பெருமானின் திருவருள் அன்பு வடிவில் எல்லா உயிர்களிடத்தும் நிலை பெற்றிருக்கின்றது என்பார் தமிழ்ச் சிவ ஆகமங்களை அருளிய திருமூலர். உயிரில் அன்பின் வளர்ச்சியே சிவத்தின் வளர்ச்சி என்பதனை, “அன்பினில் விளைந்த ஆர்அமுதே” என்பார் மணிவாசகர். உயிரில் அன்புடையவர்களாய், எதிலும் எவ்விடத்தும் எப்பொருளிடத்தும் அன்புடைய சிந்தையர்களாய் இருக்கின்ற அடியவர்களே சிவபெருமானிடத்து நெருக்கம் உடையவர்களாகி, இன்ப உணர்வாய் இருக்கின்ற அப்பெருமானை அகத்திலும் புறத்திலும் வைத்துப் போற்றித் துன்பம் நீங்கி, அப்பெருமானுக்கும் அப்பெருமான் வாழ்கின்ற பிற உயிர்களுக்கும் அன்பு செய்கின்ற பணியினைச் செய்வர் என்பதனை, “அன்புறு சிந்தையர் ஆகி அடியவர், நண்புறு நல்லூர் பெருமணம்மேவி நின்று, இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார், துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே” என்று தமிழ் ஞானசம்பந்தர் தமது தமிழ் மந்திரத்தில் குறிப்பிடுவார். இறைவனுக்கும் இறைவன் வாழும் உயிர்களுக்கும் அன்பு செய்வதனை, அமைதியாக, அடக்கமாக, ஆரவாரமின்றி, யாரும் அறியா வண்ணம் அகத்திலோ, புறத்திலோ நாம் செய்வதனை இறைவன் அறிவானோ இல்லையோ என்று எழும் கேள்விக்குத் திருமூலர் பதில் இயம்புகின்றார். பலரும் போற்ற வேண்டும் என்று தான் செய்கின்ற இறைத்தொண்டினை அறிவிப்பு பலகைகளின் வழி பறைசாற்றுகின்றவர்களும் தாம் செய்கின்ற தொண்டினைப் பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தியும் மேடைகளில் முழங்கியும் வருகின்றவர்கள் மலிந்து விட்ட இக்காலத்தில் யாருக்கும் தெரியாமல் அமைதியாக அகத்திலே அன்பு செய்கின்றவர்களையும் யாருக்கும் தெரியாமல் புறத்திலே விளம்பரம் இன்றி பிறருக்கு அன்பு செய்கின்றவர்களையும் இறைவன் நன்கு அறிவான் என்பதனை, “இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும், உகந்து அருள் செய்திடும் உத்தமநாதன், கொழுந்து அன்பு செய்து அருள் கூறவல்லார்க்கு, மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். வாழும் காலத்து அன்பு செய்யாது அன்பினை இகழ்ந்து நடக்கின்றவர்களையும் அன்பினைப் போற்றி வாழ்கின்றவர்களையும் சிவபெருமான் நன்கு அறிவான் என்கின்றார். முதல் நடவடிக்கையாக இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற உயிர்களிடத்திலும் அன்பு செய்கின்றவர்கள் முடிந்த நிலையில் அவ்வன்பின் விளைவாக இறைவனின் திருவருளை இறைவனே விரும்பி அளிக்கப் பெறுவார்கள் என்கிறார். அதனால் அமைதியாக ஆரவாரமின்றி யாருக்கும் தெரியாமல் அகத்தேயோ புறத்தேயோ நாம் செய்கின்ற அன்பை இறைவன் அறிவானோ என்று ஐயுற வேண்டாம் என்கிறார் திருமூலர். அன்பு செய்கின்றவரைச் சிவன் அறிவன் என்ற திருமூலரின் கருத்தினைத் திருநாவுக்கரசு அடிகளும் உறுதி செய்கின்றார். அவர் இதனைத், “தொழுது தூமலர்த் தூவி துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரையும், பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும், எழுதும் கீழ் கணக்கு இன்னம்பர் ஈசனே” என்பார். இறைவனை இடைவிடாது தொழுது, தூய மலர்களைத் தூவி, அவனைப் போற்றிப் பாடுகின்றவர்களையும் இறைவன் மீது கொண்ட அன்பினால் உளம் உருகி அவனை விரும்பி அழுது புலம்பித் திரிகின்றவர்களையும், இறைவனை வழிபடாமல் வெறுமனே நாளையும் பொழுதையும் விரையம் செய்து கழிக்கின்றவர்களையும் இறைவன் குறித்து வைக்கின்றான். அமைதியாக யாருக்கும் தெரியாமல் இது நடைப்பெற்றாலும் கூட இறைவன் அதனை நன்கு உணர்வான் என்கின்றார் திருநாவுக்கரசு அடிகள். இறைவனிடம் அன்பு செய்கின்றவர்களுக்கும் இறைவன் வாழும் உயிர்களுக்கு அன்பு செய்கின்றவர்களுக்கும் புறத்தில் ஒன்றுமே கிடைக்காதது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் உண்மையில் அவற்றை இறைவன் அறிந்து உரிய வேளையில் உரிய பயனை அளிப்பான்; அத்தகையவர்களின் உயிர் சிவமாம் தன்மைப் பெற்றே வருகிறது என்பதற்கு நாயன்மார்களின் வரலாறே நல்ல எடுத்துக்காட்டுகள் ஆகும். யாருக்கும் தெரியாமல் அமைதியாக தன் குடிசையில் அடியார்களுக்கு