14.தேசன் அடி போற்றி

1291

14. தேசன் அடி போற்றி 

“யானே பொய் என் நெஞ்சும்பொய் என் அன்பும்பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அழுது அழுது பெருமானை எண்ணி வழிபட்டவர் மணிவாசகப் பெருமான். தான் தமிழ் பயிலும் மாணவன் என்று தன் கல்லறையில் பொறிக்கும்படி அயல் சமயத்தைப் பரப்ப வந்த ஜி.யு.போப் எனும் ஆங்கிலேயரைக் கட்டிப் போட்டது திருவாசகம். கல்லையும் கனிவிக்கும் இத்திருவாசகத்தில் இடம் பெற்றிருப்பது சிவபுராணம். காலம் காலமாக உயிர்களுக்கு இறைவன் ஆற்றி வரும் உதவிகளை விளக்கும் சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ள வரியே தேசன் அடி போற்றி என்பதாகும். தேசு என்றால் ஒளி என்று பொருள். எனவே தேசன் அடி போற்றி என்பது ஒளி வடிவாக உள்ள பெருமானின் திருவடிகளை வணங்குகின்றேன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

பெருமானைப் பரம்பொருள் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பரம்பொருள் என்பது மேலான பொருள் என்று கொள்ளப்படும். இதனாலேயே பெருமானைப் பரசிவம் என்றும் பெருமானின் ஆற்றலைப் பரசிவை என்றும் குறிப்பிடுகின்றோம். மேலும் பரநாதம் பரவிந்து என்றும் குறிப்பிடுவர். பரநாதம் மேலான ஒலி என்றும் பரவிந்து மேலான ஒளி என்றும் குறிப்பிடுவர். பெருமானை மேலான ஒளி என்று குறிப்பிடுவது பெருமான் மேலான அறிவு வடிவானவன் என்பதனையும் குறிப்பிடும். இதனையே வால் அறிவன் என்று ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடுவார். பெருமானின் நடவரசர் திருவடிவில், பெருமான் மேலான அறிவை உடையவன் என்பதனைப் பெருமானின் படர்ந்த திருச்சடை உணர்த்தி நிற்கின்றது என்பர். தவிர, அத்திருவடிவில் பெருமானின் நெற்றிக் கண்ணும் திருவாசியில் ஒளிவிடும் சுடரும் பெருமானின் மேலான அறிவையே உணர்த்தி நிற்கின்றன என்பர்.

பெருமான் ஒளி வடிவினனாக, பேர் அறிவனாக விளங்குவதனை உணர்த்துவதற்குப் பெருமான் வெளிப்படுத்திய திருவடிவே முருகப் பெருமானின் திருவடிவாகும். இதனாலேயே பரம்பொருளான சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாக அல்லது ஒளிப்பிழம்பாக முருகப் பெருமான் தோன்றினார் என்று கச்சியப்பரின் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது. அறிவு ஒளியாகப் பெருமான் விளங்குகின்றான் என்பதனை இன்னும் குறிப்பாக உணர்த்தவே ஆழ்ந்த, அகன்ற, நுண்ணிய அறிவின் குறிப்பாக, வேலை முருகனுக்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர். இதன் வழி பெருமான் தேசனாக, ஒளியவனாக இருப்பது என்பது பெருமான் பேர் அறிவாளனாக விளங்குகின்றான் என்பதனை உணர்த்தி நிற்கின்றது.

பெருமான் பேர் அறிவின் வடிவாக நின்று உயிர்களுக்கு அறிவு விளக்கத்தை ஏற்படுத்துவதனாலேயே பெருமானை உயர் உள்ளொளி என்றார்கள். இதனையே, “அரிய பெரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே” என்று மணிவாசகர் குறிப்பிட்டார். மணிவாசகரின் அடியொட்டிப் பெருமானை வணங்கிய வள்ளல் இராமலிங்க அடிகள் பெருமானை, “அருட்பெருஞ்சோதி ஆண்டவர்” என்று குறிப்பிட்டார். திருமாலும் நான்முகனும் செருக்கினால் தருக்கி அறியாமையில் நின்றபோது அவர்கள் அறிவுத் தெளிவு பெற பெருமான் அவர்களைத் தமது அடியையும் முடியையும் தேட வைத்தான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவர் இருவரும் அறிவுத் தெளிவு பெற பெருமான் பெரிய ஒளிவடிவாகத் தோன்றி நின்றான் என்று மணிவாசகர் தமது பாடல்களில் குறிப்பிடுவார்.

