இல்வாழ்வு என்பது பெருங்கடலைப் போன்றது. பல இன்ப துன்ப நுகர்ச்சிகளை உள்ளடக்கியது. உற்சாகத்தையும் தளர்ச்சியையும் மாறி மாறி அளிப்பது.. வாழ்ந்தே ஆக வேண்டியது. இன்பமும் துன்பமும் மாறி மாறி இவ்வாழ்க்கைப் பெருங்கடலினை நீந்துவதற்கும் எதிர்கொள்வதற்கும் நாம் பற்றுக்கோடாகக்கொள்ள வேண்டியது இறைவன் திருவடிகளே! அத்திருவடியைப் பற்றிக்கொள்வதற்கு அடிப்படையானது இறைவனைத் தொழுதலே ஆகும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவன் அடி சேராதார்” என்பார் வள்ளுவப் பேராசான்.
தூய மலர்களை அவன் திருவடியில் தூவி வாயால் திருமுறைப்பாடல்களை ஓதி, இரு கைகளைக் கூப்பி அவனைத் தலையாற வணங்கினால் பெருமான் நம் உள்ளத்தில் வந்து அமர்ந்து நம்மை ஓங்குவிப்பான் என்பதனைத், “கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க, சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க” என்று சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார். வழிபாட்டினால் உயிருக்குத் துணையாய் இருக்கின்ற பெருமானின் திருவருளை உள்முகமாக எண்ணுவதற்கு வாய்ப்பு ஏற்படும். தனக்குள்ளும் தன்னைச் சுற்றியும் நடைபெறும் அனைத்துச் செயல்களும் பெருமானின் துணையுடனேயே நடக்கின்றன என்ற தெளிவும் உணர்வும் ஏற்படும். இத்தெளிவும் உணர்வும் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றியும் நடக்கும் ஒவ்வொரு செயல்களையும் அச்சமின்றி, பதற்றமின்றி, அமைதியாய், அறிவோடு எதிர்கொள்ள துணை நிற்கும். இதனாலேயே இறைவழிபாடு மன அமைதியையும் மன நிறைவையும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிவினையும் நல்குகிறது என்பார்கள்.
உண்மையான இறைவழிபாட்டின் மூலம் உண்மையாய் இறைவன் நம் உள்ளே இருப்பதாய் உணர்ந்த ஒருவர், அகத்தேயும் புறத்தேயும் தன்னைச் சீர்படுத்திக் கொள்ள முயல்கின்றார். இதனால் மனத்தில் பிறருக்குத் தெரியாமல் இருக்கின்ற குற்றங்கள் குறுகுறுக்கத் தொடங்குகின்றன. நம் குற்றங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற பதைபதைப்பு ஏற்படுகின்றது. இந்தப் பதைபதைப்பின் வெளிப்பாடுதான், “பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” என்ற மணிவாசகரின் திருவாக்கு.
வழிபாடு செய்வதனால்தான் பாவங்கள் என்று சொல்லப்படும் தீவினைகளைச் சிவ நல்வினைகளாக மாற்ற இயலும் என்று திருமுறைகள் குறிப்பிடுகின்றன. முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைப் பயன்களையும் இப்பொழுது நுகர்ந்து கொண்டிருக்கின்ற நல்வினைத் தீவினைப் பயன்களையும் இப்பொழுது செய்கின்ற செயல்களினால் இனி எதிர்காலத்திலும் வரும் பிறவிகளிலும் நுகரப்போகும் நல்வினைத் தீவினைகளும் கழியும் என்பதனைப், “பாதம் தொழுவார் பாவம் தீப்பார் பழனநகராரே” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார். இதனால் வழிபாடு என்பது வாழுங்காலத்து நம் செயற்பாடுகளைச் சீர்படுத்த உதவுகின்றது என்பது புலனாகிறது. மனத்தினால் எண்ணும் எண்ணங்களும் வாயினால் சொல்லும் சொற்களும் உடலினால் செய்யும் செயல்களும் தனக்கும் பிறருக்கும் நன்மை பயப்பதாகவே அமைய வழிபாடு துணை நிற்கின்றது.
