“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பார் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலர். உயிர் வளர்ச்சிக்கு உடம்பே அடிப்படையாக இருப்பதனால் உடம்பைக் காக்கின்ற வழியினை அறிந்து, அவ்வுடம்பின் துணைக்கொண்டு இறைவனின் திருவருளினால் உயிரை இறையுணர்வினைப் பெறச் செய்தேன் என்கின்றார் திருமூலர். இத்தகைய அரிய உடம்போடு பொருந்தி இருக்கின்ற உயிர் வளர்ச்சியுற்று இறையருளைப் பெறுவதற்கு இன்றியமையாததாக இருப்பது அன்போடு பொருந்தி வாழ்கின்ற வாழ்க்கையாகும் என்பார் ஐயன் திருவள்ளுவர். வாழுங்காலத்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி வாழும் வாழ்க்கையே பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்றுத் தரும் என்பதனை உணர்த்தவே “அன்புடைமை” எனும் அதிகாரத்தினை ஐயன் திருவள்ளுவர் உரைத்திருகின்றார். அன்பு தூய்மையானது; உயர்வானது; உண்மையானது; அதனை அடைத்து வைக்க முடியாது; அது வெளிப்பட்டே தீரும் என்று அன்பினை உயர்த்திக் குறிப்பிடுவார் ஐயன் திருவள்ளுவர்.
அன்புடையவர் தம் பொருளை மட்டும் பிறருக்குக் கொடுக்காது இயன்றால் தம் உடலையும் உயிரையும் கூட பிறருக்காக ஈகம் செய்து விடுவர் என்று குறிப்பிடும் ஐயன் திருவள்ளுவர், இத்தன்மையினால் அன்பு உடையவர்கள் பிறரிடம் நட்பு உடையவர்களாகவும் எல்லோராலும் விரும்பப்படுகின்றவர்களாகவும் வாழும் சிறப்பு மிக்க வாழ்க்கையினைக் கொண்டிருப்பர் என்கின்றார். அன்பின் அடிப்படையில்தான் உலக உயிர்களின் துலங்கலே நடைபெறுகின்றது என்று குறிப்பிடும் ஐயன் திருவள்ளுவர், உலகில் போற்றிப் பாராட்டப்பெறும் அறச்செயல்களும் பிறரைத் தண்டித்தும் துன்புறுத்தியும் செய்யப்படுகின்ற மறச்செயல்களும் அன்பின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன என்கின்றார். அன்பு வழி வாழ்கின்றவருடைய உடம்பே உயிர் மேம்படுகின்ற உடம்பு; அன்பு இல்லாதவருடைய உடம்பு வெறும் எலும்பைத் தோல் போர்த்தியிருக்கின்ற வெற்று உடம்பு என்றும் குறிப்பிடுவார். இத்தகைய உயரிய அன்பின் திறத்தைத் திருமூலரும் தமது திருமந்திரத்தில், “அன்புடைமை” எனும் பகுதியில் குறிப்பிடுகின்றார்.
சுடரும் வெப்பமும் வேறு ஆகாதது போல அன்பும் சிவமும் வேறாவது இல்லை என்கின்றார் திருமூலர். அன்பு என்பது இறைவனின் திருவருள். சிவம் என்பது இன்பு ஆகிய இறைவன் என்பதனால் அன்பும் சிவமும் திருவருளும் சிவமும் என்கின்றார் திருமூலர். இவை இரண்டும் வேறு அல்ல என்கின்றார். இதனையே, குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ………… இன்பமே என்னுடை அன்பே” என்பார் மணிவாசகர். இதனை அறியாதவர்கள் அன்பும் சிவமும் வேறு என்பார்கள். அவர்கள் அறியாமையை உடையவர்கள் என்கின்றார் திருமூலர். மெய்யுணர்வு இல்லாதவர்களே பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பினையும் சிவத்தினையும் வேறு என்று குறிப்பிடுவர் என்கின்றார். பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பாகிய திருவருளே உள்ளத்தில் உறையும் இறைவனின் திருவடி உணர்வு என்கின்றார் திருமூலர். இறைவனின் திருவருளால் இவ்வுணர்வினை உணர்கின்றவர்கள் பிற உயிர்களிடத்தில் அன்பு செய்வதனையே தொழிலாகக் கொண்டு, அவ்வன்பின் வளர்ச்சியால் இன்பமாகிய சிவத்தை உயிரில் நிலைபெறச் செய்து, அவ்வின்பத்தினை நுகர்ந்து பேரின்பப் பெருவாழ்வினைப் பெறுவதற்குத் தலைப்படுவர் என்கின்றார். இதனையே, “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே …” என்று திருவாசகத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார்.
