நேற்று இருந்த ஒருவர், இன்று இல்லாமல் இறந்து போனார் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமையை உடையது இவ்வுலகம் என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். உலகியல் வாழ்வு நிலையற்றது; நிலையான இறையுலக வாழ்வினைப் பெறுவதற்கே இவ்வுலகியல் வாழ்க்கை தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையானச் சித்தாந்தச் சைவம் குறிப்பிடும். உலகில் வாழும் உயிர் வகைகள் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் என்று சித்தாந்தச் சைவம் குறிப்பிடும். அவை கரு, முட்டை, விதை, வியர்வை எனும் நால்வகைத் தோற்றத்தால் எழு வகைப் பிறப்புக்களாய்ப் பிறக்கின்றன என்கின்றது. வானவர், மாந்தர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் எனும் எழு வகைப்பிறப்பினைத் தாங்கி வரும் உயிர்கள் அறிவு நிலைகளால் வேறுபட்டு நிற்கின்றன.
ஓர் அறிவு உடைய தாவரங்கள், ஈர் அறிவு உடைய சிப்பி, சங்கு, மூன்று அறிவுடைய கறையான், எறும்பு போன்றவையும் நான்கு அறிவுடைய தும்பி, வண்டு போன்றவையும் ஐந்து அறிவுடைய விலங்கு பறவை போன்றவையும் ஆறு அறிவுடைய வானவரும் மாந்தரும் தத்தம் அளவிலே முறையே இவ்வுலகில் வாழ்வதற்கு வேண்டிய அறிவுடன் இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு உயிரும் தான் வாழ்வதற்கு மட்டும் இன்றிப் பிற உயிர்களுக்கும் தம்மால் செய்யக் கூடிய உதவிகளைச் செய்து, தாமும் மேம்படும் வண்ணமே படைக்கப்பட்டிருக்கின்றன. உலகில் வாழும் உயிர்வகைகள் தத்தம் இனத்தோடு ஒன்றுபட்டு, உதவி, இன்புற்று வாழும் வகையிலேயே உலக இயல்பினைப் பெருமான் அமைத்துள்ளதாகச் சித்தாந்தச் சைவம் குறிப்பிடும்.
மண்ணில் வாழும் புழு போன்ற உயிரினங்கள், உணவின் பொருட்டு முயற்சி செய்தல், உண்டல், உறங்குதல், இனப்பெருக்கம் செய்தல் என்ற நான்கு இயல்பானப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அத்தகைய புழுவிற்குப் பொல்லாங்கு எனும் இயல்பு இல்லை! புழு போன்ற உயிர்வகைகள் யாரையும் வஞ்சிப்பது இல்லை! புழு போன்ற மிகச் சிறிய அறிவு உடைய உயிரினங்களைக் காட்டிலும் பல்மடங்கு அறிவும் ஆற்றலும் உடைய மாந்தருக்கு ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொய் உரைத்தல் போன்ற தீயப் பண்புகள் உண்டு. அதனையும் தங்களின் அறிவுத்திறமையாலே திறம்படச் செய்கின்றனர். இப்பண்பை நீங்கித் தூய அறிவுடையவர்களுடன் சேரும் நாள் எந்நாளோ என்பதனைப், “புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே, புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை, புழுவினும் கடையேன் புனிதன்தமர், குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே” என்று குறிப்பிடுவார் திருநாவுக்கரசு அடிகள்.
