122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு

4151

122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு

சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவத்தின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று திருநீறு ஆகும். “பொங்குஒளி வெண்திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே” என்று திருநீற்றின் பெருமையைத் தெய்வச் சேக்கிழார், மங்கையர்க்கரசியாரின் வரலாற்றில் குறிப்பிடுவார்.
இறைவனின் 
திருவருளுக்கு அடையாளமாக வாழ்த்து வழங்கும்போது அணிவிக்கப்படும் திருநீற்றினைச் சைவர்கள் அணிய வேண்டிய உண்மையை, உறைப்பினை உணர்த்திய மங்கையர்க்கரசியார் என்ற பெண் அடியாரின் திருவடிகளை யார் எல்லாம் போற்றுகின்றார்களோ, அவர்களின் திருவடிகளை நான் போற்றி வணங்குகின்றேன் என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.
மெய்ப்பொருள் நாயனார் திருநீறு அணிந்திருந்த தன் எதிரியினைக் கொல்லுதல் கூடாது என்றும் அவன் மெய்ப்பொருள் நாயனாரைக் குத்து வாளால் குத்தியபோதும் திருநீறு பூசிய அவன் கையில் மடிவது சிறப்பு என்றும் திருநீற்றுக்காகத் தன் உயிரை விட்டதும் திருநீற்றின் சிறப்பினை நமக்கு நன்கு உணர்த்தும்.

திருநீற்று நெறியாகிய சிவநெறியினைப் பரப்புதற்கு வந்தவர் என்று தெய்வச் சேக்கிழாரால் போற்றப்பெறும் திருஞானசம்பந்தப் பெருமான் திருநீற்றின் சிறப்பினை உணர்த்தித் திருநீற்றின் துணைக் கொண்டு பாண்டிய மன்னனின் வெப்பு நோயைப் போக்கியதும் திருநீற்றின் பெருமையை உணர்த்தி நிற்கின்றன. சித்தாந்த சைவ நெறியாகிய சிவ நெறியில் திருநீறு எத்தகைய சிறப்பினைப் பெற்றிருக்கின்றது என்று திருஞானசம்பந்தர் அழகுற குறிப்பிடுவார். வானுலகத்தில் உள்ள வானவர்கள் உடலெங்கும் பூசிக் கொள்ளும் திருநீறானது, மந்திரம் போல் பூசுபவர்களைக் காப்பது என்கின்றார். சிவ அழகினைக் கொடுக்கின்ற திருநீறானது சைவ சமய அனைத்து நூல்களிலும் சிவ ஆகமங்களிலும் வலியுறுத்தியும் புகழ்ந்தும் சொல்லப்படுவது என்கின்றார்.

வடமொழி வேதங்களிலும் சிறப்பாக எடுத்து ஓதப் பெறும் திருநீறு கொடிய பிறவித் துன்பத்தைத் தீர்க்கக்கூடியது என்கின்றார். சிவ அறிவினை நல்கி அறியாமை எனும் சிறுமையைப் போக்கும் திருநீற்றின் பெருமை சமய ஆசான்களால் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டும் அணியச் செய்வித்தும் போற்றப்பட வேண்டியது என்கின்றார். மெய்ப்பொருளான இறைவனின் நிலை பெற்ற நிலையையும் உயிர் பெற்றுள்ள நுகர்ச்சிப் பொருள், உடல், உலகு, கருவிகள் ஆகியவற்றின் நிலையாமையையும் உணர்த்தி நிற்பது திருநீறு என்றும் குறிப்பிடுகின்றார். பெருமானின் திருவடிப் பேற்றினை அளிக்க வல்ல திருநீறு பெருமானிடத்தில் அன்பினை விளைவிக்கத் துணை நிற்பது என்றும் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், திருநீறு விரும்பி அணிவார்க்குப் பெருமையையும் உயர்வையும் நல் அறிவையும் அளிப்பது என்கின்றார்.

