116. திருவடிப் பேறு

2460

116. திருவடிப் பேறு

பரம்பொருளான சிவபெருமான் சிவஆசானாக வடிவம் தாங்கி வந்து, உயிர் முதிர்ச்சியுற்ற நல்லடியாரின் மீது தனது திருவடியைச் சூட்டுதலையே திருவடிப்பேறு என்கின்றார் திருமூலர். இவ்வாறு பெருமான் சிவஆசான் வடிவில் வெளிப்பட்டு வந்து திருவடி சூட்டும்போது நல்லடியாரின் சுட்டி அறியும் உலக அறிவு நீங்கி, இறையறிவான மெய்யறிவு ஏற்படுவதோடு மட்டும் அல்லாமல் இறை இன்பத்தினை நுகரும் பேறும் கிட்டும் என்கின்றார் திருமூலர். இறைவனின் திருவடியைப் பற்றிக்கொண்டு, அவனை இடைவிடாது வழிபடுகின்ற இன்பத்தினைப் பெறவேண்டும் என்று ஏங்கிக் கிடக்கும் முதிர்ச்சியுடைய உயிர்களுக்குச் சிவந்த செந்தனல் போன்ற ஒளி உடம்போடு கூடிய சிவஆசான் வருவான் என்கின்றார் திருமூலர்.

அச்சிவஆசான் தன்னுடைய திருக்கரத்தை அவனின் இன்ப அன்பிற்காக ஏங்கிக் கிடக்கும் உயிர்களின் தலைமேல் வைத்து வாழ்த்துக் கூறிஅருள, இதுநாள் வரை அடைய வேண்டும் என்று விரும்பிக் கிடந்த, பரம்பொருளின் திருவடிகள் உள்ளத்தில் காணக்கிடைக்கும் என்கின்றார் திருமூலர். இதனை,

“இசைந்துஎழும் அன்பில் எழுந்த படியே,
பசைந்துஎழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்,
சிவந்த குருவந்து சென்னி கைவைக்க,
உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே”

என்று குறிப்பிடுகின்றார்.

இறைவனின் திருவருளைத் திருவடி என்றும் உயிரைத் தலை என்றும் குறிப்பிடுவது மரபு என்பர். இதனாலேயே சிவஆசானாக வரும் பெருமானின் திருவருள் உயிரில் பதிதலை, இறைவன் தனது திருவடியை நல்லடியவரின் தலைமேல் வைத்துத் திருவடிப்பேறு நல்கினான் என்று குறிப்பிடுவர். பெருமான் சிவஆசானாக வந்து திருவடிப் பேற்றினை நல்கியபோது தனக்குக் கிட்டியவற்றைத் திருமூலர் குறிப்பிடுகின்றார். பெருமான் சிவஆசானாக வந்து தனது திருவடிகளை உள்ளத்தில் பதித்த போது, தமக்குப் பொறி புலன்களை அடக்கி ஆளும் தலைமைத் தன்மையும் ஆளுமையும் பெருமானின் அருளால் ஏற்பட்டது என்கின்றார் திருமூலர். பெருமான் தனக்குச் சிவஅறிவு எனும் வாளினை நல்கிப், பேரின்பம் எனும் வீடுபேற்று இன்ப உலக வாழ்வினை முடிவற்ற காலம் பெறுக என்று அருள் புரிந்து, தனது திருவடிகளைத் தனது தலைமீது வைத்து அருளினான் என்கின்றார். இதனைத்,

“தாள்தந்த போதே தலைதந்த எம்இறை,
வாள்தந்த ஞான வலியையும் தந்திட்டு,
வீடுஅந்தம் இன்றியே ஆள்கஎன விட்டுஅருள்,
பாடுஇன் முடிவைத்துப் பார்வந்து தந்ததே”

என்று குறிப்பிடுகின்றார்.