உயிர்வகைகளில் பிற உயிர்களுக்கு இல்லாத பகுத்தறிவு என்ற ஆய்ந்து அறிதல் எனும் சிறப்பு அறிவினைப் பெருமான் மாந்தருக்கே அளித்திருக்கின்றான். பிற உயிர்களைக் காட்டிலும் மாந்தர்களே மாந்த இனத்திற்கும் பிற உயிர் வகைகளுக்கும் மிகச் சிறந்த நன்மையைச் செய்ய இயலும். இம்மிகச் சிறந்த ஆற்றலையும் அறிவையும் கொண்ட மாந்தர், அதனைத் தனக்கும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் பயன்படும் வகையில் கைக்கொள்லாமல் இருப்பது, ஊர் நடுவில் நச்சு மரம் ஒன்று பழங்கள் பழுத்துக் குலுங்குதல் போன்று என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதே கருத்தினை, “நச்சப்படாதவனின் செல்வம் நடு ஊருள், நச்சுமரம் பழுத் தற்று” என்று ஐயன் திருவள்ளுவரும் குறிப்பிடுவார். அதாவது பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் ஒன்று பழங்கள் பழுத்துக் குலுங்குவது போன்று என்கின்றார்.
உலகில் வாழும் மாந்தருக்குப் பேச்சாற்றல், எழுத்தாற்றல், சிந்தனை ஆற்றல் என்ற மற்ற உயிர்களுக்கு இல்லாத சிறப்பு இயல்புகளை இறைவன் அளித்திருக்கிறான். இதனால் கல்வி, தொழில், கலை, சமயம் என்று பல்வேறு திறன்களை மாந்தர் கைவரப்பெறும் திறனைக் கொண்டிருக்கின்றனர். இத்திறன்களால் கல்வியாளர்கள், செல்வந்தர்கள், இலக்கியவாதிகள், தலைமைத்துவம் உடையவர்கள், ஆன்மிக சிந்தனையாளர்கள், இசை வல்லுநர்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமை உடையவர்களாய் விளங்குகின்றனர். இறைவன் கொடுத்த இவ்வாற்றல்களினால் தாங்கள் அடந்துள்ள வெற்றியினையும் அவ்வெற்றியினால் ஏற்படும் இன்பத்தினையும் உயிர் வளர்ச்சியினையும் பிறருக்கு ஈந்து அளிக்க வேண்டும் என்கின்றார் திருமூலர்.
அறம் செய்வது என்பது உணவோ பொருளோ போன்றவை மட்டும் அளிப்பது அன்று. மாறாகத் தன்னைச் சார்ந்தவர்களையும் தான் சார்ந்துள்ள குமுகாயத்தையும் தான் பெற்றுள்ள ஆளுமையையும் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதும்தான். இவ்வுலகை விட்டு நீங்கினாலும் ஒருவரிடம் உள்ள ஆளுமை பிறரிடத்தில் நிலைத்து நிற்கவும் வளரவும் ஆவன செய்தலும் அறம் செய்தலே என்கின்றார் திருமூலர். தனக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தினைத் தொழில் முனைவர்கள் பிறருக்குக் கற்றுக் கொடுத்தலும் கல்விமான்கள் கல்வி கற்கும் நுட்பங்களைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தலும் தலைமைத்துவம் உடையவர்கள் புதிய தலைமைத்துவத்தை உருவாக்குதலும் இசைவல்லுநர்கள் புதிய இசைவானர்களை உருவாக்குதலும் சமய அறிஞர்கள் தங்கள் சமய அறிவைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்தலும் அறம் செய்தலே ஆகும்.
ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள, தமக்கு ஆளுமை உடைய ஒன்றினைக் கரவு இன்றிப் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பார்களேயானால் அதுவே மிகச் சிறந்த அறம். சமையற்கலையில் சிறந்தவர் அக்கலையைப் பிறருக்குச் சொல்லித் தருதலும் மலர் தொடுத்தலில் சிறந்தவர் அக்கலையைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தலும் இறைவழிபாட்டில் கைத்தேர்ந்தவர் அதனைப் பிறருக்குச் சொல்லிக்கொடுத்தலும் சிறந்த அறமாம். தம்மிடம் திறன் இல்லாவிட்டாலும் திறன்களைப் பெறுகின்ற மூலங்களை அடையாளம் கண்டுப் பிறரை அதன்பால் செல்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் உதவியும் செய்தலும்கூட மிகச்சிறந்த அறம்தான்.
