சிவச்செறிவு அல்லது சிவயோகம் என்ற அகத்தவம் கூடுவதற்கு எட்டு படிநிலைகள் உண்டு என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. சிவச்செறிவில் அகத்தில் இறைவனோடு கூடி இருத்தலுக்கு வழி காணப்படுவதால் அகத்தைத் தூய்மை செய்தல் இன்றியமையாதது ஆகிறது. அதனாலேயே அகத்தைத் தூய்மை செய்தற்கு உரிய வழியாகிய அகத்தவ எட்டுப் படிநிலைகளில் தீது அகற்றலை முதல் படிநிலையாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். தீது அகற்றல் எனும் முதல் படிநிலையில் அகத்தவம் இயற்ற விரும்பும் ஒருவர் விட வேண்டிய பத்துத் தீய செயல்களைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். “கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன், நல்லான் அடக்கம் உடையான் நடுசெய்ய, வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம், இல்லான் இயமத்து இடையில் நின்றானே” என்று இதனைத் திருமூலர் குறிப்பிடுவார்.
இயமம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் இத்தீது அகற்றலில் குறிப்பிடப்படுள்ள பத்தில் முதலில் வரும் அருஞ்செயலாவது கொலை செய்தலைத் தவிர்த்தல் என்பதாகும். உயிரை உடம்பில் இருந்து பிரித்தலே வெளிப்படையாகத் தெரிந்த கொலையாகும். உண்மையில் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு ஈறாகச் சொல்லப்படும் எவ்வகை உயிருக்கும் சிறிய துன்பம் இழைப்பதுவும் கொலையே ஆகும். உண்பதற்காகப் பிற உயிரினங்களைக் கொன்று உண்பதனைக் கொலை என்று சொன்னாலும் பிற உயிரினங்களுக்குத் துன்பம் தரக்கூடிய தீய எண்ணங்களும் பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கக் கூடிய தீய சொற்களும் பிற உயிரினங்களுக்குத் துன்பம் தரக்கூடிய தீயச் செயல்களும் கொலையே என்பதனைத் திருமந்திரம் விளக்குகின்றது. இதனை ஒட்டியே திருவள்ளுவப் பேராசானும் கொல்லாமை எனும் அதிகாரத்தினை அமைத்துள்ளார். மனதால், வாக்கால், செயலால் பிறருக்குத் தீங்கு செய்கின்ற கொலையை நீங்கியவர்களே அகத்தவம் இயற்ற இயலும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
அகத்தைத் தூய்மை செய்தலில் தீது அகற்றலில் அடுத்து அமைய வேண்டியது பொய் சொல்லாது இருத்தல் ஆகும். அகத்தில் உள்ள இருளைப் போக்கும் விளக்கு வாய்மை என்று திருவள்ளுவர் குறிப்பிடுவார். அக இருளைப் போக்கி உள்ளத்தைத் தூய்மை செய்வது வாய்மையாகும். எனவேதான், “காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக, வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். உண்மையானவற்றை உள்ளத்திலே எண்ணுவது உண்மை, உள்ளத்திலே உணர்ந்த உண்மையை உள்ளவாறே வெளியே சொல்வது வாய்மை, உள்ளத்திலே உணர்ந்த உண்மையின்படியே செயலைச் செய்தல் மெய்மை என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். இவற்றிற்கு மாறானவையே பொய். ஒருவன் தன் நெஞசம் அறிவதாகிய ஒன்றை குறித்துப் பொய் சொன்னால், அப்பொய்யைக் குறித்துத் தன்நெஞ்சமே தன்னை வருத்தும் சூழலில், தூயவனாகிய இறைவனை அங்கு எப்படிக் கொண்டு வந்து இருத்த இயலும்? அங்கு அகத்தவம் இயற்ற இயலாது. தன் பொய்மையே தன் அகத்தவத்தைக் கெடுக்கும் என்கின்றார் திருமூலர். ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்ததோடு ஈதல் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன் என்ற இக்கருத்தையே திருக்குறளும் குறிப்பிடும்.
அகத்தவத்துத் தீது அகற்றலில் அடுத்து வருவது களவாடுதல். களவு செய்து வாழ்கின்றவர் உள்ளத்தில் வஞ்சம் நிறைந்து இருக்கும் எனவும் அவர் பிறர் போற்றி வாழும் நெறியிலும் நின்று வாழ மாட்டார் என்றும் வள்ளுவப்பேராசான் கள்ளாமை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுவார். பணமோ, பொருளோ, அல்லது எதனையோ பிறரிடம் இருந்து வஞ்சனையாகக் கொள்ள எண்ணுதல் மட்டும் இன்றி குற்றமானதை உள்ளத்தால் எண்ணி அதனைப் பிறர் அறியாதவாறு மனதில் மறைத்து வைத்தலும் கள்ளத்தனமே என்று திருவள்ளுவர் மேலும் குறிப்பிடுவார். இத்தகைய கள்ளத்தனம் உடையவர்களின் நெஞ்சில் வஞ்சம் வாழுமே ஒழிய உள்ளத் தூய்மையும் அன்பும் மேல் ஓங்காது. உள்ளத் தூய்மையும் அன்பும் இல்லாத உள்ளத்திலே இறைவனைக் கொண்டு வந்து இருத்துதலான அகத்தவத்தைச் செய்ய இயலாது என்கின்றார் திருமூலர். இதனையே, “குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்கிறார்கள்.
