117. துறவின் பெருமை

1386

117. துறவின் பெருமை

உலகப் பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுவது என்பது இதுவரை உலகில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதனைப் போன்றது என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். அத்தகைய சிறப்பு மிக்க துறவின் பெருமையை மூவாயிரம் தமிழ் மந்திரங்கள் அருளிய திருமூலரும் குறிப்பிடுகின்றார். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் நெறியாகத் திகழ்வது சைவநெறி. இந்நெறியைப் பொதுவாகக் குறிப்பிடுகின்ற திருக்குறளும் சிறப்பாகக் குறிப்பிடுகின்ற திருமந்திரமும் துறவின் முதன்மையைக் குறிப்பிடுகின்றன. துறவு எனும் தவநெறி உயிர்களை இயல்பாகவே பிறப்பு இறப்பு எனும் சுழற்சியில் இருந்து விடுவித்துத் துறவு நெறியினை உலகிற்கு உணர்த்தி நிற்கின்ற பரம்பொருளான சிவனை ஒரு பொழுதும் மறவாமல் இருக்கும் நிலையை ஏற்படுத்தும் என்கின்றார் திருமூலர். தவிர, துறவு எனும் உலகப் பற்றுக்களை விட்டவர்களுக்குத் தன்னைப் பற்றாகப் பெருமான் காட்டித் தனது இன்ப உலகமாகிய பேரின்பப் பெருவாழ்வினை நல்குவான் என்பதனை,

“இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்,
துறக்கும் தவம்கண்ட சோதிப் பிரானை,
மறப்பிலராய் நித்தம் வாய்மொழிவார் கட்கு,
அறப்பயன் காட்டும் அமரர் பிரானே”

என்று குறிப்பிடுகின்றார். இதனையே, “பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று, நிலையாமை காணப் படும்” என்று பேராசான் திருவள்ளுவரும் குறிப்பிடுவார்.

உயிர்களில் சிறந்தனவாகப் பகுத்து அறியும் ஆற்றலை உடைய மாந்தர்கள் கடைபிடித்து ஒழுகவேண்டிய அறங்களாக இல்லறத்தையும் துறவறத்தையும் சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே துறவறத்தைப் போற்றும் சைவம், “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்றும் குறிப்பிடுகின்றது. இல்லறத்தில் உள்ளவர்களே துறவறத்தவர்க்கும் வறியவர்க்கும் தங்களிடத்திலே இறந்தவர்க்கும் நல்ல துணையாவார்கள் என்றும் குறிப்பிடுகின்றது. இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் இல்லறக் கடமைகளைச் செவ்வன செய்து, அவ்வில்லறத்தைத் துணையாகக் கொண்டு செல்அறமாகிய துறவறத்தினை நோக்கிச் செல்ல வேண்டும் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. உலக வாழ்க்கையில் கிட்டும் நற்சிற்றின்பத்தையே அடையும் பேரின்பத்திற்கு வாயிலாகவும் துணையாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகின்றது.

இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் கைப்பொருளும் மனைவியும் மக்களும் பிறவும் தன்னை விட்டு நீங்கிய பிறகு துறவு கொள்ளாமல், எல்லாப் பொருளும் உள்ள காலத்திலேயே எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்று சைவம் குறிப்பிடுகின்றது. நீரில் வாழும் தாமரை அந்நீரில் ஒட்டாது வாழ்வது போல உலக வாழ்க்கையில் இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் உலகப் பற்றுக்களில் மூழ்கி விடாது வாழ்வதனைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். ஒருவன் எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்று நீங்கினவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளினால் அவன் அடைகின்ற துன்பத்த்தினை அவன் அடைவதில்லை என்று பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். உலகப் பற்றுக்களை முன்வைத்து மனம்போன போக்கிலே வாழ்கின்றவர்கள் அவநெறியை உடையவர்கள் என்றும் பற்றுக்கள் நீங்குவதற்கு உரிய வழியினை ஆராய்ந்து பற்றுக்களை விட்டத் துறவு நெறியில் வாழ்கின்றவர்கள் தவநெறியில் வாழ்கின்றவர்கள் என்றும் சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.

நிலைத்த மாற்றத்தை உடைய இந்நில உலகில் சிறிது காலம் வாழவிட்டு நிலையான வாழ்வினை அளிக்கும் பெருமானின் திருவடிகளை அடைவதற்குத் தற்காலிகமாகக் கொடுக்கப்பட்ட இவ்வுடலையே ‘தான்’ என்று கருதுதலும் தன்னுடையது அல்லாத இறைவனின் உடைமைப் பொருள்களைத் ‘தன்னுடையது’ என்று எண்ணும் மயக்கத்திலிருந்து நீங்குதலே உண்மைத் துறவினைக் கொடுக்கும் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆணவ மலத்தின் வெளிப்பாடான, “யான், எனது” எனும் செருக்கு விலகுவதற்கு உயிர் தயாராகாத வரையிலும் பெருமானின் திருவருள் வீழ்ச்சி உயிர்களின் மீது விழாது என்கின்றார் திருமூலர். யான் எனது எனும் பற்று உலகப் பற்றுக்களாகப் பல்வேறு மாயப்பொருள்களின் வழி பல்வேறு மயக்கத்தினை அளிப்பதனால் பெருமானும் உயிர்களின் அறிவினுள்ளே மறைந்து நின்றும் பின்பு அம்மயக்கத்தினை ஏற்படுத்தும் பற்றுக்களை விட்டு விலக உயிர் தயாராகி இறைவனை உருகி எண்ணி நிற்கும் போது, இறைவன் திருவருளை வெளிப்படுத்தியும் வெளிப்பட்டு அருளுவான் என்றும் திருமூலர் குறிப்பிடுவார். இதனைப்,

“பிறந்தும் இறந்தும்பல் பேதமை யாலே,
மறந்த மலஇருள் நீங்க மறைந்து,
சிறந்த சிவன் அருள்சேர் பருவத்துத்,
துறந்த உயிர்க்குச் சுடரொளி ஆமே”

என்று குறிப்பிடுகின்றார். இதனையே, “யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு, உயர்ந்த உலகம் புகும்” என்பார் பேராசான் திருவள்ளுவர்.

