95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்

909

உயிரில் கலந்து இருக்கும் இறைவனை உள்முகமாக உற்று நோக்கி அவனுடன் பிரிப்பின்றிச் சேர்ந்து இருந்து இன்பம் காணுகின்ற செயலே சிவச்செறிவு அல்லது சிவயோகம் என சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடும். இதனையே, “தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும், நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால்விரல், மாடுவன் மாடுவன் வன்கைப் பிடித்து மகிழ்ந்துள்ளே, ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே” என்று சுந்தரமூர்த்தி அடிகள் தமது திருப்பதிகத்தில் குறிப்பிடுவார். திருஆமாத்தூரில் உள்ள இறைவனின் திருவடிகளை நாள்தோறும் தேடுவேன். அவனை உந்திக்கு மேல் நால்விரல் அளவில் உள்ள உள்ளத்தில் நினைப்பேன். என் உள்ளத்தில் இருந்து வெளியில் செல்லாதபடி வலியக் கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்த்து அவன் மகிழும்படியான கூத்துகளை ஆடுவேன் என்பார். இதனையே, “தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும், தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்” என்று திருநாவுக்கரசர் அடிகளும் குறிப்பிடுவார். அகத்திலே இறைவனோடு இன்புற்று இருக்கும் இவ்வகத்தவம் இயற்றும் எட்டுப் படிநிலைகளில், தீது அகற்றல், நன்று ஆற்றல் என்பவற்றை அடுத்து மூன்றாவது படிநிலையாக இருக்கையைத் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

வடமொழியில் ஆசனம் அல்லது ஆதனம் என்று குறிப்பிடப்படும் முறைகளும் அவற்றின் பயிற்சியும் சிவச்செறிவு புரிவதற்குத் துணைநிற்கின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். கை, கால், உடல் உறுப்புகள் போன்றவற்றைத் தக்கவாறு அமைத்துக்கொண்டு அமர்ந்து இருக்கும் முறை இன்றியமையாதது என்கின்றார். தாமரையைப் போன்ற வடிவம் முதல் அந்த அந்த வடிவத்திற்கு ஏற்றவாறு பெயரைப் பெற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் இருக்கைகள் சிவச்செறிவு முறையில் பல உள்ளன. அவற்றில் எட்டு இருக்கைகள் சிறப்புடையன என்றும் அவற்றிலும் சுவத்தி என்று வடமொழியில் அழைக்கப்பெறும் இறுமாப்பு இருக்கை மிகச் சிறந்தது என்றும் திருமூலர் குறிப்பிடுவார். இதனைப், “பங்கைய மாதி பரந்தபல் ஆதனம், அங்குளவாம் இரு நாலும் அவற்றினுள், சொங்கில்லை யாக சுவத்திக மெனமிகத், தங்க இருப்பத் தலைவனு மாமே” என்று குறிப்பிடுவார்.

இரண்டு கால்களையும் மாற்றித், தொடைமேல் உள்ளங்கால்கள் மலர்ந்து இருக்குமாறு நன்றாக வலித்து இழுத்து வைத்தல் வேண்டும். பின்பு அம்மலர்ந்த உள்ளங்கால்களின் மேல் இரு கைகளும் சேர்ந்து மலர்ந்து இருக்குமாறு வைத்தல் வேண்டும். நன்றாய் நிமிர்ந்து இருந்து நேர்முகமாய் நோக்குதல் வேண்டும். இதுவே தாமரை இருக்கை அல்லது பத்மாசனம் என்று திருமூலர் விளக்குக்கின்றார். இதனைக், “ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட், டார வலித்ததன் மேல்வைத் தழகுற, சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்க, பார்திகழ் பத்மா சனமென லாகும்” என்று ஓதி அருளுவார்.