சுயநலத்தினாலும் தற்பெருமையினாலும் பொறாமையினாலும் பிறர் முன்னேறுவதனை ஏற்றுக் கொள்ள முடியாமையினாலும் தன்னிடம் உள்ள தனித் திறமைகளையும் சிந்தனைகளையும் வாய்ப்புக்களையும் பிறருக்குக் கொடுக்காமலும் காட்டாமலும் சொல்லிக்கொடுக்காமலும் இருப்பதனை, “ எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன, ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்” என்கின்றார் திருமூலர். நச்சுத் தன்மையுடைய எட்டி மரத்தில் பழுத்துத் தொங்கும் பழங்களினால் எப்பயனும் இல்லாதது போன்று திறன்மிக்கவர்களின் திறன்கள் அறம் அல்லாத தன்மையால் பயன் அற்றுப் போகும் என்கின்றார். மணித்துளிகள், மணி, நாள், திங்கள், வருடம் என்று வாழ்நாள் சுருங்கிக்கொண்டே வந்து, பல்வேறு திறன்களை உடைய நம்முடைய உடலும் மூளையும் வயது போனவுடன் தளர்ச்சியுற்றுச் சாறு பிழிந்த கணி, கரும்பு ஆகியவற்றின் சக்கை போல் பயனற்றுச் செயல் அற்றுப் போய்விடும். அது ஏற்படுமுன் நம் உடலையும் அறிவையும் பிற உயிர்களுக்குப் பயன்படும் வகையில் அறஞ்செய்தலில் ஈடுபடுத்துங்கள் என்கின்றார் திருமுலர்.
உலகியல் அறமாகிய பிற உயிர்களிடத்தில் அன்பு கொள்ளுதல், பிற உயிர்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல் பொன்றவற்றைச் செய்ய இயலாதவர்கள், அறவாழியாகிய அண்ணல் சிவபெருமான் மீது ஒருபோதும் உண்மையான அன்பினைக் காட்ட இயலாது என்கின்றார். பெருமானின் திருவருளைப் பெற பூசனைகள், வழிபாடுகள், சிவச்செறிவுகள் (சிவயோகம்), ஞானநெறியில் நிற்றல் என்று பல்வேறு முயற்சிகள் செய்யினும் பிற உயிர்களுக்கு அறஞ்செய்யாதவர்களிடத்தில் சிவஅறிவும் சிவ உணர்வும் ஒருபோதும் ஏற்படாது என்கின்றார் திருமூலர். நல்லறம் செய்யாது உள்ளத்தில் கரவும் கறுப்பும் உடையவர்கள் கொடிய நோய்களுக்கு ஆளாகிப் பணிவற்றவர்களாய் ஆணவச் செருக்கில் மூழ்கி, இறந்த பின்பு இருள் உலகில் துன்புற்றுத் தனித்து வாழ்வர் என்கின்றார். பிற உயிர்களுக்கு அறம் செய்யாது வாழும் மாந்தர், மக்கள் பிறப்பில் தோன்றி இருப்பினும் அவர்கள் அறிவிற் குறைந்த மாக்கள் அல்லது விலங்குகளுக்கும் கீழானவர்கள் என்கின்றார் திருமூலர். இவர்கள் வீட்டில் வாழ்ந்தாலும் காட்டில் வாழும் கொல் விலங்கினும் கொடிய ஈரம் இல்லாதவர்கள் என்கின்றார். கிடைத்தற்கரிய இம்மாந்தப் பிறவியில் பெருமான் அளித்திருக்கும் அரிய ஆற்றல்களையும் அறிவினையும் பிற உயிர்களுக்கு அறம் செய்வதற்கும் பயன்படுத்தி நம் உயிரை வளர்த்து ஒளி உலகினை அடைவோமாக!
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!