ஆசையை விட வேண்டும் என்பதனை உணர்த்தும் திருநீறு, யான் எனது எனும் செறுக்கினை அறுத்து உடல் கிடக்க இறக்கும் போது உயிரோடு எஞ்சி இருக்கின்ற அருள் செல்வத்தினைச் சேர்ப்பிப்பது என்கின்றார். உடற்தூய்மையையும் உளத்தூய்மையையும் அளிக்கும் திருநீறானது பிற உயிர்களிடத்தில் அன்பை விளைவிப்பது என்றும் நம் தீவினைகளைப் போக்கி இறைவனின் திருவருளைக் கூட்டுவது என்றும் குறிப்பிடுகின்றார். இத்தகைய சிறப்புடைய திருநீற்றினைத் திருமூலரும் குறிப்பிடுகின்றார்.

“செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிவந்த பவளம் போன்ற திருவாயினை உடைய உமையைத் தமது உடலில் ஒரு பாகமாகக் கொண்ட, திருஆலவாய் என்று சொல்லப்படும் மதுரைக் கோயிலில் உள்ள பெருமானும் திருநீறு அணிந்திருக்கின்றான் என்று அவர் குறிப்பிடுகின்றார். திருமூலரோ, “கங்காளன் பூசும் கவசத் திருநீறு” என்கின்றார். பெருமானின் கங்காள வடிவம் என்பது பேரூழி காலம் ஏற்படுகின்ற போது பெருமான் தோற்றிய உலகங்கள் யாவற்றையும் பிறவற்றையும் ஒடுக்கி அருளும் காலத்தில் கொள்ளும் வடிவம் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பேரூழி காலத்தில் எல்லாம் ஒடுங்கிப் பேரிருள் எங்கும் சூழ்ந்து நிற்கும் போது நான்முகன், திருமால், இந்திரன் போன்ற வானவர்களின் மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் மலையாக அணிந்து பெருமான் தனித்துத் தனித் தலைவனாக நிற்பான் என்றும் குறிப்பிடுகின்றன. அவ்வேளையில் பெருமானின் திருநெற்றியில் திருநீறு அணியப் பெற்றுத் தோற்றமளிப்பான் என்றும் குறிப்பிடுகின்றன. இதனையே, “நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே” என்று மணிவாசகரும் சிவபுராணத்தில் குறிப்பிடுவார்.

கங்காள வடிவத்திலே பெருமான் அணிந்திருக்கின்ற திருநீற்றை யார் எல்லாம் அணிகின்றார்களோ அவர்களைப் பகை அல்லது தீவினைகள் வந்து தாக்காமல் திருநீறு பாதுகாக்கும் என்கின்றார் திருமூலர். தீவினைகள் கெடுவதோடு மட்டும் அல்லாமல் சிவசார்பு ஏற்பட்டு இறைவனின் திருவடிப் பேறும் கிட்டும் என்பதனைக்,

“கங்காளன் பூசும் கவத் திருநீற்றை,
மங்காமல் 
பூசி மகிழ்வரேயாம் ஆகில்,
தங்கா வினைகளும் சாரும் சிவகதி,
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே”

என்கின்றார். 

உயிர்கள் திருநீறு அணிவது தங்கள் உயிரைப் பற்றியுள்ள அழுக்குகளைப் போக்கிக் கொள்ளவும் நிலையாமையை உணரவும் என்பர். பெருமானின் திருநெற்றியிலும் திருமேனியிலும் காணப்படும் திருநீறானது பேரூழி காலத்திலே பெருமான் உயிர்களின் அழுக்குகளைச் சுட்டு எறித்துச் சாம்பலாக்கியதன் குறிப்பாகும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானின் திருவருளைக் கூட்டுவிக்கும் திருநீறு பெருமானின் திருவருளாகவும் அமைகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