அகத்தவமான சிவச்செறிவின் முதல் படிநிலையான தீது அகற்றலில் நான்காவதாக வருவது எண்குணன் என்பதாகும். என்கு + உணன் என்பதே எண்குணன் என்றாகி நிற்கின்றது. என்கு உணன் என்றால் மறுக்கின்ற உணவை உண்ணுதல் என்று பொருள்கொள்ளலாம் என்று மகாவித்துவான் அருணை வடிவேலனார் குறிப்பிடுகின்றார். புலால் உண்ணுதல் இன்னும் உடலுக்கும் அறிவிற்கும் கேட்டை விளைவிக்கும் உணவுகளை உண்ணுதலானது அகத்தில் இறைவனை இருத்தி அவனோடு சேர்ந்து இருத்தலுக்குத் தடையாய் அமையும் என்கின்றார் திருமூலர். இதனலாலேயே தன் உடம்பைப் பெருக்கம் செய்வதற்காகத் தான் மற்றொரு உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும் என்ற கேள்வியினைத் திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் கேட்பார். தவிர உடலுக்கு நோயைக் கொண்டு வரும் உணவுகளை உண்பதால் உடல் நோயுற்ற நிலையில் உயிரை உற்று நோக்கும் அகத்தவத்தை எப்படிச் செய்ய இயலும் என்று திருமூலர் வினவுகின்றார்.
சிவச்செறிவாளனாக அல்லது சிவயோகியாக வேண்டும் என்பவருக்குத் தீது அகற்றலில் ஐந்தாவதாகப் பின்பற்ற வேண்டியது அடக்கம் உடையவராக இருத்தலாகும். நாவடக்கமும் பணிவும் சொற்குற்றத்தையும் செருக்கினையும் போக்கி உயிருக்கு ஆக்கத்தினைத் தரும் என்பதனை அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவார். அடக்கத்திற்கு எதிரானது வெகுளி. வெகுளி என்ற சினம் ஒருவரின் அறிவை மறைத்து அவரின் உயர் பண்புகளைக் கெடுப்பதனால் உண்மையானவற்றை எண்ண முடியாமல் போகும். அறிவுத் தெளிவும் அமைதியும் உள்ள மனதில்தான் அன்பே வடிவான இறைவனை இருத்த முடியும் என்கின்றார் திருமூலர்.
அகத்தவத்தின் முதல் படிநிலையான தீது அகற்றலில் ஆறாவதாக வருவது நடுசெய வல்ல இயல்பாகும். உள்ளத்தில் கோணுதல் இல்லாது துலாக்கோல்போல் ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவு நிலைமை போற்றும் பண்பு சான்றோருக்கு அழகு என்று திருவள்ளுவர் நடுவு நிலைமைப் பற்றிக் குறிப்பிடுவார். நடு செய்யும் வல்லமை இல்லாதவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற எண்ணம் உருவாகும். இதனால் விருப்பு வெறுப்பு என்ற பண்பும் மிகும். இப்பண்பு மிகுமானால் எதையும் முறையாகச் சீர்தூக்கிப் பார்க்கும் பண்பு ஏற்படாது போகும். அப்படி ஏற்படுவதனால் பிறருக்கும் துன்பம் விளைவிக்கும் குற்றம் ஏற்படும். வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று அலமந்து கிடக்கும் உள்ளத்தில் வேண்டுதல் வேண்டாமை இலாத இறைவன் வந்து கூடுதல் இயலாத ஒன்று என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். தீது அகற்றலில் ஏழாவது அரிய செயலானது பகுத்துண்ணல் என்பதாகும். பகுத்துண்ணுதலை ஈகை எனும் அதிகாரத்தில் குறிப்பிடும் திருவள்ளுவர். பசியைப் பொறுத்துக்கொள்ளும் தவசிகளைவிட பிறரின் பசியைப் போக்குகின்றவர்களின் தவம் சிறந்தது என்பார். தான் பெற்ற உணவைப் பலரோடும் பகிர்ந்துண்ணும் பழக்கம் உடையவரிடத்திலே அன்பு பெருகும். தன்னிடத்திலே உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் கரவாடும் கருமிக்கு உள்ளத்தில் அன்பு சுரக்காது. அன்பு சுரக்காத உள்ளத்தில் அகத்தவம் வெற்றி பெறாது என்கின்றார் திருமூலர்.
தீது அகற்றலில் எட்டாவது அரிய செயல் மாசு இலான் ஆதல் ஆகும். மனதிலே குற்றம் அற்றவர்களுக்கே அகத்தவம் அமையும் என்பதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை “குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார்..” என்று திருஞானசம்பந்தர் அழகுற இயம்புவார். தீது அகற்றலில் இறுதி இரண்டு அரிய செயல்களாக வருபவை கள், காமம் என்பனவாகும். அறிவை மயக்கும் மதுபானங்கள், போதைப் பொருள்கள் போன்றவை அறிவை மயக்குவதனால் அவை அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை அகத்தில் இருத்தத் தடையாய் அமையும் என்கின்றார் திருமூலர். மண், பெண், பொன் முதலியவற்றில் எல்லை கடந்த விருப்பம் உள்ளத் தூய்மைக்கும் உள்ள அமைதிக்கும் அறிவு தெளிவிற்கும் துணை நிற்காது தீங்காய் அமையும் என்கின்றார் திருமூலர். உலகப் பற்றுக்களை விட்டாலே இறைப் பற்று மேலிடும் என்கின்றார் திருமூலர். அகத்தவத்தை இயற்றுவதற்கு முதல் படிநிலையில் ஏற்பட வேண்டிய அடிப்படை இயல்புகளை எண்ணி அவ்வரிய சிவச்செறிவினை இயற்றத் துணிவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!