                             

தானும் தன் திருவருளுமாய் அம்மை அப்பர் கோலத்தில் அருளும் பெருமான் எல்லாவற்றையும் துறந்த நிலையினராய் ஈகைக் கொள்ளும் பெருமானாயும் (பிச்சாடனர் வடிவு) துறவியைப் போன்று ஆல்அமர் செல்வராய்த் (தட்சிணாமூர்த்தி வடிவு) தோன்றி அருள்வதும் இல்லறத்தில் உள்ள உயிர்களும் இறுதியில் பற்று அற்றத் துறவு நிலையை அடைய வேண்டும் என்பதனை உணர்த்துதலுக்கே என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. நல் அறங்களையும் திருவருளையுமே தனக்குத் திருவடிவாகக் கொண்ட அறவாழி அந்தணனாகிய சிவபெருமான் பிறப்பு அற்றவன். அதனால் அவன் பற்று செய்வதற்கு உறவினர் இல்லாதவன். அவன் வாழும் இடம் சுடுகாடாக இருப்பதனால் அவன் வீடு வாசல் என்ற பற்று அற்றவன். அவன் பிச்சை ஏற்று உண்பதனால் சுவையான உணவு என்ற பற்றுக்களையும் விட்டவன். வெந்த நீறு, புலித்தோல், கணிகை மணி என்று அணிவதனால் அணிகலன்களின் பற்றுக்களையும் விட்டவன். அவன் வேண்டியவர் வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்புக்கள் அற்றவன். இவ்வாறு மிகச் சிறந்த துறவியாக உள்ள இறைவன் துறவு கொள்ளும் பற்று அற்றவர்களையே உய்விக்கும் பேர் அருளாளனாக விளங்குகின்றான் என்கின்றார் திருமூலர்.

மாந்தர்களுக்கு உலகப் பற்றுக்களை ஏற்படுத்தும் வாயில்களாக இருப்பவை ஐம்புலன்கள் என்பர். கண், காது, மூக்கு, வாய், மெய் என்பவையே உயிர்களின் உலக இன்ப வேட்கைக்கு வாயில்களாக ஆகின்றன. இவை உலகப் பற்றுக்களான உலகச் சிற்றின்பங்களை வேட்டை ஆடுகின்ற வேடர்களாக இருந்து உயிர்களின் உண்மை இலக்கை மறைக்கின்றன. இவற்றை வெல்வதற்கு அவற்றை வென்ற சிவபெருமானைப் பற்றாகக் கொள்ளும் சிவநெறியில் நிற்கவேண்டும் என்கின்றார் திருமூலர். உயிருக்கு நன்மை பயப்பவை இவை, தீமை பயப்பவை இவை என்பதனைச் சிவநெறியினைப் பிடித்து ஒழுகிப் பெருமானின் திருவடியைச் சேர்வதற்கு உரிய
தவநெறியாகிய துறவு நெறியினை நோக்கிச் சென்றாலே ஒழிய இறைவனின் திருவடிகளைச் சேர இயலாது என்பார் திருமூலர். இதனை,

“கேடும் கடமையும் கேட்டுவந்து ஐவரும்,
நாடி வளைந்துஅது நான்கடவேன் அலேன்,
ஆடல் விடையுடை அண்ணல் திருவடி,
கூடும் தவம்செய்த கொள்கையன் தானே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

ஐம்பொறிகளின் வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய் அற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் நிலைபெற்றப் பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவர் என்றும் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க வேண்டுமானால் இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்க வேண்டும் என்றும் பற்றற்ற துறவு வாழ்வின் சிறப்பினைத் திருவள்ளுவப் பேராசானும் குறிப்பிடுவார்.

உழவன் ஒருவன் உழவைச் செய்வதற்காக மழை பெய்கின்றது. இம்மழையின் உதவியோடு உழவன் செய்த உழவினால் பயிரோடு அழகிய குவளை மலரும் தோன்றி வளர்கின்றது. தன் மனைவியின் அழகிய கண்களைப் போன்று இருக்கும் அக்குவளை
மலரைப் பிடுங்கி எறியாமல் உழவன் விடுவானேயானால், குவளைப் பெருகிப் பயிரின் விளைச்சலைக் கெடுத்துவிடும். அதுபோல உலக வாழ்வில் ஏற்படும் சிற்றின்பங்களைக் கண்டு மயங்கி அதிலேயே திளைத்து நின்று விடாமல் அவற்றை விட்டு அகன்று வாழ்வின் குறிக்கோளை அடைதற்குத் துறவினை எண்ணுதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். புறத்தோற்றத்தால் புறத்துறவு பூண்டு துறவினை மேற்கொள்கின்றவர்களுக்கு மட்டும் இன்றி இல்லறத்தில் இருந்தபடி அகத்துறவு பூண்டு இயல்பு வாழ்க்கை வாழ்கின்றவருக்கும் பெருமான் பல்வேறு வகையான அருள்புரிதலைச் செய்வான் என்பதனையும் திருமூலர் குறிப்பிடுகின்றார். துறவுக்கு வித்தாகிய பற்றற்ற நிலையினை இல்லறத்திலும் துறவறத்திலும் அவர் அவர் நிலையினில் நின்று போற்றுவோமாக!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!