9. புறத்தார்க்குச் சேயோன்
சீர்மிகு செந்தமிழரின் முற்கால வாழ்வியல் முறைமையில் சைவம் என்னும் செந்நெறி, அது சைவநெறி என்று அறியாமலேயே பெரும்பாலோரால் பின்பற்றப் பெற்று வந்துள்ளது. கற்று அறிந்த பெருமக்கள் இதனை நன்கு அறிந்து பின்பற்றியது ஒருபுறம் இருக்க, கல்வி அறிவு இல்லாத பாமரமக்கள் பல்வேறு சிறு தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு இருந்துள்ளனர் என்பதும் அறியக்கிடக்கின்றது. அவ்வகையில் பெரிய மரங்களையும் மலைகளையும் கடலையும் ஆறுகளையும் காடுகளையும் தெய்வங்கள் அவற்றில் தங்கி இருந்து காக்கின்றன என்று எண்ணி அவற்றை அச்சத்தாலும் நன்றி உணர்வாலும் வழிபட்டு வந்துள்ளனர்.
ஐந்து வகை நிலங்களுக்கு உரிய தெய்வங்களான முருகன், திருமால், வேந்தன், வருணன்,கொற்றவை ஆகிய திணைத் தெய்வங்களை வழிபாடு செய்துள்ளனர். இயற்கையின் மீது கொண்ட அச்சம் ஒருபுறம் இருக்க, தங்களின் பாதுகாப்புக்கு என போரில் இறந்த வீரர்களையும் குமுகாயத்தலைவர்களையும் குறுநில மன்னர்களையும் காவல் தெய்வங்களாக நடுகல்லை நட்டு வழிபாட்டினைச் செய்துள்ளனர். இவையே பின்பு முனி வழிபாடாய் மாறிற்று என்பர். அவ்வகையில் இன்றும் நமக்குக் கருப்புசாமி, வீரன், சடாமுனி, முனியாண்டி, சையாண்டி போன்ற தெய்வங்கள் கிடைக்கப் பெறுகின்றன. இத்தெய்வங்கள் மாந்தர்களாய்ப் பிறந்து இறந்ததினால் இவர்களுக்கு ஆடு அல்லது கோழியைப் பலியிட்டு, மதுபானம், சுருட்டு, கருவாடு போன்றவற்றைப் படைத்து, சாட்டை, சங்கிலி, கத்தி, ஈட்டி போன்றவற்றை நிறுத்தி வழிபாடு செய்வர். இத்தெய்வங்கள் ஒருவர் மீது வந்து இறங்கி ஆடுவதாக வெறியாட்டம் ஆடி (சாமி ஆடுதல்) அருள் வாக்குக் கூறுவதாய்க் குறிப்பிடுவர் .
கல்வி அறிவும் சைவ சமயத்தில் சற்று அறிவுத் தெளிவும் ஏற்பட பாமர மக்கள் தாங்கள் வழிபட்ட முனிதெய்வங்களை விட முடியாது அவற்றைச் சிவப்பரம்பொருளோடு தொடர்பு படுத்தி, அவற்றை முனீசுவரன் என்றும் பைரவர் என்றும் சைவமாக்கினர். அதற்குச் சைவ சமயத்தை அறியாத குருமார்கள் துணை போயினர். இக்காவல் தெய்வங்கள் சிவபெருமானின் மறுவடிவங்கள் என்று மக்களை மேலும் அறியாமையில் ஆழ்த்தினர். இவற்றைச் சைவத் திருக்கோயில்களில் இருத்திப் பூசனைகளையும் செய்தனர்.
செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு குடும்பமும் செய்த தொழிலேதெய்வமாகவும் கருதப்பட்டது. அவ்வகையில் குடும்பங்களுக்குக் குலதெய்வ வழிபாட்டு வழக்கம் ஏற்பட்டது. இது குமுகாயப் பிரிவுகளாக மாறும்பொது மேலும் வலுப்பெற்றது. குமுகாயப் பிரிவின் அடிப்படையில் அமைந்த குலதெய்வங்களில் பெருங்கடவுளாக விளங்கும் முருகன், பராசத்தி அம்மை சிவன் திருவடிவங்களும் குலதெய்வமாக அமைவது உண்டு. பறவை, பல்லி, தவளை, ஆந்தை, நாய், குரங்கு, பச்சோந்தி, கனவு, பாம்பு போன்ற உயிரினங்களுக்கும் சகுனங்களுக்கும் குலதெய்வங்களுக்கும் தொடர்பு உள்ளதாயும் நம் முன்னோர்கள் நம்பிக்கை கொண்டிருந்து உள்ளனர்.
ஐயை அல்லது கொற்றவை பண்டைத் தமிழர் வழிபாட்டில் இடம் பெற்று உள்ளதைச் சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது. மழை மாரியம்மன் என்று தமிழர்களால் வழிபடப்பட்டு வந்துள்ளது. வடநாட்டில் வனதேவதையாக வழிபடப்பெற்றிருந்த துர்க்கையும் பின்னாளில் இவர்களோடு சேர்க்கப்பட்டாள். பின்பு தமிழ்ச் சைவர்களின் சைவ அறிவு பெருக, கொற்றவை, மாரியம்மன், துர்க்கை, காளி போன்ற எல்லைத் தெய்வங்களும் ஊர்த் தெய்வங்களும் சைவ சமயத்தில் இடம் பெற்றுள்ள பராசத்தி வழிபாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டன என்பர். இதற்குச் சைவ சமயம் அறியாத குருமார்கள் துணை போயினர் என்பர்.