தம் மக்கள், தம் மனைவி, தம் உற்றார், தம் உறவினர், தம் நண்பர் என்ற வட்டத்திற்குள் மட்டும் நின்று விடாமல், அதனைத் தொடக்கமாகக் கொண்டு அன்பு பாராட்டக் கற்றுக் கொண்டு, மொழி, இனம், நாடு, உலகம், சமயம் என்பதனையெல்லாம் கடந்து, மாந்தரிடம் மட்டுமல்லாது பிற உலக உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுகின்ற செம்மை உடையவர்களே சிவம் எனும் செம்பொருளை அடையும் நிலைக்குத் தலைப்படுவர் என்கின்றார் திருமூலர். அன்பாகிய விதையே சிவமாய் விளைந்து, இன்பமாய்க் கனிந்து, அன்புடையவருக்குச் சிவத்தைக் காட்டுவிக்கும் என்பதனை, “அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார், அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார், அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்த பின், அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே” என்று மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார்.
மழையிலும் பனியிலும் நீர்நிலைகளிலும் காடுகளிலும் பாறைகளிலும் முட்செடிகளிலும் இருந்து கடும் தவம் இயற்றினாலும் பல்வேறு செறிவுப்(யோகம்) பயிற்சிகளைச் செவ்வனே செய்தாலும் பல்வேறு பூசனைகளை வரிசைத் தவறாமல் செய்தாலும் பல்லாயிரம் மந்திரங்களையும் திருமுறைகளையும் ஓதினாலும் வேள்வி எனப்படும் தீவேட்டலில் தமது எலும்பையே விறகாக அடுக்கித் தமது தசையைத் தானே அறுத்து அத்தீயில் இடும் அரிய செயலைச் செய்தாலும் பிற உயிர்களிடத்திலும் இறைவனிடத்திலும் அன்பு இல்லாதவர்க்கு இறையுணர்வு உள்ளத்தில் ஏற்படாது என்கின்றார் திருமூலர். தமக்கும் தம்மைச் சார்ந்தவர்க்கும் பிறர்க்கும் எல்லா உயிர்க்கும் அடியவர்க்கும் அன்பு இல்லாதவர்கள் ஈசனுக்கு அன்பு இல்லாதவர் ஆவர். அத்தகையோர்க்கு இறைவுணர்வு தலைப்படாது என்பதனை, “என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப், பொன்போல் கனலிற் பொரிய வறுப்பினும், அன்போடு உருகி அகம்குழைவார்க்கு அன்றி, என்போல் மணியினை எய்த ஒண்ணாதே” என்று குறிப்பிடுகின்றார். இதனாலேயே, “அன்பர்பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால், இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே” என்று பிறருக்கு அன்பு செய்யும் பண்பு வேண்டுமாய்ப் பெருமானிடம் நைய்ந்து நிற்பார் தாயுமானவ அடிகள். இதனால் அன்பு அற்றவரால் இயற்றப் பெறாத தவம் நிறைவு பெறாது என்பதும் கடவுளை முன் இருத்தாதவர்களின் தவமும் மெய்த்தவங்கள் அல்ல என்பதனையும் உணரலாம்.