சிவஆசானாக வரும் சிவபெருமான் தனது திருவடிகளைத் தனது உள்ளத்திலே பதித்ததும் உயிரானது சிவமாம்தன்மை பெற்று, அச்சிவனுடைய உண்மை இயல்பில் உயிரின் உண்மை இயல்பு பொருந்துதலால் தனது உயிர் இன்பம் உற்றது என்கின்றார். தவிர, உயிர் தன் உண்மை இயல்பை உணர்தலால், உயிரைப் பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம் என்பவற்றைப் பெருமான் நீக்கி அருளினான் என்கின்றார். மேலும் அவ்வழுக்குகளின் உண்மை இயல்புகளையும் உயிரின் உண்மை இயல்பினையும் பெருமானின் உண்மை இயல்பினையும் பெருமான் சின்முத்திரை காட்டி விளங்கச் செய்தான் என்கின்றார். சின்முத்திரை எனப்படுவது ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடியில் பொருத்தி மடக்கி, மற்ற மூன்று விரல்களையும் நேரே நிறுத்துவது என்று குறிக்கப்படும். இதில் கட்டை விரல் சிவத்தின் உண்மை இயல்பினையும் ஆள்காட்டி விரல் உயிரின் உண்மை இயல்பினையும் இதர மூன்று விரல்கள் உயிரைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று அழுக்குகளின் உண்மை இயல்பினையும் உணர்த்துவன என்பர். திருவடிப்பேறு வாய்க்கப் பெற்றவருக்குப் பெருமான் சின்முத்திரை காட்டி மேற்கூறியவற்றின் உண்மை இயல்பினை உணர்த்தி அருளுவான் என்கின்றார் திருமூலர்.

இறைவனின் திருவடிப்பேறு பதியப்பெற்ற உயிர், அப்பெருமானின் திருவருள் இன்பம் இவ்வாறு இருந்தது என்று சொல்லும் சொல்லும், இவ்வாறு இருக்கின்றது என்று உணரும் உணர்வும் இல்லாமையால், தன் உயிர்த்தன்மை முழுமையாக நீங்கிப் போக, அலை ஓசை ஆரவாரம் இல்லாது அமைதியாக இருக்கின்ற நீர்நிலையைப் போல, உள்ளம் சிவனையே நுகரும் இறையின்பத்தில் ஒன்றி இருக்கும் நிலை ஏற்படும் என்கின்றார் திருமூலர். இந்நிலை கைகூடிய உடனேயே உயிருக்குக் கேட்கும் வாக்குகள் எனப்படும் நுண் ஓசை, நினை ஓசை, மிடற்று ஓசை, செவி ஓசை என்னும் நான்கு வாக்குகளும் விட்டு நீங்கிச் சிவமாம் தன்மை ஏற்படும் என்கின்றார். இதனையே, பேச்சற்ற, செயலற்ற, பேரின்ப, சும்மாயிருக்கும் இன்பம் என்பர் என்கின்றார் திருமூலர். இதனையே, “உரையுணர்வு இறந்துநின்று உணர்வதோர் உணர்வே” என்று மணிவாசகரும் தமது உயிருண்ணிப்பத்து எனும் திருவாசகப் பகுதியில் குறிப்பிடுவார்.

திருவடிப்பேறு கிடைக்கப் பெறுகின்ற உயிர்களுக்காகப் பெருமான், சிவஆசானாக வெளிப்பட்டுப், பற்றுக்களை விடுவதற்குத் தயாராக இருக்கின்ற உயிர்களைத் தேடிச் சென்று தன் திருவடிகளைச் சூட்டுகின்றான் என்கின்றார் திருமூலர். அவ்வாறு சூட்டிய உடன் உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குகளுக்கு ஈடாக, அவற்றிற்கு வகுத்தவையாக வந்து பொருந்தியுள்ள பிறவிக்கு வராத நிலை (கேவலம்), பிறவிக்கு வந்த நிலை (சகலம்), இறை உலகில் இருக்கும் நிலை (சுத்தம்) எனும் மூன்று நிலைகளும் இனி ஏற்படாதவாறு அருள் செய்கின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். திருவடிப்பேறு கிட்டப் பெற்ற உயிர்களை முழுமையாகத் தன் கைக்கொண்டு, சிவமாம் தன்மை பெறச்செய்து, பேச்சற்றதும் எல்லை இல்லா இன்பமுமாகிய இறை இன்பத்திலே உயிர் தன்னையே அறியா வண்ணம் மூழ்குவிப்பான் என்கின்றார். இதனால் உயிருக்கு ஏற்படும் புகழையும் உயிர் எண்ணாதபடி உயிர்களோடு உடன் இருந்து அருளுகின்றான் என்பதனைப்,

“பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே,
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்,
காச்சற்ற சோதி கடன்மூன்றும் கைக்கொண்டு,
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே”

என்கின்றார்.