வாள் வடிவில் அமைக்கப் பெறும் பத்திராதனம், பத்மாசனத்தை விடச் சற்று வேறானது என்கின்றார் திருமூலர். பத்திரம் என்றால் வாள் என்று பொருள். கூரிய வாள் வடிவில் அமைக்கப் பெறும் இவ்வகை இருக்கையில் வலக் காலை எடுத்து இடது முழந்தாள் மேலாக ஊன்றி, இரண்டு கைகளையும் அவ்வலக்கால் முழந்தாளின் மேல் நீட்டி, உடலை நேர்நிற்க நிறுத்தினால், உடல் வாளின் வடிவாய் நிற்கும் என்கின்றார் திருமூலர். இப்பத்திராதன இருக்கையால் உடல் தளர்ச்சியின்றிக் கிளர்ச்சியுற்று இருக்கும் என்பார்கள். இப்பத்திராதனத்தின் இயல்பினைப் பிறநூல்கள் பிறவாறும் கூறுதல் உண்டு. இப்பத்திராதனத்தைத், “துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்கைவைத்து, அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி, உருசி யொடும் உடல்செவ்வே யிருத்திப், பரிசு பெறுமது பத்திரா சனமே” என்று அருளுவார் திருமூலர்.

பாதங்கள் இரண்டையும் மாற்றித் தொடையின் மேல் ஏறுமாறு செய்து அமைத்து, உடம்பின் பளுவை முழங்கை தாங்குமாறு அமைத்து அசைவின்றி இருத்தல் கோழி இருக்கை அல்லது குக்குட ஆசனம் என்கின்றார் திருமூலர். இதனை, “ஒக்க அடியினை யூருவில் ஏறிட்டு, முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றித், தொக்க அறிந்து துலாங்கா திருந்திடிற், குக்குட ஆசனம் கொள்ளலு மாமே” என்கின்றார். பிருட்டங்கள் குதிங்கால்மேல் இருக்க, கால் விரல்களை நிலத்தில் ஊன்றி குதிங்கால் மேல் எழுந்து முழங்கால்களின் மேல் கைகளை வைத்து எளிதின் இருத்தலும் ஒருவகைக் குக்குட ஆதனம் என்பார்கள்.

இரு கைகளையும் இரு முழந்தாள்களிடையே புகச் செலுத்தி இரு பாதங்களிலும் படுமாறு நீட்டி, வாயைத் திறந்து கொண்டு, இரு கண்களும் மூக்கு நுனியைப் பார்க்க இருப்பது சிங்கத்தின் வடிவினைக் குறித்து நிற்கும் என்கின்றார் திருமூலர். இதுவே சிங்க ஆதனம் எனப்படுகின்றது. இதனைப், “பாத முழந்தாளில் பாணி களை நீட்டி, ஆதர வோடும்வாய் அங்காத் தழகுறக், கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச், சீர்திகழ் சிங்கா சனமெனச் செப்புமே” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

திருமூலர் குறிப்பிட்ட எட்டு முதன்மையான இருக்கைகளில் மேற்குறிப்பிட்ட தாமரை இருக்கை, வாள் இருக்கை, கோழி இருக்கை, அரிமா இருக்கைகள் போக, சுவத்திக ஆசனம் எனும் மாமுது இருக்கை, கோமுக இருக்கை, வீர இருக்கை, சுக ஆசனம் என்ற இன்ப இருக்கை ஆகிய நான்கு இருக்கைகளைப் பற்றிய பாடல்கள் கிடைக்காமல் போயின என்று மகா வித்துவான் அருணை வடிவேலனார் குறிப்பிடுவார். அவற்றின் இயல்புகளைப் பிறநூல்களின் வழித் தெளியலாம் என்றும் குறிப்பிடுவர்.

