தானாகும், மாற எதிர்க்கில் அரியவன் தானாகும், நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தன் ஆகும், பேரொத்த மைந்தனும் பேர் அரசாளுமே” என்று குறிப்பிடுவார். எனவே தந்தை தாய் கூடுங் காலத்து கொள்கின்ற பண்பு நலன்களின் எச்சமே குழந்தையின் பண்பு நலன்களாகப் பெருமானால் கூட்டுவிக்கப் படுகின்றது என்பதனை உணர்தல் இன்றியமையாததாகும்.

பெருமானே உயிர்களின் பண்பு நலன்களுக்கு ஏற்றவாறு எலும்புகளைக் கழிகளாகவும் நரம்புகளைக் கயிறுகளாகவும் குருதியாகிய நீரால் பிசைந்த இறைச்சியாகிய மண் சுவர்களாகவும் பொருந்த அமைத்து, உயிர் வாழ்வதற்கு என்று உடம்பு என்ற இல்லம் ஒன்றை ஆக்கி அளிக்கின்றான் என்பதனை, “என்பால் மிடந்து நரம்பு வரிக்கட்டிச், செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து, இன்பால் உயிர் நிலை செய்த இறையோங்கும், நன்பால் ஒருவனை நாடுகின்றேனே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனையே திருஞானசம்பந்தரும், “என்பினால் கழி நிரைத்து மண்சுவர் எறிந்து இது நம் இல்லம், புன்புலால் நாறு தோல் போர்த்துப் பொல்லாமையான் முகடு கொண்டு, முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே” என்று குறிப்பிடுவார்.

கருவினுள் தங்கும் உயிர் அந்த அளவிலேயே கருவினுள்ளேயே இறக்கும் ஊழ் இருக்குமானால், பதிந்த கருவைச் சிவ பெருமானே பல நிலைகளில் பல்வேறு வகையால் அழிந்து ஒழியுமாறு செய்து விடுவான் என்கின்றார் திருமூலர். கருவுற்ற முதல் திங்களில் இருந்து தாயின் வயிற்றிலிருந்து வெளியாகும் பத்தாம் திங்கள் வரை பல்வேறு வழிகளில் அக்கரு அழியும்படி செய்துவிடுவான் என்கின்றார். இதற்கு மாறாக அவ்வுயிர் பிறந்து வாழும் ஊழ் உடையது என்றால், பல்வேறு இடையூறுகளிலிருந்தும் இடர்பாடுகளில் இருந்தும் அக்கருவைச் சிவ பெருமான் அது பிறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்தில் அவ்விடர்கள் எனும் சுழியில் அகப்படாது ஆற்றில் நீராட்டுதல் போலவும் எரிகின்ற வைக்கோல் குவையில் இருந்து வாங்கிச் சுடாது வைத்தல் போலவும் தாயது வயிற்றில் உள்ள நீராலும் நெருப்பாலும் அழியாது காப்பான் என்பதனை, “ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே, வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப், பழிபல செய்கின்ற பாசக் கருவைச், சுழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே” என்கின்றார். இதே செய்தியினை மணிவாசகப் பெருமான், “கருவினுள் அழிவதாயும் கழிந்திடாது அழிவதாயும் பரிணமித்து அழிவதாயும் பாலனாய் அழிவதாயும்” என்று குழவி கருவினுள் அழியாது தப்புதலைப் போற்றித் திரு அகவலில் குறிப்பிடுவார்.

கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்துளி மிகுந்து இருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்து இருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும். இரண்டும் சமமாய் இருக்குமாயின் பிறக்கும் குழவி அலியாகும்படி பெருமான் செய்கின்றான் என்ற செய்தியினையும் திருமூலர் குறிப்பிடுவார். பெருமான் கருவிலே அமைத்து அருளுகின்ற உடம்பிலே அரிய மெய்க்கூறுகளை அமைத்து வைத்திருத்தலையும் அந்நன்மைப் பொருந்திய மெய்க்கூறுகளினாலே உயிருக்குப் பல பயன்கள் விளைய வைத்திருத்தலையும் பலரும் அறிய மாட்டார்கள். உயிரின் ஆக்கத்திற்காகப் பல பண்பு நலன்களையும் அவற்றினால் ஏற்படக்கூடிய அறவுணர்வு விருப்பமும் இறை உணர்வு விருப்பமும் அவற்றினால் ஏற்படும் வெற்றியும் கூடும் இறை அருள் பற்றியும் பலரும் அறிய மாட்டார்கள் என்கின்றார்.

எனவே மாந்தராய் பிறந்திட மாதவம் செய்தல் வேண்டும் என்று குறிப்பிடுவதற்கு இணங்க மாந்தப் பிறவியும் மாந்தப்பிறவியில் கிட்டும் நுண் மற்றும் பரு உடல்களும் அவற்றிற்குப் பொருத்தப் பட்டிருக்கும் மெய்க்கூறுகளும் பண்பு நலன்களும் கிடைத்தற்கரியவை என்று உணரல் வேண்டும். அவை உயிர் ஈடேற்றத்திற்குப் பெருமான் நமக்கு அளித்தப் பெருங்கொடை என்பதனை உணரல் வேண்டும். “ நந்த வனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக், கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி” என்ற சித்தர் பாடலுக்கு ஏற்ப இறைவன் கொடுத்த இவ்வரிய உடம்பைப் பல்வேறு வழிகளில் சீரழிப்பது அறிவுடைய செயல் அல்ல என்பதனை உணர்தல் வேண்டும். தாயின் கருவிலும் பின்பு பிறந்த பின்பும் நம் உடல் அழியாமல் காத்து நிற்கும் பெருமானின் பெருங்கருணையை உணர்ந்து, அப்பெருமானின் பேர் உதவிக்குக் கைமாறு செய்தல் கடன் என்று நாளும் அவனை நன்றியால் வழுத்தி வாழும் உயிர்கள் பிறந்த பிறவியின் குறிக்கோளில் இருந்து தடம் பிறழாது வாழ்பவை. இதை உணர்வதே மெய்ஞானமாகும். இம்மெய்ஞானம் ஏற்படின் பரம் பொருளான அச்சிவபெருமான் செவ்வியுற்ற நம் உயிரைத் தன் திருவடிக் கீழ் இருத்தி அவனிடத்திலே இருக்கின்ற பேரின்பத்தை வாறி வழங்கி நம்மைப் பிறவிப் பெரும் பிணியிலிருந்து காப்பாற்றுவான். இதனை உணர்ந்து வாழ்வில் குறிக்கோளுடன் வாழ்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!