118. மெய்தவத்தின் சிறப்பு

1681

118. மெய்தவத்தின் சிறப்பு

கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற ஐம்புலன்களினால் ஏற்படும் அவாக்களை வென்று உலகப் பற்றுக்களை விட்டவர், மெய்ப்பொருளான சிவத்தை அடைந்து விடுவர் என்பது தவறான கூற்று என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. உலகப் பற்றுக்களை விட்டு விலகி, மெய்ப்பொருளை விரும்பும் தலைப்பாட்டில் மனதை ஈடுபடுத்தி, அத்தலைப்பாட்டில் விருப்பம் மிகுவதற்கு முயற்சி செய்வதே தவம் என்றும் சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனால் துறவு என்பது மட்டுமே தவமாகி விடாது என்பதுவும் துறவு தவநெறிக்கு வாயிலாக மட்டுமே அமைகின்றது என்பதும் உணரப்படுகின்றது. உலகப் பற்றுக்களில் இருந்து மீட்ட உள்ளத்தைப் பின் இறைவனின் திருவடிக்கீழே ஒடுங்கி நிலைநிற்கச் செய்யும் முயற்சியைத் தவம் என்றும் இத்தவம் வெற்றி பெறும் போது சிவஅறிவு கிட்டும் என்றும் மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. உலகப் பற்றுக்களில் இருந்து விலகி மனதை இறைவனின் திருவடியின் கீழ் குவிக்கும் தவ முயற்சிக்குத் துணை நிற்பவையே சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் நன்னெறி நான்காகும்.

உலகப் பொருள்களின் மீது மனம் பரந்து செல்லுதலை விட்டு விலகி, இறைவனது திருவடியின் கீழ் சென்று ஒடுங்கி நிலைபெற்ற உயர்ந்த தவமுடையவர்களின் உள்ளங்கள், யாது ஒன்றிற்கும் அஞ்சுவது இல்லை என்கின்றார் திருமூலர். இவ்வுயர்ந்த
தவமுடைய இவர்களிடம் எமன் என்ற கூற்றுவன் செல்வதில்லை என்றும் இவர்களுக்கு வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை என்கின்றார் திருமூலர். இவர்கள் இரவு, பகல், நிறைமதிநாள், கரிநாள் போன்ற காலவேறுபாடுகளைக் கருதுவதில்லை என்றும் இவர்கள் இவ்வுலகில் வாழ்வதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்ற நிலையில் வாழ்பவர்கள் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,

“ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்,
நடுங்குவதில்லை நமனும் அங்கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை,
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

உயர்தவம் உடைய பல நல்லடியார்களில் குறிப்பிடத்தக்கவர் திருநாவுக்கரசு அடிகள். சமணர்கள் அவரைத் தரையில் கிடத்தி, யானையை ஏவி, அவரைக் கொல்ல முயன்ற போது, அவர் அருளிய, “சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ….” என்று தொடங்கும் திருப்பதிகத்தின் வழி அவரின் உயரிய தவ வலிமையினை உய்த்து உணரலாம். பெருமானின் திருவடிக்குத் தாம் ஆளாகி விட்டமையால், வானம் இடிந்து விழுந்தாலும் மண் கல்தூணாக மாறினாலும் உதர்ந்த மலை தகர்ந்து பொடியாகினாலும் குளிர்ந்த நீரையுடைய கடலில் விண்மீன்கள் விழுந்தாலும் கதிரவனும் மதியும் வானிலிருந்து கீழே விழுந்தாலும் தான் அஞ்சுவது என்பது ஒன்றும் இல்லை எனவும் இனி அவர் அஞ்சும்படியாக வரப்போவது ஒன்றும் இல்லை என்று கூறிச் சற்றும் கலங்காது மதங்கொண்ட யானையை வென்று காட்டினார். சமணர்களின் பொய்யுரையில் மதிமயங்கித் திருநாவுக்கரசு அடிகளுக்குத் தண்டனை கொடுப்பதற்காக, ஏவலாளர்களை ஏவி, திருநாவுக்கரசரை மன்னன் அழைத்துவர அனுப்பியபோது, “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் …” என்று கூறித் தாமே சென்றதன் வழி திருநாவுக்கரசரின் மெய்த்தவ நிலையினையும் அவரின் அஞ்சாமையையும் தெளியலாம்.

