53. எட்டு மலர்களில் சிறந்த மலர்

1248

பரம்பொருளான சிவத்தைப் புறத்தில் கண்டு வழிபட்டுப் பின் அதனை அகத்தில் இருத்தி வழிபடுதலை அகப்பூசனை என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) எனும் இறைவனை அடையும் நான்கு நன்னெறிகளில் அறிவு நெறியில் மிகவும் வலியுறுத்தப்படுவது அகப்பூசனையாகும். அகப்பூசனையில் பெருமானுக்கு எட்டு மலர்கள் (அட்ட மலர்கள்) சாற்றுகின்ற சிவ ஆகம மரபு கடைபிடிக்கப்படுகின்றது. அவ்வெட்டு மலர்கள் யாவை எனில் கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு என்பனவாம். இவ்வெட்டு இயல்புகளை எட்டு மலர்களாகக் குறிப்பிடும் சித்தாந்த சைவம், கொல்லாமையைப் பெரிதும் வலியுறுத்துகின்றது. அன்பே சிவம் என்பதனால் உயிர்க்கொலையைச் சைவம் தவிர்க்கச் சொல்கின்றது.

இறைவன் நிலம், நீர், காற்று, தீ, வெளி, கதிரவன், நிலவு, உயிர் என்ற எட்டுப் பொருள்களிலும் நின்று அருள் புரிவதாய்ச் சித்தாந்த சைவம் குறிப்பிடும். இதனையே, “அட்ட மூர்த்தம்” என்று வடமொழியில் குறிப்பிடுவர். இறைவன் எட்டுப் பொருள்களில் நின்று அருளுவதை, “அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக்கு ஆலநிழற், பட்டனுக்கு என்னைத் தன்பாற் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே” என்று சேந்தனாரின் திருப்பல்லாண்டு குறிப்பிடும். பெருமான் எல்லா உயிர்களிலும் நின்று அருளுகின்றான் என்பதனைக், “காயமே கோயிலாக” என்று திருநாவுக்கரசரும், “ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே” என்று திருமூலரும் குறிப்பிடுவார். எனவேதான் ஐயன் திருவள்ளுவரும் துறவறவியலில் கொல்லாமைப் பண்பினை எடுத்து இயம்புகின்றார்.

எல்லா உயிர்களிலும் இறைவன் நீங்குதல் இன்றி நிலைபெற்று இருப்பதாலும் உலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறைவன் திருவடியை அடைதற்கு முயன்று கொண்டிருப்பவை என்பதாலும் அவற்றைக் கொல்லாமல் இருப்பதே சிறந்த அறம் என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். சித்தாந்த சைவம், இறைவனைப் போன்று உயிர்களும் என்றும் உள்ள பொருள், அது அழிவு படாது என்று குறிப்பிடுகின்றது. உயிர்கள் வாழும் உடல்களில் இருந்து அவற்றைப் பிரிப்பதே கொல்லுதல் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. தனக்குக் கிட்டிய பொருள்களையும் வாய்ப்புக்களையும் தானும் பயன்படுத்திக் கொண்டு பிற உயிர்களும் மேம்படுவதற்கு அவற்றைப் பகுத்துக் கொடுத்து அவற்றின் உயிர் ஈடேற்றத்தைத் தடை செய்யாமல் இருப்பதே கொல்லா அறம் எனப்படுகின்றது.

உலக வாழ்க்கையைத் துறந்த துறவிகளைக் காட்டிலும் பிற உயிர்களைக் கொல்வதற்கு அஞ்சுகின்றவர் உயர்ந்தவர் என்பார் ஐயன் திருவள்ளுவர். தன் உயிர் உடலிலிருந்து நீங்கிப் போகும் சூழல் ஏற்பட்டாலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தான் மற்ற ஓர் உயிரினை அதன் உடலில் இருந்து நீங்கச் செய்தல் கூடாது என்பதே தமிழர் தம் அறம். முன்பு கொலைகள் பல செய்து உயிர்களை அவற்றின் உடம்புகளில் இருந்து போக்கினவர்களே இப்பிறவியில் நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று கொல்லாமை அறத்தை வலியுறுத்துவார் ஐயன் திருவள்ளுவர். மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலரும் இவ்வரிய கொல்லாமை அறத்தை வலியுறுத்துகின்றார்.

உயிருக்கு மெய்யுணர்வு மேலிடுவதற்கே சிவபூசனையில் நம் உள்ள அன்பிற்கு அடையாளமாகப் பல மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளையும் உதிரிப் பூக்களையும் சாற்றுகின்றோம். ஆயினும் அதனைவிட சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமை என்ற பண்பேயாம். அதனினும் சிறப்பு அசையா விளக்கைப் போன்ற ஒன்று பட்ட மனமும் அம்மனதில் ஒளிவிட்டு நிலைத்து நிற்கும் சிவம் அல்லது இலிங்கமுமாம் என்பதனைப், “பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர், மற்றோர் அணுக்களைக் கொல்லமை ஒண்மலர், நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும், உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே” என்று குறிப்பிடுவார் திருமூலர். மாந்தர்களின் உயிரை மட்டும் அல்லாது இதர உயிர் வகைகளைக் கொல்வதும் நல்லறம் ஆகாது என்பதே சித்தாந்த சைவத்தின் கொள்கை. தாவரங்கள், பறவைகள், மீன்கள் முதலான எவ்வுயிர் ஆயினும் அவற்றைக் கொல்லுதல் அறம் அற்ற செயலேயாம். உலகில் வாழும் அனைத்து உயிர் வகைகளும் இறைவனை அடையும் முயற்சியில் உழன்றுக் கொண்டிருக்கின்றன என்பதனால் அவற்றின் உயிரை அவற்றின் உடலில் இருந்து பிரிப்பது அறம் அற்ற செயலேயாம்.

