28. நின் பெரும் சீர்

1728

28. நின் பெரும் சீர்

மகா பிரளயம் என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பேர் ஊழி பல முறை ஏற்பட்டுள்ளது என்று மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சைவப் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பேர் ஊழி காலத்தில் உலகம் அழிய கடல் நிலத்தைக் கொள்கின்றதாகவும் அக்கடல், கரிய மலைகள் பலவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அம்மலைகளின் உயரத்திற்கும் மேல் எழுந்து எங்கும் வெள்ளமாய்க் காட்சி அளிப்பதாய் இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றன. பேரூழி காலத்தில் ஐந்து பூதங்கள் எனப்படும் நிலம், நீர், தீ, காற்று, வெளி ஆகியவை அவற்றின் இயல்பிலிருந்து தடுமாறி நிற்பதனால், நால் வகைத் தோற்றத்தினாலும் எழுவகைப் பிறப்பினாலும் வாழும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் உயிர் வகைகளும் போக்கிடம் இல்லாமல் அழிவை எதிர்நோக்கும் என்கின்றன.

அந்நிலையில் சிவம் எனும் பரம்பொருள் ஒன்று மட்டுமே உயிர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காக்க வல்லது என்பதனை, “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை, ஏழைப் பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்” என்று மணிவாசகரின் திருவாசகம் குறிப்பிடுகின்றது. ஊழி முதல்வனாய் நிற்கும் சிவன் எனும் பரம்பொருளின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா முதன்மையினையும் அவனே இறுதியில் எல்லோருக்கும் புகலிடம் என்ற சிறப்பினையும் பெருமானின் அளவிடப் படாத பெரும் புகழாய், ‘நின் பெரும் சீர்’ என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுவார்.

இன்றைய நடைமுறையில் தேவர்கள், தேவதைகள், குலதெய்வம், சிறுதெய்வம், காவல் தெய்வம், எல்லைத்தெய்வம், நடுகல் தெய்வம், மரம், மலை, புற்று, விலங்குகள், பறவைகள், பாம்புகள் என்று பல்வேறு நிலைகளில் தெய்வங்களை வைத்து வழிபடுதலைக் காண்கின்றோம். இன்னும் சிலர் சிவபெருமானின் பொது நிலை வடிவங்களான பிள்ளையார், முருகன், அம்பிகை, திருமால் போன்ற வடிவங்களை வழிபடுகின்றோம். எந்த வடிவில் இறைவனை வழிபட்டாலும் அந்தந்த நிலையில் பரம்பொருளாய் இருக்கின்ற சிவம் எனும் பரம்பொருளே தன் திருவருளினைச் செலுத்தி அந்தந்த வடிவங்களில் நின்று அருள்புரிகின்றது என்பதனை, “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே, மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள், வேதனைப்படும்; இறக்கும்; பிறக்கும் மேல் வினையும் செய்யும்….” என்று சிவஞான சித்தியார் எனும் மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது.

இதில் மனதில் கொள்ள வேண்டியது யாதெனில் சிறுதெய்வங்களையும் இதர சிற்சத்திகளையும் வழிபடுகின்றவர்களுக்கு அந்த அந்த தெய்வங்களின் சிறு சிறு ஆற்றல்களுக்கு உட்பட்டே அவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப அவற்றின் உள்ளிருந்து இறைவன் அருளுவான் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சிறு தெய்வங்களும் இதர சத்திகளும் சிவம் எனும் பரம்பொருளினைப் போன்று நம் பிறவியை அறுக்க இயலாதவை என்றும் குறிப்பிடுகின்றன. தமிழ்ச் சைவர்கள் சிவபெருமானின் பிள்ளையார், முருகன். அம்பிகை எனும் பொது நிலை வடிவங்களைச் சிவத்தின் பிற வடிவங்கள் என்றே வணங்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. அப்பொழுதான் சிவம் எனும் பரம்பொருளிடம் மட்டும் இருக்கின்ற பேரின்பப் பெருவாழ்வு என்பதனை அடைய இயலும் என்கின்றன. இதனைப், “பொது நீக்கித்தனை நினைய வல்லோர்க்கு என்றும், பெருந்துணையை…..” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். இக்கருத்தினையே திருமூலர் தமது பாடலில் வலியுறுத்துகின்றார்.