சிவச்செறிவிற்கு முதன்மையான சிறப்புடைய எட்டு இருக்கைகள் மேற்கூறப்பட்டவை என்று குறிப்பிடும் திருமூலர், இவற்றைத் தவிர சொல்லப்படாத இருக்கைகளும் உள்ளன என்றும் அவற்றைப் பிற நூல்களின் வழி அறியலாம் என்றும் குறிப்பிடுகின்றார். அவ்வகையில் மீன் இருக்கை(மச்ச ஆசனம்), ஆமை இருக்கை(கூர்ம ஆசனம்), முதலை இருக்கை(மகர ஆசனம்), வில் இருக்கை(தனுசு ஆசனம்), பின் பாகம் மேல் எழும் பறவை இருக்கை(பச்சி மோத்தாசனம்), மயில் இருக்கை(மயூர ஆசனம்), தவளை இருக்கை(மண்டூக ஆசனம்), குரங்கு இருக்கை(மற்கட ஆசனம்), ஒற்றைக் கால் இருக்கை(ஏக பாத ஆசனம்), தலை இருக்கை(சிரசு ஆசனம்), கலப்பை இருக்கை(அல ஆசனம்), ஓடம் இருக்கை(நௌக ஆசனம்), முழுதுடல் இருக்கை(சருவாங்க ஆசனம்) பிண இருக்கை(சவ ஆசனம்) எனச் சிலவற்றைக் குறிப்பிடலாம். இருக்கைகளைப் பற்றி விரிவாக அறிய விளைவோர், ‘அடயோக தீபிகை’, ‘பதஞ்சலி சூத்திரம்’ முதலிய அகத்தவ நூல்கள் உள்ளும் சில உபநிடதங்களிலும் கண்டு கொள்ளலாம் என்று குறிப்பிடுவர்.

மேற்கூறப்பட்ட இருக்கைகளில் நிற்றல், இருத்தல், கிடத்தல், என்பன கூறப்பட்டன. அவை தவிர சிவச்செறிவிற்கு நடத்தலும் இன்றியமையாதது என்றும் சான்றோர் குறிப்பிடுவர். மேலும் மேற்கூறிய அனைத்தையும் சமய உணர்வோடு செய்யாவிட்டால் சிவச்செறிவில் இருக்கைகளினால் பெறக்கூடிய பயன் வெறுமனே உடற்பயிற்சியாய்ப் போய்விடும் என்பதனை, “நிற்றல் இருத்தல் கிடத்தல் என், றொத்த நான்கின் ஒல்கா நிலையோ, டின்பம் பயக்கும் சமய முதலிய, அந்தமில் சிறப்பின் ஆதன மாகும்” என்று நச்சினார்க்கினியர் இருக்கைகள் பற்றி குறிப்பிடுவதனையும் இங்கு எண்ணிப் பார்த்தல் நலமாகும்.

சீர்மிகு செந்தமிழரின் கூர்மையான அறிவிற்கும் ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் இறநெறிக்கும் சான்றாய் விளங்குகின்ற சிவச்செறிவு இருக்கைகள் இன்று உலக முழுவதும் போற்றப் பட்டும் பயிலப் பட்டும் வருகையில் அதன் அருமையை அறியாமல் தமிழர்கள் வாளாதிருப்பது பேர் இழுக்கு எனலாம். தமிழருக்கே உரிய இவ்வரிய வாழ்வியல் கலையினைக் கற்றுக் கொடுக்கும் உண்மையான சிவச்செறிவாளர்களைத் தேடிப் பணிந்து, அவர்கள் பெற்ற இன்பத்தினை நாமும் நம் பிள்ளைகளும் பெறுதற்கு ஆவன செய்வோம். தமிழர்கள் தொலைத்து விட்ட, மறந்து விட்ட, அறியாது விட்ட அரிய தமிழ்க்களஞ்சியங்களில் இச்சிவச்செறிவும் ஒன்றாக ஆகிவிடாமல் காப்பது நம் கடமை என்று தெளிவு பெறுவோம். உடல் நலத்தையும் உயிர் நலத்தையும் மனவலிமையையும் இறை உணர்வையும் கூட்டுவிக்கும் சிவச்செறிவினைத் தமிழன் உலகிற்கு அளித்த கொடை என்று நெஞ்சுயர்த்திப் பயில்வோம். வீறு பெறுவோம். நனிசிறக்க வாழ்வோம். இன்பமே எந்நாளும் துன்பமில்லை!