பேரொளி வடிவாகப் பெருமான் நின்று தணிந்ததே திருவண்ணாமலை. திருவண்ணாமலைக் கார்த்திகை விளக்கீடு குறிப்பிடுவதும் இதுவே ஆகும். திருவண்ணாமலைக் கார்த்திகை விளக்கீட்டின் போது மலையின் உச்சியில் சுடரை ஏற்றிப் பெருமான் அறிவுப் பேரொளியாக விளங்குகின்றான் என்பதனை நினைவில் நிறுத்தினர். திருவண்ணாமலை உச்சியில் விளக்கீட்டினைச் செய்யும் போது தங்கள் இல்லங்களிலும் விளக்கீட்டினைச் செய்து தமிழ்ச் சைவர்கள் தங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பெருமானின் அறிவு ஒளி சிறக்க வேண்டும் என்ற குறிப்போடு பெருமானை வழிபட்டு நின்றனர்.

பெருமான் உயிர்களின் அறிவை விளக்கும் விளக்காக, ஒளியாக விளங்குகின்றான் என்பதனை, “ஒளிவளர் விளக்கே” என்று திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் குறிப்பிடுவார். மாசு அற்ற உள்ளத்தில் ஒளிரும் விளக்கு என்று பெருமானைக் குறிப்பிட வந்த திருநாவுக்கரசர், “நல்லக விளக்கது நமசிவாயவே” என்று குறிப்பிட்டார். இவ்வாறு பெருமான் அறிவு ஒளியாக விளங்குகின்றான் என்பதனை உணர்த்த வந்த முன்னோர் வெளிச்சம் தரக்கூடிய முத்தீ எனும் கதிரவன், மதி, தீ ஆகியவற்றைப் பெருமானை நினைவுபடுத்துபவையாக எண்ணி வணங்கினர். உலக இருளை விளக்கும் கதிரவனில் அக இருளை விளக்கும் சிவனைக் கண்டு மகிழ்ந்து வணங்கினர். பின்னாளில் அறிவற்றச் சடப்பொருளான கதிரவனையே கடவுளாக எண்ணும் அறியாமை தலைப்பட்டது. கதிரவனிடம் இருந்து ஒளியைப் பெற்று இரவில் ஒளிவிடும் மதியைப் பார்த்துப் பெருமானின் அறிவு ஒளியை எண்ணி மகிழ்ந்தனர்.

நிறைமதி அறிவை முழுமை செய்வதாக எண்ணினர். அதுவே பிறகு உயிரற்ற மதி ஒரு கோள் என்பது மறக்கப்பட்டு கடவுள் என்றாகி நிற்கின்றது. கதிரவனும் மதியும் ஒளி குன்றக்கூடிய கோள்கள் என்று அறிவியலாளர்கள் குறிப்பிடும் கருத்தினைச் சுந்தர மூர்த்தி அடிகளும் நினைவுறுத்துகின்றார். “நொந்தா ஒண் சுடரே நுனையே நினந்திருந்தேன்” என்று திருமேற்றளிப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். அறிவு ஒளி என்ற பெருமானின் சுடர் ஒளியே என்றும் குன்றாத ஒளியை உடையது. மற்ற சுடர்கள் ஒளி குன்றக் கூடியவை என்று தெளிவு படுத்துகின்றார். இக்கருத்தினை ஒட்டியே திருமாளிகைத் தேவரும், “ஒளிவளர் விளக்கே” என்று குறிப்பிட்டு உள்ளார். விளக்காகச் சொல்லப்படுகின்ற பெருமானின் அருள் ஒளியே குன்றாத ஒளியை உடைய விளக்கு என்று குறிப்பிடுகின்றார்.