பேரூழிக் காலம் ஏற்படும்போது பிரமன், திருமால் முதலாய பல தேவர்களும் இதர சிறு தெய்வங்களும் கலங்கியும் நடுங்கியும் அழிந்துபடுகின்றனர் என்கின்றார். பரம்பொருளான சிவம் ஒன்றே தனித்து முடிவின்றி நிற்கும் என்கின்றார். இதனைத் திருநாவுக்கரசு அடிகள்,

“நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்,
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே,
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்,
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே”

என்று குறிப்பிடுகின்றார். பேரூழிக் காலத்தே தேவர்களும் பிறதெய்வங்களும் கலங்கியும் நடுக்கமும் மயக்கமும் உறும்போது சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையையும் பரத்துவத்தையும் அவற்றிற்கு விளக்கி அவற்றை அமைதிப்படுத்தி நல்வழியைக் காட்டுவான் என்கின்றார் திருமூலர்.

சிவம் எனும் பரம்பொருள் ஒன்றே எல்லோரையும் எல்லாவற்றையும் காத்து நெறிபடுத்த முடியும் என்பதனை உணர்த்துவான் என்கின்றார். தேவர்களும் சிறுதெய்வங்களும் திசை தெரியாது திகைக்கும்படி எழுந்த பேரூழி வெள்ளத்தைப் பெருமான் ஒருவனாலேயே குறையச் செய்ய முடியும் என்கின்றார். பெரிதாக ஒலி செய்கின்ற அப்பேரூழி வெள்ளத்தை அன்பே வடிவான, பேராற்றலுடைய அப்பெருமான் அக்கடல் அங்கி எனும் அளவு பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயைக் கொண்டு குறைப்பான் என்கின்றார். இவ்வாறு உலகப் பொருள்கள் ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை உலகமும் உலக உயிர்களும் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு அவற்றை நெறிப்படுத்தியும் மீளவும் உலகம் நெறிபட்டு நடக்குமாறும் ஆக்கிக் காத்து நடத்த வல்ல சிவன் அளவிடப் படாத பெரும் புகழுக்குரிய பரம்பொருள் என்கின்றார் மணிவாசகர்.

தனக்கு மேல் உலகினையும் உயிர் வகைகளையும் இதர தெய்வங்களையும் நெறிப்படுத்தி அருள வல்ல ஒருவர் இல்லாமல் எப்பொழுதும் ஒருபடித்தாய் நிற்கின்ற அப்பெருமானை, அவனின் சிறப்புத் தன்மையைத் தனித் தன்மையாகப் பரத்துவத்தை அறிந்து துதித்து உள்ளத்துள் இருத்த வேண்டும் என்பதனைச்,

“சமைக்க வல்லானை சயம்பு என்று ஏத்தி,
அமைக்க வல்லார் இவ்வுலகத்து உளாரே,
திகைத்தத் தெண்ணீரிற் கடல்ஒலி ஓசை,
மிகைக்கொள அங்கி மிகாமை வைத்தானே”

என்று கூறுகின்றார்.
பேர் ஊழிக் காலத்தே உயிர்கள் எல்லாம் கலங்கி நின்ற போது இறைவன் இட்ட காக்கின்ற தொழிலைச் செய்கின்ற திருமாலும் படைக்கின்ற தொழிலைச் செய்யும் பிரமனும் அவரவரே சிறந்தவர் என்று செருக்கி நின்றனர். தங்களில் தாங்களே உலகையும் உலக உயிர்களையும் காக்கவும் மீளவும் படைக்கவும் இயலும் என்று மயங்கினர். அவ்வேளையில் தீப்பிழம்பாய்த் தோன்றிப் பெருமான் அவர்களுக்கு நல்லுணர்வைப் புகட்டினான் என்கின்றார் திருமூலர்.

