திருநீறு

2836

இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பை வளர்த்து இன்பநிலை அடைவதே வழிபாட்டின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேற உள்ளத்தில் காமம், கோபம், மயக்கம் என்ற மூன்று குற்றங்கள் நீங்க வேண்டும். இக்குற்றங்களே நமக்கு “யான்-எனது” என்கின்ற அறியாமையை ஏற்படுத்துவனவாய் உள்ளன. இச்செருக்கே நம்மைக் கீழ்த்தன்மை படுத்துகின்றன. இத்தகைய குற்றங்களைக் களையவே அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதற்குப் பின்பற்றுவதற்குச் சாதனங்கள் என்று சைவம் சிலவற்றைக் கூறுகிறது. அவற்றில் ஒன்று திருநீறு அணிதல்.

திருநீற்றை எப்பொழுதும் அணிய வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே “நீரில்லா நெற்றி பாழ்” என்று ஒளையார் குறிப்பிடுவார். திருநீறு நிலையாமையை உணர்த்தும் அரிய பொருளாய் உள்ளது. அதாவது இறைவன் கொடுத்திருக்கின்ற இத்தற்காலிக மானுடலானது உறுதியாய் ஒரு நாளைக்கு இத்திருநீற்றைப் போன்று சாம்பலாய்ப்போகும். உயிராகப்பட்டது தன்னைப் பற்றிக் கொண்டிருக்கின்ற யான் – எனது என்ற அறியாமையையும், கன்மம் என்கின்ற செயலையும், மாயை என்கின்ற மயக்கத்தையும் விட வேண்டும் என்பதனை முக்கோடுகளாய் ஒவ்வொரு வேளையும் அணியும் போது நமக்கு நினைவுறுத்துகின்றது. எனவே திருநீறு என்பது நாம் நம்மிடம் உள்ள உள் அழுக்குகளைத் தூய்மை செய்து அன்பு நெறிக்கு ஆளாகி இன்ப நிலையை அடைய வேண்டும் என்பதை நினைவுறுத்தும் அரிய சின்னமாய் உள்ளது.

திருநீறு இறைவனின் திருக்கருணையை உணர்த்துவதாயும் உள்ளது. இறைவனே நமது ஆணவம், கன்மம், மாயை என்கின்ற உள் அழுக்குகளைப் போக்குபவராக இருக்கிறார் என்பதைத் திருநீறு அணிவதன் வழி நினைப்பித்துக் கொள்கிறோம். வழக்கமாக திருநீற்றை வெறும் நெற்றியில் மட்டும் பலரும் அணிகிறோம். திருநீற்றை முறையாக உச்சி, நெற்றி, மார்பு, நாபி, வலது முழந்தாள், இடது முழந்தாள், வலது தோள், இடது தோள், வலது முழங்கை, இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, வலது விலா, இடது விலா, முதுகு, கழுத்து என்று பதினாறு இடங்களில் அணிய வேண்டும் என்று சைவ நூல்கள் குறிப்பிடும். இதன்வழி இறைவனே நம் உடல் முழுவதையும் காக்கின்றான் என்பது உணரப்படும். இதன் வழி இறைவன் கருணையினாலேயே இவ்வுலகில் வாழ்கின்றோம் என்று உணர, “யான் – எனது” என்ற அறியாமை விலகி, மன்னுயிரைத் தன்னுயிர் போன்று நினைக்க, அன்பு பெருகும்.

திருநீறு இப்படிப்பட்ட உயரிய உண்மைப் பொருளை உணர்த்துவதால் தான் தமிழர் மரபில் பெரியவர்கள் பிறரை வாழ்த்தும் போது திருநீறு அணிவிக்கின்றார்கள். திருமணத்திலும் சரி, இறப்பிலும் சரி, இன்னும் சில நிகழ்வுகளிலும் திருநீறு தவறாமல் இடம் பெறுகிறது. இன்பத்திலும் துன்பத்திலும் மேற்கூறிய வாழ்வியல் உண்மையை மறந்துவிடாதே என்று நினைப்பிப்பதுதான் இதன் நோக்கம். எனவேதான் தமிழ்ஞான சம்பந்தர் திருநீற்றுப் பதிகம் என்று பதினோறு பாடல்கள் உரிய சிறப்பு அருந்தமிழ்மாலை ஒன்றைப் பாடியுள்ளார்.

மதுரையில் பாண்டிய மன்னனின் வெப்பு நோயைத் திருநீறு பூசி போக்கினார். இறைவனின் திருவருளாய் எண்ணி அணிவித்த அத்திருநீற்றினை, மந்திரம் போன்று நினைத்ததைக் கொடுத்துக் காக்கும் எனவும்,  உலகில் வாழ்கின்ற உயிர்கள் அணிகின்ற உயர்ந்த பொருள் எனவும், இறை அழகை நமக்குத் தரக்கூடியது எனவும், சைவ நூல்களால் புகழ்ந்து கூறப்பட்டது எனவும், சைவ சிவாகமங்களில் சிறப்பாகக் கூறப்பட்டது எனவும், இறைவன், உயிர், உயிரைப் பற்றியுள்ள அழுக்கு என்பதனை நினைவூட்டுவதாய் உள்ளது எனவும் குறிப்பிடுகின்றார். மேலும் இத்திருநீற்றினை மதுரைத் திருக்கோயில் இறைவர் திருஆலவாயர் அணிந்துள்ளார் எனவும் குறிப்பிடுகின்றார்.

இறைவன் திருநீறு பூசியிருப்பதைத் திருமூலரும் சம்பந்தப் பெருமானைப் போன்று அழகுற குறிப்பிடுவார். “கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை, மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில், தங்கா வினைகளும் சாரும் சிவகதி, சிங்காரமான திருவடி சேர்வரே” என்பார் திருமூலர். இறைவன் பூசியிருக்கின்ற திருநீறு, உயிர்களின் அறியாமையை அவன் எறித்ததற்குச் சான்றாய்க் கிடக்கின்றது என்று சைவ நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனையே திராவிட சிசு என்று அழைக்கப்பெற்ற சம்பந்தப் பெருமான், “காடுடைய சுடலைப் பொடிப் பூசி, என் உள்ளம் கவர் கள்வன்” என்பார். மணி மணியாய்த் தமிழில் இறைவனை வழுத்திய மணிவாசகரோ, “பூசுவதும் வெண்ணீறு” என்று திருச்சாழலில் பாடுவார். எனவே திருநீறு சைவத்தில் உயர்ந்த பொருளாய் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய உயர்ந்த திருநீற்றை அணியாமல் இருப்பதும், சிலர் இவ்வுயரிய திருநீற்றைத் தரையில் சிந்துவதும், இன்னும் சிலர் ஆலய தூண்களில் வீசி எரிவதும், இன்னும் சிலர் படையல் என்ற பெயரில் அசைவ உணவுகளிலும் மது பானங்களில் தூவுவதும் சிந்தனைக்கும் செயலுக்கும் உரியது. திருநீற்றின் உயர்வைப் பற்றிக் குறிப்பிடுகையில் திருநாவுக்கரசர் சுவாமிகள், “எவரேனும் தாமாக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி ……உகந்தடிமைத் திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி …..” என்று குறிப்பிடுகிறார். திருநீறு பூசியவர்களைக் கண்டால் மகிழ்ந்து அவர்களுக்கு அடிமை பூண வேண்டும் என்கிறார். இதன் வழி திருநீற்றின் சிறப்பு நமக்கு அறிய வருகின்றது.

உண்மைச் சைவ வாழ்வியல் நெறியினை வாழ்ந்து காட்டிய அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் பெரியபுராணமோ திருநீற்றிற்காக உயிரினை விட்ட அடியார்கள் பலரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. திருநீறு பூசினால் தலை துண்டிக்கப்படும் என்று சட்டம் இருந்த காலத்தில் மன்னனான தன் கணவன் அறியாமல் மார்பில் திருநீறு பூசியிருந்த மங்கயர்க்கரசியாரை மங்கயர்க்குத் தனியரசி என்று சேக்கிழார் புகழ்ந்து பாடுகிறார். தன் எதிரி திருநீறு பூசியிருந்ததினால் அவன் கையால் இறப்பது மேல், அவனுக்குத் தீங்கு இழைப்பது இறைக்குற்றம் என்று அவன் கையில் இறக்கத் துணிந்த ஏனாதி நாயனாரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. தலையில் கூடையில் கொண்டு சென்ற ஊவர்மண் உடம்பில் பட்டுத் திருநீறு போன்று காட்சியளித்த வண்ணான் காலடியில் வீழ்ந்து வணங்கிய மன்னன் சேரமான் பெருமாள் நாயனாரைக் குறிப்பிடுகின்றது. திருநீறு பூசிய வேடத்துடன் வந்து தன்னை வஞ்சகமாகக் கொடுவாளால் குத்திய முத்தநாதன் என்ற தீயவனை ஊர் எல்லைவரைச் சென்று பாதுகாப்பாய் விட்டு வரும்படி பணித்த மெய்ப்பொருள் நாயனார் என்ற மன்னனை உயர்வாய்க் குறிப்பிடுகின்றது. திருநீற்றுக்கு உண்மைச் சைவர் எவ்வளவு உயர்வு அளித்துள்ளனர் என்பதை இதன்வழி அறியலாம்.

அறிவியல்படியும் திருநீறு பசுவின் மலத்தினால் செய்யப்படுவதினால் அது ஒரு நல்ல கிருமிநாசினி என்றும் புலப்படுகிறது. எனவேதான் திருநீற்றினை அன்றாட வாழ்வில் பின்பற்றக் கூடிய சாதனைகளில் ஒன்றாய் நம் சைவ சான்றோர் குறிப்பிட்டனர். இன்றைய நவநாகரிக உலகில் பல அழகு சாதனப் பொருட்களை அணியும் நாம் உயிருக்கு அழகினைத் தரும் திருநீற்றையும் குறைந்த அளவு காலையும் நண்பகலும் மாலையுமாவது அணிய வேண்டும். பெரியவர்களும் சிறியவர்களும் இயன்றவரை ஒவ்வொருவேளை உணவு உட்கொள்ளும் முன்பும் அணிய வேண்டும். இயலாவிட்டால் உண்பதற்கு முன் திருநீற்றை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும். உறங்கும் முன் திருநீற்றை அணிவதால் பேய் பயம், தீய கனா போன்றவை நீங்கி மனதில் அமைதி நிலவும். வெளியில் செல்லுகையில் திருநீறு அணிந்து செல்வதினால் பிறரிடம் நன்மதிப்பு பெறுவதோடு இறைச் சிந்தனையையும் தோற்றுவிக்கும். மேலும் திருநீறு கவசமாய் நின்று தீவினைகளைப் போக்கும் என்று திருமூலர் குறிப்பிடுகிறார். நற்சிந்தனையையும், நற்செயலையும், நற்சொற்களையும் தோன்றச் செய்து உயிரைத் தூய்மையாக்கி, உயர்ந்த வாழ்வினை அடைய சாதனமாய் உள்ள திருநீற்றை நாளும் பூசி மகிழ்வோம்.

“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”