சிவயோகம் அல்லது சிவச் செறிவு என்ற அகத்தவம் இயற்றுதலில் இரண்டாவது படிநிலையாக அமைவது நன்று ஆற்றுதல் என்று மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூலர் குறிப்பிடுகின்றார். அகத்தவம் எட்டுப் படிநிலைகளில் குறிக்கப்படும் நன்று ஆற்றுதலை நியமம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். சிவச்செறிவின் அரிய உண்மைகளைச் சிவ பெருமானின் பேரருளினால் தாம் உணரப்பெற்றதாகக் குறிப்பிடும் திருமூலர், சிவபெருமானையும் அவனின் திருவருளையும் எண்ணாது இயற்றப்படும் சிவச்செறிவு வெற்றி பெறாது என்கின்றார். சிவபெருமானையும் அவனது திருவருளையும் எண்ணாது செய்யப்படுகின்ற அகத்தவங்கள் உலகப் பயன்களை மட்டுமே கொடுப்பவை. அவை சிவபெருமானின் திருவருளைக் கூட்டுவிக்காதவை என்று குறிப்பிடும் திருமூலர், நன்று ஆற்றலில் சிவ பெருமானை வழிபடுதலையும் அவனின் பேரருளைத் திருவருளின் துணைக்கொண்டு நினைந்து உணருதலையுமே முதன்மையாக் குறிப்பிடுகின்றார்.
எல்லா உலகங்களும் அவற்றின் உட்பொருள்களும் தோன்றுதற்கு முதலாய் இருக்கின்ற சிவபெருமான் சமய நுல்களின் முடிந்த பொருளாயும் அறிவுப் பேரொளியாகவும் விளங்குகின்றான். அச்சிவனே அனைத்தையும் ஒடுக்கும் தீயாகவும் விளங்குகின்றான். ஒன்றாய் இருக்கின்ற சிவனே உயிர்களுக்கு அருளுவதற்காகத் தன் திருமேனியில் ஒரு கூறினைப் பராசத்தியாக ஆக்கி நிற்கின்றான். அத்தகையப் பேரருள் பெருமானின் திருவருளைப், பேரிரக்கத்தை உணர்ந்து முறையோடு எந்நிலையிலும் தவறாது வணங்குகின்றவனே நன்று ஆற்றலில் முயலுகின்றவன் என்பதனை, “ஆதியை வேதத்தின் அப் பொருளானை, சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை, பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன், நீதி உணர்ந்து நியமத் தானே” என்று குறிப்பிடுகின்றார். இதனால் சிவபெருமானின் ஒருக்கும் ஆற்றலையும் அருளும் ஆற்றலையும் உணர்பவனே அகத்தவத்தில் முயல இயலும் என்பதனை உணரலாம். வேறு மொழியில் கூறுவோமேயானால் அகத்தவத்தில் இறைவனின் ஒறுப்பிற்கு அஞ்சும் அச்சத்தினால் தீது அகற்றி வாழ்கின்றவனும் இறைவனது திருவருளை விரும்பும் அன்பினால் நன்று ஆற்றுகின்றவனுமே அகத்தவத்தில் முயல இயலும் என்பதனை உணரலாம். இதனையே, “அஞ்சியாகிலும் அன்புப் பட்டாகிலும், நெஞ்சம் வாழி நினை நின்றியூரைநீ” என்பார் திருநாவுக்கரசு அடிகள்.