தண்ணார் தமிழ் அளிக்கும் சிவபெருமானிடத்துப் பேர் அன்பும் பிற உயிர்களிடத்தும் அன்பு உள்ளவர் சிவத்தினை முழுமையாகப் பெறுவர். பெருமானிடத்தும் பிற உயிர்களிடத்தும் சிறிது அன்பு உடையவர் அவனது அருளை மட்டும் பெறுவர். இறைவனிடத்தும் பிற உயிர்களிடத்தும் அன்பே இல்லாது தான் தன் குடும்பம் என்று குடும்பப் பாரத்தை மட்டும் உடையவராய் வாழ்கின்றவர்கள் பிறவிக் கடலையே காண்பவராய்க் கொடுமை நிறைந்த வாழ்க்கையினை வெறுமனே வாழ்ந்து கழிப்பர் என்பதனை, “ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை, ஈரம் உடையவர் காண்பர் இணையடி, பாரம் உடையவர் காண்பர் பவம் தன்னைக், கோர நெறிகொடு கொங்கு புக்காரே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
அப்பாலுக்கு அப்பாலாய், வெளி கடந்து, கற்பனை கடந்த சோதியாய் விளங்கின்ற சிவம், பெரும் துன்பங்களையே உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், உயிர்கள் அத்துன்பத்தில் இருந்து விடுபட்டு இன்பம் அடைதற்காக “அன்பு” எனும் அரிய பண்பினைப் படைத்து உயிர்களுக்கு அளித்துள்ளது. அவ்வாறு பெருமான் படைத்து அளித்துள்ள அன்புப் பண்பினை முதலில் பின்பற்றுவதால் இன்ப உணர்வாய் இருக்கின்ற பெருமானைப் பின்னால் அடையலாம். இவ்வாறு பெருமானை அடைதற்குரிய எளிய, அரிய வழியினை அமைத்துத் தந்துள்ள பெருமானின் திருவருளைக் கருணையை உதவியை எண்ணி அவனிடத்தில் உலகவர் அன்பு செய்கின்றார் இல்லை என்பதனை, “முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை, அன்புஅடைத்து எம்பெருமானை அறிகிலர், வன்படைத்து இந்த அகலிடை வாழ்வினில், அன்பு அடைத்தான் தன் அகலித்தானே” என்கின்றார் திருமூலர்.
ஒவ்வொருவர் சிந்தையிலும் நின்று ஒளிர்கின்ற பொன் ஒளியாகிய சிவத்தை உள்ளத்தில் வைத்துக் கொண்டும் புறத்தில் வைத்துக் கொண்டும் வணங்கிப் “பெருமானே” என்று அன்பினால் போற்றி செய்து அப்பெருமானின் திருவருளைத் தருமாறு வேண்டினால், அங்ஙனம் வேண்டுவார்க்குப் பெருமான் அவர் வேண்டுவன அளிப்பான் என்று திருமூலர் அறிவுறுத்துகின்றார். சிவமே எல்ல உயிர்க்கும் பிறப்பினையும் இறப்பினையும் தருகின்றது. சிவமே எல்லா உயிர்களும் நாளும் உறங்கவும் உறங்கியவை பின் மறுநாள் நலமுடன் மீள எழவும் அருள்புரிகின்றது. இதனைப் பலரும் அறியாமல் இருக்கின்றனர். இவ்வுண்மையை அறிந்தவரும் உலக ஆசையையே பெரிதாக உள்ளத்தில் கொள்கின்றனர். இத்தகைய அரிய உதவியைச் செய்த பெருமானை, அவனே எல்லா உயிர்க்கும் தலைவன் என்று நன்றியோடு எண்ணாது, அவனிடத்தில் விரும்பி அன்பு செய்யாது வாழ்கின்றவர் பலர் என்று வருந்துவார் திருமுலர்.
உலகம் தோன்றுவதற்கு முதல்வனாயும் ஞானிகளுக்கு முதல் ஆசானாகவும் உள்ள இறைவன் உயிர்களின் உள்ளத்திலே அன்பு வடிவத்திலும் புறத்திலே பல குறிகளாகவும் அடையாளங்களாகவும் திருவடிவங்களாகவும் இருக்கின்றான். அவன் அன்பினால் அறியப்பட வேண்டியவனாக இருக்கின்றான். பிற எவ்வகையாலும் அறியப்படாதவனாக இருக்கின்றான். அன்புள்ளவர்க்கே உறுதுணையாக நிற்கின்றான். அன்பின் வடிவாய் நிற்கின்ற அவ்விறைவனிடத்தும் அவன் வாழும் பிற உயிர்களிடத்தும் அன்பு செய்து அவனை உணர்வோமாக!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!