4. காதணி விழா

6222

உலகப் பழம்பெரும் நாகரிகங்களில் எந்நாகரிகத்திற்கும் சற்றும் குறைவில்லாது அவற்றிற்கு முன்னோடியாய் விளங்குவது தமிழர் நாகரிகம் என்றால் அது மிகையாகாது. அத்தகைய செம்மையுடைய தமிழர் நாகரிகப் பண்பாட்டுக் கூறாகவும் வாழ்வியல் முறையாகவும் விளங்குவது தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள் ஆகும். அத்தகைய கரணங்களில் ஒன்றுதான் குழந்தைகளுக்கான காதணி விழா ஆகும்.

 தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான் என்று சிவபெருமானைத் திருவாசகம் அருளிய மணிவாசகர் குறிப்பிடுவார். அச்சிவபெருமான் தோடும் குழையும் அணிந்திருந்தான் என்று தமிழ் ஞானசம்பந்தர் தமது, “தோடுடைய செவியன்” எனும் தமிழ் மந்திரத்தில் குறிப்பிடுவார். தமிழ்ச் சைவர்களின் வழக்கில் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் காதணி அணிவிக்கும் வழக்கம் நம்மவரிடையே இருந்துள்ளமை அறியக் கிடக்கின்றது.

காதணி விழா என்ற செயல் முறையினைப் பொதுவாகக் குழந்தைகளுக்கு ஐந்து அகவை நிரம்பும் வேளையில் செயற்படுத்துவார்கள். வழக்கமாக இல்லத்தில் இயற்றப்படும் இக்காதணி விழாவிற்கு உற்றார் உறவினரையும் நண்பர்களையும் அழைத்து, குறிப்பாகக் குழந்தையின் தாய்மாமனை முன்னிலைப் படுத்தி இக்கரணத்தைச் செய்வர். காதணி விழா அன்று, குழந்தையின் இல்லத்திலே ஒரு கூட்டு வழிபாட்டினைச் செய்வர். திருமுறைகளை ஓதி, இல்லத்தில் உள்ள பெரியவர் இறைவழிபாடு செய்து குழந்தையும் குழந்தையின் பெற்றோரும் வந்திருந்தவரும் இறை வாழ்த்தினைப் பெற துணை நிற்பார்.

இறைவழிபாடு முடிந்து திருநீறு அணிந்த பின்பு, அழைக்கப்பட்டப் பொற்கொல்லரைக் கொண்டு, தாய்மாமனின் மடியில் குழந்தையை அமரச் செய்து குழந்தையின் காதினைத் துளையிட்டுக் காதணியை அணிவிப்பர். பொற்கொல்லர் எலுமிச்சை முள்ளையோ தங்க ஊசியையோ கொண்டு குழந்தைகளுக்குக் காதில் துளையிட்டுக் காதணியை அணிவிப்பார். காதணி அணிந்த பின்பு பெரியவர்களும் மற்றவரும் குழந்தைக்குத் திருநீறு அணிவித்து வாழ்த்தினை வழங்குவர்.

செந்தமிழ்ச் சைவர்களின் பண்பாட்டிலே இடம்பெற்றுள்ள இக்காதணி விழா அறிவியல் அடிப்படையிலும் குமுகாயவியல் அடிப்படையிலும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குழந்தைகளின் அறிவு சிறப்பதற்கு உரிய காலம் அவர்களின் நான்கு அல்லது ஐந்தாம் அகவைக் காலம் என்று குழந்தை வளர்ப்புக்கலை அறிவர்கள் குறிப்பிடுகின்றனர். குழந்தைகளின் மூளையோடு தொடர்புடைய இரண்டு நரம்புகள், காதுகளோடு தொடர்புடையனவாக இருப்பதனால் ஐந்து வயதில் அந்நரம்புகள் உள்ள இடத்தில் துளையிட்டு, அந்நரம்புகளைத் தூண்டி விடும் காதணிகளை அங்குத் தொங்க விட்டால் அவர்களின் அறிவு சிறக்கும் என்பதனைத் தமிழ்ச் சைவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். இதனாலேயே தமிழ்ச் சைவர்களின் இறைவழிபாட்டில் காதுகளை இழுத்துப் பிடித்து உட்கார்ந்து எழுகின்ற தோப்புக்கரணம் போடும் வழக்கம் நம்மிடையே உள்ளது.

தங்கமும் எலுமிச்சையும் நல்ல மந்திர ஓசைக் கடத்திகள். பொற்கொல்லர் காதைத் துளையிடும் போது, “நமசிவய” என்ற திருவைந்து எழுத்து மந்திரத்தைக் கூறித் துளையிடும் போது அவ்வூசியின் வழியாக மந்திரம் மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. தவிர தங்கத்திலான காதணிகள் மந்திர ஒலிகளை உள்வாங்கி வைத்துக் கொள்ளக் கூடியவை. நல்ல சொற்களையும் மந்திரங்களையும் காதணியின் வடிவில் இருக்கும் தங்கம் உள்வாங்கிக் குழந்தையின் மூளைக்கு நல்லோசை அதிர்வினையும் மந்திர ஆற்றலையும் சேர்ப்பிக்கின்றன. இதனாலேயே முற்காலத்தில் குழந்தைகளுக்குத் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் தாமிரத்தினாலும் சங்கினாலும் அணிகலன்களை அணிவித்து இருக்கின்றனர்.

தமிழ்ச் சைவர்கள் தங்கள் வழிபடு திருவடிவங்களை ஐம்பொன்னினாலும் தாமிரத்தினாலும் கருங்கற்களினாலும் வடித்து வழிபட்டது இது பற்றியே ஆகும். திருவடிவங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பதும் அது மந்திர கடத்தி என்பதனாலேயே ஆகும். காதணிவிப்பின் போது குழந்தையைத் தாய்மாமன் மடியில் அமர்த்துவது என்பதானது தாய்மாமனுக்கு உரிய உறவின் உரிமை பற்றியும் கடப்பாடு பற்றியும் குறிப்பதாகும். அறிவியலோடும் அருளோடும் அன்பியலோடும் அரிய உண்மைகளைத் தன்னகத்தே தாங்கி நிற்கின்ற தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்களை அறிவோம். நம் இளைய குமுகாயத்திற்குத் தமிழரின் பெருமையை அறியச் செய்வோம். இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!