உலகப் பற்றுக்களில் இருந்து விலகுவதற்கும் பின்பு இறைவனின் திருவடியில் மனத்தைக் குவித்து அதில் மேலும் பெருவேட்கையுடன் தலைப்படுவதாகிய தவத்திற்கும் இறைவனின் திருவருளே அடிப்படையாகின்றது என்கின்றார் திருமூலர். உண்மைத் தவத்தினை அடைதற்கும் அதில் நிலைத்து நிற்பதற்கும் அடிப்படையாக இறைவனின் திருவருளைப் பெறுதல் இன்றியமையாதது இறைவழிபாடே என்கின்றார் திருமூலர். இதனை, “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று மணிவாசகரும் குறிப்பிடுவதனைப் போன்று, பெருமானின் திருவருளை வேண்டி நின்று செய்கின்ற வழிபாடே பின்பு இறைவனின் திருவருளைப் பெறுவித்து மெய்த்தவத்திற்குத் துணை நிற்கும் என்பதனை,

“எம்ஆர் உயிரும் இருநிலத்தோற்றமும்,
செம் மாதவத்துச் செயலின் பெருமையும்,
அம்மான் திருவருள் பெற்றவரே அல்லால்,
இம் மாதவத்தின் இயல்பு அறியாரே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவருளைப் பெறாதவர் மெய்த்தவம் அல்லாதனவற்றைத் தவமென்று எண்ணி மயங்கி அல்லல் உறுவார்கள் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். உலகப் பொருள்களையும் சிற்றின்பங்களையும் சிற்றாற்றல்களையும் எண்ணிச் செய்யப்படுகின்ற முயற்சிகள் தவம் ஆகா என்கின்றார் திருமூலர். உலக நோக்குடைய முயற்சிகளையும் பலர் தவம் என்றே குறிப்பிடினும் அவை மெய்த்தவம் ஆகா என்கின்றார் திருமூலர். பற்றுக்களை விட்டு இறைவனின் திருவடிக்கீழ் உள்ளத்தினை குவிய வைக்கும் பெரு முயற்சியில் வெற்றி காண்பவரே உண்மைத் தவசிகள் ஆவர் என்பார் திருமூலர். அவர்களே மெய்த்தவம் உடையவர்கள். மற்றவர்கள் தவ வேடம் பூண்டவர்களே ஒழிய உண்மைத் தவசிகள் ஆகமாட்டார்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பொறி புலன்களை அடக்கி இருந்து, உண்டி சுருங்குதல், எளிய உடை, விலையுயர்ந்த அணிகலன்களைத் தவிர்த்தல், தன்னை அழகு செய்து கொள்வதில் முனைப்பு காட்டாமல் இருத்தல் போன்றவற்றால் உயர்ந்த தவநெறியில் நிற்க முனைபவரின் மனதைக் கலைக்க இந்திரனே நேராக வந்தாலும் அல்லது இந்திர உலகப் பேரின்பங்களே ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்தாலும் உண்மைத் தவமுடைய பெரியோர்கள் தங்களின் உள்ளம் சிவனின் திருவடியில் குவிந்து கிடத்தலில் இருந்து சற்றும் தடுமாறாதவர்கள் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,

“இருந்து வருந்தி எழிதவம் செய்யும்,
பெரும்தன்மை யாளரைப் பேதிக்க என்றே,
இருந்து இந்திரனே எவரே எனினும்,
திருந்தும்தம் சிந்தை சிவன்அவன் பாலே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு அல்லாது வெறும் தவக்கோலம் மட்டும் பூண்டு உள்ளம் தடுமாறுகின்றவர்கள் தவ முயற்சியினை விடுத்த அவமுயற்சியே மேற்கொள்வர் என்கின்றார் திருமூலர். ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் மெய்த்தவமே சிறிது சிறிதாகப் பெருகி வேறு ஒரு பிறவியில் முதிர்ந்து முற்றுப் பெறும் என்பது திருமூலரின் குறிப்பாகும்.

