பார்க்கும் இடமெல்லாம் நீக்கம் அற நிறைந்திருப்பவர் பரம்பொருளே ஆயினும் அவர் திருவருள் விளங்கித் தோன்றுகின்ற இடங்களாக இரண்டினைச் சித்தாந்த சைவம் குறிப்பிடும். ஒன்று காலங் காலமாகப் பண்புடைப் பைந்தமிழர் வழிபாடு செய்து வருகின்ற திருக்கோயில்கள். மற்றது அடியார் திருவுள்ளம். திருக்கோயிலில் உள்ள இறைவனைப் படமாடும் இறைவனென்றும் அடியார் திருவுள்ளங்களில் நடமாடும் இறைவன் என்றும் குறிபப்பிடுவார் பத்தாம் திருமுறை அருளிய திருமூல தேவ நாயனார். இறைவனின் திருவடியைத் தங்கள் மனங்களிலே அல்லது உள்ளங்களிலே தாங்கியிருப்பதினால் தான் இறை நெறியில் ஆழ்ந்து இருப்பவர்களை அடியார் என்பர். இறைவன் அடியார் உள்ளத்தில் வீற்றிருக்கின்றார் என்பதனை, “மலர்மிசை ஏகினான்” என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் குறிப்பிடுவார்.
பெருமான் என்றும் எல்லா உயிர்களிலும் கலப்பினால் ஒன்றாயும் உயிர்களைச் செலுத்தும் வகையால் உடனாயும் உயிர்கள் வேறு இறைவன் வேறு என்று பொருள் தன்மையால் வேறாயும் இருப்பினும் அவரைத் தொடர்ந்து நினைப்பவர்களுக்கு மட்டுமே பெருமான் உள்ளத்திலே விளங்கித் தோன்றுகின்றார். இதனையே, “சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அல்லால் நலமிலன்” என்று திருநாவுக்கரசு அடிகள் கூறுவார். அதாவது பெருமான் விருப்பு வெறுப்பு இன்றி, உயிர்களிடத்து வேறுபாடும் பாகுபாடும் காட்டாது, தனக்கு வேண்டியவை வேண்டாதவை என்று இல்லாது அனைத்து உயிரிலும் நீக்கமற கலந்து இருக்கின்றார். ஆனால் அவரைப் பற்றாகச் சார்கின்ற உயிர்களுக்கு மட்டுமே அவை உணரும்படியாகவும், பயனைப் புரிந்துகொள்ளும்படியாகவும் விளங்கி நின்று அருள்புரிகின்றார் என்பார்.
நான்முகனாகிய பிரம்மாவும் திருமாலும் தேடிக்காண முடியாத இறைவனைத் தம் உள்ளத்துள்ளே தேடிக் கண்டுக்கொண்டதாக, “தேடித் தேடொனாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுக்கொண்டேன்” என நாவரசர் குறிப்பிடுவார். அப்படி அப்பெருமானைத் தேடிக்காண்பதற்கு, “ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம் நான் நிலாவி இருப்பன் என் நாதனை” என்பார். அதாவது தம் உடலில் உயிர் துடிப்பு இருக்கின்ற ஒவ்வொரு கனமும் பெருமானை இடைவிடாது நினைப்பேன் என்று அப்பரடிகள் கூறுகின்றார். பைந்தமிழர் பெட்டகமான சித்தாந்த சைவம் பெருமானைத் தொடர்ந்து நினைக்க வேண்டும் என்று அவ்வாறு நிப்பவர் மனதினையே பெருமான் கொயிலாகக் கொள்வார் என்கிறது. பெருமானை தொடர்ந்து நினைப்பதற்கு எளிய வழியினையும் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. ஒருவர் மனம் வாக்கு காயத்தால் பெருமானோடு எப்பொழுதும் கூடியே இருக்க வேண்டும் என்கிறது. அதாவது எதை ஒன்றை எண்ணினாலும் எச்சொல்லைச் சொன்னாலும் எச்செயலைச் செய்தாலும் இறைவனை முன்னிருத்தித் தொடங்குவோமாயின் எப்பொழுதும் இறைவனை நினைப்பவர் ஆவோம் என்கிறது சித்தாந்த சைவம்.