இசக்கி, காத்தாயி, சோலையம்மன் போன்ற கிராமத் தெய்வங்களையும் காட்டேறி, பிடாரி, பேயாயி, சடையாயி, கருமுனி, செம்முனி, காடன், மாடன் போன்ற தீய சத்திகளையும் சிறுதெய்வங்களாக முந்தைய பாமரத் தமிழர் வழிபட்டு வந்துள்ளனர். இத்தெய்வங்களுக்கு அஞ்சி அவற்றை அமைதி அடையச் செய்யப் பலியிடுதல் போன்றவற்றைச் செய்துள்ளனர். ஐயனார், மதுரை வீரன், முனியாண்டி, முனீசுவரன், வேட்டைக்காரர், காவற்காரர், சங்கிலி கருப்பர் போன்றோரும் காவல் தெய்வங்களாகவே வழிபடப்பட்டு வந்துள்ளனர்.
கண்ணகி, சீதை, திரௌபதை, அனுமன் போன்ற புராண இதிகாசக் கதை மாந்தர்களும் பின்புபாம்பு, நாய், குரங்கு, சேவல், மயில், ஆடு, மாடு, யானை போன்ற விலங்குகளும் தெய்வங்களாகக் கருதப்பட்டு வழிபட்டிற்கு உள்ளாகி இருகின்றன. மருத்துவ இயல்புடைய வேம்பு, வில்வம், அரசு, அருகம்புல், தர்ப்பை போன்றவை தெய்வங்கள் ஆகின. இவ்வாறு வழிபடப்படுகின்ற சிறு தெய்வங்கள், காவல் தெய்வங்கள், நடுகல் தெய்வங்கள், கிராமத் தெய்வங்கள், குல தெய்வங்கள், தாவரங்கள் நன்மைகள் அளிக்கின்றன என்று அவற்றை வழிபடுகின்றவர்கள் குறிப்பிட்டாலும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றே திருவாசகம் குறிப்பிடுகின்றது.
“சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்,
சிவபெருமான் சேவடியே சிந்திக்கப் பெற்றோம்,
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”
என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவது போல, மாணிக்கவாசகரும்,
“புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க”
என்று குறிப்பிடுகின்றார்.
பரம்பொருளான சிவபெருமானை வழிபடாது உயிர் வகைகளையும் சிறுதெய்வங்களையும் காவல் தெய்வங்களையும் வழிபடுகின்றவர்கள் சிவபெருமானுக்குப் புறத்தார் என்கின்றார். சிவபெருமான் இவர்களுக்குப் புறத்தானாக, தூரத்தில் உள்ளவனாக, எளிதில் கிட்டாதவனாக இருப்பான் என்கின்றார். சிறுதெய்வங்களும் மற்றைத் தெய்வங்களும் கொடுக்கக்கூடியவற்றக் காட்டிலும் சிவபெருமான் பன்மடங்கு பேராற்றலும் பேர் அருளும் உடையவன் என்று எண்ணாதவர்களுக்குச் சிவபெருமான் சேயோனாக, தூரத்தில் உள்ளவனாகவே இருப்பான் என்று தெளிவுறுத்துகின்றார். சிவபெருமானைப் பொதுநிலையில் வழிபடாது சிறப்பு நிலையில் வழிபட வேண்டும் என்று சித்தாந்த சைவ நூல்கள் குறிப்பிடுகையில், சிவனை முற்றாக விடுத்துச் சிறுதெய்வங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை இறைவன் எள்ளி நகையாடித் தூரத்தே விலகி நிற்பான் என்கின்றார்.
சீர்மிகு செந்தமிழரின் உயரிய சித்தாந்த செந்நெறி, உயிர்கள் படிம நிலையில் அறிவுத் தெளிவினைப் பெற்றுத் தவறான வழிபாடுகளில் இருந்து விடுபட வேண்டும் என்கின்றது. நம் முன்னோர் அக்காலப் பழக்கத்தின் அடிப்படையில் பின்பற்றியவற்றைச் சைவ நெறிக்குப் புறம்பானவற்றை இன்றைய நிலையில் விடுவதே நல்லது. உண்மை சமயத்தை அறியாது இன்னும் பழைய பழக்கங்களிலேயே ஊறிக் கிடப்பது சைவத்திற்கும் தமிழர் இனமானத்திற்கும் பெரும் இழுக்கு என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு உண்மைச் சமயத்தை அறியாது சைவத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஒவ்வாத நடைமுறைகளை இன்னும் பின்பற்றுவதனால்தான் கற்றறிந்த இளைய குமுகாயத்தினர் சமயத்தின்பால் நம்பிக்கையை இழப்பதோடு சோர்ந்தும் போகின்றனர். நம் சமயத்தையும் இனத்தையும் மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய இளைஞர்கள் மற்றசமயத்தோடு தங்கள் சமயத்தை ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர்.
சிந்திப்போம், செயல்படுவோம்.
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!