பெருமானின் திருவருளே மெய்த்தவத்திற்கு வாயில் என்று அவனின் திருவருளைப் பெறுவதற்குச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனும் நன்னெறி நான்கினால் வழிபாடு இயற்றிப் பற்று அற்று உள்ளத்தை அவனது திருவடிகளில் குவிப்பதற்கு வேட்கை கொண்டு வெற்றி பெறுகின்ற மெய்த்தவத்தவர்களே கண்ணுக்குப் புலனாகாத, மறைபொருளாகிய சிவனை வெளிப்பட்டு நிற்கும் நிலையில் காண வல்லவர்கள் என்கின்றார் திருமூலர். மெய்த்தவத்தில் சிறந்த நாயன்மார்களே இறைவனை வெளிப்பட்டு நிற்கும் நிலையில் கண்டவர்கள். இறைவனின் திருவடிக்குத் தங்கள் உள்ளங்களைத் தலைப்படுமாறு சிறப்புற நின்ற நாயன்மார்களே உண்மைத் தவத்திற்குத் தலையானவர்கள் ஆனார்கள் என்கின்றார் திருமூலர். உலகக் கல்வியில் நுண்ணறிவு மிக்கவர்களாய் விளங்கிய அறிஞர்களும் வெறும் நூலளவு சமயப் பேராசான்களாய் விளங்கியவர்களும் அறிவு கூர்மையுடைய ஆட்சியாளர்களும் தொழில்திறன் நுண்மையாளர்களும் பெரும் பெரும் பதவியில் இருந்தவர்களும் செல்வந்தர்களும் உண்மை தவத்தை நோக்கி வாழ்வினைச் செலுத்தாவிடின் வெறுமனே காலத்தால் மறக்கப்படுவர் என்கின்றார் திருமூலர். மாறாக எளிய மாந்தரும் உய்யுமாறு சிவன் உயிர்களுக்குக் காட்டிய ஒப்பற்ற உண்மைத் தவநெறியினைப் பின்பற்றி வாழ்வார்களேயானால் அழிதல் இல்லாத, இறப்பு இல்லாத பேரின்பப் பெருவாழ்வினை அடைந்து உலகம் போற்ற நிலைத்து நிற்கலாம் என்கின்றார் திருமூலர்.

சமய நூல்களையும் ஒழுக்க நூல்களையும் ஓதுவதே பெருமை என்று தருக்கித் திரியாதும் வழிபாட்டின் உண்மை நோக்கத்தினை உணராது செய்யும் வழிபாட்டுச் செயல்முறைகளையே பெரிதாக எண்ணித் தருக்கித் திரியாமலும் சிறுபொழுதேனும் அறிவை அகமுகப்படுத்தி அறிவினுள் நிற்கும் அறிவை நோக்க முயலுங்கள்! அறிவினுள் நிற்கும் அறிவான இறைவனை நோக்கும் நோக்கமானது பச்சை மரத்தில் அறையப்பட்ட ஆணி அதனுள் நன்றாகப் பதிவது போல நம்முடைய அறிவினுள்ளே நன்கு பதியப் பதிய அச்சிறு தவம் பெருந்தவமாகக் கூடி, பிறவிகள் தோறும் உடம்பைப் பிணித்து வருகின்ற பிறப்பை நம்மை விட்டு விலகச் செய்துவிடும் என்கின்றார் திருமூலர். இதனைச்,

“சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்,
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்,
பார்த்த அப்பார்வை பசுமரத்து ஆணிபோல்,
ஆர்த்த பிறவி அகலவிட்டு ஓடுமே”

என்று குறிப்பிடுகின்றார் திருமூலர். உலகப் பற்றுக்களிலேயே உழன்று, அகத்தில் அறிவுக்கு அறிவாய் இருக்கின்ற பெருமானை அகத்தில் எண்ணாமல் வாழ்நாளை வீணடிக்கின்ற அவல நிலைக்கு ஆளாகாமல் விரைந்து பெருமானை அகத்தில் என்ணுவோம். அவனின் திருவடிக்கு உள்ளத்தைக் குவிப்போம். உண்மை தவத்திற்குத் தலைப்படுவோம்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!