சிவன் சிவஆசானாக வந்து, தனது திருவடிகளைத் தனது உள்ளத்திலும் கண்ணிலும் அறிவிலும் நீங்காது பொருந்தி இருக்கச் செய்து, அதனாலே சிவஅறிவினை உணர்த்திய வகையும், அச்சிவ அறிவினால் மெய்ப்பொருளைத் தனது அகக்கண் காணும்படியாகச் செய்த வகையும் பின்பு அவ்வுண்மைப் பொருளை நீங்காது இருத்தற்கு உரிய முறைகளை உணர்த்திய வகையும் சொல்லி விளக்க இயலாதது ஆகும் என்பதனை,

“இதயத்தும் நாட்டத்தும் என்தன் சிரத்தும்,
பதிவித்த பாதப் பராபரன் நந்தி,
கதிவைத்த வாறும் மெய் காட்டியவாறும்,
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

பரம்பொருளான சிவபெருமானின் திருவருளைச் சிந்தித்து இருக்கின்ற உணர்வு, நினைவு, அறிவு, என்பவையே சிவஅறிவு அல்லது சிவஞானம் எனப்படுகின்றது. இச்சிவஅறிவு சிவனைச் சிந்திக்கச் செய்து சிவமாம் தன்மை அடையச் செய்யும் என்கின்றார். இச்சிவஅறிவே இறையுலக வாழ்வைப் பெறச் செய்யும். இச்சிவஅறிவே புலன்களின் இச்சை வழிச் சென்று உலகப் பற்றுக்களாகிய சிறையில் சிக்கி அல்லல் உறாதபடி உயிர்களை மீட்டு வரும் என்கின்றார். இறைவனின் திருவடிகளையே எண்ணும் சிவஅறிவே பேரின்பப் பெருவாழ்விற்கு இட்டுச் செல்லும் என்பதனை,

“திருவடிஞானம் சிவம் ஆக்கு விக்கும்,
திருவடிஞானம் சிவலோகம் சேர்க்கும்,
திருவடிஞானம் சிறைமலம் நீக்கும்,
திருவடிஞானமே திண்சித்தி முத்தியே”

என்று குறிப்பிடுகின்றார்.

சிவபெருமான் திருவடிப்பேறு நல்கி உயிர்க்கூடாகிய உடம்பின் தன்மையை மாற்றித் தனது உள்ளத்தாமரையில் எழுந்தருளி விளங்கியதால், முன்பு மலங்களால் மயக்குற்று இருந்த உள்ளத்தை மீளவும் அப்பழக்கம் பற்றி மயக்கம் உறச் செய்யாமல் இருக்கின்றது என்கின்றார். பெருமான் தனது திருவடிகளை உயிர்களின் தலையில் வைத்தது போன்று உயிர்களின் சிந்தையிலும் நீங்காது வைக்கப்பெற்றால், அதுவே மிகச் சிறந்த பேரின்பம் என்றும், இதைவிட மேலான இன்பம் ஒன்று உண்டு என எண்ணும் எண்ணம் உயிர்களுக்கு ஏற்படாது எனவும் குறிப்பிடுகின்றார். அரசப் பதவியும் ஆட்சி உரிமையும் பிறர் குற்றேவல் செய்யும் இன்பங்களை எல்லாம் சற்றும் கருதாமல் பெருமானின் பேரின்பத்தினை நுகரும் நுகர்ச்சியையே பேரின்பமாகக் கருதுவர் என்கின்றார். திருவருளைப் பெறும் மந்திரமாகவும், உள்ள அழுக்குகளைப் போக்கும் மருந்தாகவும், திருவருள் பெறும் வழியாகவும், அறச்செயல்களுக்கு மூலமாகவும், சிவமாம் தன்மை பெறுதற்குரிய தூய்மையான நெறியைப் பேணுதற்குத் துணையாகவும் நிற்பது பெருமானின் திருவடியே என்கின்றார் திருமூலர். அத்தகைய திருவடிப்பேற்றினை நாளும் வேண்டி வழிபடுவோமாக!

 

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!