திருமூலரும் நாயன்மார்களும் சைவ மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சிவ ஆகமங்களும் போற்றிப் புகழும் திருநீற்றினைப் பெருமானின் திருமேனியில் விளங்கும் திருநீற்றினைச் சைவர்கள் அணிவதற்கு வெட்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டியது. தங்கள் பிள்ளைகளுக்குத் திருநீறு அணிவதன் மேன்மையையும் உயர்வையும் உறைப்பையும் அதன் பயனையும் எடுத்துரைப்பதும் அதனை அணியும் முறையினைச் செயற்படுத்துவதும் சைவப் பெற்றோர்களின் கடப்பாடாகும்.  சைவர்களின் வீடுகளில் நடத்தப் பெறும் காதணி விழா, பூப்பெய்தல் விழா, திருமண விழா, வளைகாப்பு, இறப்பு, புதுமனைப் புகுவிழா, பிறந்த நாள் விழா போன்ற எவ்விழாவாயினும் அதில் திண்ணமாகத் திருநீறு இடம் பெறுதலை உறுதி செய்தல் வேண்டும். சைவர்களின் இல்லங்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் முதலியவற்றில் வாழ்த்துத் தெரிவிக்கின்ற சைவப் பெற்றோர்களும் உற்றார் உறவினரும் சைவர்களின் உயரிய, சைவச் சமைய அடையாளமாகவும் இறைவனின் திருவருளாகவும் விளங்குகின்ற திருநீற்றை அணிவித்தே வாழ்த்தினைத் தெரிவித்தல் வேண்டும். திருநீறு திருவருளின் அடையாளம் என்பதனால் அதனை அணிந்தப் பிறகு எஞ்சிய திருநீற்றை ஊதித் தள்ளுவதும் கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதும் பெருந்தீங்கினை ஏற்படுத்தும் என்பதனைச் சைவர்கள் தெளிதல் வேண்டும்.

திருக்கோவில்களிலும் இந்நிலை சீர் அடைய வேண்டும். திருக்கோயிலில் பூசகரிடம் இருந்து பெற்றத் திருநீற்றைப் பணிவுடன் பெற்று அதனைக் கீழே சிந்தாமல் அண்ணார்ந்து ‘சிவ சிவ’ என்று சொல்லி அணிந்த பின் எஞ்சிய திருநீற்றினைத் திருக்கோயில் தூண்களில் கொட்டாமல் அதற்குரிய இடங்களில் சேர்ப்பிப்பது நல்லது. அல்லது இல்லத்திற்கு எடுத்துச் செல்வதோ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். காவல் தெய்வங்களை வழிபடுகின்றவர்கள் மேன்மையுடைய திருநீற்றினை மதுபானங்களிலும் புலால் உணவு வகைகளிலும் தூவுவது பெரும் கேட்டை விளைவிக்கும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

சைவத் திருக்கோயில்களில் பூசனை இயற்றும் பூசகர்கள் திருநீறு அணியாமல் வெறும் குங்குமத்தை மட்டும் அணிவதும் சைவத் திருக்கோயில்களில் வழிபட வரும் அன்பர்களுக்குத் திருநீற்றை அளிக்காமல் குங்குமத்தை மட்டும் அளிப்பதும் பூசகர்கள் தங்களது நெற்றியில் திருநீற்றிற்குப் பதிலாக வெறும் சந்தனத்தை மட்டும் திருநீறு போல அணிவதும் ஏற்புடையது ஆகாது என்பதனைத் தெளிவுறுத்துதல் வேண்டும். இது நம் சைவ சமய கொள்கைக்குப் புறம்பானது என்பதனை அவர்கள் உணர்தல் வேண்டும். சிவ பெருமானின் ஆற்றலாக விளங்கும் சிவ அம்பிகைக் கோயில்களில் திருநீற்றை வழங்காது குங்குமத்தை வழங்கும் சில பூசகர்களின் செயல் தவிர்க்கப்பட வேண்டியதாகும். சிவபெருமானின் திருவருளே அம்பிகை என்பதனால் அம்பிகைத் திருமுன்பு திருநீறு அளிக்கப்படுதலே சைவ முறையாகும்.

சைவர்களின் தனி அடையாளமாகவும் சைவ சமயத்தின் உண்மையை உணர்த்தும் அரிய பொருளாகவும் பெருமானின் திருவருளைக் கூட்டுவிக்கும் மேன்மைப் பொருளாகவும் சிவ பெருமானின் திருவருளின் அடையாளமாகவும் விளங்கும் திருநீற்றைச் சைவர்கள் போற்றி அணிவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!