இறைவன் இட்ட படைக்கும் தொழிலைச் செய்த நான்முகன் முதலில் ஐந்து தலைகளுடன் இருந்தான். இறைவன் கொடுத்த படைக்கும் தொழிலைச் செய்வதனால், தானே உலகிற்கு முதல்வன் என்று செருக்கி இறைவனை இகழ்ந்து பேசினான். உலகிற்கு முதல்வன் பரம்பொருளான சிவமே என்பதனை உணர்த்தவும் அவன் நல்லறிவும் நல்லுணர்வும் திருவடிப்பேறும் பெற வேண்டும் என்ற பெரும் கருணையினாலும் பெருமான் அவனுக்கு மறக்கருணை புரிந்தார் என்கின்றார். பெருமானை இகழ்ந்து பேசிய நான்முகனின் ஐந்தாவது தலையாகிய நடுத்தலையைப் பெருமான் கிள்ளி எடுத்தார் என்கின்றார். மற்ற தேவர்களும் உயிர்களும் நான்முகனைப் போன்ற குற்றத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கு அந்நான்முகனின் மண்டை ஓட்டிலேயே பிச்சை ஏற்றார் என்கின்றார். திருமூலரின் இச்செய்தி மணிவாசகரின் கூற்றோடு ஒருமித்தது.

சலந்தரன் எனும் தீயவனை அழிப்பதற்குச் சிவபெருமான் உண்டாக்கிய சக்கரத்தைப் பெற திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு இறைவனை வழிபட்டதாயும் அதில் ஒரு மலர் குறையத் தன் கண்ணை அதற்குப் பதிலாகப் பிடுங்கிப் போட்டதாயும் திருமுறைகள் குறிப்பிடுகின்றன. உலகில் அறத்தை நிலைநாட்டி உலகத்தையும் உலக உயிர்களையும் காத்தல் பொருட்டுத் திருமாலுக்கு வலிமை மிக்கச் சக்கரத்தைப் பெருமானே அருளினான் என்கின்றன. இதனைத், “சலமுடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல்லாழி, நலமுடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்னேடீ” என்று திருச்சாழலில் மணிவாசகர் குறிப்பிடுவார். சக்கரத்தைப் பெற்றத் திருமால் அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட தன் உடம்பில் சரிபாதியைத் திருமாலுக்குத் தந்து அரிஅரனாக நின்ற சிறப்பினைத் திருமுறைகள் குறிப்பிடுகின்றன.

எல்லா உயிர்களும் பேரூழிக் காலத்திலே அப்பெருமானின் பரத்துவத்திலே ஒடுங்குகின்றன என்பதனை உணர்த்தப் பெருமான் பிரமனின் எலும்புகளையும் மண்டை ஓட்டினையும் திருமாலின் ஆமை ஓட்டுத்தாலியையும் பன்றிக் கொம்பையும் மாலையாக அணிந்து கங்காளராக இருக்கும் நிலையினைத் திருமுறைகள் குறிப்பிடுகின்றன. இதனையே, “நல்லிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே” என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுவார். எனவே மணிவாசகர் குறிப்பிடும் சிவம் எனும் பரம்பொருளின் தலைமையையும் சிறப்பினையும் பரத்துவத்தையும் தனக்கு நிகர் இல்லாத் தனித்துவத்தையும் உணர்ந்து அளவிடப் படாத புகழை உடைய முழுமுதல் வழிபாட்டினை மேற்கொள்வோமாக! சிவத்தை வழிபட்டால் துன்பம் ஏற்படும் எனும் அறியாமையை விடுத்து இன்புற்று வாழ்வோமாக!

 

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!