மேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான “உண்மை நெறி விளக்கம்” என்னும் நூல் “கடவுள் ஒன்றே” என்று கூறுகின்றது. உமாபதி சிவச்சாரியார் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் பரம்பொருள் ஒன்று என்றும் அது எங்கும் நிறைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவத்தின் மெய்கண்ட நூல்களில் தலைமணி நூலாகிய சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவர் “ ஒன்றென்றது ஒன்றே காண், ஒன்றே பதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இறைவன் ஒருவனே என்று தெளிவுபடுத்துகின்றார். இந்நூல் ஒவ்வொரு சைவரும் படித்தோ அல்லது குரு வழி கேட்டோ உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
பெருமானின் திருவருளால் பால் சோறு ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான் தாம் அருளிய திருமுறையில், “ஈறாய் முதல் ஒன்றாய்” என்றும் “ஓருருவாயினை” என்றும் பரம் பொருள் ஒன்றே என்றும் கூறுகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள், “உலகுக்கு ஒருவனே” என்கின்றார். அவரே மற்றொரு திருமுறையில், “ஈரில்லாதவன் ஈசன் ஒருவனே” என்று கடவுள் ஒன்று என்பதனை நிறுவுகின்றார். திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூல நாயனார் யோக நெறியில் உறைப்பாக நின்று அட்டமாசித்திகளைக் கைவரப் பெற்றவர். அவரும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்று கூறுகின்றார். அதோடு மட்டும் நில்லாமல் அதனை மறுத்துப் பல தெய்வம் உண்டு என்பவர்களுக்குச் சென்று சேருவதற்கு யாதும் ஒரு கதி இல்லை என்பதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் ….. நுஞ்சித்தத்து” என்கின்றார். அதாவது ஒவ்வொருவரும் வாழ்வில் உய்வு பெற வேண்டுமானால் பரம்பொருள் ஒன்றே என்பதனை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.
இன்று நம் அருமைத் தமிழர்களின் வழிபாட்டைச் சற்று கூர்ந்து நோக்கினோமேயானால், “பரம் பொருள் ஒன்று” என்ற சிந்தனை உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. பெரும்பாலோரின் வழிபாட்டு அறையில் சிவன், அம்பாள், முருகன், விநாயகன், திருமால், கண்ணன், இராமர், இலக்குமி, சரசுவதி, குபேரன், காளி, மாரியம்மா, முனியாண்டி, துர்க்கை, ஐயப்பன், மதுரை வீரன், நாகம்மாள், அனுமான், சங்கிலிகருப்பன், சாய்பாபா, சிரிடி பாபா என்று எண்ணற்ற திருவுருவங்கள் வைக்கபட்டு வழிபாடு செய்யப்படுவதைக் கண்கூடாக காண முடிகின்றது. இதனால் சிலருக்கு எந்த தெய்வத்தை வணங்குவது என்பதிலும் அதிகமான குழப்பங்கள் உள்ளது. ஒன்றை வழிபட்டு மற்றொன்றை விட முடியுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது.
ஆலயத்திற்குச் சென்றாலோ அங்கே பல வடிவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். பெருமான் கொண்ட அருள் திருமேனிகள் அங்கே சிலை வடிவிலோ சுதை வடிவிலோ செய்யப்பட்டும் செதுக்கப்பட்டும் அழகுற வர்ணங்கள் தீட்டப்பட்டுக் காட்சியளிக்கும். இவை பெருமானின் அருட்கோலங்கள் என்று புரியாதவர்கள் அங்குக் காணப்படும் ஒவ்வொரு வடிவமும் தனித்தனி கடவுள் என்று எண்ணி மயங்கி அவற்றை வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடாது விட்டால் அந்த கடவுளர்களெல்லாம் சினம் அடைந்து நமக்குரிய சித்திக்குத் தடையாகிவிடுவர் என்று பலரும் அஞ்சுகின்றனர்.
மேலும் ஆலயத்தில் உள்ள பூசகர்களில் சிலரோ நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒரு கடவுளரின் பெயரைச் சொல்லி அவரை வழிபட்டால்தான் அந்த காரியம் ஒரு தடங்கலும் இன்றி நிறைவேறும் என்பதனைப் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் பணம் அல்லது வருமான நோக்கத்திற்காகவும் சமய தெளிவு குறைவாக உள்ளவர்கள் குழப்பப்படுகிறார்கள். ஒருவர் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டுமானால் அது சரஸ்வதியின் கையில் தான் இருக்கிறது என்று நம்மில் பலர் நம்புகிறோம். பணம் வேண்டும் என்றால் இலக்குமியால் தான் முடியும் என்று நினைக்கின்ற நிலையைக் காண்கின்றோம். அந்த நிலையும் இன்று மாறி இலக்குமியை விட குபேரனைப் பெறுமளவு வழிபடுவது காணமுடிகின்றது.
சைவர்களுக்கே உரிய திருமுறைகளும் சாத்திரங்களும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுகின்றன. செந்தமிழர் சைவப் பெட்டகமான பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரும் சிவ வடிவத்தைத் தவிற வேறு எந்த வடிவங்களையும் வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. எனவே சைவம் ஒரு கடவுள் கொள்கையை உடையது என்பதும் சைவர்கள் உணர வேண்டிய பரம் பொருள் ஒன்றே என்பதனையும் நன்கு தெளிந்து, ஓர் உருவ வழிபாட்டிற்குள் செல்ல வேண்டும். திருமுறை கற்பது, சமயக் கல்வி கற்பது, சமய சொற்பொழிவுகளைக் கேட்பது, சமய நூல்களை வாசிப்பது போன்றவை நமக்கு ஒரு தெளிவான சிந்தனையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சைவர்கள் இனிவரும் காலங்களில் ஒரு வடிவத்தினை, அதுவும் குறிப்பாகச் சிவ வடிவத்தினை வைத்து வழிபடுவதன் முதன்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் நம் இளைய குமுகாயத்தினரைத் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றியவர்களாக நாம் ஆவோம்.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!