30. கல்லாத தலைவனும் காலனும்

989

கல்வி கற்றதன் பயன் தூய அறிவினன் ஆகிய இறைவனின் நன்மை பொருந்திய திருவடிகளைத் தொழுவதற்கே என்பதனைக், “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழார் எனின்” என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் குற்றம் நீங்கி, அற நெறியோடு வாழ்தலே கற்றோருக்கு அழகு என்று ஒளவை பிராட்டி குறிப்பிடுவார். சமய அறிவினைக் கொண்டு இறைவனை எப்பொழுதும் நினைவில் நிறுத்தி அருள் வழியில் தனக்குக் கீழ் உள்ள மக்களை வழி நடத்துபவனும் அற நெறிகளைக் கற்று அதன் வழி மன வாக்கு காயத்தினால் அறவழி நிற்பவனுமே கற்ற நல் தலைவன் என்றும் திருமூலர் குறிப்பிடுவார். வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் பெற்று பற்பல பட்டங்களை வாங்கித் தலைவனாகத் தன்னைக் கூறிக்கொள்பவன் உண்மையில் கல்லாதவனே என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். உடலிலிருந்து உயிர்களைக் காலம் கூடிய உடன் பிரிப்பவன் காலன் எனப்படுவான். சமயம் சார்ந்து அருள் வழி நில்லாமலும் அற நெறிகளை உணராது அறநெறியில் நில்லாமலும் மக்களை வழி நடத்தும் குமுகாயத் தலைவனும் உயிரை உடலிலிருந்து பிரிக்கும் காலனும் உயிர்களுக்குத் துன்பம் செய்யும் வகையால் நேர் ஒப்பர் என்பதனைக், “கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

மக்களைத் துன்புறுத்தும் வகையால் கல்லா தலைவனும் காலனும் நேர் ஒப்பானவர்கள் ஆயினும் உடலிலிருந்து உயிரைப் பிரிக்கும் காலன், கல்லா தலைவனைக் காட்டிலும் நல்லவன் என்பதனைக், “கல்லா அரசனில் காலன் மிக நல்லன்” என்று திருமூலர் தெளிவுபடுத்துகின்றார். முறைமை தவறாது தன் கடமையைக் காலம் தவறாது செய்கின்ற காலன் நல்லவன். நன்நெறிகளையும் நல் ஒழுக்கங்களையும் இறை நெறியையும் கற்றறிந்த ஆன்றோருடன் ஆரய்ந்து அறியாத தலைவன் அதனைத் தன் தலைமைத் துவத்தின் கீழ் செயற்படுத்த மாட்டான். அதன்படி அவன் அதனை வாழ்ந்தும்காட்ட மாட்டான். அதனால் நல்லவர்களையும் ஆன்றோர்களையும் அவன் செய்கையினால் துன்புறுத்துவான். அவர்களின் நல்லெண்ணங்களைக் கொல்வான். நாட்டில் நடக்க வேண்டிய நல் அறப்பணிகளைக் கொல்வான். சமய நெறிகளைக் கொல்வான். பண்பாட்டைக் கொல்வான். உயர் பழக்க வழ்க்கங்களைக் கொல்வான். மக்களின் முறையான வளர்ச்சியைக்கொல்வான் என்பதனைக், “ கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்” என்கின்றார் திருமூலர்.

அற நெறியில் வழுவாது நின்று குற்றத்தைக் குற்றம் என்று அறிந்து அதனைப் போக்கும் அறிவும் ஆளுமையும் உடையவனே கற்ற நல் தலைவன். தனக்குக் கீழ் உள்ள மக்களின் பொருளாதாரத்தையும் தனக்குக் கீழ் உள்ள கருவூலத்தையும் மேம்படுத்த அறநெறியில் நின்று இறை அருளை முன் வைத்துப் பொருளாதாரத்தைப் பெறுக்குவதிலும் பொருளைச் சேர்ப்பதிலும் சேர்த்தப் பொருளைக் காப்பதிலும் காத்தப் பொருளை நல் வழியில் செலவு செய்தலிலும் பொருளீட்டும் புதிய வழிமுறைகளைத் தாமாகவோ தக்காரின் துணை கொண்டோ கண்டு செயல் படுத்துபவனே கற்ற நல் தலைவன்.