உயிரினங்களின் உயிரை அவற்றின் உடலில் இருந்து வெறுமனே பிரிப்பது கொலை வினைப் பயனைத் தரும் என்கின்றார் திருமூலர். “கொல், குத்து” என்று மற்ற உயிரை அவற்றின் உடலில் இருந்து பிரிப்பவரைக் காலனின்(எமன்) ஏவலர்கள் வலிமையுடைய கயிற்றால் கட்டித் தீயைப் போன்று துன்பம் கொடுக்கின்ற நரகத்தில் கொண்டு போய், “நில்” என்று நிறுத்துவர் என்கின்றார் திருமூலர். இறந்த பின்பு கிட்டும் நுண் உடலில் தங்கி இருக்கும் உயிர் தாங்க முடியாத துன்பத்தை நுகரும். எவரும் அதனைத் தடுக்க இயலாது என்பதனைக், “கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை, வல்லடிக்காரர் வலிக்கயிற்றாற் கட்டிச், செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை, நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே” என்கின்றார்.

உடலில் இருந்து உயிரைப் பிரித்து எடுப்பது போன்ற துன்பம் தரக்கூடிய தீய சொற்களைப் பேசுவதும் தீய எண்ணங்க¨ளைக் கொண்டிருப்பதும் தீய செயல்களைச் செய்வதும் கூட கொலை வகைதான். சுடு சொற்களாலும் தகாத சொற்களாலும் பொய்களினாலும் கோள் சொல்வதினாலும் பிறருக்குப் பெரும் துன்பத்தை விளைவிப்பவர்களும் கொலைகாரர்கள்தாம். தீய சிந்தனையுடன் எல்லாவற்றையும் தீயதாகவே எண்ணி நல்லவற்றைச் சிறிதும் சிந்தியாது பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்களும் கொலைகாரர்கள்தாம். தீய செயல்களையே எப்பொழுதும் செய்து தீய செயல்களின் ஒட்டு மொத்த வடிவாக விளங்குகின்றவர்களும் கொலைகாரர்கள்தாம்.

இளங்குருதி, இளவேகம், உடற்பலம் என்று எதற்கு எடுத்தாலும் அடி, உதை, வெட்டு குத்து என்று சிறிதும் சிந்தியாது வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களும் இன்று இல்லாவிட்டலும் இறந்த பிறகு அதற்குரிய பயனில் இருந்து தப்பவே முடியாது என்கின்றார் திருமூலர். வழிப்பறி செய்யும்போது பிறருக்கு விளைவிக்கும் துன்பம், வீடுகளில் திருடும்போது பிறருக்கு ஏற்படுத்தும் துன்பம், முரட்டுத்தனமாய் வாகனங்களைச் செலுத்துவதனால் பிறருக்கு ஏற்படும் துன்பம், விளையாட்டுகளில் கருத்து வேறுபாடுகளினால் மூண்ட சண்டை பின் பகையாகி அதனால் ஏற்பட்ட வெட்டுக் குத்துக்களினால் விளையும் துன்பம், வாய்ச் சண்டைகளினால் திருவிழாக்களிலும் பொது கூட்டங்களிலும் ஏற்படும் வெட்டுக் குத்துக்களினால் ஏற்படும் துன்பம், குண்டர் கும்பலில் சேர்ந்துக்கொண்டு வெறுமனே மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் பல்வேறு துன்பம் போன்றவை அனைத்திற்கும் இறைவனின் முன்பு பதில் சொல்லியாக வேண்டும் என்று பல இளைஞர்கள் இன்று மறந்து கிடக்கின்றனர்.

மனைவி, மக்கள், பெற்றோர் போன்றோரை அடித்துத் துன்புறுத்துவதும் அவர்களுக்கு உடல் துன்பத்தையும் உள துன்பத்தையும் ஏற்படுத்துதல் கொலைக்குரிய பலனைப் பெற்றுத் தந்துவிடும் என்பதனைப் பலரும் மறந்து வாழ்கின்றனர். ஈன்ற குழந்தையைக் குப்பைக் கூளங்களில் வீசி எறிவதும் சிறார் கொடுமைகளைப் புரிவதும் வீட்டுப் பணிப் பெண்களைக் கொடுமை செய்வதும் தமக்குக் கீழ் உள்ள பணியாட்களை ஈவு இரக்கம் இன்றிக் கொடுமை செய்வதும் கொலை வினைக்குரிய பயனைப் பெற்றுத் தந்துவிடும் என்பதனைப் பலரும் எண்ணாமல் இருக்கின்றனர். மற்ற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் இயல்பினைக் கொண்ட உள்ளத்திலும் உயிரிலும் அன்பு விளைவதற்கு வழி இல்லை. அன்பு விளையாத உள்ளத்திலும் உயிரிலும் சிவம் வெளிப்பட்டுத் தோன்றுவதற்கு வழியில்லை! செய்த துன்பத்திற்கு நரகம் அன்றி வேறு கதியில்லை! எனவே சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் கொலை நீங்கிய அன்பு வாழ்வினை இல்லத்திலும் பிற மாந்தரிடத்திலும் பிற உயிர்களிடத்திலும் மேற்கொள்வோமாக! “ஆருயிர்கட்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று நாளும் இறைவனைப் பணிந்து வாழ்வாங்கு வாழ்வோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!