அகத்தவம் முயலுகின்றவர், நன்று ஆற்றுதலில் பத்து நற்செயல்களை இடைவிடாது மேற்கொள்ள வேண்டும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அவை தவம், செபம், சந்தோடம், ஆத்திகம், தானம், சிவன் தன் விரதம், சித்தாந்த கேள்வி, மகம், சிவ பூசனை, நற்பண்பு என்பனவும் இவை போன்ற மற்றவையும் கொள்ளப்படும் என்கின்றார் திருமூலர். தனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிருக்குத் துன்பம் செய்யாது இருத்தலுமே தவத்திற்கு வடிவம் என்பார் ஐயன் திருவள்ளுவர். இதுவே நன்று ஆற்றலின் முதல் பண்பாகின்றது. இரண்டாவது, வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம் ‘நமசிவய’ என்ற திருவைந்து எழுத்து மந்திரத்தைக் கணித்தலாகிய செபத்தை விடாமல் செய்யக்கூடிய நற்செயலாக இயற்றுதல் வேண்டும் என்கின்றார். மூன்றாவது நற்செயல் சந்தோடம் என்பதாகும். இது உள்ளது போதும் என்ற மனநிறைவும் அதனை எண்ணி மகிழ்ச்சியோடு வாழுதலையும் வலியுறுத்துவதாகும்.
நான்காவதாகக் குறிப்பிடப்படும் நன்று ஆற்றுதல் ஆத்திகம் என்பதாகும். இது சித்தாந்த சைவ மெய்கண்ட நுல்களில் சொல்லப்படும் இறைவன், நல்வினை தீவினை என்ற இருவினை, மறு பிறப்பு, துறக்க நிரையங்களின் (சொர்க்கம் நரகம்) உண்மை என்பன பற்றிக் கற்கின்ற கல்வியும் உணர்வும் பெறல் ஆகும் என்கின்றார் திருமூலர். நன்று ஆற்றுதலில் ஐந்தாவதாகக் குறிக்கப்படுவது தானம். பொருளை நல்வழியில் ஈட்டி, தன்னால் இயன்றவற்றை, உண்மையாக உதவி தேவைப்படுகின்றவருக்கு உவந்து கொடுக்கும் ஈகையைச் செய்தல் ஆகும். ஆறாவதாகத் திருமூலர் குறிப்பிடும் நற்செயலானது சிவன் விரதம் என்பதாகும். இதில் சிவனையே வழிபடுகின்ற கொள்கைப் பிடிப்பும் சிவச் சின்னங்களையும் சிவனடியார்களையும் போற்றிச் சிவனடியார்கள் நின்ற சிவநெறிக் கொள்கைகளில் தவறாமல் நிற்றலை இடைவிடாமல் செய்தல் வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.
ஏழாவதாக வரும் சித்தாந்தக் கேள்வி எனப்படுவதில் அகத்தவம் இயற்றும் சிவச்செறிவாளர்கள் சிவ ஆகமங்களின் உட்பொருளைக் கற்றுத் தெளிதல் வேண்டும் என்கின்றார். திருஞானசம்பந்தர் அருளிய மூன்று திருமுறைகளையும் நாவுக்கரசர் அருளிய மூன்று திருமுறைகளையும் சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையையும் மணிவாசகர் அருளிய எட்டாம் திருமுறையான திருவாசகத்தையும் ஒன்பது அருளாளர்கள் அருளிய ஒன்பதாம் திருமுறையையும் தமிழ்ச் சிவஆகமமாகிய பத்தாம் திருமுறையான திருமந்திரத்தையும் பன்னிரண்டு அருளாளர்கள் அருளிய பதினோராம் திருமுறையையும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் அரிய வரலாற்றினைக் கூறும் சேக்கிழார் அருளிய பெரிய புராணமாகிய பன்னிரண்டாம் திருமுறையையும் ஓதுதலையும் அவற்றின் ஆழ்ந்த உட்பொருளையும் கற்க வேண்டும் என்கின்றார்.
சித்த்தாந்த சைவ முப்பொருள் உண்மைகளான பதி, பசு, பாசம் என்பனவற்றை அறிவியல் அடிப்படையிலும் தர்க்க முறையிலும் விளக்கும் பதினான்கு மெய்கண்ட நூல்களான திருகளிற்றுப்படியார், திருவுந்தியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபாஇருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் ப•றொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற நூல்களையும் அவற்றினை அருளிய ஆசிரியர்களின் வரலாற்றினையும் முறையான சைவப் புராணங்களையும் ஆழ்ந்து கற்கின்ற சித்தாந்தக் கேள்வி என்கின்ற ஏழாவது நன்று ஆற்றலைச் செய்தல் வேண்டும் என்கின்றார்.