உணவிடும் அன்பினைச் செய்த இளையான்குடி மாறநாயனாரின் அன்பினை இறைவன் உலகறியச் செய்தார். யாருக்கும் தெரியாமல் அமைதியாகத் திருகுறிப்புத் தொண்டர் எனும் அடியார், அடியார்களுக்கு உடையை வெளுத்துக் கொடுக்கும் அன்பினைச் செய்ததினை உலகறியச் செய்தான் இறைவன். யாருக்கும் தெரியாமல் காட்டில் மலை உச்சியில் தம் கண்ணைப் பிடுங்கி இறைவனுக்கு அப்பி இறைவனுக்குச் செய்த அன்பினைச் சிவகோச்சாரியார் எனும் அந்தணருக்கும் உலகத்திற்கும் காட்டித் தன் திருவடிப்பேற்றினை அளித்தான் இறைவன். அன்பு செய்கின்றவருக்கே இறைவன் அருள் செய்தலும் அன்பு செய்யாதவருக்கு இறைவன் அன்பு செய்யாமையையும் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனைச், “சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அல்லால் நலமிலன்” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். தவிர அன்புடையாரிடத்து மட்டுமே இறைவன் உயிரில் வெளிப்பட்டு நின்று பிறவி துன்பத்தைப் போக்குவான் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். அன்பு பொருந்தியவர்களே கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்புலன்களின் வேட்கையால் ஆட்பட்டு உயிர்கள் ஆடும் பல்வேறு ஆட்டங்களைத் தவிர்க்க முடியும் என்பார் திருமூலர். அன்பு பொருந்திய மனம் உள்ளவர்களே பிற உயிர்களுக்குத் தீமை செய்யாத அருள் நெறியினைப் பேணமுடியும் என்கின்றார். ஓர் இளம் பெண்ணின் மீது விருப்பம் வைக்கின்ற ஓர் இளைஞன் அப்பெண்ணின் மீது வைக்கின்ற அன்பினாலே தன் வயம் இழந்து அறிவிழந்து அவள் வயமாக ஆகிவிடுவது போல சிவத்தின் மீதும் அவன் உறைகின்ற உயிர்களின் மீதும் வைக்கின்ற உண்மையான் அன்பிலே யான், எனது எனும் செருக்கினை விட்டுத் தமது உயிர் அறிவினை இழந்து சிவத்தின் வயமாய் நிற்கின்ற போது அதனால் விளைகின்ற பேரின்பம் அவ்வுயிரை அதன் பின்னும் அந்நிலையிலிருந்து பெயராத வகையில் நிற்பது அவ்வியிரின் அன்பினை மேலும் சிறக்கச் செய்யும் என்பதனைப், “புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல, உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல்லார்க்கு உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி, அணைத்தாலும் இன்பம் அது இதுவாமே” என்பார். சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களில் ஒன்றான திருகளிற்றுப்படியாரும் இக்கருத்தினை மெய்ப்பிக்கின்றது, “நல்ல சிவதன்மத்தால் நல்ல சிவயோகத்தால், நல்ல சிவஞானத்தால் நான் அழிய- வல்அதனால், ஆரேனும் அன்பு செய்யின் அங்கே தலைப்படும் காண் ஆரேனும் காணாத அரன் என்கின்றது. உண்மையான சிவ வழிபாட்டினால், உண்மையான சிவ பூசனையினால், உண்மையான சிவயோகத்தால், உண்மையான சிவஞானத்தால் நான் எனும் செருக்கு அழிய அருள் எனும் ஒளியின் துணை கொண்டு யாராகிலும் அன்பு செய்தால், எவராலும் எளிதில் காண இயலாத இறைவன் அங்கே விளங்கித் தோன்றுவான் என்று குறிப்பிடுகின்றது. அமைதியாக, ஆரவாரமின்றி அகத்தில் தான் அன்பு செய்ததனை இறைவன் அறிந்து தமக்குத் தலைபட்டான் என்றும் இறைவனைத் தமது உள்ளத்திலே தாம் கண்டதாகவும் திருமூலர் குறிப்பிடுகின்றார். கொன்றை மாலையைச் சூடியிருக்கின்ற இறைவனின் திருவடியை, யானையின் தோலைப் போர்த்தவனின் திருவடியை, அன்பால் நினைக்கின்றவர்களின் நெஞ்சத்தாமரையில் விளங்குகின்றவனின் திருவடியை என் அன்பின் துணைக் கொண்டு கண்டேன் என்பதைக், “கண்டேன் கமழ்தரு கொன்றையினான் அடி, கண்டேன் கரி யுரியான் தன் கழல்இணை, கண்டேன் கமலமலர் உறைவான் அடி, கண்டேன் கழல்அது என் அன்பில் உள்ளானே” என்று குறிப்பிடுகின்றார். அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையாகிய இறைவனிடத்தும் அவன் உறையும் உயிர்களிடத்தும் நாம் அமைதியாக அன்பு காட்டுவதனை இறைவன் அறிவான், ஆரவாரத்திற்கும் ஆடம்பத்திற்கும் பகட்டிற்கும் பார்ப்பவர்க்கும் என்று அன்பு செய்யாமல் உண்மை அன்பினை உளமாற செய்து உயிரில் உறையும் இறைவனைக் கண்டு இன்புற்று வாழ்வாங்கு வாழ்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!