அருள் வழி நின்று திருவடி உணர்வு கைவரப்பெற்ற நல்லவர்களாகிய மெய்யடியார்களின் உயிகளைக் காலன் வந்து கவர்ந்து செல்வதில்லை. மாறாகப் பெருமானே வருகின்றான் என்பதனை, “நல்லாரைக் காலன் நுணுக நில்லானே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இவ்வுண்மையை மார்கண்டேயர் எனும் அடியாரின் வாழ்க்கை வரலாற்றின் வழி அறியலாம். காலன் தன் உயிரப் பறிக்க வந்த போது இறைவன் மீது ஆழ்ந்த பற்றும் ஒழுக்க நெறிச் சீலமும் கொண்ட மார்கண்டேயர் திருக்கடவூரில் சிவலிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானை ஆறத்தழுவிக் கொள்ள, சிவக் கொழுந்திலிருந்து சிவபெருமான் காலனைக் காலால் உதைத்தமையை, “ சாட எடுத்தது தக்கன் தன் வேள்வியில் சந்திரனை, வீட எடுத்தது காலனை” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். திருவடி உணர்வும் அறநெறிச் சீலமும் நிறைந்த திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மணிவாசகர், அமர்நீதி நாயனார், கண்ணப்பர் போன்றோருக்குக் காலன் வந்து அவர்கள் உயிரைப் பறித்து உடல் கிடக்க அல்லாமல் உடலோடே இறைவன் திருவடியை அணைந்தார்கள் என்பது நல்லாரைக் காலன் நெருங்க மாட்டான் என்பதற்குச் சான்றாகப் பகர்வர்.

அஞ்சாமை, கொடை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இயல்புகளில் குறைவுபடாமல் இருக்கும் தலைவனே நல்ல தலைமைத்துவம் உடையவன் என்பார் ஐயன் திருவள்ளுவர். ஆடம்பரம் இல்லாது எளிமையாய்க் கடுஞ்சொல் சொல்லாத தலைவனே அறநெறிகளில் சிறந்த தலைவனுக்கு இலக்கணமாவான். அத்தகைய தலைவனின் தலைமையையே எல்லோரும் உயர்த்திக் கூறுவர். உதவிகள் தேவைபடூகின்றவர்களுக்கு அவர்களின்மீது கடும் சொற்களை அள்ளி வீசாமல் இனிய சொற்களைப் பேசிக் கொடுத்துக் காக்கவல்ல தலைவனே அற நெறியும் இறை ஊணர்வும் கொண்ட கற்ற நல்ல தலைவன் என்பர். தன் தலைமைத்துவத்தைக் குறைகூறும் சொற்களைப் பொறுக்கும் பண்புடைய நல்ல தலைவனின் தலைமைத்துவத்தின் கீழே மக்கள் அடிபணிய விரும்புவர்.