எனினும் இவ்வழிபாட்டின் பயன்கள் உடனுக்குடனே நமக்குக் கிட்டாததினாலும் அல்லது அதனை நாம் உணராததினாலும் அவசர உலகில் பலர் சோர்ந்து விடுகின்றனர். இறைவனை வழிபடுவதனால் ஒன்றும் கிடைப்பதில்லை! இறைவனை வழிபட வழிபடத் துன்பம் அதிகரிக்கின்றது! சோதனைமேல் சோதனை வருகின்றது! நான் நாளும் இறைவனை வழிபடுகின்றேன், துன்பத்தில் நலிவுறுகின்றேன். இறைவனை வழிபடாதவர் நன்றாகத் தானே இருக்கின்றார் என்று எண்ணி மயங்குகின்றனர். வழிபாடு செய்கின்றவர்களை இறைவன் கண்டும் காணாமலும் இருக்கின்றான் என்றும் வாழ்க்கையில் இறப்புப் போன்ற பேரிழப்பு ஏற்படுமாயின் தான் செய்த வழிபாடெல்லாம் விரையம் ஆயிற்று என்றும் புலம்புவர். இதில் எதுவும் விரையம் அல்ல! எல்லாவற்றையும் பெருமான் நினைவில் வைத்தே இருக்கின்றான். உரிய வேளையில் நாம் செய்த வழிபாட்டிற்கு இறைவன் தவறாது கைமாறு அளித்துக் கொண்டே இருக்கின்றான் என்பதனைத் திருமூலர் தெளிவுற எடுத்து இயம்புகின்றார்.
பரம்பொருளான சிவபெருமான் பிறந்து இறக்கும் சிறுதெய்வங்களைப் போன்று அல்லாமல் என்றும் அழியாதவன். நிலவு, கொன்றை மலர், ஊமத்த மலர், கங்கை, கொக்கு இறகு போன்றவற்றைத் தமது அருள் பண்பின் அடையாளமாய்த் தமது திருச்சடையில் சூடியுள்ளவன். வேண்டியவர்கள் வேண்டாதவர்கள், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடு இல்லாது அனைவருக்கும் அவன் ஒருவனே நிலைத்தப் பேரின்பம் வழங்குபவன். தகுதியுடைய உயிர்களுக்கு அவன் பேரருளை வழங்குவதிலிருந்து தவறுவதே கிடையாது. அவனை அன்போடு உண்மையாய் வழிபடுகின்றவர்களை எப்பொழுதும் மறவாது நினைவில் நிறுத்துபவன். வணங்குபவர் வணங்காதவர் என்பதனை நன்கு அறிந்து பேரருள் செய்ய வல்லவன் சிவபெருமான் என்பதனைப், “பிறப்பில்லி பிஞ்ஞகன் பேரருளாளன், இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி, தன்னைத் தொழுமின் தொழுதால், மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே” என்று திருமூலர் குறிப்பிடுவார்.
நாம் செய்யும் வழிபாட்டினைப் பெருமான் தவறாது நினைவில் கொள்கின்றான் என்பதனைத் திருநாவுக்கரசு அடிகள், “தொழுது தூமலர் தூவித் துதித்து நின்றாரையும், அழுது காமுற்று அரற்றுகின்றாரையும், பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும் எழுதும் கீழ்க் கணக்கு இன்னம்பர் ஈசனே” என்று குறிப்பிடுவார். பெருமானை மலர்கொண்டும் பாடல்கள் பாடியும் நாளும் வழிபடும் அன்பர்களையும் அவ்வாறு வழிபாடு செய்வதனால் குற்றங்கள் நீங்கி உள்ளன்பினால் பெருமானை அடைதல் வேண்டிப் புலம்புகின்றவர்களையும் வெறுமனே பொழுதைப் போக்கி உலக முகமானச் செயல்களுக்கே நேரத்தைச் செலவிட்டு வழிபாடு இயற்றாதவர்களையும் இறைவன் நன்கு அறிவன்.அவர் அவர் செயலுக்கு ஏற்பத் தவறாது செயற்பயனை அளிப்பன் என்று திருநாவுக்கரசு அடிகள் அருளுகின்றார். ஒவ்வொரு உயிரின் செயற்பாடுகளும் இறைவனின் நல்வினைத் தீவினைச் செயல்பாட்டுக் குறிப்பில் இடம்பெற்று அதற்குறிய பயன்கள் அளிக்கப்படுகின்றது என்கின்றார். இப்பிறவியில் நுகர வேண்டியவற்றை இப்பிறவியிலும் அடுத்தப் பிறவிகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டியவை அடுத்தப் பிறவியிலும் நுகர்வுக்கு வரும் என்கின்றார். ஆனால் உறுதியாக எல்லா வினைகளுக்கும் பெருமான் கூலி கொடுப்பான் என்பது மட்டும் திண்ணம் என்பது திருநாவுக்கரசு அடிகளின் திருவாக்கு.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!