எட்டாவது நன்று ஆற்றுதலாகத் திருமூலர் குறிப்பிடுவது மகம். மகம் என்பது திருவைந்தெழுத்தால் அகத்திலே வளர்க்கப்படும் அகத்தழல் அல்லது அகச் சிவவேள்வி என்று கழகப் புலவர், சித்தாந்தப் பண்டிதர் ப.இராமநாத பிள்ளை அவர்கள் உரை கூறுவார். புறத்திலே செய்யப்படுகின்ற சிவவேள்விகளைப் போன்று அகத்திலே சிவவேள்விக்குரிய அனைத்து செயற்பாடுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அகத்திலே நிகழ்த்துவது மகம் ஆகும். இதனைத் தொடர்ந்து வருகின்ற ஒன்பதாவது நன்று ஆற்றுதல் எனப்படுவது சிவப் பூசனையை இறைவனை அடையும் வரை தவறாது இயற்றுதலாம். சிவச் செறிவு இயற்றுகின்றவர் சிவலிங்க வழிபாட்டினை இன்றியமையாததாகக் கொண்டு அகத்திலும் புறத்திலும் தவறாது வழிபாடு செய்தலைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவச் செறிவு இயற்றுகின்றவர்கள் திருக்கோயிலுக்குச் செல்லத் தேவையில்லை, சிவ பூசனை இயற்ற வேண்டுவது இல்லை என்று சிலர் குறிப்பிடுவது தவறு என்பதனை இதன் வழி தெளியலாம்.
ஒண்மதி எனும் பத்தாவது நன்று ஆற்றலில் இறைவனின் திருவருளால் அவனை மறவாமல் அவனையே நிலைத்த உறவாக் கொண்டு வாழும் உணர்வைக் கொண்டிருத்தலைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இவ்வுணர்வினையே “அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ, ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ” என்றும் “குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யாருளரோ” நாவுக்கரசு அடிகள் அழகுற இயம்புவார். தவிர, ஒண்மதி என்பதில் நல்லறிவோடும் நற்பண்போடும் அனைத்து உயிர்களையும் ஒருபடித்தாய் விருப்பு வெறுப்பு இன்றி அன்பு பாராட்டும் உயர் பண்பும் தெளிவும் கொள்ளுதலையும் திருமூலர் குறிப்பிடுவார். இதனாலேயே அகத்தவச் செல்வர்களை உலக நோன்பிகள் என்று குறிப்பிடுவர். இவர்கள் படித்தவர், படிக்காதவர், ஏழை, செல்வர், பதவியில் உள்ளவர், பதவியில் இல்லாதவர், ஆண், பெண், என்ற பேதம் இன்றி உலக உயிர்கள் அனைத்திற்கும் நன்மை செய்யும் அன்பின் பிழம்பாய் இருப்பார்கள். கைமாறு கருதாத இறைத் தொண்டும் மக்கள் தொண்டும் இயற்றுகின்ற தொண்டர்களாய்த் திகழ்வார்கள் என்கின்றார் திருமூலர். இதுபோன்ற பிற நற்செயல்களும் நற்பண்புகளும் நன்று ஆற்றுதலில் எண்ணிப் பார்த்தல் ஏற்புடையது என்கின்றார் திருமூலர்.
சிவச் செறிவு ஆற்றுவதில் உள்வாங்க வேண்டிய நற்பண்புகளையும் நற்செயல்களையும் திருவருள் உணர்வையும் வழிபாட்டினையும் சமயக் கல்வியையும் அதன் உட்பொருளையும் நன்று ஆற்றுதலின் வழி உணர்தல் வேண்டும் என்பதனைத் திருமூலரைக் கொண்டு தெளிந்து உண்மைச் சிவச் செறிவினை இயற்றுவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!