                   மக்கள் நடுவில் தவ நெறியைக் காக்கத்தவறிய தலைவனும் காலனுக்கு ஒப்பானவனே என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவருளைத் துணைகொண்டு தன் ஆளுமைக்கு உட்பட்ட வட்டத்துக்குள் ஒவ்வொருநாளும் பிறர்க்கென வாழும் பெரியோரின் தவ நெறி செம்மையாக நிகழ்கின்றதா என்று கண்காணித்தல் வேண்டும் என்கின்றார். தவ நெறி பெருக்கும் ஆலயங்கள், மடங்கள், இயக்கங்கள், தவநெறிச் சான்றோர் போன்றோருக்குத் தன்னாலோ பிறர் மூலமாகவோ இயன்ற உதவிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்கின்றார். தவ நெறிக்கு மாறாகச் செயல்படும் தனி நபர்களையும் மடங்களையும் இயக்கங்களையும் ஆலயங்களையும் தம் ஆளுமையைக்கொண்டு கண்டித்தலும் திருத்துதலும் செய்யாவிடின் அவனும் கல்லாத் தலைவனே என்கின்றார் திருமூலர்.
ஆலயங்களிலும் மடங்களிலும் இயக்கங்களிலும் தனி நபர் நடத்தும் தவச் சாலைகளிலும் தவ நெறிக்கும் அறநெறிக்கும் புறம்பானவற்றைச் செய்யவும் அதனை நல்ல தலைவனானவன் கண்டிக்காமல் இருப்பானேயானால் தன்னைச் சார்ந்துள்ள தொண்டர்களுக்குச் சொல்லொணா தீங்கும் துன்பமும் உண்டாகும் என்கின்றார் திருமூலர். தான் சார்ந்துள்ள தவ நெறிக்கும் அற நெறிக்கும் பிறர் ஊறு விழைவித்தால் அதனை உடனே முயன்று போக்காதவன் கற்ற நல்ல தலைவன் அல்லன். அவன் அக்குமுகாயத்தின் சிறப்பினைக் குழைக்க வந்த காலன் என்கின்றார். எனவே எப்பொழுதும் முழு விழிப்புடனும் மிகச் சிறந்த கண்காணிப்புடனும் அஞ்சா நெஞ்சத்துடனும் தான் சார்ந்த தவ நெறியையும் அற நெறியையும் காக்கவல்லவனே உண்மையான கற்ற தலைவன்.

               “நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி, நாள்தோறும் நாடி அவன் நெறி நாடானேல், நாள்தோறும் நாடு கெடும் மூட நண்ணுமால், நாள்தோறும் செல்வம் நரபது குன்றுமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நல்ல கற்ற தலைவனானவன் தவ நெறியும் அற நெறியும் பிறரால் பிழைக்கப்படாமல் இருப்பதனைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், தன்னிடம் ஏதாவது குற்றம் இருக்கின்றதா என்று ஆராய்தல் வேண்டும் என்கின்றார். தன்னுடைய நடவடிக்கைகள் தவ நெறிக்கும் அற நெறிக்கும் மாறுபட்டுள்ளனவா, தன்னுடைய போக்கினால் தவநெறிக்கும் அறநெறிக்கும் ஊறு விழைகின்றதா என்பதனை ஆராய்கின்றவனே கற்ற நல் தலைவன் என்கின்றார்.

                 மக்களைக் காக்கும் தலைவனானவன் மக்களைக் காக்கும்போது தன்னாலும் தன்னைச் சார்ந்தவர்களாலும் தன்னுடைய ஏவலர்களாலும் தம் பகைவர்களாலும் தீயவர்களாலும் மற்ற உயிர்களினாலும் உண்டாகும் ஐவகை அச்சங்களைப் போக்குபவனாக இருத்தல் வேண்டும் என்று தெய்வச் சேக்கிழார் மனுநீதிச் சோழனின் வரலாற்றின் வழி பெரிய புராணத்தில் சுட்டிக்காட்டுவார். இவ்வாறு இறைநெறியும் அறநெறியும் கற்காத, கற்று அதன் வழி நிற்காத தலைவனின் செய்கையால் பல்வேறு தீமைகள் வருவதோடு மக்களின் பல்வேறு செல்வங்கள் அவர்களை விட்டுப்போகும். இதனால் இத்தகைய தலைவன் காலனை நேர் ஒப்பவன். தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் திருமூலர் குறிப்பிடும் செய்திகளைச் சிந்தித்தல் நலம். தவ நெறியிலும் அறநெறியிலும் நில்லாது, ஆராய்ச்சி அறிவின்றி நாளும் தங்களைச் சார்ந்துள்ள மக்களின் நலன்களைக் கொல்லாது அவற்றை வாழ்விப்பதனைச் சிந்தித்தல் வேண்டும். அவர்களே உண்மையான கற்ற தலைவர்கள்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!