பெருமானின் அறிவு ஒளியினை நினைவுறுத்தவே தமிழ்ச் சைவர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் திருக்கோவில் நிகழ்ச்சிகளிலும் விளக்கேற்றும் வழக்கம் பின்பற்றப் படுகின்றது. ஏற்றப்படும் விளக்கு புற இருளைப் போக்குவதற்கு ஒரு புறம் ஏற்றப் பட்டாலும் மின்சார விளக்குகள் எல்லாம் ஏற்றப்பட்டப் பின்பும் விளக்கு ஏற்றும் வழக்கம் தொடர்வது இதனை ஒட்டியே ஆகும். திருமணத்திற்குப் பெண் தேடும் போதும் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்குப் பெண் தேவை என்பதும் இறை அறிவினையும் இறை வழிபாட்டினையும் ஒளிரச் செய்வதற்குப் பெண் வேண்டும் என்பதே குறிப்பாகும். திருமணப் பெண்ணின் கையில் நல்ல விளக்கினை ஏந்தி வரச் செய்வதும் தாலி அணிவிக்கின்ற போது நாத்தி விளக்கு ஏந்துவதும் இவ்வுண்மையை ஒட்டியே என்பதனை நினைவில் கொள்வது நலம் பயக்கும். இதனையே, “இல்லக விளக்கது, இருள் கெடுப்பது, சொல்லக விளக்கது சோதி உள்ளது, பல்லக விளக்கது பலரும் காண்பது, நல்லக விளக்கது நமசிவாயவே” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிட்டார்.

வீட்டில் ஏற்றப் படும் விளக்கு புற இருளைப் போக்குவது. வாய்மை உள்ளவர்களின் வாக்கில் இறைவன் நிற்பான். பல இல்லங்களிலும் காணப்படுகின்ற விளக்கானது எல்லோராலும் எளிதாகக் காணக் கூடியது. நமசிவய என்ற திருவைந்து எழுத்தின் வடிவாக இருக்கும் அறிவு ஒளியாகிய பெருமானைத் தூய்மையான உள்ளம் கொண்டவர்களே உள்ளொளியாகக் காண்பர் என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுகின்றார். இறைவனை அறிவு ஒளியாகக் காண்பதனை ஒட்டியே கற்பூரம் ஏற்றும் வழக்கம் தமிழ்ச் சைவர்களிடையே உள்ளது. கற்பூரச் சுடர் காட்டப்படுகையில் கருவறையில் திருவடிவாக இருக்கும் பெருமான் அறிவு ஒளியாகவும் இருக்கின்றான் என்று நமக்கு உணர்த்தப் படுகின்றது. இருளாக உள்ள கருவறையில் கற்பூர ஒளியின் துணையோடு பெருமானின் திருவடிவினைக் காண்கின்றோம். மற்றது, அறிவு ஒளியாக இருக்கின்ற அப்பெருமானை வணங்குகின்றேன் என்றும் கைகளைக் கூப்பி வணங்குகின்றோம்.

பெருமான் அறிவு ஒளியாக விளங்குகின்றான் எனும் உண்மையை உணர்தல் போய் இன்று எவ்வளவு எண்ணிக்கையிலான கற்பூரம் ஏற்றுகின்றோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கின்றது. இதனாலேயே சிலர் கற்பூரம் ஏற்றுவதே வழிபாடு என்று எண்ணி மயங்கி நிற்கின்றனர். ஏற்றுகின்ற கற்பூரம் சுற்றுகின்றபோது அணைந்து விட்டால் இறைக் குற்றம் நிகழ்ந்ததாக எண்ணி அஞ்சும் அறியாமை உடையவர்கள் சிலர் உள்ளனர். கற்பூரத் தட்டை எத்தனை முறை சுற்ற வேண்டும் என்பதிலேயே சிலர் குறியாய் உள்ளனர். கற்பூரம் காட்டப்படும்போது மட்டும் முண்டியடித்துக் கொண்டு வணங்கி விட்டுப் பிறகு கருவறையில் இறைவன் இல்லாதது போன்று சிலர் நிற்கின்றனர். கற்பூரத் தட்டை ஏந்தி வருகின்ற போது கற்பூரத் தட்டைத் தொட்டுக் கும்பிட்டு விட்டால் மட்டும் இறையருள் கிட்டி விட்டதாய்ச் சிலர் எண்ணுகின்றனர். தீக்கும் ஒளியைத் தருகின்ற அறிவுப் பேரொளியாய் இருக்கின்ற அப்பெருமானின் உண்மையான நிலையினை ஒட்டிய அறிவுத் தெளிவினைப் பெறுவோம். வாழ்வாங்கு வாழ்வோம்!

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!