எளிய நடைமுறை வாழ்க்கையில் அதிகாலையில் படுக்கையை விட்டு எழும்போதே பெருமானை எண்ணி அவர் திருப்பெயரையோ அல்லது அவரின் மந்திர வடிவான ”நமசிவய” என்னும் திருவைந்து எழுத்தையோ சொல்லியே எழ வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. காலைக்கடன்களை முடிக்கின்ற வேலையிலும் கூட இறைவனை எண்ணுதல் வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. குறிப்பாக நீராடும்போது நீரை பெருமானின் திருவருள் என்று எண்ணி நாம் பெருமானின் திருவருளில் நனைவதாக எண்ணி கண்ணை மூடிக்கொண்டு பெருமானை நினைத்தவாரே தலையில் நீரை சொறிய வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. இச்செய்தியை மணிவாசகப் பெருமான் தாம் அருளிய திருவெம்பாவை என்னும் பகுதியில், “எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையே” என்று உருக்கமாகப் பாடுவார். பின்பு உடை அணியும் போதும் ஒப்பணைகள் செய்யும் போதும் இறைபோற்றிப் பாடல்களான திருமுறைகளை ஓதியவாறே செய்யலாம் என்பது பெருமானை தொடர்ந்து நினைப்பதற்கான எளிய வழிமுறைகள்.
இறைவழிபாடு முடிந்து காலை உணவு உண்ணும் முன் “நமசிவய” அல்லது “சிவயநம” என்னும் இறைவனின் திருவைந்து எழுத்தினையோ, திருமுறைப் பாடலையோ சொல்லி உணவை உண்பது பெருமானை மனத்திலே எண்ணுவதாகும். அவரவர் செய்யும் பணிகளைத் தொடங்கும் முன், “சிவ சிவ” என்று சொல்லியோ அல்லது “சிவ சிவ” என்று ஒரு தாளில் எழுதியோ பணியைத் தொடங்குவது பெருமானைத் தொடர்ந்து மனதில் எண்ணூவதாகும். ஒவ்வொரு முறையும் ஏதாவது நல்ல செயலோ செய்தியோ அல்லது கெட்ட செயலோ செய்தியோ நடக்கும் போதும் கேள்வியுறும்போதும் “சிவ சிவ” என்று சொல்லுவது பெருமானை மனதில் தொடர்ந்து நினைப்பதற்கு வழிவகுக்கும்.
மனத்தில் உள்ள இறைவனை எப்பொழுதும் எண்ணிப் பார்த்தலே அவரை நம் உள்ளத்தில் கோயில் கொள்ளச் செய்வதாகும். இதனையே, ”நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்” என்பார் திருநாவுக்கரசு அடிகள். பெருமானைத் தொடர்ந்து எண்ணி அவன் திருவருளுக்கு ஆளான மணிவாசகப் பெருமான், “ சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்” என்று அவர் மனத்தில் பெருமான் கொயில் கொண்டமையைக் குறிப்பிடுவார்.
எப்பொழுதும் இறைவன் நம் மனதிலே இருப்பதாய் எண்ணி பெருமானை எப்பொழுதும் மறவாது நினைத்திருத்தல் நம் மனத்தையும் வாக்கையும் செயலையும் தூய்மைப்படுத்தும். திருவருள் கிடைப்பதற்கும் வழிவகுக்கும். இதனையே, “ஒன்றியிருந்து நினைமின்கல் உந்தமக்கு ஊனமில்லை” என்பார் திருநாவுக்கரசு அடிகள். வீட்டிலிருந்தாலும் பணியிடத்தில் இருந்தாலும் எங்கு இருந்தாலும் இறைவன் திருவடியை மறவாத சிந்தையராப் பெருமானோடு சேர்ந்து இருப்பதாய் எண்ணுவோமனால் அவர் நம் உள்ளத்தைக் கோயிலாகக் கொள்வார். இதனையே, “உள்ளம் பெருங்கோயில்’ ஊன் உடம்பு ஆலயம்” என்பார் திருமூல நாயனார். மனம், வாக்கு, காயத்தினால் பெருமானை தொடர்ந்து நினைப்போம். நினைப்பு ஒழியா நம் நெஞ்சினைக் கோயிலாகக் கொண்டு இமைப்பொழுதும் நம்மை விட்டு நீங்காது ஒளிர்வதற்கு பெருமானின் திருவருளை நாளும் இறைஞ்சுவோமாக.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை